0 item - ₹0.00

விசுவாச வாழ்க்கை (பாகம் 53) - மோசேயின் விசுவாசம்: விடுதலை #4

Sunday Tamil Service - 01 SEP 19

Transcript

விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக், கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள்(எபிரெயர் 11:29).

எபிரெயர் 11-ஆம் அதிகாரத்திலிருந்து விசுவாச வாழ்க்கையைக் குறித்து போதித்து வருகிறோம். இதில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களின் விசுவாசத்தை பார்த்துக்கொண்டு வந்தோம். 23-ஆம் வசனத்திலிருந்து 29-ஆம் வசனம் வரையுள்ள பகுதி மோசேயின் விசுவாசத்தை நமக்குப் போதிக்கிறது. அவன் பிறக்கும்போதே அவனுடைய தாய், தகப்பன்மார் எப்படி விசுவாசித்தார்கள் என்று ஆரம்பித்து, அவன் வளர்ந்து பெரியவனானபோது வாழ்க்கையில் விசுவாசத்தின் அடிப்படையிலே சில தீர்மானங்களை எடுக்கிறான் என்பதையெல்லாம் பார்த்தோம். 29-ஆம் வசனத்திலிருந்து கடந்த மூன்று வாரங்களாக போதித்தேன். சிவந்த சமுத்திரத்தைக் கடந்த சம்பவம் மிகப்பெரிய அற்புதம். இது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நடந்த மிகப்பெரிய அற்புதம் என்பது மட்டுமல்ல. இதை பழைய ஏற்பாட்டில் திரும்பத் திரும்ப நேரடியாக 24 முறை பல்வேறு காலகட்டங்களில் தீர்க்கதரிசிகள், சங்கீதக்காரன் போன்றோர் குறிப்பிடுகிறார்கள்; இதிலிர&##3009;ந்து சில காரியங்களைப் போதிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மறைமுகமாக இன்னும் பலமுறை பழைய ஏற்பாட்டில் குறிப்பிடுகிறார்கள். புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது இங்கும் சிவந்த சமுத்திரத்தை குறிப்பிடுகிற வேதப்பகுதிகள் இருக்கிறது. இதிலே ஒரு பகுதி எபிரெயர் 11:29. இத்தனை முறை திரும்பத் திரும்ப எல்லாரும் இதை எடுத்து பல காரியங்களைப் போதிக்கிறார்கள். நாமும் அந்த விதத்தில் தான் இந்த வசனத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தான் அந்த pattern-ஐ உண்டாக்கினார்கள். தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதினவர்களே இதை இப்படி பயன்படுத்துகிறார்கள் என்றால் இதை வியாக்கியானம்பண்ணுவதும் அப்படித்தான் வியாக்கியானம்பண்ண வேண்டும் என்பது விளங்குகிறது. ஆகவே இதை நாம் பல்வேறு விதங்களில் பார்த்து வருகிறோம். சிவந்த சமுத்திரத்தைக் கடக்கிற சம்பவம் எப்போது நடக்கிறது என்றால், இஸ்ரவேலர்கள் பஸ்காவை அனுசரித்து, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை சிந்தி, அதை நிலைக்கால்களிலும், சட்டத்திலும் பூசி, வீடுகளுக்குள் உட்கார்ந்திருந்தார்கள். எகிப்து தேசம் முழுவதும் மரண ஓலம் கேட்கிறது. ஏனென்றால் எல்லா எகிப்தியர் வீட்டிலும் தலைச்சன் பிள்ளைகள் சாகிறார்கள். ஆடு, மாடுகளில் கூட தலைச்சன்கள் சாகிறது. அங்கு பெரிய ஓலம் உண்டாகிறது. ஒன்பது வாதைகளுக்கும் இணங்காமல் தன் இருதயத்தை கடினப்படுத்திய பார்வோனால் இம்முறை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவனுடைய வீட்டிலும் தலைச்சன் பிள்ளைகள் சாகிறார்கள். அவன் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் இஸ்ரவேலர்களை தேசத்தை விட்டே அனுப்பிவிடுகிறான். கடைசியாக இஸ்ரவேல் ஜனங்கள் பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்தும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையானவர்களாக வெளியே வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் அவர்கள் பார்வோனுக்கு கீழே அடிமைகளாக வாழ்ந்துவிட்டார்கள். அவனுடைய பேச்சைக் கேட்டு, அவன் சொன்னபடி நடந்து பழக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது தேவனோடுகூட ஒரு புதிய உறவு அவர்களுக்கு உண்டாயிருக்கிறது. இவர்கள் தேவனுடைய மக்கள். ஆனால் கொஞ்ச நாட்கள் தேவனோடு தொடர்பை (contact) இழந்துவிட்டார்கள். தேவனை மறந்து தங்கள் பிரச்சனைகளில் மூழ்கி அங்கேயே இருந்துவிட்டார்கள். இப்போது கர்த்தர் அவர்களை விடுவித்துவிட்டார். ஏற்கனவே நல்ல அனுபவங்களை கர்த்தர் கொடுத்துவிட்டார். கர்த்தர் அற்புதமானவர் என்பதையும், அவர் மோசேயை பயன்படுத்துவதையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். இப்போது தேவனுடைய பிள்ளைகளாக அந்த இடத்திலிருந்து புறப்படுகிறார்கள். தேவனைப் பின்பற்றுவோம் என்கிற ஒரே தீர்மானத்தோடு, கர்த்தர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த அந்த தேசத்திற்குப் போவோம் என்று சொல்லி தங்கள் பயணத்தை துவங்குகிறார்கள். அடிமைத்தனம் முடிவடைந்து விட்டது. இப்போது தேவனுக்கு கீழே வாழ தீர்மானித்து அவரைப் பின்பற்றுகிறார்கள். இவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் முதல் சம்பவம் என்ன? கர்த்தர் அவர்களை ஒரு இடத்திற்கு திட்டமிட்டுக் கொண்டுவருகிறார். யாத்திராகமம் 14-ஆம் அதிகாரத்தில் தான் சிவந்த சமுத்திரத்தை கடக்கிற சம்பவம் நடக்கிறது. இது மிக முக்கியமான அதிகாரம். இது பல காரியங்களை வெளிப்படுத்துகிறது. இதை சற்று கவனிப்போம்.

கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்க வேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக(யாத்திராகமம் 14:1, 2).

கர்த்தர் மோசேயிடம், நீ எந்த வழியில் போக வேண்டுமென்று நான் சொல்லுகிறேன். மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே எல்லாரும் பாளயமிறங்க வேண்டும் என்று சொல்லுகிறார். தேவன் அவர்களை ஒரு பள்ளத்தாக்கிற்கு கூட்டிக்கொண்டு போகிறார். மிக்தோல் என்கிற இடத்தில் அவர்கள் போய் எப்படி இறங்கினார்கள் என்பதை வாசித்துப் பாருங்கள். அந்த இடத்தில் இரண்டு பக்கமும் பெரிய மலைப்பாங்கான இடம். எதிரே சிவந்த சமுத்திரம் இருக்கிறது, பின்னால் இவர்கள் வந்த வழி இருக்கிறது, அங்குதான் பார்வோன் அவர்களை துரத்திக்கொண்டு வருகிறான். தேவன் அவர்களை அங்கு கொண்டுவருகிறார். அவருக்கு வழி தெரியவில்லையா? இல்லை, கர்த்தர் திட்டமிட்டு வேண்டுமென்றே இவர்களை இப்படி கொண்டுவந்து setup பண்ணுகிறார். கர்த்தர் setup பண்ணுவதில் பெரியவர். அதற்கு நான் பல உதாரணங்களைக் கொடுக்க முடியும். அவர் setup பண்ணினால் நீங்கள் அசந்துவிடுவீர்கள். இன்றைக்கும் நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களை அவர் setup பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி setup பண்ணுகிறார் என்று பாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக போக முடியாது, ஏனென்றால் சமுத்திரம் இருக்கிறது. இரண்டு பக்கமும் போக முடியாது, ஏனென்றால் மலைகள் இருக்கிறது. பின்னால் பார்வோன் விரட்டிக்கொண்டு வரப்போகிறான் என்றும் அவர்களுக்கு தெரிகிறது. ஏனென்றால் தேவனே அதைச் சொல்லுகிறார்.

அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்(யாத்திராகமம் 14:3).

பார்வோன் என்ன சொல்லப்போகிறான் என்பதை தேவன் முன்னமே அறிந்து வைத்திருக்கிறார். இவர்களுக்கு முன்பாக சமுத்திரமும், இரண்டு பக்கத்திலும் மலைகளும், பின்னால் வந்த வழியும் இருக்கிறது. அந்த வழியாகத்தான் திரும்ப வேண்டும், வேறு வழி கிடையாது. இஸ்ரவேலர்கள் வசமாக மாட்டிக்கொண்டார்கள், நாம் பின்னால் போய் அவர்களை பிடித்து விடலாம் என்று எண்ணி பார்வோன் வருகிறான். தேவன் அதை நன்றாய் அறிந்து அதை தீர்க்கதரிசனமாக சொல்லுகிறார். அடுத்த வசனத்தைப் பாருங்கள்.

ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்(யாத்திராகமம் 14:4).

கர்த்தர் ஒரு பெரிய திட்டத்தோடு இதைச் செய்கிறார். அவர் தாம் யார் என்பதை காண்பிப்பதற்காக ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்து ஒரு பெரிய சூழ்நிலைக்குள் கொண்டுவந்து விடுகிறார். கர்த்தர் வழிகாட்டுகிறார் என்று ஜனங்கள் வருகிறார்கள். முன்னால் சமுத்திரமும், இரண்டு பக்கமும் மலைகளும் இருக்கிறது. பார்வோன் துரத்திக்கொண்டு வருவான் என்று கர்த்தர் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். அதுபோலவே பார்வோன் துரத்திக்கொண்டு வருகிறான். அதனால் ஜனங்கள் முறுமுறுக்கிறார்கள்.  

அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலை செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்(யாத்திராகமம் 14:11, 12).

இவர்கள் எந்த பக்கமும் ஓடுவதற்கு வழியில்லை. அவர்கள் வந்த வழியே தான் திரும்பி வர வேண்டும். பின்னால் பார்வோன் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்தவுடன் அவர்கள் முறுமுறுக்கிறார்கள். முப்பது லட்சம் பேரை அடக்குவது மிகவும் கடினமானது. பயம் அவர்களை ஆட்கொள்ளுகிறது. பயம் எப்போதும் கற்பனையின் அடிப்படையில் தான் உண்டாகிறது. சமுத்திரத்தைப் பார்த்தவுடன் தண்ணீரில் விழுந்து சாவது அவர்களுக்கு கண்களுக்கு தெரிகிறது. நாம் பயப்படும்போது கற்பனை அதிகமாக வேலை செய்யும். அதில் தான் பயம் உண்டாகிறது. அழிந்து, ஒன்றுமில்லாமல், தோற்றுப்போவதைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். அதைப் பார்த்துக்கொண்டே இருந்தால் அது ஆளையே முடமாக்கிவிடும். இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் இருக்கிற சமுத்திரத்தைப் பார்த்து, “ஐயோ, நாம் இங்கே சாகப்போகிறாமா? எகிப்திலேயே செத்திருக்கலாமே, அங்கு கல்லறையிலாவது புதைத்திருப்பார்களே! மோசே நம்மை இங்கு கொண்டுவந்து சாக விடுகிறானே” என்று ஜனங்கள் கோபப்படுகிறார்கள்.

அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்(யாத்திராகமம் 14:13, 14).

பயப்படுகிற இந்த ஜனங்களைப் பார்த்து மோசே, “பயப்படாதிருங்கள்” என்கிறான். அவர்களுக்கு கோபம் இன்னும் அதிகமாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் கொண்டுவந்துவிட்டு பயப்படாதீர்கள் என்று நீ போதிக்கிறாயா? என்று ஜனங்கள் கொந்தளிக்கிறார்கள். பயம் வந்தவுடன் ஜனங்களுடைய இயல்பு என்னவென்றால் எங்கேயாவது ஓட வேண்டும். அவர்களுக்கு எங்கு ஓடுவது என்று தெரியவில்லை. அப்போது மோசே, “நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” என்கிறான். அங்கிருந்து ஓடிவிடலாம் என்று எண்ணினால் ஓட வேண்டாம் என்கிறான். பயந்தால் பயப்படாதீர்கள் என்கிறான். கர்த்தர் உங்களுக்கு ஏதோ செய்யப்போகிறார், நீங்கள் நின்றுகொண்டு அதைப் பாருங்கள் என்கிறான். கர்த்தர் ஏன் இவர்களை திட்டமிட்டு இந்த இடத்திற்கு கொண்டுவந்தார்? இதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, கர்த்தர் மோசேயை முதல் முறையாக பார்வோனிடம் அனுப்பினபோது, “என் ஜனங்களைப் போகவிடு” என்று சொல்லச் சொன்னார். அவனும் பார்வோனிடம் அதைச் சொல்லுகிறான். அதற்கு பார்வோன், “உங்களைப் போகவிட வேண்டும் என்று யார் சொன்னது?” என்று கேட்கிறான். “எங்கள் யேகோவா தேவன் சொன்னார்” என்று மோசே சொன்னவுடன் பார்வோன், “உங்கள் தேவனை யாருக்கு தெரியும். நான் இந்த ஊருக்கு ராஜா, அது உலகத்திற்கே தெரியும். அவர் சொல்லி நான் உங்களை போகவிட வேண்டிய அவசியமில்லை” என்று தேவனை நிந்திக்கிறான். தாம் யார் என்று தெரியாது என சொன்னவனுக்கு கர்த்தர் தாம் எவ்வளவு பெரியவர் என்பதை காண்பிக்கப்போகிறார். அதற்காகத்தான் அவர்களை இங்கு கொண்டுவந்திருக்கிறார். இவர்களை சமுத்திரத்தை கடக்கச் செய்யும்போது எகிப்தியர் அதில் மூழ்கடிக்கப்படுவார்கள். இதைப் பார்க்கும்போது ஜீவனுள்ள தேவன் இவர்தான் என்பதை எகிப்தியர் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு கர்த்தர் செய்கிறார். அதுமட்டுமல்ல, இப்படிச் செய்யும்போது இதன் மூலமாக இயேசு கிறிஸ்து என்கிற நம்முடைய மோசே வரும்போது அவர் எப்படிப்பட்ட Exodus-ஐ நடத்தப்போகிறார் என்பதை சித்தரிக்கும்படியாக சிவந்த சமுத்திரத்தைக் கடக்கிற இந்த சம்பவத்தை கர்த்தர் பயன்படுத்துகிறார். அவர் திட்டமிட்டு இதை வைத்து ஒரு படத்தை வரைகிறார். சிவந்த சமுத்திரத்தைக் கடப்பது என்பது ஒரு காரியம். ஆனால் இதை விட பெரிய ஒன்றை மோசேயை விட பெரியவர் ஒருவர் வந்து பண்ணப்போகிறார். சிவந்த சமுத்திரத்தைக் கடந்துவிடலாம். ஆனால் மனுஷனை பாவத்திலிருந்து விடுதலையாக்குவது என்பது பெரிய வேலை. அவர் அதைச் செய்யப்போகிறார். ஜனங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாக சில நூற்றாண்டுகள் இருந்தார்கள். ஆனால் மனுஷன் பாவத்திற்கு அடிமையாக ஆதாமின் காலத்திலிருந்தே இருக்கிறான். அதன் பிடியிலிருந்து எந்த மனுஷனாலும் விடுதலையாக்க முடியாது. அதிலிருந்து இயேசு இரட்சகர் எப்படி விடுவிக்கிறார் என்பதை சித்தரித்து நடத்திக் காட்டுவதற்காக இங்கே கொண்டுவருகிறார். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் அவர் செய்கிறார். அது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம், தேவன் தம்முடைய ஜனங்களை தம்மோடுகூட ஒரு உறவுக்குள் மறுபடியும் கொண்டுவந்து விட்டார். அநேக நாட்களாக இவர்கள் தேவனைப் பற்றி அதிகமாய் அறியாதிருந்தார்கள். இப்போது மோசேயின் மூலமாக திரும்பவும் அவரோடுகூட உறவை புதுப்பித்துக்கொண்டு புதிதாக அவரை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். பிரச்சனைகள் ஏற்படும்போது, தப்ப முடியாது, எல்லா பக்கமும் ஆபத்து, அவ்வளவுதான் என்று எண்ணுகிற நேரத்தில், கர்த்தரை எப்படி முழுமையாக நம்புவது என்பதை கற்றுத்தர தேவன் விரும்புகிறார். தப்புவதற்கு வழியை எங்கும் காணவில்லையே, மனுஷனால் இது முடியவே முடியாது என்று எண்ணும்போது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களின் தேவன் வனாந்திரத்தில் வழியை உண்டாக்குகிறவர், அவாந்தர வெளியில் வழியை உண்டாக்குகிறவர், சமுத்திரத்தின் மத்தியில் கூட வழியை உண்டாக்க வல்லவர். அவர் அதைச் செய்வார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அது அ#2997;ர்களுடைய அனுபவமாக இருக்க வேண்டும். அதாவது, இவர்கள் நினைப்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் அதிகமாக கர்த்தர் செய்யக்கூடியவர் என்கிற அனுபவத்தை இவர்கள் அடைய வேண்டும். கர்த்தர் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்? என்பது வெறும் வசனம் அல்ல. அவர்கள் அதை அனுபவ ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும். கர்த்தர் அப்படிப்பட்ட அனுபவத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்க விரும்புகிறார். தேவனுடைய பிள்ளையாக, தேவனுடைய ஜனமாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை அவர்களுக்கு காண்பிக்க விரும்புகிறார். இவர்களை காலகாலமாக அடிமைப்படுத்தி வைத்திருந்த சத்துருவிடமிருந்து இவர்கள் விடுபட முடியாது என்று உலகமே சொன்னது. ஏனென்றால் பார்வோன் உலகத்தின் super power. அவனிடம் அடிமையாகப் போய்விட்டால் அவ்வளவுதான், இனிமேல் அங்கேயே சாக வேண்டியதுதான் என்கிற நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஆனால் தேவனை நம்பும்போது எவ்வளவு நாட்கள் எதற்கு அடிமையாக இருந்தாலும் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவர் வல்லவர் என்பதை அவர்கள் இன்னும் இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். அதற்காகத்தான் அவர்களை இங்கு கொண்டுவருகிறார். ஆக தேவன் இரண்டு காரியங்ளுக்காக இந்த set-up ஐ பண்ணுகிறார். ஒன்று, இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரப்போகிற அந்த இரட்சிப்பை சித்தரிப்பதற்காக. இரண்டாவது, தேவன் எவ்வளவு பெரியவர், அவருடைய வல்லமை, அன்பு, கிருபை எவ்வளவு பெரியது, இந்த தேவனை நம்புகிற நாம் எவ்வளவு பெரிய பாக்கியவான்கள் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் விளங்கிக்கொள்வது மட்டுமல்ல அவர்களுக்கு பின் வாழுகிற சந்ததியாகிய நாமும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமுத்திரத்திற்கு எதிராக உள்ள இந்த showdown.

கர்த்தர் அவர்களை அங்கு கொண்டுவந்துவிட்டார். இப்போது முதல் காரியத்தைப் பார்ப்போம். சிவந்த சமுத்திரத்தைக் கடக்கிற இந்த சம்பவத்தை வைத்து இயேசு கிறிஸ்துவின் மூலமாக உண்டாகிற விடுதலையை தேவன் சித்தரிக்கிறார் என்பதை நாம் பார்ப்போம். தேவன் இஸ்ரவேலர்களை சமுத்திரத்திற்கு முன்பாக கொண்டுவந்திருக்கிறார். சமுத்திரம் என்றவுடன் ஜலம் என்பது ஞாபகத்திற்கு வருகிறது. அக்காலத்தில் வேதவசனத்தை வாசித்த மக்களுக்கு இது நன்றாக புரியும். தேவன் நோவாவின் காலத்தில் வெள்ளத்தை அனுப்பி பூமியை நியாயந்தீர்த்தார். அதைப் பற்றி விளக்கவுரை எழுதுகிறவர்கள், தேவன் நியாயந்தீர்க்க வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் நியாயந்தீர்க்கலாம். அதற்கு பல வழிகள் இருக்கிறது. ஆனால் கர்த்தர் ஏன் அவர்களை ஜலத்தினால் நியாயந்தீர்த்தார் என்றும், பெரிய வெள்ளத்தை அனுப்பி பூமி முழுவதும் வெள்ளத்தில் மூழ்குகிற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஏன் நடத்தினார் என்றும் சொல்லுகிறார்கள். நோவா காலத்தில் தேவன் உலகத்தை நியாயந்தீர்த்தார். பூமியில் அக்கிரமம் பெருகிற்று. மனுவர்க்கத்தை உண்டாக்கினதற்காக தேவன் வேதனைப்படுகிறார். இவர்கள் பாவத்தில் மூழ்கி இவ்வளவு அக்கிரமம் பண்ணுகிறார்களே, இவர்களை நியாயந்தீர்க்க வேண்டுமென்று ஜலத்தினால் நியாயந்தீர்த்தார். நோவாவின் குடும்பத்தை தவிர மற்ற எல்லாரையும் அழித்துப்போட்டார். ஏன் ஜலத்தினால் அதைச் செய்தார்? ஆதியாகமம் புத்தகம் எழுதப்பட்ட காலத்திலே ஜலம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று அவர்களுக்கு விளங்கினது. இன்றைக்கு நமக்குத்தான் விளக்கம் தேவை. ஆதியாகமம் 1-ஆம் அதிகாரத்திற்குச் செல்வோம். தேவன் ஏன் ஜலத்தினால் நியாயந்தீர்த்தார் என்பதின் முக்கியத்துவத்தைக் கவனியுங்கள். இதைக் கவனித்தால் தான் தேவன் ஏன் இப்போது இவர்களை சமுத்திரத்திற்கு முன் கொண்டுவந்திருக்கிறார் என்பது விளங்கும்.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்(ஆதியாகமம் 1:1, 2).

தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆனால் சிருஷ்டிப்பு இன்னும் நிறைவடையவில்லை. எல்லாவற்றையும் முழுமையாக செய்து முடிக்கவில்லை. தேவன் சிருஷ்டித்தார், வானமும் பூமியும் உண்டாயிருக்கிறது. ஆனால் அது இருக்க வேண்டிய விதத்தில் இல்லை. அங்கு ஒழுங்கின்மை, வெறுமை, இருள் இருக்கிறது. ஜலம் பூமி முழுவதையும் மூடிக்கொண்டிருக்கிறது. தேவன், மனுஷனை இங்கு கொண்டுவந்து வைக்க வேண்டுமென்று திட்டம்போட்டு வைத்திருக்கிறார். ஆனால் இப்போது இருக்கிற சூழ்நிலையில் மனுஷனை இங்கு கொண்டுவந்து வைக்க முடியாது. ஜலம் மூடிக்கொண்டிருக்கிறது. அவன் வாழுவதற்கு அவனுக்கு வெட்டாந்தரை கிடையாது. அதுமட்டுமல்ல, அங்கு வெறுமை இருக்கிறது. அங்கு மரங்கள், செடி, கொடிகள், மிருகங்கள் எதுவும் இல்லை. அவனுக்கு ஆகாரத்திற்கு வழி இல்லை. மனுஷன் வாழக்கூடிய இடமாக அது இல்லை. அவர் மனுஷனுக்காகத்தான் பூமியை உண்டாக்குகிறார். ஆக இந்த பூமியை தயார் பண்ண வேண்டும். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருக்கிறது. பூமி முழுவதையும் ஜலம் மூடிக்கொண்டிருக்கிறது. ஜலத்தின்மேல் ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருக்கிறார். இப்போது சிருஷ்டிப்பின் வேலை தொடருகிறது. சிருஷ்டிப்பு என்பது வெறும் உண்டாக்கினார், ஒழுங்கின்மை, வெறுமை, இருள் இருந்தது என்பதோடு முடிந்துவிடவில்லை. சிருஷ்டிப்பு தொடருகிறது, அதை முடிக்க வேண்டும், அதை perfect பண்ண வேண்டும். கர்த்தர் perfect பண்ணாமல் விடமாட்டார். அவர் எப்படி perfect பண்ணுகிறார் என்று பாருங்கள்.

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று(ஆதியாகமம் 1:3).

கர்த்தர் பிரச்சனையை சரி செய்கிறார். மனுஷன் வாழக்கூடிய இடமாக மாற்றுகிறார்.

தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்(ஆதியாகமம் 1:8-10).  

ஒழுங்கின்மை, வெறுமை, இருள் இது நல்லதல்ல. ஜலம் மூடிக்கொண்டு எங்கு பார்த்தாலும் தண்ணீரால் நிறைந்திருப்பது நல்தல்ல. எது நல்லது? வெளிச்சம் வந்துவிட்டது, ஆகாயவிரிவு வந்துவிட்டது. தேவன் ஜலத்தை ஒரு ஓரமாக ஒதுங்கச் சொல்லி அதற்கு ஒரு எல்லையைக் கொடுத்து நீ இங்கேயே இரு என்று சொல்லிவிட்டார். மனுஷன் வாழுவதற்காக வெட்டாந்தரையை உண்டாக்குகிறார். இது நல்லது என்று சொல்லுகிறார். சிருஷ்டிப்பை இன்னும் நன்றாக perfect-ஆக ஆக்குகிறார். மனுஷன் வாழக்கூடிய ஒரு இடமாக ஆக்கிவிட்டார். புல், பூண்டுகள், தாவர வர்க்கங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், மிருகங்கள் என்று உண்டாக்கி கடைசியில் மனுஷனை உண்டாக்குகிறார். ஜலத்தை ஓரிடத்தில் ஒதுக்கி அதுதான் சமுத்திரம் என்று ஆனது. அதுதான் சிருஷ்டிப்பு. சிருஷ்டிப்பு என்பது ஒழுங்கின்மை, வெறுமை, இருள் எல்லாவற்றையும் போக்கி, எல்லா இடத்திலும் ஜலத்தால் நிறைந்திருப்பதை எடுத்துவிட்டு வெட்டாந்தரை, சமுத்திரம் என்று தனித்தனியாக பிரித்து அழகாக உண்டாக்கி அப்படி வைப்பதுதான் சிருஷ்டிப்பு. நோவாவின் காலத்தில் ஜனங்களின் அக்கிரமம் மிகுதியால் அவர்களை நியாயந்தீர்த்து, தேவன் இந்த உலகத்தை வெள்ளத்தினால் அழித்தபோது சிருஷ்டிப்பு தலைகீழானது, அதுதான் நியாயத்தீர்ப்பு. சிருஷ்டிப்பில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருந்தது, அதை ஒரு ஓரமாக ஒதுக்கி, வெட்டாந்தரை, ஜலம் என்று பிரித்து வைத்தார். இப்போது சமுத்திரம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் பூமி முழுவதையும் நிரப்பிவிட்டது. அது பழைய நிலைக்குப்போய் விட்டது. நோவாவின் காலத்தில் வந்த வெள்ளத்தைப் பற்றி எழுதுகிறவர்கள், அந்த நியாயத்தீர்ப்பு வேறொன்றுமில்லை, அது decreation. தேவன் சிருஷ்டிப்பை தலைகீழாக்கிவிட்டார். ஏனென்றால் கர்த்தர் இவர்களுடைய அக்கிரமத்தைப் பார்த்து தாங்கிக்கொள்ளாமல் சிருஷ்டிப்பை தலைகீழாக்கி, திரும்பவும் ஒழுங்கின்மை, வெறுமை, இருள் வந்து சூழ்ந்துகொள்ளும்படியாக அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உண்டாக்கிவிட்டார் என்கிறார்கள்.

பூமியில் வெட்டாந்தரை, சமுத்திரம், மரம், செடி, கொடிகள் இவற்றை உண்டாக்கின தேவன் குடும்பம் என்கிற அமைப்பை உண்டாக்கினார். இயேசு சொல்லுகிறார், “ஆதியிலே மனுஷனை உண்டாக்கின தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்”. அவர்கள் கணவன் மனைவியாக வாழ வேண்டும், அவர்கள் பிள்ளைகளைப் பெற வேண்டும், குடும்பங்கள் உண்டாக வேண்டும், குடும்பங்களால் பூமி நிறைந்திருக்க வேண்டுமென்று கர்த்தர் குடும்ப வாழ்க்கையை முன்கூட்டியே எண்ணிப்பார்க்கிறார். ஆண், பெண் என்று இருந்தால் தான் குழந்தை பிறக்க முடியும், மனுஷனை அப்படி உண்டாக்குவோம், அவனை வெறும் ஆணாகவோ, பெண்ணாகவோ உண்டாக்காமல் ஆணென்றும் பெண்ணென்றும் உண்டாக்குவோம் என்று சொல்லி அந்த நோக்கத்தை வைத்து அப்படி உண்டாக்கினார். குடும்பத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் தீர்மானித்திருந்தார். இதெல்லாம் சிருஷ்டிப்பில் ஒரு பகுதி. அவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினது போல குடும்பத்தையும் உண்டாக்கினார். குடும்பம் ஒரு குட்டி பரலோகம் போல இருக்க வேண்டும். அங்கு சமாதானம், சந்தோஷம் இருக்க வேண்டும், எல்லாரும் சேர்ந்து வாழ வேண்டும், ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும் என்று எண்ணித்தான் குடும்பத்தை உண்டாக்கினார். ஆனால் சில நேரங்களில் அப்படி இருப்பதில்லை, சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. ஒரு கணவன் தன் மனைவியை வைத்துக்கொள்ள வேண்டிய விதத்தில் வைத்துக்கொள்ளவில்லை என்றால், மனைவி தன் புருஷனை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தவில்லை என்றால் அவர்கள் கர்த்தரை அவமதித்து, கர்த்தர் குடும்பத்தை எதற்காக உண்டாக்கினார் என்பதை கவனிக்காமல், நாங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வாழுவோம், எங்களுக்கு யாரும் சொல்ல முடியாது, என் மனைவி, நான் அடிப்பேன் என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். மனுஷன் தன் வாழ்க்கையிலிருந்து தேவனை தள்ளிவிட்டான். அக்கிரமம் பெருகிவிட்டது. அந்த குடும்பத்தில் சிருஷ்டிப்பு தலைகீழாகி விடுகிறது. கணவன் மனைவியை சரியாக வைத்துக்கொள்ளவில்லை என்றவுடன் மனைவி சும்மாயிருப்பாள் என்று எண்ணுகிறீர்களா? அவளும் வேண்டா வெறுப்புடன் காரியங்களைச் செய்கிறாள். தேவன் உண்டாக்கின அற்புதமான குடும்பம் தான் சிருஷ்டிப்பு. அங்கு இசைவு, அன்பு, மகிழ்ச்சி இருக்க வேண்டும். ஆனால் இப்போது அது decreation ஆகிவிட்டது. கர்த்தர் அழகாக சிருஷ்டித்தார், ஆனால் பாவம் வந்தவுடன் இப்போது அது decreation ஆகிவிட்டது, சிருஷ்டிப்பு தலைகீழாகி விட்டது. திரும்பவும் பழைய ஒழுங்கின்மை, வெறுமை, இருள் என்கிற அந்த நிலைக்குப் போய்விட்டது. சில கணவன் மனைவி சண்டை போடும்போது, “நியாயத்தீர்ப்பு நாளிலே நான் செய்தது தவறா, நீ செய்தது தவறா என்று கர்த்தர் உனக்குச் சொல்லுவார்” என்று சொல்லுவார்கள். ஆனால் நியாயத்தீர்ப்பு இன்றைக்கே ஆரம்பித்துவிட்டது. குடும்பத்தில் கணவனும் மனைவியும் தேவனுடைய நியாயங்களை மதிக்காமல் நடந்துகொள்ளும்போது அங்கு தேவன் அமைத்த குடும்பமே தாறுமாறாகி விடுகிறது, decreation உண்டாகி விடுகிறது. தேவன் நோவாவின் காலத்தில் பூமியை வெள்ளத்தினால் அழித்தது போல குடும்பம் அழிகிறது. அங்கு பிரிவு, விவாகரத்து என்று ஆகி பிள்ளைகள் பாதிக்கப்பட்டு, பல தலைமுறைகளுக்கு அந்த பாதிப்புகள் தொடருகிறது என்பதை ஜனங்கள் பார்க்க முடியவில்லை. அவர்கள் அதை உணராமல் இருக்கிறார்கள். இதுதான் decreation.

வேதவல்லுனர்கள் இதை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள். மோசேயின் காலத்தில் உண்டான பத்து வாதைகளும் decreation தான் என்று சொல்லுகிறார்கள். தண்ணீர் இருக்க வேண்டிய விதத்தில் இருக்க வேண்டும், தண்ணீரையும் கர்த்தர் தான் உண்டாக்கினார், இரத்தத்தையும் கர்த்தர் தான் உண்டாக்கினார். இரண்டும் கலந்துவிட்டது, இரண்டும் கலக்கக்கூடாது, கலந்தால் எப்படி குடிப்பது, குளிப்பது? தண்ணீர் இரத்தமாக மாறிவிட்டது. தவளை இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் தவளைகளாக இருந்தால் எப்படியிருக்கும்! தவளை இருப்பதில் தவறில்லை, ஆனால் அது எங்கும் இருந்தால் அது தவறு. அது decreation. கல்மழை பெய்து, அதோடு தீயும் சேர்ந்து வருகிறது. மழை பெய்வது தேவன் கொடுக்கிற நல்ல ஈவு. அது கல்மழையாய் பெய்து அதோடு தீயும் கலந்து வருவது என்பது decreation. ஆக பத்து வாதைகளையும் இவர்கள் அப்படித்தான் வியாக்கியானம்பண்ணுகிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், இது எல்லாமே decreation. கர்த்தர் எகிப்தை நியாயந்தீர்த்தார். கர்த்தரை அவமதித்த அந்த ராஜாவையும் அவனுடைய தேசத்தையும் கர்த்தர் நியாயந்தீர்த்தார். அவனை தண்டித்தார். அந்த பத்து வாதைகளும் கர்த்தர் அனுப்பின தண்டனை. அது நியாயத்#2980;ீர்ப்பு என்று சொல்லுகிறார்கள். ஜலத்தை அந்த விதத்தில் யோசித்துப் பாருங்கள். ஜலம் இருக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும். சமுத்திரம் இருப்பது நல்லது, அதைப்போய் பார்க்கிறோம். ஆனால் அது வீட்டிற்குள் வந்துவிட்டால் எப்படி? சுனாமி ஒரு decreation.

ஆக creation, decreation என்கிற விதத்தில் இதைப் பற்றி எண்ணுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடக்கிறார்கள். இவர்கள் போகும்போது சமுத்திரம் இரண்டாகப் பிளந்து, தரை உலர்ந்த தரையைப் போலாயிற்று. அதே வழியில் எகிப்தியர் வரும்போது சமுத்திரம் ஒன்றாக சேர்ந்துவிட்டது, அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள். ஏன் என்று கேட்டால் அதற்கு நம் கிறிஸ்தவர்கள், எகிப்தியர் பாவிகள் என்று சொல்லுவார்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் அவர்களைக் காட்டிலும் பாவிகள். அவர்கள் பத்து முறை தேவனை சோதித்தார்கள். “தண்ணீர் இல்லாத இடத்திற்கு தேவன் கொண்டுவந்து விட்டாரே” என்றார்கள், கற்பாறையிலிருந்து தண்ணீர் வந்தது. தாராளமாக தண்ணீர் குடித்தார்கள். “தண்ணீர் கொடுத்தார், சோறு கொடுப்பாரா?” என்றார்கள். தேவன் வானத்திலிருந்து மன்னாவை வரவழைத்தார். சோறு கொடுத்தவுடன் “இறைச்சியைக் கொடுப்பாரா?” என்றார்கள். அதாவது அவர்களை திருப்திபடுத்துவதற்கு எவராலும் முடியாது. மோசே அவர்களுக்கு போதகராக இருக்கிறார். முப்பது லட்சம் பேரை இவன் சமாளிக்க வேண்டும். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் திடீரென்று கல்லை எடுத்துவிடுவார்கள், ஏமாந்தால் கொன்றுபோட்டு விடுவார்கள். இவர்கள் அப்படிப்பட்டவர்கள். இவர்களை சமாளிக்க வேண்டும். இவ்வளவு மோசமானவர்கள். இவர்களுக்கு கொஞ்சங்கூட விசுவாசமே கிடையாது. பிற்போக்கான, கெட்ட எண்ணங்கள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய மக்கள் என்பதால் சமுத்திரம் பிளந்தது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். கிடையாது. சமுத்திரம் ஏன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிளந்தது? எகிப்தியர் அதை கடக்கப்போகும்போது ஏன் அமிழ்ந்துபோனார்கள்? இஸ்ரவேலர்கள் யோக்கியர்கள், எகிப்தியர்கள் பாவிகள் என்பதினால் அல்ல. இரண்டு பேரும் பாவிகள். சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர் நிற்க வேண்டிய இடத்தில் அப்படியே நின்றதற்கு காரணம் மோசே என்கிற ஒரு மனுஷன். அவன் தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன். அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அவன் அந்த இடத்தில் நின்று, கோலை சமுத்திரத்திற்கு நேராக உயர்த்துகிறான். சமுத்திரம் இரண்டாகப் பிளக்கிறது, கீழ்க்காற்று அதைப் பிளந்து வெட்டாந்தரையைப் போலாக்குகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் சமுத்திரத்தைக் கடந்துபோன பிறகு மோசே அதே சமுத்திரத்தின் மீது கோலை நீட்டுகிறான். இவர்களுக்குப் பின்னால் எகிப்தியர் கடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். சமுத்திரம் இரண்டாக மூடிக்கொண்டது. காரணம் என்ன? இஸ்ரவேலர்கள் தப்பியதற்கு காரணம் என்ன? எகிப்தியர்கள் கடக்க முடியாமல் அமிழ்ந்துபோனதற்குக் காரணம் என்ன? மோசே என்கிற ஒரு மனுஷன். அவன் ஜனங்களுக்கும் தேவனுக்கும் நடுவே நின்றுகொண்டு இந்த காரியத்தை நிகழ்த்துகிறான். நம்முடைய மோசேவாகிய இயேசு அதைக்காட்டிலும் பெரியவர். அதைக் காண்பிப்பதற்காகத்தான் இந்த காட்சி இங்கு நடக்கிறது. மோசே இந்த ஜனங்களை கடக்கப்பண்ணினான். இதில் இவர்களுடைய நற்கிரியைகள், புண்ணியங்கள், கீழ்ப்படிதல் எதுவும் கிடையாது. இது முற்றிலும் அவனுடைய செயல். மோசே கர்த்தரை விசுவாசிக்கிறான், கர்த்தர் சொன்னபடி செய்கிறான், காரியங்கள் நடக்கிறது. இவர்கள் ஒன்றும் கிடையாது, இவர்கள் அதை கடக்கிறார்கள். ஆக மோசே தான் காரணம். யாத்திராகமம் 14-க்குச் செல்வோம்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்(யாத்திராகமம் 14:15, 16).

இதை வேதவிளக்கவுரை எழுதுகிறவர்கள், மோசே கர்த்தரிடம் திட்டு வாங்குகிறார் என்கிறார்கள். கர்த்தர் ஏன் திட்டினார் என்று சொல்லும்போது இவனும் இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்ந்து பேசியிருந்திருப்பான் போலிருக்கிறது. நாங்கள் எகிப்திலேயே செத்திருப்போமே, அங்கு கல்லறையாவது இருந்ததே, அங்கு எங்களை புதைத்திருப்பார்களே, நாங்கள் அங்கேயே வேலை செய்துகொண்டு இருந்திருப்போமே என்று ஜனங்களோடு சேர்ந்து இவனும் பேசியிருப்பான். அதனால் தான் கர்த்தர் இவனை திட்டுகிறார் என்கிறார்கள். ஆனால் வேதத்தில் வாசித்தீர்கள் என்றால் அப்படி ஒன்றும் கிடையவே கிடையாது. மோசே அப்படி பேசினான் என்று எந்த ஆதாரமும் கிடையாது. ஜனங்கள் பேசினார்கள், ஆனால் மோசே பேசவில்லை. பிறகு ஏன் கர்த்தர் மோசேயை திட்டுகிறார்? மோசே என்ன தவறு செய்தான்? அவன் எதற்காக திட்டு வாங்குகிறான்?

இங்குதான் சுவிசேஷ கதை வருகிறது. வேதவசனத்தைப் படிக்கும்போது சுவிசேஷ கதையை புரிந்துகொண்டு படிக்க வேண்டும். அப்போதுதான் அது சுவாரஸ்யமாக இருக்கும். சுவிசேஷ கதை என்ன? கர்த்தர் மத்தியஸ்தர் என்று ஒருவரை வைக்கிறார். இயேசு நம்முடைய மத்தியஸ்தரானார். தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையே இருந்து மனுஷனை தேவனோடு கொண்டுவந்து சேர்க்கிற ஒரு மனிதனாக இயேசு இந்த உலகத்திலே வந்தார். அவர்தான் மத்தியஸ்தர். இந்த மத்தியஸ்தர் இரண்டு பக்கமும் identify பண்ணுகிறார். அவர் தேவனாகவும் இருக்கிறார், மனுஷனாகவும் இருக்கிறார். மனுஷனாக இருந்துகொண்டு மனுஷர்களோடு தம்மை முழுமையாக அடையாளப்படுத்திக்கொள்கிறார். Identification என்பது கிறிஸ்தவ உபதேசம். அது மிக முக்கியமான உபதேசம். நாம் கிறிஸ்துவோடுகூட மரித்து, அவரோடுகூட உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறோம் என்று வேதம் சொல்லுவதெல்லாம் Identification-ஐ பற்றிய உபதேசங்கள். இயேசு நம்மோடுகூட முற்றிலுமாக identify பண்ணுகிறார். இயேசு ஏன் சிலுவையில் மரித்தார்? அவர் என்ன பாவஞ்செய்தார்? 2 கொரிந்தியர் 5:21 சொல்லுகிறது, “பாவமறியாத அவரை தேவன் நமக்காகப் பாவமாக்கினார்”. அவர் பாவஞ்செய்யாதவர் மட்டுமல்ல, பாவத்தையே அறியாதவர். அவர் பிறக்கும்போது கூட அவருக்குள் பாவம் இல்லை. பாவத்தின் சுபாவமே இல்லாமல் பிறந்தவர் அவர். அவர் எப்படி பாவமாக முடியும்? பாவமே உருவமாகிறார். எந்த அளவிற்கு அப்படி ஆகிறார்? “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சிலுவையிலிருந்து கதறக்கூடிய அளவிற்கு, தேவன் தம்முடைய முகத்தை இவரை நோக்கிப் பார்க்காமல் திருப்பிக்கொள்ளுகிற அளவிற்கு பாவமாகி விட்டார். இவர் பாவமானதினால் தான் தேவன் தம் முகத்தை திருப்பிக்கொள்கிறார். தேவன் பாவத்தை நோக்கிப் பார்க்கக்கூடாத சுத்தக்கண்ணர். இயேசு பாவமாகிவிட்டார். எப்படி? அவருடைய பாவத்தினால் அல்ல. அவரிடம் பாவமே இல்லை. அவர் எப்படி அப்படி பாவமானார்? நம் எல்லாருடைய பாவத்தையும் தம்மீது சுமந்து அவர் பாவமானார். அவர் பாவமானார் என்பது மட்டுமல்ல, அவர் சாபமானார் என்றும் வேதவசனம் சொல்லுகிறது. கலாத்தியர் 3:13 சொல்லுகிறது, “மரத்திலே தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காகச் சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்”. ஏன்? ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் புறஜாதியான நமக்கும் உண்டாயிருக்கும்படியாக அப்படியாயிற்று. இங்கு இன்னொரு காரியம் நடக்கிறது. அவர் பாவமாகி நாம் நீதியானோம். பாவமறியாத அவர் பாவமானார், நீதியே அறியாத நாம் நீதிமான்களானோம். அவர் நம்முடைய பாவத்தை எடுத்துக்கொண்டார். நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார். அவர் நம்மைப்போலானார். எதற்காக? நாம் அவரைப்போலாகும்படியாக. நம்முடைய பரலோக பிதாவிற்கு முன்பாக தைரியமாய் நிற்கும்படியாக, எந்த குற்ற உணர்வோ, தாழ்வு மனப்பான்மையோ, ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வோ இல்லாமல் தேவனுக்கு முன்பாக நாம் நிற்க நம்மை தகுதிப்படுத்தும்படியாக, நீதிமானாக்கும்படியாக அவர் பாவமானார். இப்போது நாம் தேவனுக்கு முன்பாக குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, ஆக்கினைத்தீர்ப்பின் உணர்வு இல்லாமல் நிற்க முடிகிறது. இதுதான் நீதிமான் என்பது. இயேசு சாபமானார். அவர் மனுவர்க்கத்தின் முழு சாபத்தையும் தம்மீது ஏற்றுக்கொண்டார். அவர் ஆசீர்வாதத்தின் முழு உருவம், திரித்துவத்தின் இரண்டாம் நபர், தேவகுமாரன். அவர் சாபமாகிறார். நம்முடைய ஸ்தானத்தை அவர் எடுத்துக்கொள்கிறார். அவர் நம்மைப்போலாகிறார். நாம் சாபத்திற்கு உட்பட்டிருந்தோம். ஆதாமின் பாவத்தின் மூலமாக மனுவர்க்கத்தின் மீது சாபம் பிடித்துக்கொண்டிருந்தது. அவர் அந்த சாபத்திற்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறார். ஏன்? சாபத்திற்குட்பட்டிருந்த நாம் இப்போது ஆசீர்வாதத்திற்கு உட்பட்டிருக்கும்படியாக. அவருடைய நிலையை நாம் அடையும்படியாக அவர் முழுவதுமாக நம்மோடு identify ஆகிறார். அதுதான் identification.

இயேசு நம்மைப்போலானார். அதுபோலத்தான் மோசேயும் எந்த தவறும் செய்யவில்லை, முறுமுறுக்கவில்லை. இருந்தாலும் அவன் தான் திட்டு வாங்குகிறான். அவன் தான் செய்த தவறுக்காக திட்டு வாங்கவில்லை. இவர்கள் செய்த தவறு எல்லாவற்றையும் அவன் தன் மீது போட்டுக்கொள்கிறான். இவர்களுடைய ஸ்தானத்திலே, இவர்களுக்குப் பதிலாக திட்டு வாங்குகிறான். பழைய ஏற்பாட்டில் பலிகளை செலுத்தும்போது பாவநிவாரண நாளில் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருகிறார்கள். இரண்டு ஆட்டுக்குட்டிகளை கொண்டுவருகிறார்கள். பிரதான ஆசாரியன் அதின் மீது தன் கைகளை வைத்து, தேசத்தின் அத்தனை பாவங்களையும் அந்த ஆட்டுக்குட்டியின் மீது அறிக்கையிடுகிறான். அவன் அறிக்கையிடும்போது, என் பாவத்தை ஆட்டுக்குட்டி மீது வைத்தாகிவிட்டது. இப்போது அது அந்த ஆட்டுக்குட்டியின் பாவமாகிவிட்டது என்று ஜனங்கள் மனநிம்மதி அடைகிறார்கள். அதன் பிறகுதான் அதைக் கொல்லுகிறார்கள். ஒரு ஆட்டுக்குட்டியின் மீது கையை வைத்து அதின்மீது பாவத்தையெல்லாம் transfer பண்ணி கொன்றுவிடுவார்கள். இன்னொரு ஆட்டுக்குட்டியை திரும்பி வரக்கூடாத ஒரு இடத்திற்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவார்கள். ஜனங்கள் நின்றுகொண்டு, அதோ போகிறது என்று அந்த ஆட்டைப் பார்ப்பார்கள். அந்த ஆடு கண்ணுக்கு எட்டாத தூரத்திற்குப் போய்விடும். அதைக் கொண்டுபோகிறவன் அதை இன்னும் கொண்டுபோய் அது திரும்ப வரமுடியாதபடி வழியை கண்டுபிடிக்காத அளவுக்கு காட்டில் விட்டு வருவான். அந்த ஆடு திரும்பாது. ஜனங்கள் நிம்மதியோடு வீடு திரும்புவார்கள். என்னுடைய பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு அந்த ஆடு எனக்காக செத்தது, பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை செத்த அந்த ஆட்டுக்குட்டி ஏற்றுக்கொண்டது, என்னுடைய பாவங்கள் இனி ஒருபோதும் தேவனுக்கு முன்பாக வருவதில்லை, அது ஆழ்கடலில் தள்ளப்பட்டுவிட்டது, என்னைவிட்டு தூரமாகிவிட்டது, கர்த்தர் அதை அகற்றிப்போட்டார். என் பாவத்தை தூக்கிச் சென்ற ஆடு திரும்பி வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்று எண்ணி செல்லுவார்கள். அந்த ஆடு காட்டில் காய்ந்து செத்துவிடும். மீட்பை எப்படி சித்தரிக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த ஆடு இந்த மனுஷர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்கிறது. மோசே ஜனங்களோடு identify ஆகிவிடுகிறார். அவர்களுக்குப் பதிலாக திட்டு வாங்குகிறார். அது ஒரு அம்சம்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்(யாத்திராகமம் 14:15, 16).

இயேசு மனுஷனுடைய பாவத்தோடு தன்னை identify பண்ணி, அதனிமித்தம் பாவமாகி, சாபமாகிறார். மோசே இஸ்ரவேல் ஜனங்களோடு identify ஆகி, அதனிமித்தமாக திட்டு வாங்குகிறார். திட்டு வாங்கின அதே மோசேயைப் பார்த்து, “உன் கோலை சமுத்திரத்தின் மீது நீட்டி இரண்டாக பிளந்துவிடு, ஜனங்கள் புறப்பட்டுப் போகட்டும்” என்கிறார். எந்த மோசே எல்லாருடைய பாவத்தையும் தன் மீது ஏற்றுக்கொண்டானோ, அதனுடைய தண்டனையை வாங்கிக்கொண்டானோ அதே மோசேக்கு சமுத்திரத்தையே பிளக்கிற அதிகாரமும் கொடுக்கப்படுகிறது. இயேசுவும் அப்படியே. அவர் நம்முடைய பாவத்தையெல்லாம் எடுத்து பாவமானார், சாபமானார். ஆனால் உயிரோடெழும்பி, சிவந்த சமுத்திரத்தை விட பெரிய கடக்கக்கூடாத ஒரு காரியத்தை கடக்க வைத்தார். பாவம், பிசாசு என்கிற வல்லமையிலிருந்து நம்மை நிரந்தரமாய் விடுதலையாக்கி, அதன் சங்கிலியை முறித்தார். இதுதான் சுவிசேஷம். இதையெல்லாம் சொல்லுவதற்காகத்தான் கர்த்தர் இவர்களை சிவந்த சமுத்திரத்திற்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்துகிறார்.

யோனாவின் கதையில் அவன் கர்த்தர் சொன்ன இடத்திற்குப் போகாமல் வேறு இடத்திற்குப் புறப்பட்டுவிட்டான். அவன் கப்பலில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறான், கடல் கொந்தளிக்கிறது. மறுபடியும் நம்முடைய subject-ஆன ஜலத்திற்கு வந்துவிட்டோம். ஜலத்தில் ஏதோ ஒரு பிரச்சனை உண்டாகிறது. உடனே கப்பலில் இருந்தவர்கள், இது தேவனுடைய நியாயத்தீர்ப்பு, யாரோ தவறு செய்துவிட்டார்கள், அதனால் தான் இப்படி நடக்கிறது என்று புரிந்துகொண்டார்கள். அவர்கள் சீட்டு போடுகிறார்கள். சீட்டு யோனாவின் பேரில் விழுகிறது. கர்த்தர் set-up பண்ணுவதில் பெரியவர். நீ யார், எந்த ஊர், உன் தொழில் என்ன, நீ எதற்காக கப்பலில் ஏறினாய், உன்னால் தான் நாங்கள் மரிக்கப்போகிறோம், பதில் சொல்லு என்று கப்பலில் இருந்தவர்கள் யோனாவிடம் கேட்கிறார்கள். அதற்கு யோனா, ஆமாம், கர்த்தர் என்னை வேறு இடத்திற்கு போகச் சொன்னார், ஆனால் நான் இங்கு வந்துவிட்டேன், நான் செய்த தவறினால் தான் கடல் கொந்தளிக்கிறது. என்னால் தான் இந்த பிரச்சனை. இங்கு கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நடக்கிறது என்று ஒத்துக்கொள்கிறான். அவர்கள் அவனிடம், “நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும், நாங்கள் என்ன செய்தால் இந்த கடல் அமைதலாகும், இது எங்களைக் கொன்றுவிடக்கூடாது, நீயே சொல்” என்று கேட்கிறார்கள். அதற்கு அவன், “என்னை தூக்கி கடலில் போட்டுவிடுங்கள், அப்போது கடல் அமைதியாகிவிடும்” என்கிறான். அவர்கள் அவனை தூக்கி கடலில் போடுகிறார்கள், கடல் அமைதியாகிவிட்டது. 1-ஆம் அதிகாரத்தின் 15-ஆம் வசனம், “அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப்பண்ணினார்கள்” என்று சொல்லுகிறது. இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, “யோனாவைக் காட்டிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்கிறார். யோனாவுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது. அவர் யோனாவைப் பற்றி குறிப்பிடுகிறார். யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்ததுபோல இவரும் மூன்று நாட்கள் கல்லறையில் இருப்பார் என்பதைச் சொல்லுகிறார். இவருக்கும் யோனாவுக்கும் இருக்கிற ஒற்றுமைகளில் ஒன்று என்னவென்றால், யோனா செய்த பாவத்தின் நிமித்தமாக கடல் கொந்தளித்தது. அவனை கடலில் தூக்கிப்போட்டவுடன் கடல் அமைதியாகிவிட்டது. இங்கு இயேசு அவர் பாவஞ்செய்யவில்லை. அவர் நம்முடைய பாவத்தைச் சுமந்து கல்வாரி சிலுவையில் மரித்தபோது, தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு என்கிற கொந்தளிக்கிற கடலில் தூக்கி எறியப்பட்டார். அவர் அங்கு செத்து இரத்தத்தை சிந்தினவுடன் நமக்கு அமைதி, சமாதானம், மீட்பு, இரட்சிப்பு உண்டாகிறது. அவருக்கு மரணம், நமக்கு வாழ்வு. அவர் மரிக்கிறார், நாம் வாழுகிறோம். இப்படித்தான் வேதவசனம் போதிக்கிறது. இயேசுவே இதைச் சொல்லுகிறார். தாம் யோனாவைக் காட்டிலும் பெரியவர் என்கிறார். அன்றைக்கு யோனாவை கடலில் போட்டார்கள், கப்பலில் இருந்த ஆட்கள் தப்பித்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தபோது அவரை தேவனுடைய கோபாக்கினை என்கிற கடலுக்குள் தூக்கிப்போட்டார்கள், அதன் மூலம் உலகம் முழுவதற்கும் இரட்சிப்பு உண்டானது, அழிவிலிருந்து தப்பினது. இயேசு யோனாவைக் காட்டிலும் பெரியவர் என்பது முற்றிலும் உண்மை. அவன் மூலமாக சிலருக்கு இரட்சிப்பு, இவர் மூலமாக எல்லாருக்கும் இரட்சிப்பு. இவர் வெறும் கிறிஸ்தவர்களின் தெய்வம் அல்ல. இவர் உலக இரட்சகர், உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி.

ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்கள் பிரச்சனை பண்ணிவிட்டார்கள். கர்த்தர் மோசேயிடம், “நான் அவர்களை அழித்துவிட்டு உன் மூலமாக ஒரு சந்ததியை எழுப்புகிறேன்” என்று சொன்னார். அதற்கு மோசே, “வேண்டாம் ஆண்டவரே, நீர் இப்படிச் செய்தால் நாளைக்கு உம்மைத்தான் ஜனங்கள் மோசமாக பேசுவார்கள். அவர்களை மன்னித்துவிடும். அவர்களை மன்னிக்க முடியவில்லை என்றால் என்னுடைய பேரை உம்முடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடும், நான் ஒரு ஆள் நரகத்திற்குப் போனால் பரவாயில்லை, இவர்கள் எல்லாரையும் இரட்சியும்” என்கிறான். கர்த்தர் அவனுக்கு அப்படிச் செய்யவில்லை. ஆனால் இயேசுவை தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் சிலுவையில் மரிக்கும்படி ஒப்புக்கொடுத்தார். தேவன், இயேசுவுக்கு அதைச் செய்துவிட்டார். மோசே, “என்னுடைய பேரைக் கிறுக்கிப்போடும்” என்றான். தேவன் மோசேக்கு அதைச் செய்யவில்லை. மோசேயைக் காட்டிலும் பெரிய நம்முடைய மோசேக்கு அது நடந்தது. கர்த்தர் அவரைக் கொன்று நமக்கு வாழ்வு அளித்தார். சிலுவையில் அவரை மரிக்க ஒப்புக்கொடுத்து நமக்கு ஜீவனைக் கொடுத்தார். இதுதான் சுவிசேஷம். சுவிசேஷத்தை சித்தரிக்கும்படியாகத்தான் சிவந்த சமுத்திரத்தின் சம்பவமே நடக்கிறது. இதுதான் முதல் பகுதி.

தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிற நாம் எப்படி அவரை முழுமையாய் நம்புவது? நம்முடைய இக்கட்டான சூழ்நிலைகளில் எல்லா பக்கமும் ஆபத்து, தப்புவதற்கே வழியில்லை என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு நடந்தைப் போன்ற சூழ்நிலைகள் நமக்கும் நடக்கிறது. அப்படி நடக்கும்போது நாம் எப்படி தேவனுடைய வல்லமையை முற்றிலுமாய் சார்ந்துகொள்ளுவது? இதுதான் இரண்டாவது பகுதி. கர்த்தர் பெரியவர், நல்லவர், எனக்காக எதையும் செய்வார், சமுத்திரத்தைக்கூட எனக்காக இரண்டாகப் பிளப்பார். அவர் எனக்காக வைத்திருக்கிற நோக்கங்களை நிறைவேற்றும்படி நான் அவரிடத்தில் என்னை ஒப்புக்கொடுக்கும்போது சமுத்திரம் கூட என்னை தடுத்து நிறுத்த முடியாது. கர்த்தர் என் பட்சத்திலிருந்தால் எனக்கு எதிராக இருப்பவன் யார் என்பதை நாம் அனுபவ ரீதியாக அறிந்துகொள்ள வேண்டும். தேவன் இதை எப்படி நிகழ்த்துகிறார் என்பதைப் பார்ப்போம். கர்த்தர் திட்டமிட்டு அந்த பள்ளத்தாக்கிற்கு இஸ்ரவேல் ஜனங்களை கொண்டுவந்து விட்டார். இவர்கள் விசுவாச பயணத்தை துவங்கி, வெற்றிகரமாய் கானான் தேசத்தில் போய்ச் சேர்வதற்கு இரண்டு உபகரணங்களைத் தருகிறார். ஒன்று அக்கினி ஸ்தம்பம், இன்னொன்று மேக ஸ்தம்பம். இவ்விரண்டையும் எதற்கு தந்தார்? அது நகரும்போது கூடவே இவர்களும் செல்ல வேண்டும். அது நின்றுவிட்டால் இவர்களும் நின்றுவிட வேண்டும். கர்த்தர் இவர்களை வழிநடத்துவதற்காக இதைப் பயன்படுத்தினார். அதுமட்டுமல்ல, வனாந்திரத்தில் பகல் நேரத்தில் சுட்டெரிக்கிற கொடுமையிலிருந்து மேகஸ்தம்பம் காப்பாற்றினது. மேகஸ்தம்பத்தின் நிழல் அவர்கள் மீது இருக்கிறது. அவர்கள் வனாந்திரத்தில் இருந்தாலும் சுட்டெரிக்கிற வெயிலில் சாகவில்லை. எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள். ஒரு மனுஷனும் வியாதிப்படவில்லை. கர்த்தர் அந்த அளவிற்கு அவர்களை நன்றாக வைத்திருந்தார். அதற்காக அவர் மேகஸ்தம்பத்தைப் பயன்படுத்தினார். அக்கினி ஸ்தம்பத்தை இருளிலே அனல் மூட்டும்படியாக வைத்திருந்தார். அதுமட்டுமல்ல, அக்கினி ஸ்தம்பம் இரவிலே வெளிச்சத்தைக் கொடுக்கும்படியாக கொடுக்கப்பட்டது. சிலவேளைகளில் இருளில் பயணம் செய்ய வேண்டியதாயிருந்தது. அப்படி பயணிக்கும்போது அக்கினி ஸ்தம்பத்தின் உதவி தேவைப்படும். ஏனென்றால் அதினுடைய வெளிச்சத்தில் தான் இவர்கள் பயணம் பண்ண வேண்டும். அன்றைக்கு அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபோது கீழ்க்காற்று அடித்து சமுத்திரம் இரண்டாகப் பிளக்கிறது. கர்த்தர் அக்கினி ஸ்தம்பத்தை முன்னே விடுகிறார். ஏனென்றால் இவர்கள் போவதற்கு வழிகாட்ட வேண்டும். பாதை தெளிவாக வெளிச்சம்போட்டுக் கொடுத்தது போன்றிருக்கிறது. கர்த்தர் எப்படி set-up பண்ணுகிறார் என்று பாருங்கள். எல்லாம் உலர்ந்த தரையைப்போல இருக்கிறது. அக்கினி ஸ்தம்பம் முன்னே செல்லுகிறது, அதைப் பின்பற்றி நடந்து போகலாம். மேகஸ்தம்பத்தை தூக்கி பின்னால் விடுகிறார். அதை எகிப்தியர்கள் மேல் கொண்டுவந்து இறக்கிவிட்டார். அவர்களுக்கு ஒரே மேகமூட்டமாய் இருக்கிறது. அவர்களுக்கு பக்கத்தில் வருகிற ரதங்கள் கூட கண்ணுக்குத் தெரியவில்லை. ஒருவனோடு ஒருவன் இடித்து சக்கரங்கள் கழன்று வருகிறது, எல்லாம் தாறுமாறாகப் போகிறது. மேகஸ்தம்பத்தினால் அங்கு குழப்பமாக இருக்கிறது. இங்கு அக்கினி ஸ்தம்பத்தினால் இவர்களுக்கு பெரிய வழிகாட்டுதல் நடக்கிறது. இப்படித்தான் அவர்கள் கடந்தார்கள். அவர்கள் கடந்து அந்தப் பக்கம் போய் சேர்ந்துவிட்டார்கள். அப்போதுதான் எகிப்தியர்களுக்கு இஸ்ரவேலரைப் பார்க்க முடிகிறது. நடுவே அக்கினி ஸ்தம்பத்தை வரவைத்து இவர்களை நெருங்காதபடி வைத்துவிட்டார். எகிப்தியருக்கு தாங்கள் எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. இஸ்ரவேலர்கள் அக்கரை சேர்ந்தவுடன் தேவன் எகிப்தியருக்கு காட்சியைக் காண்பிக்கிறார். இவர்கள் இங்கிருந்து பார்க்கிறார்கள், அவர்கள் அங்குபோய் சேர்ந்துவிட்டார்கள். பார்வோன் அதைப் பார்க்கிறான், பெரிய பாதை இருக்கிறது, நாம் தாராளமாக போய் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று தன் சேனைகளுக்கு கட்டளையிடுகிறான். இவர்கள் ரதங்களை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். ஏற்கனவே சக்கரம் கழன்றுகொண்டு வருகிறது. கர்த்தர் மோசேயிடம், “நீ திரும்பவும் சமுத்திரத்திற்கு நேராக உன் கோலை நீட்டு” என்கிறார். சுவரைப் போன்று நின்று கொண்டிருந்த தண்ணீர் ஒன்றாக வந்து மூடிக்கொண்டது. எகிப்தியர் அதிலே அமிழ்ந்துபோனார்கள். ஒரு மத்தியஸ்தன் நடுவே நின்று சமுத்திரத்தை இரண்டாகப் பிளக்கிறான். இஸ்ரவேலர்களைக் கொண்டுபோய் அந்தப் பக்கம் விட்டு, பிறகு விரோதி பிடிப்பதற்கு முயற்சிக்கும்போது திரும்பவும் அந்த சமுத்திரத்தை இவனே மூடுகிறான். கடல் அவர்களை மூழ்கடிக்கிறது. மீட்பிலே இதுதான் நடக்கிறது. இயேசு நம்மை பாவம், பிசாசு ஆகியவற்றின் வல்லமையிலிருந்து முற்றிலுமாய் விடுதலையாக்குகிறார். பாவம் மற்றும் பிசாசின் வல்லமையை முற்றிலுமாய் ஒழிக்கிறார். அதனுடைய வல்லமையை ஒன்றுமில்லாமலாக்குகிறார், அதை அழித்துப்போடுகிறார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம்முடைய வாழ்க்கையிலே அநேக வேளைகளில் நாம் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு வந்துவிடுகிறோம். எல்லா பக்கமும் ஆபத்து என்று இருக்கும்போது நாம் பயந்துபோய் விடுகிறோம். வழி இல்லை என்றவுடன் திகைத்து பதறி விடுகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் நடந்துகொண்டதுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

எலிசா தீர்க்கதரிசியை பிடிப்பதற்காக சீரிய இராணுவத்தினர் தேடுகிறார்கள். ஒரு தீர்க்கதரிசியை பிடிப்பதற்கு பெரிய இராணுவத்தையே அனுப்புகிறார்கள். ரதம், குதிரை எல்லாம் வந்து நிற்கிறது. சீரிய தேசத்தின் இராணுவம் வந்து சூழ்ந்துகொண்டது. எலிசாவின் வேலைக்காரன் எட்டிப் பார்க்கிறான். அவன் எலிசாவிடம் வந்து, “எஜமானே, நாம் என்ன செய்வோம்?” என்று கதறுகிறான். அதற்கு எலிசா, “அவர்களோடு இருப்பவர்களைக் காட்டிலும் நம்மோடிருப்பவர்கள் அதிகம்” என்கிறார். வேலைக்காரன் போய் பார்க்கிறான், அவனுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. அவன் எலிசாவிடம் வந்து, “நீர் என்ன இப்படிச் சொல்லுகிறீர், சீரியருடைய ரதங்களும் குதிரைகளும் தான் இருக்கிறது” என்கிறான். எலிசா கர்த்தரிடம், “கர்த்தாவே, இவன் கண்களைத் திறந்தருளும், விசுவாசக் கண்களால் பார்க்கச் செய்தருளும்” என்று ஜெபிக்கிறார். கர்த்தர் வேலைக்காரனின் கண்களை திறக்கிறார். அக்கினிமயமான ரதங்களும், குதிரைகளும், குதிரை வீரர்களும் இருப்பதைக் காண்கிறான். சீரிய இராணுவத்தை விட அவர்கள் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறான். முதலில் ஆண்டவனே நாம் தொலைந்தோம் என்று வந்தான். ஆனால் இப்போது, ஆண்டவரே, சீரியர்கள் தொலைந்தார்கள் என்று சொல்லியிருப்பான். அவனுடைய கண்ணோட்டமே மாறிவிட்டது.

விசுவாசம் புது கண்ணோட்டத்தை தருகிறது. நாம் விசுவாசக் கண்களால் காண வேண்டும். எரிகோ மதில் விழுவதையும், அவர்கள் அந்த பட்டணத்தை கைப்பற்றுவதையும், அதின் ராஜாவையும் குதிரை வீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன், நீ பார் என்கிறார். நாமும் பார்க்க வேண்டும். உங்களுடைய சுகத்தையும், வெற்றியையும், விடுதலையையும், ஜெயத்தையும், எதிர்காலத்தையும், நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பாருங்கள். தேவன் வாக்குப்பண்ணின அத்தனை காரியங்களும் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறுவதைப் பாருங்கள். விசுவாசத்திற்கு கண்கள் இருக்கிறது. விசுவாசம் பார்க்கும். அது நான்கு பக்கமும் பார்க்காது, அதற்கு ஐந்தாவது வேறொரு பார்வை இருக்கிறது. அது வேறொன்றைப் பார்க்கும். இரண்டு பக்கம் மலை, ஒரு பக்கம் சமுத்திரம், ஒரு பக்கம் பார்வோன் என்பதை பார்ப்பதை விட்டு, கர்த்தருடைய அபார வல்லமை, அன்பு, இரக்கம் மற்றும் மேன்மையையும், அவர் என் பட்சத்திலிருக்கிறார், எனக்கு எதிராக இருப்பவன் யார் என்பதையும் பார்க்கிறது.

பன்னிரெண்டு வருஷத்திற்கு முன் என்னை மருத்துவமனையில் admit பண்ணியிருந்தார்கள். அப்போது சபை விசுவாசிகள் மருத்துவமனைக்கு போன் பண்ணி, “பாஸ்டர் எப்படியிருக்கிறார், சனிக்கிழமை வந்துவிடுவாரா?” என்று கேட்டிருக்கிறார்கள். அந்த டாக்டர் என்னிடம், “நீங்கள் யார்? எங்களுடைய அலுவலகத்திற்கு அநேகர் போன் பண்ணி நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்கிறார்களே” என்று கேட்டார். அதற்கு நான், “நான் ஒரு பிரசங்கியார்” என்றேன். அவர் என்னிடம், “உங்களுடைய ஜனங்களுக்குச் சொல்லுங்கள், இது அவ்வளவு சீக்கிரம் முடிகிற காரியம் இல்லை, இது serious ஆனதாக இருக்கிறது, ஆனால் பூட்டு என்று ஒன்று இருந்தால், நிச்சயமாக சாவி ஒன்று இருக்கும். சாவி இல்லாமல் எவரும் பூட்டைச் செய்வதில்லை. வியாதி என்று ஒன்ī#2993;ு இருந்தால், நிச்சயமாக அதிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய சாவி ஒன்று இருக்கிறது” என்றார். அப்போது எனக்கு ஒரு காரியம் ஞாபகத்திற்கு வந்தது. நான் கல்லூரியில் படித்த காலங்களில் விடுதியில் ஒரு அறையில் இரண்டு பேர் தங்குவோம். நாங்கள் தங்கும் அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கென்று ஆய்வு நடக்கும். அங்கு ஒரு வாடர்ன் இருந்தார். நாங்கள் வகுப்பில் இருக்கும்போது அவர் வந்து அறையை ஆய்வு செய்வார். அவர் ஒரு சாவியை வைத்து எல்லா அறைகளையும் திறப்பார். அதற்கு Master key என்று பெயர். அவர் சர்வ சாதாரணமாக எல்லா அறைகளையும் திறந்து பார்ப்பார். படுக்கையை சுத்தமாக வைத்திருக்கிறோமா, குப்பையை அள்ளி கொட்டி விட்டோமா என்று சோதிப்பார். நாங்கள் சரியாகச் செய்யவில்லை என்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். இப்படி நான்கு முறை செய்தால் அலுவலகத்தில் கூப்பிட்டு, “உனக்கு அறிவு இருக்கிறதா, நீ என்ன ஊழியம் செய்யப்போகிறாய்?” என்று கவுன்சிலிங் கொடுப்பார்கள். அன்றைக்கு அந்த வாடர்ன் ஒரே ஒரு சாவியை வைத்து எல்லா அறைகளையும் திறப்பார்.

நான் அதை நினைத்துப் பார்த்தேன். நம்முடைய தேவன் மனுக்குலத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் Master key வைத்திருக்கிறார். எல்லா பிரச்சனைகளும் நமக்கு திறக்க முடியாத பூட்டைப்போல இருக்கிறது. ஆனால் கர்த்தர், பயப்படாதே, பூட்டைத் திறப்பதற்கு நான் இருக்கிறேன். எவராலும் திறக்க முடியாத பூட்டை திறப்பதற்கு என்னிடம் சாவி இருக்கிறது என்கிறார். உங்களுடைய பிரச்சனை என்ன? உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம், குடும்பம், பொருளாதாரம், கையின் பிரயாசம் இவற்றில் எதில் பிரச்சனை இருக்கிறது? நீங்கள் எந்த கவலை, பாரம், பிரச்சனையோடு வந்திருந்தாலும் அதற்கான திறவுகோல் கர்த்தரிடத்தில் இருக்கிறது. கர்த்தர் பெரியவராய் இருக்கிறார். இந்த தேவன் சதாகாலங்களிலும் உள்ள நம்முடைய தேவன். இவர் அநாதி தேவன், அவர் நம்முடைய அடைக்கலமாய் இருக்கிறார். இவர் நல்ல தேவன், இவர் வல்ல தேவன். இதுதான் சிவந்த சமுத்திரத்தின் செய்தி. நான் எந்த பிரச்சனையிலிருந்தும் விடுதலையாகி வெளியே வருவேன். பிரச்சனை இருக்கலாம், ஆனால் கர்த்தர் சாவியை வைத்திருக்கிறார். அவர் திறந்து விடுவார், விடுதலையாக்குவார். அவருடைய அபார விடுதலை நமக்கென்று உண்டாயிருக்கிறது. சிலர் கிறிஸ்துவுக்குள் வந்துவிட்டார்கள், ஆனால் பழைய பாவங்கள், சுபாவங்கள் இவற்றிலிருந்து விடுதலையாக முடியாமல் இன்னும் அதற்கு அடிமைகளாக இருக்கிறார்கள். “நான் இத்தனை வருஷமாய் இதைச் செய்கிறேன், எப்படி திடீரென்று இதிலிருந்து விடுதலையாவது?” என்று கேட்கிறார்கள். நான் சொல்லுகிறேன், நீங்கள் அதிலிருந்து விடுதலையாவீர்கள். கர்த்தர் உங்களை விடுவிக்க வல்லவர். அது எத்தனை வருஷ அடிமைத்தனமாய் இருந்தாலும் அந்த கட்டை எல்லாம் அறுத்து எறிகிறவர் அவர். “இன்றைக்கு நீங்கள் காண்கிற எதிரியை இனி ஒருபோதும் காண்பதில்லை” என்று அவர் சொன்னார். நீங்கள் அதை இனி ஒருபோதும் காண்பதில்லை. சிவந்த சமுத்திரத்தை கடக்கச் செய்தவர் உங்களுடைய சிவந்த சமுத்திரத்தையும் நீங்கள் கடக்கும்படிச் செய்வார். நான்கு பக்கமும் பார்க்காதீர்கள், ஐந்தாவது பக்கம் பாருங்கள். விசுவாசக் கண்களால் பாருங்கள். தேவனுடைய விடுதலையைப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்கு செய்யப்போகிற இரட்சிப்பை நோக்கிப் பாருங்கள். நீங்கள் சும்மாயிருப்பீர்கள், அவர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். இன்றைக்கு நீங்கள் பார்க்கிற எதிரியை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.      

         

QR code
Donation
eStore
Copyright © 2017 Victory Christian Foundation. All rights reserved.
Website & Social Media by Open Minds Agency