0 item - ₹0.00

மீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும் (பாகம் 12) - வேலை, அழைப்பு, கலாச்சார மறுமலர்ச்சி

Sunday Tamil Service - 28 JAN 18

Transcript

"மீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும்" என்கிறதலைப்பிலே போதித்து வருகிறோம்.வேலையைக் குறித்த இந்தப்போதனையிலே இது மூன்றாவது பகுதி. முதல் பகுதியில், தேவன் நம்மை எப்படி வேலை செய்கிறவர்களாக வடிவமைத்திருக்கிறார் என்றும், அவர் நம்மை வேலை செய்யக்கூடியவர்களாக உண்டாக்கினது மட்டுமல்ல, வேலையை நமக்காகவே உண்டாக்கியிருக்கிறார் என்றும் பார்த்தோம். தேவன் ஏன் இப்படிப்பட்ட design-ஐ நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.அப்போதுதான் வேலையில் சந்தோஷமும் வெற்றியும் உண்டாகும்.ஆகவே தேவன் நம்மை வேலை செய்வதற்காக உண்டாக்கியிருக்கிறார்.இதை போதித்தேன்.அதன் பிறகு வேலை எப்படி கடினமாகி விட்டது என்பதைப் பார்த்தோம்.இப்போது வெறும் வேலை என்று மட்டும் இல்லை, அது கடினமான, வேர்வை சிந்துகிற வேலையாகி விட்டது.பாவமும், சாபமும் உலகத்தில் பிரவேசித்ததினால் இப்படி ஆகிவிட்டது என்பதைப் போதித்தேன். அதன்பின் இப்போது மூன்றாவது பகுதியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக உண்டான மீட்பு எப்படி நம்மை பாவ, சாபத்திலிருந்து விடுவித்து, வேலையிலே கூட ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் குறித்துதான் போதித்துக் கொண்டிருக்கிறோம். மீட்பின் மூலமாக வேலையிலே ஏற்பட்ட தாக்கத்தைப் புரிந்துகொண்டு, மீட்பு நம்முடைய கையின் பிரயாசத்திலே நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால்,புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் வேலையைக் குறித்துப் போதித்த போதனைக்குள் நாம் செல்ல வேண்டியது அவசியமாயிருக்கிறது. பல நூற்றாண்டுகள் மறைந்து, புதைந்து கிடந்த இந்த போதனைகளை மார்ட்டின் லூத்தர், கால்வின் போன்றவர்கள் மறுபடியும் தோண்டி எடுத்து ஜனங்களுக்குள் கொண்டுவந்தார்கள்.அது இரண்டு தலைமுறைகளில் சமுதாயத்திலேயே ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கினது.புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி என்று அப்படிப்பட்ட ஒரு சமுதாயமாக உருவாவதற்கு அது காரணமாகி விட்டது.அப்படிப்பட்ட மாற்றத்தை இது உண்டுபண்ணினது.ஆக, இந்தப் போதனையிலே என்ன இருக்கிறது என்பதை கவனித்தால் தான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் வெற்றி பெற முடியும்.அப்படிப்பட்ட ஒரு புரட்சியும், ஆரோக்கியமான மாற்றமும் இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் தேவை.

எல்லாருக்கும் வேலையில் வெற்றி தேவை.வேலை நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது என்பது உண்மை.அநேகர் வேலையை விரக்தியிலும், சலிப்பிலும், அதை அர்த்தமற்ற விதத்திலும் தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அநேகருக்குஏதோ வயிற்றுப் பிழைப்புக்காகவும், வீட்டு வாடகை கொடுப்பதற்காகவும் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற விதத்தில் தான் வேலை போய்க் கொண்டிருக்கிறதே ஒழிய,ஒரு பெரிய நோக்கமோ, தரிசனமோ, மனநிறைவோ, சந்தோஷமோ அதில் இருப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் வசனத்தைக் கவனிப்பதில்லை.அநேக கிறிஸ்தவர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள்.அவர்கள் வசனத்தையும், அது என்ன போதிக்கிறது என்பதையும் கவனிப்பதில்லை.இதை கவனிக்காமல் ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வருவதற்கும், தாங்கள் செய்யும் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.அவர்கள் கிறிஸ்தவர்களுடைய வேலையைக் குறித்த அபிப்பிராயத்தைச் சொல்லும்போது, நான் ஞாயிற்றுக்கிழமை கேட்கும் பிரசங்கத்திற்கும், திங்கள்கிழமை செய்கிற வேலைக்கும் சம்மந்தமே கிடையாது என்று அநேக கிறிஸ்தவர்கள் சொல்லுகிறார்கள் என்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை வேறு வழியில் போகிறோம், திங்கள்-சனி வரைக்கும் வேறு வழியில் போகிறோம்.அதற்கும் இதற்கும் சம்மந்தமே கிடையாது.இதைப் பற்றி எங்ககள் போதகரிடம் பேசவே முடியாது என்கிறார்கள்.நான் ஒரு தொழில் செய்கிறேன், லாபம் சம்பாதிக்கிறேன், அதை எப்படி பெருக்குவது, அதில் எப்படி வளருவது என்று எண்ணுகிறேன். ஆனால்இதையெல்லாம் எங்கள் போதகரிடம் பேசினால் அவர், "நீ உலகப்பிரகாரமானவன், பேராசை பிடித்தவன், லாபம் சம்பாதிக்கப் பார்க்கிறாய், பொருளாதாரத்தைப் பெருக்கப் பார்க்கிறாய்" என்றுதான் திட்டுகிறாரே ஒழிய,ஒரு தொழிலை எப்படிச் செய்வது, ஒரு வியாபாரத்தை எப்படிச் செய்வது, அதில் எப்படி சம்பாதிப்பது என்பதை அவர் புரிந்துகொள்வதில்லை.அவர் நினைப்பது போல் நாங்கள் நினைக்கவில்லை என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.மேலும்வயிற்றுப் பிழைப்புக்காகவும், லாபத்திற்காகவும், சுயநலத்திற்காகவும், எல்லா வசதியும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் நான் இதையெல்லாம் செய்கிறேன் என்றும் அவர் சொல்லுகிறார். ஆனால் நான் அதற்காகச் செய்யவில்லை, என்னுடைய வாழ்க்கை மிகவும் பிரயோஜனமானதாய் இருக்கும், தேவன் எனக்கு இந்த தாலந்தைக் கொடுத்திருக்கிறார், இதைப் பயன்படுத்தி, இந்தப் பொருளை கண்டுபிடித்து, இதை விநியோகம்பண்ணி, இதன் மூலம் நூற்றுக்கணக்கான பேருக்கு வேலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், எத்தனையோ குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறது, ஒரு சமுதாயத்திற்கே எவ்வளவு பெரிய நன்மைகள் உண்டாகிறது என்றுதான் நான் யோசிக்கிறேன். ஆனால் போதகருக்கு அப்படிப்பட்ட outlook இல்லையே என்கிறார்கள்.நான் ஏதோ சுயநலம் உள்ளவனாய் என்னுடைய தனிப்பட்ட லாபத்திற்காக பணம் சம்பாதிக்கப் பார்க்கிறேன் என்றுதான் போதகர் இதைப் பார்க்கிறாரே ஒழிய, சமுதாயம், அதற்கு ஏற்படுகிற நன்மைகள், நான் அதற்குச் செய்கிற சேவை, நான் எத்தனை பேருக்கு வேலையைக் கொடுத்தேன் என்பதையெல்லாம் காண்பதில்லையே என்கிறார்கள்.

ஜனங்களுக்குள்ளே என்ன ஆதங்கம் இருக்கிறது என்று பாருங்கள்!இதைபிரசங்கியார்கள் எண்ணுகிற விதத்திற்கும், ஜனங்கள் எண்ணுகிற விதத்திற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள்.ஒருவன் திங்கள்-சனி வரைக்கும் தன்னுடைய முழு ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் கொடுத்து உழைக்கிறான், பெரிய தரிசனத்தோடு வேலை செய்கிறான்.சபைக்கு வந்தால் பிரசங்கியார், "அது முக்கியமே கிடையாது" என்று சொல்லுகிறார்.ஜனங்களுக்கு இது எப்படியிருக்கும் என்று பாருங்கள்.சபைக்குச் சென்றதால் அவனுடைய வியாபாரம் வளரப் போவதில்லை, அதனால் அவனுக்கு தைரியமோ, தரிசனமோ உண்டாகப் போவதில்லை.அவர்கள், திங்கள்-சனி வரை நான் செய்கிற வேலை தேவனுடைய பார்வையில் ஒன்றுமே கிடையாது, அது கால் தூசுக்குச் சமம் என்று போதகர் சொல்லுகிறார்.அப்படியென்றால் எதுதான் தேவனுடைய பார்வையில் முக்கியம்?நாம் சபைக்கு வருவதுதான் முக்கியம்.ஏனென்றால் அந்தப் பிரசங்கியாருக்கு இடம் நிரம்ப வேண்டுமே, நான் வந்து உட்கார்ந்து அந்த நற்காலியை நிரப்ப வேண்டும், நான் இல்லையென்றால் போதகருக்கு மிகவும் வருத்தமாகி விடும் என்கிறார்கள். இதுதான் போதகர்களுக்கு முக்கியமாய் இருக்கிறதே ஒழிய, அந்த விசுவாசிக்கு என்ன தேவை, அவர் எதற்காக பிறந்திருக்கிறார், எதற்காக தேவன் அவருக்கு அந்த கிருபையைத் தந்திருக்கிறார், என்ன ஆற்றலைக் கொடுத்திருக்கிறார், அவர் அதை எப்படி பயன்படுத்த வேண்டும், அதை பயன்படுத்தவில்லை என்றால் தான் தவறு,அவர் பிரயோஜனமற்ற, அர்த்தமற்ற விதத்தில் வாழ்ந்தால் தான் தவறுஎன்பதைப் போதித்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறவனை வேலைக்குப் போகபண்ணாமல், வேலைக்குப் போகிறவனை வேலையை விட்டு வருகிறவனாக பண்ணி விடுகிறார்கள்.

காரியங்கள் தலைகீழாக நடக்கிறது.அநேகருக்கு இப்போதுதான் வெளிச்சம் உண்டாகிறது.ஞாயிற்றுக்கிழமைக்கும், திங்கள்-சனி வரை நாம் செய்கிற வேலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.ஆவிக்குரிய ஜீவியம் என்பது வெறும் ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வந்து "அல்லேலூயா" என்று சொல்லுவது அல்ல. ஆவிக்குரிய ஜீவியம் என்பது நம்முடைய மொத்த வாழ்க்கை.நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம், குடும்பம், பொருளாதாரம், கையின் பிரயாசம் எல்லாம் அதில் இருக்கிறது.இதை மனதில் வைக்க வேண்டும்.ஆக, வேலையைக் குறித்த போதனையைக் கவனிக்க வேண்டும்.வேலை மிகவும் முக்கியமான விஷயம்.வேலையின் மூலமாகத்தான் இந்த உலகத்தில் பெரிய தாக்கத்தை நாம் ஏற்படுத்த முடியும்.நாம் இந்த உலகத்தில் உப்பாக, வெளிச்சமாக இருக்க வேண்டுமென்றால் நம்முடைய வேலையை அதற்கு ஒரு கருவி போன்று கர்த்தர் கொடுத்திருக்கிறார்.இதை அங்கீகரிக்காமல் வேலை முக்கியமில்லை, நான் நடத்துகிற Bible Study தான் முக்கியம் என்று சில போதகர்கள் சொல்லுகிறார்கள்.அந்த Bible Study-க்கு 10 பேர் கூட வருவதில்லை, ஆனால் ஆயிரம் பேர் கூட வேலை செய்கிறீர்கள்.போதகர்கள், அந்த வேலை முக்கியமில்லை என்கிறார்கள்.நீங்கள் வேலையில் குறைந்தது 8 மணி நேரம் வேலை செய்கிறீர்கள்.அது முக்கியமில்லை என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள்.ஆனால் வேதம், அதுதான் முக்கியம் என்று சொல்லுகிறது.வேலையைக் குறித்து ஜான் ஸ்டாட் என்கிற மிகப்பெரிய போதகர் இவ்வாறு சொல்லுகிறார்:"Work is the expenditure of energy in the service of others, which brings fulfilling to the worker, benefit to the community, and glory to God".அதாவது, மற்றவர்களுக்காக சேவை செய்கிறதிலே நம்முடைய சக்தியை செலவிடுவதுதான் வேலை.அது அந்த வேலையைச் செய்கிறவனுக்குநிறைவையும், சமுதாயத்திற்கு நன்மையையும், தேவனுடைய நாமத்திற்கு மகிமையையும் கொண்டுவருகிறது.

நாம் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.தேவன் நம்மை ஒரு சமுதாயத்தில் வாழக்கூடியவர்களாக உண்டாக்கிவிட்டார்.ஆகவேதான் ஆண், பெண் என்றும், பிள்ளைகள் என்றும் உண்டாக்கினார்.ஏனென்றால் ஒரு சமுதாயம் உண்டாக வேண்டும்.இல்லையென்றால், வெறும் ஆணாகவோ, பெண்ணாகவோஉண்டாக்கியிருக்கலாம்.ஆனால் அவர் ஆண், பெண் என்று இரண்டு இனமாக உண்டாக்கினார்.திருமணம் செய்ய வேண்டும், பிள்ளைகள் பிறக்க வேண்டும், சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்பித்தான் அவர் அப்படிச் செய்தார்.மனுஷனை ஒரு சமுதாயத்தில் வாழக்கூடியவனாகத்தான் வைத்திருக்கிறார்.ஆகவே வேலை என்பது வெறும் கர்த்தர் என்னை வேலை செய்வதற்காக உண்டாக்கினார், ஆகவே நான் வேலை செய்யப்போகிறேன் என்று அப்படி கிடையாது.வேலை நம்மை ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழும்படியாக ஆக்கிவிட்டது.எப்படி?நான் பிரசங்கியாராக இருக்கிறேன்.என்னுடைய வேலை உங்களுக்கு முக்கியம்.இன்றைக்கு நான் என்னுடைய வேலையைச் செய்யவில்லை என்றால் நீங்கள் இங்கு வந்து உட்கார முடியாது.ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து AFT-க்கு போகலாம் என்று நீங்கள் சொல்லுவீர்களா?AFT-யே இருக்காது.நான் என் வேலையை செய்துகொண்டிருக்கிறேன்.என் வேலையின் மூலமாக மற்றவர்களுக்குசேவையை செய்துகொண்டிருக்கிறேன்.என்னுடைய சேவை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.அவர்கள் என்னுடைய சேவையை நம்பி வந்து நன்மை அடைகிறார்கள்.அதே நேரத்தில் உங்களுடைய சேவையும் மிகவும் முக்கியம்.அங்கு கோட்-சூட் அணிந்து பிரசங்கிப்பவர் தான் மிகவும் முக்கியம் என்று எண்ணக்கூடாது.நான் என்னுடைய வேலைக்காக இந்த உடையை உடுத்தியிருக்கிறேன்.உங்களுடைய வேலைக்கு நீங்கள் வேறு உடையை உடுத்துகிறீர்கள்.உங்களுடைய வேலையும் மிகவும் முக்கியம்.உங்களில் சிலர் வேலை செய்யவில்லை என்றால் இன்றைக்கு என்னுடைய வீட்டில் தண்ணீர் வராது, மின்சாரம் இருக்காது, நான் வீட்டைக் கட்ட முடியாது, சபையையும் கட்ட முடியாது.இப்படி நீங்கள் சிலர் வேலை செய்யவில்லை என்றால் சில வேலைகளெல்லாம் நடக்கவேநடக்காது.உங்களுடைய வேலையும் முக்கியம், என்னுடைய வேலையும் முக்கியம்.உங்களுடைய வேலையும், என்னுடைய வேலையும் வேறாக இருக்கலாம்.ஆனால் அதனால் இது முக்கியம், அது முக்கியமில்லை என்று சொல்ல முடியாது.நாம் எல்லாரும் ஒருவரையொருவர் சார்ந்து ஒரு சமுதாயமாக வாழும்படியாககர்த்தர் வைத்துவிட்டார்.வேலை நம்மை பிரிக்கவில்லை, ஜாதி, இனம், மொழி, மதம் இவைகள்தான் நம்மைப் பிரிக்கின்றன.வேலை நம் எல்லாரையும் ஒன்றாகச் சேர்க்கிறது.நம் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்றால் பிளம்பர் ஒருவரைக் கூப்பிடுகிறோம்.அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தால் நமக்கு என்ன, தண்ணீரை வர வைக்க வேண்டும், அவ்வளவுதான்.இப்படி வேலை நம்மை இணைக்கிறது.அது தேவன் உண்டாக்கியிருக்கிற எல்லா பொருள் ஆதாரங்களையும் அபிவிருத்தி பண்ணுகிறது.அது நம்மை மற்றவர்களுக்கு பிரயோஜனமான விதத்திலே வாழும்படியாகச் செய்கிறது.மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், பேருந்து, ரயில் இவற்றை ஓட்டுகிறவர்கள் இவர்களுடைய சேவைஎத்தனை பேருக்கு பிரயோஜனமானவராய் இருக்கிறது என்று பாருங்கள்!இப்படி எல்லா வேலையும் மற்றவர்களுக்காகபிரயோஜனமான விதத்திலே வாழும்படியாய் செய்கிறது.அதுமட்டுமல்லாமல், அது மனுவர்க்கத்தையே ஒன்றுபடுத்தி, தேவனுடைய சித்தத்தைச் செய்ய உதவுகிறது.இதுதான் ஜான் ஸ்டாட் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம்.வேலைஎன்பது நாம் மற்றவர்களுக்கு சக்தியை செலவிடுவது.அதன் மூலமாக நமக்கு ஒரு நிறைவு உண்டாகிறது, அதன் மூலமாக மற்றவர்கள் பயன்பெறுகிறார்கள், தேவன் மகிமைப்படுகிறார்.இதுதான் அதனுடைய விளக்கம்.

இன்னொருவர் வேலையைக் குறித்து இப்படியாகச் சொல்லுகிறார்:வேலை என்பது ஏதோ வயிற்றுப்பிழைப்புக்காக நாம் மேற்கொள்ளும் ஒரு பிரயாசம் அல்ல. தேவன் நம்மை வேலை செய்கிறவர்களாக உண்டாக்கிவிட்டார். ஆகவே, அந்த வேலையைச் செய்தால் தான் நாம் அவருடைய சாயலில் இருக்கிற மனுஷனாய் இருக்க முடியும்.ஆகவே நாம் எந்த வேலைக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கண்டுபிடித்து அதைச் செய்து,அதன் மூலமாக நிறைவைப் பெற வேண்டும்.அதைச் செய்வதின் மூலமாக தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாக வேண்டும், தேவனுடைய நோக்கங்கள் நிறைவேற வேண்டும்.தேவன் எப்படி வேலை செய்வாரோ, அதை நம்முடைய வேலை காண்பிக்க வேண்டும்.தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, 'அது நல்லது' என்று கண்டார்.நம்முடைய வேலையைப் பார்க்கும்போது,'நல்லது' என்று சொல்லக்கூடியதாக அது இருக்க வேண்டும்.நம்முடைய வேலை தேவனையும், அவருடைய சிருஷ்டிப்பின் தன்மையையும் பிரதிபலிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல், அது ஒழுங்காக, அழகாக, நேர்த்தியாக இருக்க வேண்டும்.அப்படி இல்லையென்றால் அந்த வேலை தேவனுடைய சாயலில் இல்லை என்று அர்த்தம்.இதையெல்லாம் மார்ட்டின் லூத்தர், கால்வின் போன்ற சீர்திருத்தவாதிகள் புரிந்துகொண்டு போதிக்க ஆரம்பித்தார்கள்.ஆவிக்குரிய ஜீவியம் என்றால் சபைக்கு வந்து ஏதோ பாடல் பாடி, பிரசங்கம் கேட்பது என்றுநாம் எண்ணுகிறோம். கிடையாது!ஜனங்கள் தங்கள் வேலையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.ஜனங்கள் பல துறைகளிலிருந்து வந்தார்கள்.சிலர் ஓவியராகவும், இசைக்கலைஞராகவும், எழுத்தாளராகவும், சிலர் சமூக சேவையிலும் இருக்கிறார்கள், இன்னும் சிலர் சபையில் சேவைசெய்கிறார்கள்.ஜனங்கள் தங்கள் வேலையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தவுடன் கலைத்துறையில் கூட ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.பெரிய பெரிய கலைஞர்களைக் குறித்து கேள்விப்படுகிறோம்.அவர்கள் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் உண்டான பிறகு புரட்சிகரமான விதத்திலே படங்களை வரைந்தார்கள், சிற்பங்களை செய்தார்கள், அவர்களுடைய கலை ஆர்வமே வேறு மாதிரி ஆகிவிட்டது.ஏனென்றால் இது ஒழுங்காக, அழகாக, நேர்த்தியாக இருக்க வேண்டும்.தேவனுடைய தன்மையே இதில் விளங்க வேண்டும்.அதைப் பார்க்கிறவர்கள் அது நல்லது என்று காண வேண்டும்.இசைத் துறையில் இன்றைக்கு வாசிக்கும் இசை எல்லாம் அந்த காலத்திலிருந்து வந்த piece தான்,அதை வைத்துதான் இன்றைக்கு எல்லாரும் கற்றுக்கொள்கிறார்கள்.ஏனென்றால் அது சமுதாயத்தில் கலையிலும், இசையிலும், எழுத்திலும், எல்லா விதமான வேலையிலும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணினது.இதுதான் உலகத்திற்கு உப்பாக இருப்பது.இரண்டு தலைமுறைகளில் சமுதாயமே ஒரு பெரிய மாற்றத்தை அனுபவித்தது.

இன்றைக்கு எப்படி வேலையைக் குறித்த இந்த சத்தியத்தை நாம் மறுபடியும் வெளியே எடுத்து ஜனங்களுக்கு கொடுப்பது?எப்படி ஜனங்களை இதில் நடத்துவது?ஜனங்கள்காரியங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மாற்ற வேண்டும்.ஆங்கிலத்தில், World View என்று சொல்லுகிறார்கள்.தமிழில் அதை 'உலக பார்வை' என்று சொல்லலாம்.நாம் நம்முடைய வேலையையும், தொழிலையும், குடும்பத்தையும், பிள்ளைகளையும், படிப்பையும், பணத்தையும், சொத்தையும், வீட்டையும் இவற்றையெல்லாம் எப்படி பார்க்கிறோம் என்பதுதான் World View. அதிலே Christian World View-ஐ உண்டாக்க வேண்டும் என்கிறார்கள்.Christian World View என்றால் என்ன?வேதவசனத்தின்படி உள்ள பார்வை.என் குடும்பம் கர்த்தரை நேசிக்கிற குடும்பமாக இருக்க வேண்டும், பிள்ளைகள் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களாக இருக்க வேண்டும் என்று நம்முடைய பார்வை வேதவசனத்தின்படி இருக்க வேண்டும். நம்முடைய வேலை, தொழில், படிப்பு, சொத்து, பணம் இவற்றையெல்லாம் அந்த விதத்தில் தான் நாம் பார்க்க வேண்டும்.அப்படி பார்க்கிற ஒரு பார்வையை உண்டாக்க வேண்டும் என்கிறார்கள்.இன்றைக்கு சமுதாயத்தில் நாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அப்படி பார்க்கிற ஒரு பார்வையை உண்டாக்க வேண்டும்.இது ஜனங்களுக்குள் ஒரு தரிசனத்தை உண்டாக்கும்.என்னுடைய குடும்பம், தொழில், கையின் பிரயாசம், வாழ்க்கை, வீடு, சமுதாயம் இவையெல்லாம் இப்படி இருக்க வேண்டும் என்கிற தரிசனத்தை அதன் மூலமாக உண்டாக்க வேண்டும்.அந்த தரிசனம் உண்டாகி விட்டால் வெறும் மனுஷனுடைய தனிப்பட்ட இரட்சிப்பு மட்டும் அல்ல, சமுதாயத்திலேயே ஒரு பெரிய மாற்றம் உண்டாகும்.சீர்திருத்தவாதிகளின் போதனையை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதன் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன்.மத்திய காலத்தில் அதாவது, கி.பி.5-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் சபைகளை பெரிய கத்தீட்ரலாக கட்டுகிற trend வந்தது.அப்போது ஒரு கத்தீட்ரலைக் கட்டும் கட்டட வேலை நடந்துகொண்டிருந்தது.இதற்கு உதவுகிற ஒரு பெரிய மனுஷன் வேலை செய்கிறவர்களிடம் சென்று, "வேலை எப்படி நடக்கிறது?நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.அப்போது அவர்stonemason-னிடம் சென்று, "உன்னுடைய வேலை எப்படி போய்க் கொண்டிருக்கிறது?" என்று கேட்டார்.அதற்கு அவன், "ஐயா, இந்தச் சுவரை நேராக நிறுத்த வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு திறமை வேண்டியிருக்கிறதுதெரியுமா" என்று அவன் தன்னுடைய வேலையைப் பற்றிச் சொன்னான்.கத்தீட்ரலில் Glass work அதிகமாக இருக்கும். அந்த Glass work செய்கிறவனிடம் சென்று கேட்டபோது, "இந்த வேலையை எவ்வளவு அருமையாக செய்ய வேண்டியிருக்கிறது தெரியுமா, இதற்கு எவ்வளவு கை வேலை தேவைப்படுகிறது தெரியுமா" என்று அவன் சொன்னான். அவர் தச்சரிடம் சென்று பேசினபோது தச்சர், "ஐயா, இந்த கட்டடம் முழுவதும் என்னுடைய வேலையை நம்பித்தான் இருக்கிறது.சட்டங்களையெல்லாம் எப்படி அமைத்திருக்கிறேன் என்று பாருங்கள், இதை பிரமாதமாகச் செய்திருக்கிறேன், இதற்கு எவ்வளவு திறமை தேவைப்படுகிறது தெரியுமா?இந்த கூரையே நான் பண்ணின வேலையில் தான் நிற்கிறது" என்று சொன்னான்.கடைசியாக ஒரு அம்மா துடைப்பத்தையும், வாளியையும் வைத்துக்கொண்டு நின்றார்.இவர் அந்த அம்மாவை அழைத்து, "நீ என்னம்மா செய்துகொண்டிருக்கிறாய், உன்னுடைய வேலை எப்படி போய்க் கொண்டிருக்கிறது"என்று கேட்டார்.அதற்கு அந்த அம்மா, "தேவனுக்காக ஒரு பெரிய கத்தீட்ரலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.புராட்டஸ்டன்ட் மார்க்கத்தில் வேலை என்றால் என்ன என்பதற்கு அந்த அம்மா கொடுத்த விளக்கம் தான் சரியானது.அந்த அம்மா சொன்ன வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்பதை கவனியுங்கள்.அந்த அம்மா,"யாரோ ஒரு மனுஷனுக்காக இங்கு நான்கூலி வேலை செய்யவில்லை.கர்த்தருக்காக இதைச் செய்து கொண்டிருக்கிறேன், நான் கர்த்தருக்காக கத்தீட்ரலையே கட்டிக்கொண்டிருக்கிறேன், நான் செய்கிற வேலை இழிவான வேலை கிடையாது.இது ஒரு சாதாரண வேலை அல்ல. இது கர்த்தருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுகிற வேலை" என்று சொன்னார்.வேலையைப் பற்றி எவ்வளவு பெரிய உயர்வான எண்ணம் அவர்களுக்கு இருந்தது என்பதைப் பாருங்கள்!

இந்த உயர்வான எண்ணத்தைத்தான் புராட்டஸ்டன்ட் சபை வெளியே கொண்டுவந்து போதித்தது.இந்த உயர்வான எண்ணம் வரவேண்டும் என்றால், நாம் மூன்று காரியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.ஒன்று, நம்முடைய வாழ்க்கையிலே முதல் அழைப்பு என்னவென்றால், நாம் இயேசுவை பின்பற்றும்படியாய் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது.வேதம், தேவன் நம்மை முன்னறிந்து, முன்குறித்து, அழைத்து, நீதிமானாக்கி, மகிமைப்படுத்தியும் இருக்கிறார் என்று சொல்லுகிறது (ரோமர் 8:29, 30).நாம் முதலில்கர்த்தருக்கென்று அழைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு அழைப்பு இருக்கிறதா? ஆம் இருக்கிறது. வேலை என்கிற அழைப்பைப் பற்றி அதிகமாக பேசப்போகிறேன். வருகிற வாரங்களில் கவனமாக கேளுங்கள். ஆனால் வேலை என்கிற அழைப்பிற்கு முன்பாக நாம் கர்த்தருக்கென்று அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள், கர்த்தர் நம்மை முன்னறிந்துவிட்டார், முன்குறித்து விட்டார், அழைத்துவிட்டார், நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல, நாம் அவருக்குச் சொந்தமானவர்களாய் இருக்கிறோம். நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்றால், நம்முடைய குடும்பம், சமுதாய வாழ்க்கை, நம்முடைய சபையில் நாம் செய்கிற சேவை எல்லாமே அந்த ரீதியில் தான் இருக்க முடியும். ஏனென்றால் அதன் அடிப்படையில் தான் எல்லாமே நடக்கும். நான் ஒரு குடும்பஸ்தனாய் இருக்கிறேன் என்றால், நான் கர்த்தருக்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். அப்படியென்றால் என் குடும்பத்தில் அந்த வித்தியாசத்தைப் பார்க்கலாம். நான் கர்த்தருக்குச் சொந்தமானவனாய் இருக்கிறபடியால், என் குடும்பத்தை நான் எப்படி கவனிக்கிறேன் என்பதிலும்,என்னுடைய தொழிலை நான் எப்படிச் செய்கிறேன் என்பதிலும்,என் சமுதாயத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்பதிலும்,என் சபையில் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நான் எப்படிச் செய்கிறேன் என்பதிலும் பார்க்கலாம். நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். இதுதான் அடிப்படை. நாம் ஈடுபடுகிற எல்லா காரியங்களிலும் அந்த வித்தியாசம் தெரிகிறது. உங்களிடத்தில் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் எல்லாமே அந்த ரீதியில்தான் போகும்.ஏனென்றால் உங்களுடைய அடிப்படை அழைப்பு நீங்கள் கர்த்தருக்கென்று அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது.

இரண்டாவது, ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்படியாக தேவன்நம்மை அழைத்திருக்கிறார்.அதற்காக அவர் குறிப்பிட்ட திறமைகளையும், ஆற்றல்களையும் நமக்குள் வைத்திருக்கிறார்.தேவன் உங்களை வடிவமைத்திருக்கிறார் என்பதை கவனியுங்கள்.அநேகர், நான் என்ன படிக்க வேண்டும் என்பதும், என்ன வேலை செய்ய வேண்டும் என்பதும், எங்கே போக வேண்டும் என்பதும் எதுவுமே தெரியவில்லை என்கிறார்கள்.கர்த்தர் உங்களை எதற்காக அழைத்திருக்கிறார் என்பதை எப்படி தெரிந்துகொள்வதுஎன்பதை வரும் வாரங்களில் போதிக்க இருக்கிறேன்.இதற்கு பெரிய தரிசனம் காண தேவையில்லை.தேவதூதன் வந்து, "மகனே, கவனி" என்று சொல்ல வேண்டியதில்லை.உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆவியானவர் இருக்கிறார்.ஒரு வாலிப பையன் கூட புரிந்துகொள்ளும் விதத்தில் அவர் உங்களை நடத்துவார்.நீங்கள் எங்கே போக வேண்டும், எதைச் செய்ய வேண்டும், வாழ்க்கையில் எதை நிறைவேற்ற வேண்டும் என்பதை மிக எளிதாக உங்களுக்கு தெரியப்படுத்தக்கூடிய அற்புதமான தேவன் இவர். அதற்கான கருவிகளை எல்லாம் உங்களுக்கு உள்ளாகவே வைத்து உண்டாக்கியிருக்கிறார்.பரலோகத்திலிருக்கிற தேவன் நம்மிடம் பேசினால் நாம் அதைக் கேட்பது போன்ற receiving station-ஐ உள்ளே வைத்து உண்டாக்கியிருக்கிறார்.ஆனால் அதையும் தூக்கிக்கொண்டு மற்றவரிடம் சென்று, "ஐயா, நீங்கள் சொல்லுங்கள்" என்று நாம் வரிசையில் நிற்கிறோம்.ஏன் உங்களுடைய receiving station failure-ஆகி விட்டதா?அது உங்களுக்குள் இருக்கிறது.ஒரு சிறு பையன் எளிதாக புரிந்துகொள்வது போல கர்த்தர் பேசுகிறார்.நான் இதற்காகத்தான் உண்டாக்கப்பட்டேன் என்பதை நாமே உணர்ந்துகொள்வோம்.கர்த்தர் நமக்காக என்ன வேலையை வைத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.அதைப் பற்றி பிறகு பேசுவோம்.கர்த்தர் நம்மை வேலை செய்வதற்காக உண்டாக்கியிருக்கிறார் என்றால் நாம் எப்படிப்பட்ட வேலையைச் செய்ய வேண்டும், எந்த தொழிலைச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நம்மையே நாம் கவனித்தால் தேவன் நம்மை உண்டாக்கியிருக்கிறார் என்பதுவிளங்கிவிடும்.

மூன்றாவது, நாம் செய்கிறவேலையினுடைய நோக்கம் என்னவாய் இருக்க வேண்டும் என்பது.இது மிகவும் முக்கியம்.ஏதோ நம்முடைய பிழைப்பு நடக்க வேண்டும் என்பது நோக்கமாய் இருக்கக்கூடாது.என்னுடைய வேலை கலாச்சாரத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கமாய் இருக்க வேண்டும்.கலாச்சாரம் என்பது என்ன?ஒரு கூட்ட மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு சில எண்ணங்களும், பழக்கவழக்கங்களும் இருக்கிறது, அவர்கள் ஒருவிதமாக வாழுகிறார்கள்.அதைத்தான் 'கலாச்சாரம்' என்கிறோம்.நம்முடைய வேலையின் மூலமாக சமுதாயத்திற்குள்ளேயே பெரிய மாற்றம் உண்டாகும்படியாக கர்த்தர் நம்மை வைத்திருக்கிறார்.சமுதாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வது மட்டுமல்ல, சமுதாயத்தை மீட்க வேண்டும்.ஏன் சமுதாயத்தை மீட்க வேண்டும்?சமுதாயம் பிசாசின் பிடியில் சிக்கி, சீரழிந்து, கெட்டுப்போய் கிடக்கிறது.பாவத்தின் மூலமாக எண்ணங்கள் கெட்டுப்போய்விட்டது.மக்கள் நம்பிக்கையற்றவர்களாகி, வழிதப்பிப்போய்,மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் இருக்கிறார்கள்.இயேசு இந்த பூமியில் வாழ்ந்தபோது திரள்கூட்ட ஜனம் அவரின் பின்னே அலைமோதினது. ஏனென்றால் எங்கே போவது, என்ன செய்வது, என்னுடைய பிரச்சனைக்கு பதில் என்ன, யார் எனக்கு உதவி செய்வார், தேவன் இருக்கிறாரா, அவர் என்னை நினைத்துப் பார்க்கிறாரா, எனக்கு ஏதாவது செய்வாரா என்பதற்கெல்லாம் ஒருவரும் சரியாக பதில் சொல்லவில்லை. இயேசுவின் காலத்தில் அத்தனை பரிசேயர்களும், மதத்தலைவர்களும் இருந்தார்கள்.ஆனால் ஒருவர் கூட ஜனங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை, அவர்களுடைய தாகத்தை தீர்க்க முடியவில்லை.ஏனென்றால் ஒருவருக்கும் சத்தியம் விளங்கவில்லை.இயேசு வந்தபோது அவருக்குப் பின் திரள் கூட்ட ஜனங்கள் வந்தார்கள்.ஏனென்றால் அவருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் அற்புதமான வார்த்தைகளாய் இருக்கிறது.அவர் சொன்னாரென்றால் ஜீவன் உண்டாகிறது.ஒருமுறை கூட்டத்திலிருந்து ஒரு பெண் உரத்த சத்தமிட்டாள்.அவர் சொல்லுகிற வார்த்தைகள் அவ்வளவு இதமாக இருக்கிறது.அந்தப் பெண், "உம்மைச் சுமந்த கர்ப்பமும், நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகள்" என்கிறாள்.அவருடைய வார்த்தைகள்அற்புதமான, சுகமளிக்கக்கூடிய, விடுதலையை தரக்கூடிய வார்த்தைகள்.அவை வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு பதிலை கொடுக்கக்கூடிய வார்த்தைகளாக இருந்தன.வேறு எவரும் அந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை.இப்போதுஜனங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் புரிகிறது.அதன் மூலம் சமுதாயத்திலேயே பெரிய மாற்றம் ஏற்படுகிறது.ஜனங்கள் மீட்கப்பட வேண்டும்.சமுதாயமே, கலாச்சாரமே மீட்கப்பட வேண்டும்.ஜனங்கள் ஒரு கலாச்சாரத்தில் பிறந்துவிட்டார்கள், அதன்படியே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.எல்லாரும் போகிற பாதையில் அவர்களும் போகிறார்கள்.ஏன் அப்படி போகிறோம், ஏன் இதைச் செய்கிறோம், ஏன் இப்படி வாழுகிறோம் என்பது எவருக்குமே தெரியவில்லை.அவர்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "எங்கள் ஊரில் இப்படித்தான்" என்று சொல்லுவார்கள்.எல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல, காணாமல் போனவர்களைப்போல போகிறார்கள்.கர்த்தர், உன்னுடைய வேலை அநேகருடைய வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியதாய் இருக்க வேண்டும் என்கிறார்.
உலகத்தைக் குறித்த நம்முடைய பார்வையை மாற்ற வேண்டும்.அதை எப்படி மாற்றுவது?கிறிஸ்தவர்கள் எண்ணுகிற விதத்தை மாற்றினால் சமுதாயமே மாறிவிடும் என்கிறார்கள்.அதற்கு முக்கியமாக ரோமர் 12:2-ஐ பயன்படுத்துகிறார்கள். Christian World View-ஐ பற்றி அதிகமாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் எவரும் மாறினதாக தெரியவில்லை.இதைக் குறித்து நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள்.கல்லூரிகளில் Christian World View-ஐ எப்படி உண்டாக்குவது என்பதை ஒரு பாடமாகவே கற்றுக்கொடுக்கிறார்கள்.ஏனென்றால் மக்கள் மத்தியில் கிறிஸ்தவ உலக பார்வை என்று ஒன்றை உண்டாக்கி விட்டோமென்றால் சமுதாய புரட்சி ஏற்படும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.ஆகவே இதைப் போதிக்கிறார்கள்.இருந்தபோதும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.ரோமர் 12:2- ஐ தான் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர்12:2).

இது மனம் புதிதாகிறதைப் பற்றி பேசுகிறது.'பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்'என்றால் மனதளவில் உலகத்தாரைப்போல் இருக்காதீர்கள், உங்கள் மனம் புதிதாகட்டும், மனம் புதிதாகி விட்டால் நீங்கள் வேறொரு மனுஷனாய் மாறிவிடுவீர்கள், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை அறிந்து, அதை நடப்பிக்கிறவர்களாய் மாறிவிடுவீர்கள் என்கிறார்கள். ஒருவிதத்தில் அது சரிதான்.ஆனால் இங்கு முக்கியமான காரியத்தை விட்டுவிட்டார்கள்.1-ஆம் வசனத்தை வாசிக்காமல் விட்டுவிட்டார்கள்.2-ஆம் வசனத்தை தனியாக கவனிப்பதால் ஒரு பிரச்சனை உண்டாகிறது.புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.இந்த வசனத்தை கிரேக்க மொழியில் வாசித்தோம் என்றால்,1-ஆம் வசனமும், 2-ஆம் வசனமும் ஒரே வாக்கியம் தான், அதை பிரிக்கக்கூடாது என்று சொல்லுகிறார்கள்.இன்றைக்கு வசனம் வசனமாக 1,2 என்று பிரித்துவிட்டார்கள். இதெல்லாம் பிறகு வந்தது.ஆனால் அன்றைக்குபவுல் இதை எழுதினபோது கடிதமாகத்தான் எழுதினார்.இன்றைக்கு நம்முடைய வசதிக்காகத்தான் வசனங்கள், அதிகாரங்கள் இவை எல்லாம் பிரிக்கப்பட்டிருக்கிறது.இப்படி பிரித்ததினால் அர்த்தம் விளங்கிக்கொள்வது கஷ்டமாகி விடுகிறது.இப்போது இதை இரண்டு வசனங்களாக பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.Christian World View-ஐ போதிப்பவர்கள் 2-ஆம் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். 1-ஆம் வசனம் மிகவும் முக்கியம்.அது இல்லாமல் 2-ஆம் வசனத்திலிருந்து வெறும் மனம் புதிதானால் போதும் என்று மட்டும் சொன்னால் அது போதாது.1-ஆம் வசனம் மிக முக்கியமான காரியத்தைச் சொல்லுகிறது.

"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை" (ரோமர்12:1).

பவுல் இதைச் சொல்லிவிட்டுத்தான் 2-ஆம் வசனத்தைச் சொல்லுகிறார்.1-ஆம் வசனத்தில் என்ன இருக்கிறது?இவர்கள் எதை விட்டு விட்டார்கள்?மனம் புதிதாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள், ஆனால் நாம் நம்மை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

2 தீமோத்தேயு 4:6-ஐ கவனியுங்கள்.

"ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது" (2 தீமோத்தேயு 4:6).

பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய கடைசிக்காலத்தில் தான் மரிக்கப்போகிறேன் என்பது தெரிந்து இதை எழுதுகிறார்.இன்னும் கொஞ்ச நாளில் தான் மரிக்கப்போகிறேன் என்பது அவருக்குத் தெரிகிறது.தான் வாழ்க்கையின் முடிவுக்கு வந்துவிட்டார் என்பது அவருக்கு விளங்குகிறது.ஒருவர் மரிக்கப்போகிற நேரத்தில் சொல்லுகிற காரியத்தை நாம் கவனிக்க வேண்டும்.பவுலிடம் சென்று, "நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"என்று கேட்டால் அவர், "நான் ஒரு பானபலி" என்று சொல்லுவார்.பானபலி என்றால் என்ன?பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலவிதமான பலிகள் இருந்தன.அந்த பலிகளை செலுத்தும்போது கூடவே ஒரு பாத்திரத்தில் பானத்தை எடுத்து, அதை கர்த்தருக்கு முன்பாக கடைசி சொட்டு வரைக்கும் ஊற்றுவார்கள்.அதற்கு பெயர் பானபலி.பழைய ஏற்பாட்டில் அதை நாம் வாசிக்கலாம்.பவுல், நான் என்னுடைய வாழ்க்கையை அப்படித்தான் பார்க்கிறேன் என்கிறார்.அவர் தன்னை ஒரு பாத்திரமாகவும், அதற்குள் தேவன் ஒன்றை ஊற்றி வைத்திருப்பது போலவும், அவர் அதை தன் வாழ்நாள் முழுக்க சேவை செய்ததின் மூலமாக ஊற்றிக்கொண்டிருந்தது போலவும், இப்போது கடைசி சொட்டுக்கு வந்தது போலவும் சொல்லுகிறார். ஆக, இவர் பிறக்கும்போதே தேவன் இவரை ஒன்றும் இல்லாதவராய் பிறக்க வைக்கவில்லை.முழுவதும் நிறைந்த பாத்திரமாக உள்ளே திறமைகளையும், ஆற்றல்களையும், அழைப்பையும் வைத்து, இவரை முன்னறிந்து, முன்குறித்து, தெரிந்துகொண்டு ஒரு அப்போஸ்தலனாகும்படியாகவே உலகத்தில் பிறக்க வைத்தார். பவுலுக்கு அந்த நோக்கம் புரியவில்லை.அதனால் அவர் வளர்ந்து, நன்றாக படித்த பிறகு தவறான வேலைக்குச் சென்றுவிட்டார்.சபைகளை அடிப்பது, நொறுக்குவது, ஊழியக்காரர்களை கொல்லுது போன்ற இப்படிப்பட்ட வேலைகளைச் செய்தார்.அவர் சபையை துன்புறுத்துகிறவராக இருந்தார்.நான் அறியாமையினால் அதைச் செய்தேன், நான் எதற்காக பிறந்தேன் என்று எனக்கே விளங்கவில்லை.ஆனால் தேவன் என் தாயின் கர்ப்பத்தில் என்னை பிரித்தெடுத்து விட்டார் என்று அவர் சொல்லுகிறார்.நோக்கம் தெரிந்தவுடன் கிறிஸ்துவை பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டார்.முன்பு சபைகளை அழித்துக்கொண்டிருந்தார், இப்போது சபைகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்.ஆக, அவர் தன்னை ஒரு பாத்திரமாக கற்பனை பண்ணுகிறார்.அந்த பாத்திரத்திற்குள்ளே ஒரு பானம் போன்று திறமைகளையும், ஆற்றல்களையும், பல நல்ல காரியங்களையும் தேவன் ஊற்றியிருக்கிறார்.பவுல் தான் கிட்டத்தட்ட பாதி புதிய ஏற்பாட்டை எழுதினவர்.கர்த்தர் அவருக்குள் அவ்வளவு வைத்திருக்கிறார்.பவுல் அதையெல்லாம் ஊற்றிவிட்டார்.இவர் இல்லையென்றால் இன்றைக்கு புதிய ஏற்பாடே இருக்காது.கிறிஸ்தவ சபைக்கு உபதேசம் என்று ஒன்றே இருக்காது.அந்த அளவிற்கு இவர் கொடுத்திருக்கிறார்.பவுல், "நான் ஒரு பாத்திரம், கர்த்தர் எனக்குள் பானம் போன்று திறமைகளையும், ஆற்றல்களையும் ஊற்றியிருக்கிறார்.நான் ஊழியம் செய்வதின் மூலம் அதை ஊற்றுகிறேன்.அப்படி ஊற்றி இப்போது கடைசிக்கு வந்துவிட்டேன்.எல்லாம் முடிந்துபோய் விட்டது.கர்த்தர் சொன்னதையெல்லாம் செய்து முடித்துவிட்டேன்.இப்போது கடைசி சில சொட்டுகள் தான் இருக்கிறது.என் தேகத்தைப் விட்டுப் பிரியும் காலம் வந்தது.நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்"என்கிறார்.அதாவது, தேவன் சொன்னதையெல்லாம் செய்துவிட்டேன், அவர் கொடுத்ததையெல்லாம் ஊற்றிவிட்டேன் என்கிறார்.நாம்மரித்து, நம்மை கல்லறையில் வைக்கும்போது அங்கு வெறும் எலும்பு மட்டும் தான் இருக்க வேண்டுமே ஒழிய,வேறு எதுவுமே இருக்கக்கூடாது.நாம் மற்றவர்களுக்குள் பெரிய ஆசீர்வாதத்தையும், அபிவிருத்தியையும், வளர்ச்சியையும், மேன்மையையும் உண்டாக்க வேண்டும்.அதை உண்டாக்கி விட்டுத்தான் செல்ல வேண்டுமே ஒழிய, நான் பிறந்தேன், இருந்தேன், நிர்வாணியாய் வந்தேன், நிர்வாணியாய் போகிறேன் என்று போய்விடக்கூடாது.பவுலுக்கு தன்னைப் பற்றிய அபிப்பிராயம்/கண்ணோட்டம்எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.நான் ஒரு பாத்திரம், கர்த்தர் என்னை நிரப்பியிருக்கிறார், நான் ஊற்றிக்கொண்டே இருக்கிறேன் என்கிறார். ரோமர் 12:1-இல்,"உங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள்" என்கிறார். அநேகர் இதை வாசித்துவிட்டு, "ஆண்டவரே, என்னை இரத்தசாட்சியாக ஒப்புக்கொடுக்கிறேன்" என்கிறார்கள்.ஜீவபலியாய் ஒப்புக்கொடுப்பது என்றால் என்ன அர்த்தம்?அவர் நம்மை இரத்தசாட்சியாக சாவதற்காக அழைக்கவில்லை, வாழுவதற்காக அழைக்கிறார்.அதுதான் ஜீவபலி.இது விளங்கிவிட்டால் மற்ற காரியங்கள் எல்லாம் விளங்கிவிடும்.மற்ற தவறான அபிப்பிராயங்கள் எல்லாம் இதிலிருந்துதான் வருகிறது.மாற்கு 8:34-ஐ கவனியுங்கள்.

"பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" (மாற்கு 8:34).

அவனவனுக்கு ஒரு சிலுவை இருக்கிறது.அதை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்று.நான் என் சிலுவையை எடுத்துக்கொண்டேன், நீ உன் சிலுவையை எடுத்துக்கொண்டு வா என்று இயேசு சொல்லுகிறார்.இதுதான் இந்த வசனத்தினுடைய அர்த்தம்.அதற்கு முந்தைய வசனங்களில், நான் சிலுவையில் பாடுபட்டு மரிக்க வேண்டியதாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவனும் நான் செய்தது போல செய்ய வேண்டும் என்கிறார். இங்கு எழுத்தின்படி அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.இதை எழுத்தின்படி அப்படியே எடுத்துக்கொண்டால் நீங்களும் ஒரு பெரிய சிலுவையை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான்.இதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது.இயேசுவும் அப்படிச் சொல்லவில்லை.அப்படியென்றால் இதை எப்படி எடுத்துக்கொள்வது?இயேசு வேறொரு விதமாகச் சொல்லுகிறார்.அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.'தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்' என்றால் என்ன அர்த்தம்?இயேசு கெத்செமனே தோட்டத்தில் ஜெபம்பண்ணுகிறார், சீஷர்கள் தூங்கிவிடுகிறார்கள்.அவர்களைப் பார்த்து,"ஒரு மணி நேரம்கூட ஜெபம்பண்ண முடியவில்லையா?" என்று கேட்கிறார்.இயேசு மன வேதனைப்பட்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறார்.அவர் உலகத்தின் பாவத்திற்காக மரிக்கப் போகிறார்.அது எவ்வளவு பெரிய ஒரு காரியம்!உலகத்தின் பாவத்தையெல்லாம் சுமக்க வேண்டுமே, அந்த பாரத்தை யோசித்துப் பார்க்கிறார், அதை அவரால் தாங்க முடியவில்லை.இரத்த வியர்வை சிந்தி ஜெபிக்கிறார்.வேதனை அவ்வளவு அதிகமாக இருப்பதால் ஒரு காலக்கட்டத்தில், "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படிச் செய்யும்" என்கிறார்.சிலுவை மரணம் நடக்கப்போகிறது, அதை நினைத்துதான் இவ்வளவு வேதனை, ஒருவேளை வேறு ஏதாவது விதத்தில் அதைச் செய்துகொள்ளும் ஆண்டவரே, என்னை விடும் என்கிற விதத்தில் சொல்லுகிறார்.ஆனால் பிதா தன்னை இதற்காகத்தான் அனுப்பினார், இதற்காகத்தான் சரீரத்தைக் கொடுத்தார், இரத்தம் சிந்துவதற்காகத்தான் சரீரத்தைக் கொடுத்தார் என்பதெல்லாம் அவருக்கு தெரியும். ஆகவேதான் உடனே அவர் சுதாரித்துக்கொண்டு, "ஆனாலும் என்னுடைய சித்தமல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது" என்றார்.இப்படிச் சொல்லிவிட்டு எழுந்திருக்கும்போது யூதாஸ்காரியோத்து போர்ச்சேவகர்களைக் கூட்டிக்கொண்டு வருகிறான்.அவர்கள் வந்தவுடன் இயேசுகல்லுக்கும், மலைக்கும் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தார், இவர்கள் தான் அவரை தேடிப் பிடித்தார்கள் என்று வேதம் சொல்லவில்லை.அவர்கள் இவரைத் தேடி வருகிறார்கள், அவர் அவர்களைப் பார்த்து, "நான் இங்கு இருக்கிறேன், இங்கு வாருங்கள்" என்றார்.அவர்கள் வந்தவுடன், "போகலாமா" என்று கேட்டார்.அப்படித்தான் அவரைப் பிடித்தார்களே ஒழிய, அவரை தேடிப் பிடிக்கவில்லை.அவர் எழுந்து போகிறபோது எப்படி போகிறார்?அவர் சிலுவையை எடுத்துக்கொண்டார்.முன்பு சிலுவை வேண்டாம் என்று சொல்லுகிற அளவிற்கு போய்விட்டார்.ஆனால் இப்போது என்னுடைய சித்தம் அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தம் தான் எனக்கு முக்கியம், என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவருடைய சித்தத்திற்காக வாழ்ந்துவிட்டேன், ஒரு வார்த்தை கூட நான் சுயமாய் பேசினது கிடையாது, அவர் சொன்னதைத்தான் பேசினேன். ஒரு செயல் கூட அவர் இல்லாமல் செய்தது கிடையாது.நான் அவருடைய சித்தத்தையே செய்தேன்.ஆகவே இப்போது இதையும் செய்து முடித்து விடுகிறேன் என்று செய்கிறார்.அவர் கல்வாரி சிலுவையில் மரித்ததுதான் அவருடைய சிலுவை.தேவன் நமக்கு அந்த சிலுவையை வைத்திருக்கிறாரா?அவர் நம்மை சிலுவையில் மரிக்கச் சொன்னாரா?கிடையாது!

அப்படியென்றால்,'தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்'என்றால் என்ன அர்த்தம்? நான் சிலுவையை எடுக்க வேண்டாம் என்று எண்ணினேன், ஆனால் என்னுடைய சித்தம் அல்ல, அவருடைய சித்தம் ஆகட்டும் என்றுமுடிவுபண்ணி என்னுடைய சிலுவையை நான் எடுத்துக்கொண்டேன். நீ உன் சிலுவையை எடுத்துக்கொண்டாயா?அதை நீ எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றி வா என்கிறார்.அப்படியென்றால் என்ன அர்த்தம்?நீ செய்ய விரும்புகிறதை இறக்கி வைத்துவிட்டு, நான் உன் மூலமாய் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை ஏற்றுக்கொள் என்கிறார்.நம்முடைய சிலுவை அதுதான்.நாம் கர்த்தருடைய சித்தத்தை செய்ய வேண்டும்.கர்த்தர் ஒரு காரியத்தைச் சொன்னார் என்றால், மற்ற எல்லாவற்றையும் வைத்துவிட்டு, என்னுடைய சித்தம் அல்ல, நான் விரும்புகிறது அல்ல, நீர் விரும்புகிறதை நான் நிறைவேற்றுகிறேன், அது வாழ்வானாலும் சாவானாலும் உம்முடைய சித்தத்தை நான் செய்வேன் என்று செய்தால் அதுதான் வெற்றி வாழ்க்கை. அதில்தான் மேன்மையும், உயர்வும், ஆசீர்வாதமும், நிறைவும், சந்தோஷமும் உண்டாகும்.கர்த்தர், "நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன், அவைகள் தீமைக்கு ஏதுவானவைகள் அல்ல" (எரேமியா 29:11) என்கிறார்.நமக்கு நன்மை செய்து, நாம் விரும்புகிறதை தருகிற திட்டம் அது.கர்த்தர் நம்மை ஒரு இடத்திற்கு அனுப்புகிறார், ஒரு வேலையை செய்யச் சொன்னார் என்றால், அதற்குரிய விருப்பத்தையே உள்ளே வைத்துவிட்டார்.அதை உங்களுடைய விருப்பமாக்கி, ஜெபமாக்கி, விசுவாசமாக்கி அதையே நிறைவேற்றி தருவார்.உங்களுடைய சித்தத்தை கீழே வைத்துவிட்டு கர்த்தருடைய சித்தத்தை எடுக்க வேண்டும்.அதுதான் ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது.சிலர், "கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டால் அவர் என்ன செய்வார் என்று தெரியவில்லையே" என்கிறார்கள்.கர்த்தர் நல்லவர், அவரிடம் ஐந்து அப்பம், இரண்டு மீனைக் கொடுத்தார்கள்.அதைக் கொண்டு ஐயாயிரம் புருஷர்களை போஷித்தார்.இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கை பெரிதாக இல்லாமல் இருக்கலாம்.அவர் அதை எடுத்து அசாதாரணமானதாக மாற்றுவார்.அவர் கையில் எடுத்துவிட்டால் அது அற்புதமாய் மாறும்.

Donation
eStore
Copyright © 2017 Victory Christian Foundation. All rights reserved.
Website & Social Media by Open Minds Agency