0 item - ₹0.00

மீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும் (பாகம் 05) - உப்பும் வெளிச்சமும்

Sunday Tamil Service - 26 NOV 17

Transcript

மத்தேயு எழுதின சுவிசேஷம் 5-ஆம் அதிகாரத்திற்கு திருப்பி வைத்துக்கொள்வோம். வேலையை குறித்துப் போதித்து வருகிறோம். இதில் முதல் பகுதியிலே பாவமும், சாபமும் வருவதற்கு முன் original-ஆக கர்த்தர்வேலையைப் பற்றி என்ன நோக்கம் வைத்திருந்தார், எந்த நோக்கத்திற்காக மனுஷனுக்கு வேலையைத் தந்தார், எப்படி மனுஷனுடைய வாழ்க்கையில் வேலையைவடிவமைத்திருந்தார் என்பதை குறித்துப் போதித்தேன். இரண்டாவது பகுதியில் பாவத்தின் மூலமாக சாபம் உலகத்தில் வந்துவிட்ட பிறகு அது வேலையை எந்த விதத்தில் பாதித்தது என்பதை குறித்துப் பேசினேன். அதில்வேலை ஏன் கடினமாகி விட்டது, சாபம் எப்படி வேலையை கடினமாக்குகிறது என்பதைப் பற்றி போதித்தேன்.

இப்போது மூன்றாவது பகுதிக்கு வந்திருக்கிறோம். இயேசு மீட்பை உண்டுபண்ணின பிறகு நாம் ஆசீர்வாதத்தின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆபிரகாமின் ஆசீர்வாதம் நமக்கு வந்து கிடைக்கும்படியாகத்தான் கிறிஸ்து சிலுவையிலே மரித்தார் என்று கலாத்தியர் நிருபத்தில் பவுல் சொல்லுகிறார் (கலாத்தியர் 3:13,14). ஆக, நாம் ஆசீர்வாதத்தின் கீழே வாழுகிறோம். ஆசீர்வாதத்தின் கீழே மீட்கப்பட்டவர்களாய் வாழுகிற நமக்கு வேலை எப்படிப்பட்ட பாதிப்பை உண்டுபண்ணியிருக்கிறது என்பதை குறித்துதான் போதித்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஒரு காரியத்தைச் சொன்னேன். ஆசீர்வாதத்திலே இரண்டு பகுதிகள் இருக்கின்றன.அதில் ஒரு பக்கம் என்னவென்றால், ஆசீர்வாதம் என்பது வெற்றிபெறச் செய்யக்கூடிய ஒரு சக்தி. வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்கான ஒரு தெய்வீக சக்தியைத்தான் 'ஆசீர்வாதம்'என்று சொல்லுகிறோம். ஆபிரகாமுடைய வாழ்க்கையிலே பார்த்தோம் என்றால், அங்கு அதிகமாக பொருளாதார ஆசீர்வாதம், எதிரிகளை ஜெயிப்பது மற்றும் பிரச்சனைகளை மேற்கொள்வது என்று இப்படி வெளிப்புறமாக ஆபிரகாம் எப்படி ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தான் என்பதைப் பார்த்தோம். ஆபிரகாம் மட்டுமல்ல, அவனுடைய சந்ததியான ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்கள் எல்லாரும் பலவிதமான கடினமான சூழ்நிலைகளை மேற்கொண்டு, ஜெயித்து மேலே வருகிறார்கள். அதைத்தான் 'ஆபிரகாமின் ஆசீர்வாதம்' என்று வேதம் சொல்லுகிறது. இவையெல்லாம் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வெளிப்புறமான ஆசீர்வாதங்கள். இது மிகவும் முக்கியம். இதைத்தான் பழைய ஏற்பாட்டில் அதிகமாக வலியுறுத்துவதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் ஆசீர்வாதத்தில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் அதை கொடுக்க முடியவில்லை. அது என்னவென்றால், ஒரு புதிய இருதயம், புதிய சுபாவம், தேவ ஆவியானவரே நமக்குள் வந்து வாசம்பண்ணும்படியாக அப்படி ஒரு வாசஸ்தலமாக நம்முடைய இருதயம் மாறுவது என்பதெல்லாம் பழைய ஏற்பாட்டில் நிறைவேற முடியாத ஒரு காரியம். ஏன்? நாம் பாவிகளாயிருந்தோம். அன்றைக்கு ஆடு, மாடுகளைத்தான் பலியிட்டார்கள்; அவற்றினுடையஇரத்தத்தைஅடையாளமாக தெளித்தார்கள். அந்த இரத்தம் இயேசுவினுடைய இரத்தத்திற்கு அடையாளமாக இருக்கிறது. பழைய ஏற்பாடு முழுவதும் அடையாளங்கள் தான் இருக்கிறது, புதிய ஏற்பாட்டில் தான் அது நிஜமாகிறது. இங்கு தான் ஆண்டவராகிய இயேசு வந்து, தம்முடைய இரத்தத்தை சிந்தி மீட்பை உண்டுபண்ணியிருக்கிறார். அவருடைய இரத்தத்தின் மூலமாகத்தான் நம்முடைய இருதயம் கழுவப்படுகிறது, சுத்தமாக்கப்படுகிறது;நமக்கு புதிய இருதயம் கொடுக்கப்படுகிறது, புது சுபாவம் உண்டாகிறது; நாம் புது சிருஷ்டியாகவே மாறிவிடுகிறோம். ஆகவே தேவ ஆவியானவரே நமக்குள் வந்து வாசம்பண்ணக்கூடிய ஒரு நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இந்த ஆசீர்வாதத்தை ஆபிரகாமே பெற்றதில்லை. ஆனால் இந்த ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு முன்னறிவிக்கப்பட்டு வாக்குத்தத்தமாய் கொடுக்கப்பட்டது. ஆகவேதான் பவுல், "மரத்திலே தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்" என்கிறார். ஏன்? அவர் அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லுகிறார். ஒன்று, ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம். அப்படியென்றால் என்ன அர்த்தம்? பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களுக்கு உண்டாயிருந்தஆசீர்வாதத்தைக் குறித்து வாசிக்கிறோம். அந்த ஆசீர்வாதங்கள் புறஜாதியினராகிய நமக்கு வந்து கிடைக்கும்படியாக, அதாவது பழைய ஏற்பாட்டுக் காலத்தில்ஆபிரகாமின் சந்ததியினருக்குத்தான் அது உண்டாயிருந்தது. இன்றைக்கு அது இயேசு கிறிஸ்துவின் மூலமாக எல்லாருக்கும் வந்து கிடைக்கிறது. இரண்டாவது காரணம் என்னவென்றால், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை விசுவாசத்தின் மூலமாக பெறும்படியாகவும் என்று கலாத்தியர் 3:14-இல் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு இரண்டு காரியங்களை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று, ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம். அது எல்லாருக்கும் வர வேண்டும். அடுத்தது, ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தம். ஆவியைக் குறித்து பழைய ஏற்பாட்டில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? பழைய கல்லான இருதயத்தை எடுத்துவிட்டு, சதையான இருதயத்தை தருவேன் என்று தேவன் சொல்லியிருக்கிறார். மேலும் என்னுடைய ஆவியை அவர்களுக்குள் வைப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். புதிய உடன்படிக்கையின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், முன்பு நம்முடைய உள்ளம் ஆவியானவர் வாசம்பண்ணும் வாசஸ்தலமாக அப்படிப்பட்ட நிலையில் இல்லை. நாம் பாவிகளாயிருந்தோம். பாவிகளுடைய உள்ளத்தில் ஆவியானவர் வாசம்பண்ண முடியாது. பாவம் அகற்றப்பட வேண்டும், உள்ளம் தேவாலயமாக மாற வேண்டும். அப்படி மாற வேண்டுமென்றால் உள்ளே சுபாவமே மாற வேண்டும், நாம் புது மனுஷனாக மாற வேண்டும். அதன் பிறகுதான் ஆவியானவர் வந்து நமக்குள் வாசம்பண்ண முடியும். ஆகவேதான் புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கிற ஒரு சாதாரண விசுவாசி கூட பழைய ஏற்பாட்டில் இருக்கிற பெரிய தேவ மனுஷர்களைக் காட்டிலும் பெரியவனாய் இருக்கிறான் என்று இயேசு சொன்னார். ஏன்? எது நம்மை அவ்வளவு பெரிய ஆளாக ஆக்குகிறது? பழைய ஏற்பாட்டில் அவர்கள் எவ்வளவு பெரிய மனுஷர்களாய் இருந்தாலும் அவர்களுக்குள் ஆவியானவர் வாசம்பண்ண முடியவில்லை. இன்றைக்கு ஒரு சாதாரண விசுவாசிக்குள் கூட ஆவியானவர் வாசம்செய்யும் அளவிற்கு அவன் இரத்தத்தினால் கழுவப்பட்டு, புதுமனுஷனாக்கப்பட்டிருக்கிறான். ஆக, ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை விசுவாசத்தினாலே பெறுவதுதான் இந்த ஆசீர்வாதத்தின் மறுபக்கம். இது உள்ளுக்குள்ளே ஏற்படுகிற மாற்றம்.

இதை காண்பிப்பதற்காகத்தான் மத்தேயு 5-ஆம் அதிகாரத்திற்கு வந்தோம். அங்கே பல வசனங்களைப் பார்த்தோம். முதல் 12 வசனங்களில் 'பாக்கியவான்கள்' என்று 8 முறை சொல்லப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் 'Beatitudes' என்று சொல்லுவார்கள். 'பாக்கியவான்கள்' என்றால் 'ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்று அர்த்தம். தேவனுடைய ராஜ்யத்தின் மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இயேசு அங்கே சொல்லுகிறார். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற உள்ளான ஆசீர்வாதத்தைப் பற்றி அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய ராஜ்யம் ஏற்கனவே வந்துவிட்டது. இயேசு திரும்ப வரும்போது இந்த பூமியிலேயே அந்த ராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போகிறார். ஆனால் விசுவாசிகளாய் இருக்கிறநமக்குள்ளே தேவன் ஆளுகிறார். இயேசு நம்முடைய ராஜாவாக இருக்கிறார். தேவனுடைய ராஜ்யம் நமக்குள்ளே வந்துவிட்டது. நாம் தேவனுடைய ராஜ்யத்திலே இருக்கிறோம். இந்த ராஜ்யத்திலே இருக்கிற நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம், நம்முடைய தன்மை என்ன என்பதைத்தான் இந்த வசனங்கள் விளக்குகின்றன. இதைப் பற்றிச் சொல்லும்போதுதான் 'ஆவியில் எளிமையுள்ளவர்கள்', 'துயரப்படுகிறவர்கள்', 'சாந்தகுணமுள்ளவர்கள்', 'நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்', 'இரக்கமுள்ளவர்கள்', 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்', 'சமாதானம்பண்ணுகிறவர்கள்', 'நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள்' என்று தேவனுடைய ராஜ்யத்திற்குக் கீழ்வாழுகிற மக்கள்எப்படிப்பட்டவர்கள் என்பதைக் குறித்து இப்படி வர்ணிக்கிறார். அதன் பிறகு உள்ள 13-16 வரை உள்ள வசனங்களைக் கவனிப்போம்.

"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத்தேயு 5:13-16).

தேவனுடைய ராஜ்யத்தில் வாழுகிற மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதைச் சொல்லிவிட்டு, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்றும், "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" என்றும் இயேசு சொல்லுகிறார். நாம் உள்ளும் புறம்பும் மாற்றப்பட்ட மக்கள், ஆசீர்வாதத்தின் இரண்டு பக்கத்தையும் கண்டவர்கள். இந்த இரண்டு விதமான ஆசீர்வாதமும் நம்முடையதாய் இருக்கிறது. ஒன்று, வெளிப்புறமாக எல்லா சூழ்நிலைகளையும் ஜெயித்து வெற்றிபெறக்கூடிய ஒரு சக்தி. இன்னொன்று, உள்ளுக்குள்ளேயே ஒரு பெரிய மாற்றம். ஆவியில் எளிமையுள்ளவர்களாய், துயரப்படுகிறவர்களாய், சாந்தகுணமுள்ளவர்களாய், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாய், இரக்கமுள்ளவர்களாய், இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய், சமாதானம்பண்ணுகிறவர்களாய், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களாய் நாம் மாறியிருக்கிறோம். இப்படி நாம் புதிய மனுஷனாய் மாறியிருக்கிறோம். இப்படிப்பட்டவர்கள் ஒரு பெரிய நோக்கத்திற்காக இந்த பூமியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இயேசு சொல்லுகிறார். ஒன்று, பூமிக்கு உப்பாய் இருக்கும்படியாக. இன்னொன்று, உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கும்படியாக. இந்த இரண்டு காரியங்களையும் பார்ப்போம். இவை எல்லாவற்றையும் நாம் வேலையோடு சம்பந்தப்படுத்த வேண்டும். இந்த புதிய சுபாவத்தைப் பற்றிச் சொல்லும்போது,ஆவியில் எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம்பண்ணுகிறவர்கள், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் ஆகிய இந்த குணாதிசயங்களையெல்லாம் வேலையோடு ஒப்பிட்டுப் பேசினேன். வேலை ஸ்தலத்தில் இது எப்படி பயனுள்ளதாய் இருக்கிறது என்பதைப் பார்த்தோம்.

இன்றைக்கு "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்"என்றும், "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" என்றும் இயேசு சொன்னதைப் பற்றி குறிப்பாகவேலையை மனதில் வைத்துக்கொண்டு கவனிப்போம். இப்படி உள்ளும், புறம்பும் ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிற மக்கள் பெரிய நோக்கத்திற்காக இந்த உலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் முக்கியம். ஏனென்றால் அவர்கள் உப்பாயிருக்கிறார்கள். ஒரு முக்கிய வேலையை இங்கு செய்யும்படியாக அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். உப்பு என்ன செய்கிறது? இன்றைக்கு நாம் refrigerator காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே உப்பு என்று சொன்னவுடன், நாம் அதைப் பற்றி யோசிப்பதே வேறுவிதமாக இருக்கிறது. உப்பு ஆகாரம் கெடாதபடிக்குபாதுகாக்கிறது என்பதை நாம் மறந்துவிட்டோம்.ஆகாரத்தை கெடாதபடிக்கு பாதுகாப்பதற்கு உப்பு அவசியம் என்பதை அநேகர் யோசித்துக்கூட பார்ப்பது கிடையாது. ஏனென்றால்ஆகாரம் கெடாமல் இருப்பதற்கு அதை refrigerator-இல் வைத்து விடுகிறோம். வேதாகமம் refrigerator இல்லாத காலத்தில் எழுதப்பட்டது. அன்றைக்கு அவர்களுக்கு, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்று சொன்னவுடன் எது முதலில் ஞாபகத்திற்கு வரும் என்றால், ஆகாரம் கெடாதபடிக்கு பாதுகாப்பதற்கு உப்பு பயன்படுகிறது என்பதுதான். அவர்கள் ஒவ்வொரு நாளும் வீடுகளில் இதை அனுபவித்து பார்த்தவர்கள். அவர்கள் கண் முன் எப்போதும் அது இருக்கிறது. உப்பு என்று சொன்னவுடன் அவர்களுக்கு அதுதான் ஞாபகத்திற்கு வரும். கெடாமல் பாதுகாக்கக்கூடிய சக்தி உப்பிலே இருக்கிறது. இயேசு, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்று சொல்லுகிறார்.இந்த பூமியில் தேவன் நம்மை எதற்காக வைத்திருக்கிறார் என்றால், நம்முடைய கலாச்சாரத்தில் கொஞ்சம் உண்மையும், நல்ல தன்மைகளும், நல்ல காரியங்களும், நல்ல பழக்கவழக்கங்களும் இருக்கிறது. இவை முழுவதுமாக அழிந்துபோகக்கூடாது என்பதற்காகத்தான் அவர்நம்மை வைத்திருக்கிறார். அவர் நம்மை உப்பாக வைத்திருக்கிறார். அதாவது முழுவதுமாக உண்மையும் உத்தமும் இல்லாமல், அயோக்கியத்தனமும், ஒழுங்கீனமும், பொய்யும் புரட்டும் என்று சமுதாயம் அப்படி அழிந்துபோகாதபடிக்கும், கெட்டுப்போய் நாறிப்போகாதபடிக்கும் பாதுகாக்கிற ஒன்றாகஉங்களை உலகத்தில் வைத்திருக்கிறேன் என்கிறார்.

நம்முடைய ஒரு நாளில் பாதி நாளை வேலையில் தான் செலவிடுகிறோம். 8 மணி நேரம் வேலை செய்கிறோம் என்கிறார்கள். நன்றாக யோசித்துப்பாருங்கள். நாம் 8 மணி நேரம் தான் வேலை செய்கிறோமா? முன்பு நம்முடைய சபை சிறியதாக இருக்கும்போது நான் விசுவாசிகளுடைய வீட்டிற்குச் சென்று அவர்களை சந்திப்பேன். அப்படிச் செல்லும்போது ஒரு நாளில் 3 அல்லது 4 வீடுகளை சந்திக்க முடியும். ஆனால் இப்போது அப்படிச் சென்றால் எவரையும் வீட்டில் பார்க்க முடியாது. எவருடைய வீட்டிற்காவது சென்றோம் என்றால், இரண்டு சிறுபிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும், ஒரு பாட்டி உட்கார்ந்து கொண்டிருப்பார். அந்த வீட்டில் உள்ளபுருஷனும், மனைவியும் இரவு 9 மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார்கள் என்று சொல்லுவார்கள். காலையில் 7 மணிக்கு புறப்பட்டு வேலைக்குச் செல்கிறவர்கள்இரவு 9 மணிக்குத்தான் வீட்டிற்கு திரும்ப வருகிறார்கள். நாம் வேலையில் அவ்வளவு நேரம் செலவிடுகிறோம். வேலை நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது என்பதைப் பாருங்கள்! அது சாதாரண ஒரு காரியம் அல்ல. ஆகவேதான் வேலையைப் பற்றி சில சத்தியங்களை நாம் அறிந்துகொண்டு,சரியான விதத்தில் அதைப் பற்றி யோசித்து, அதை சரியான அணுகுமுறையோடு அணுகவில்லையென்றால் வாழ்க்கையே நரகமாகி விடுகிறது. ஏனென்றால் பாதி நேரத்தை வேலையில் தான் செலவழிக்கிறோம், மீதி நேரத்தில்குடும்பத்தோடு இருக்கிறோம். குடும்பம், வேலை ஆகிய இரண்டும் வாழ்க்கையில் இரண்டு பெரிய அம்சங்களாக இருக்கிறது. ஆகவேதான் குடும்ப வாழ்க்கையைக் குறித்து நான் அதிகமாக போதித்திருக்கிறேன்.குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது என்றால் வாழ்க்கையே நரகமாகி விடும்.குடும்பத்தில் சமாதானம் இல்லையென்றால் நாம் பெரிய படிப்பு படித்து, பட்டம் பெற்று, அதிகமாக சம்பாதித்துஎன்ன பிரயோஜனம்? குடும்பத்தில் சமாதானம் இல்லையென்றால் எல்லாம் கெட்டுப்போய் விட்டது என்று அர்த்தம். அதன்பிறகு நாம் வேலையை நன்றாகச் செய்ய முடியாது,நிம்மதி இருக்காது, எதையுமே சரியாக செய்ய முடியாது,ஒரு காரியத்தை ஆராய முடியாது, படிக்க முடியாது, முன்னேற முடியாது, ஒரு காரியத்தைக் குறிக்கோளாக வைத்து அதை அடைய முடியாது. குடும்பத்தில் உள்ள பிரச்சனையை சரிசெய்வதற்கே சரியாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் முக்கியம். அதேபோலத்தான் வேலை மிகவும் முக்கியம். வேலையில் திருப்தியும், சந்தோஷமும், தரிசனமும், நோக்கமும் இல்லையென்றால் எல்லாமே கெட்டுப்போய், வாழ்க்கையே வெறுத்து சலிப்பு உண்டாகி விடுகிறது. நாம் செய்கிற வியாபாரம், தொழில் இவற்றில் எந்த ஈடுபாடும்,வெற்றியும், சந்தோஷமும், நிறைவும் இல்லாமல் போய்விடுகிறது. ஆகவேதான் இந்த சத்தியங்கள் மிகவும் முக்கியம். கர்த்தர், நான் உங்களை பூமிக்கு உப்பாக வைத்திருக்கிறேன். சில நல்ல காரியங்கள் இருக்கிறது. தேவன் மனுஷனை அவருடைய சாயலின்படியும், ரூபத்தின்படியும் உண்டாக்கினதினால் மனுஷன் பாவஞ்செய்த பிறகும் கூட தேவனுடைய சாயல் மனுஷனுக்குள் அடிப்படையாக ஒட்டியிருக்கிறது. அதில் மீதி இருக்கிற காரியங்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகத்தான் உங்களை வைத்திருக்கிறேன் என்கிறார். இது வேலைக்கு நன்றாக பொருந்தும். வேலையில் நாம் இதை எப்படி அப்பியாசப்படுத்தலாம் என்பதை காண்பிக்கிறேன்.

உப்பு அழியாமல், கெட்டுப்போகாமல் காப்பது மட்டுமல்ல, அது ருசியைக் கொடுக்கிறது. "உப்பு இல்லா பண்டம் குப்பையிலே" என்று சொல்லுகிறார்கள். ஆகாரத்தில் உப்பு இல்லையென்றால் அதை சாப்பிடவே முடியாது. சில வேளைகளில் மருத்துவர் மிகவும் சிறிய ஒரு பாக்கெட் உப்பைக் கொடுத்து, ஒருநாள் முழுவதற்கும் அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிவிடுவார். காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதைவிட ஒரு பெரிய தண்டனை மனுஷனுக்கு கொடுக்கவே முடியாது. இவ்வளவுதான் உப்பு, இதற்கு மேல் நீ உப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டால், அதைப் போன்ற ஒரு வேதனையான காரியம் கிடையவே கிடையாது. ஏனென்றால் உப்பு எவ்வளவு தேவையோ, அவ்வளவு போட்டால் தான் அது சரியாக இருக்கும், அதை சாப்பிட முடியும். உப்பு இல்லையென்றால் அதை சாப்பிடவே முடியாது. ஆக, உப்பு ருசியைக் கொடுக்கிறது. அந்த ருசி மிகவும் முக்கியம். சிலர், ருசி எல்லாம் முக்கியமே கிடையாது என்று சொல்லுவார்கள். ருசி தேவை இல்லையென்றால், பிறகு ஏன் ருசிக்கக்கூடிய உணர்வை கர்த்தர் கொடுத்தார்?அவர் நாவில் சுவையை உணரக்கூடிய நரம்புகளை வைத்திருக்கிறாரே!அவர் ருசிக்கிற இன்பத்தைக் கொடுத்திருக்கிறார். ருசி தேவையில்லை என்று நாம் சொல்ல முடியாது, அது மிகவும் அவசியம்.ருசியை உண்டாக்குவதில் உப்பின் பங்கு பெரியது. சிலவேளைகளில் நாம் சாப்பிடும்போது அந்த சாப்பாடு அவ்வளவு நன்றாக இல்லாததுபோல இருக்கும். அதில் கொஞ்சம் உப்பை சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும். எல்லா ருசியும் அப்போதுதான் வெளியே வரும். இதற்கு முன் நாம் பூண்டு, வெங்காயம் இவற்றையெல்லாம் சேர்த்திருந்தாலும் உப்பை போடவில்லை என்றால், அவற்றின் ருசி வெளியே வராது. ஆனால் உப்பை போட்டவுடன் எல்லாம் ருசியாகி விடும்.

ஆக உப்பு, கெட்டுப்போகாமல் காப்பதற்கு பயன்படுகிறது. அதன் பிறகு அது ருசியைத் தருகிறது. இன்னும் அநேக காரியங்களைச் சொல்லலாம். ஆனால் இந்த இரண்டு காரியங்கள் தான் நம்முடைய மனதிற்கு வருகிறது. ஒரு Bible study-இல், "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்"என்கிற வசனத்தைப் படித்துக்கொண்டிருந்தார்களாம். அப்போது உப்பு என்றால் என்ன, உப்பு என்னவெல்லாம் செய்கிறது என்று எல்லாரையும் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது ஒருவர், "சாப்பாடு கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கு பயன்படுகிறது" என்றார். இன்னொருவர், "அது ருசியைக் கொடுக்கிறது" என்றார். அங்கு ஒரு சீனப்பெண் இருந்தார். அவர், "உப்பு தாகத்தைக் கொடுக்கிறது" என்றார். இது எவ்வளவு பெரிய உண்மை! ஆக, கர்த்தர் நம்மை உலகத்திற்கு உப்பாக வைத்திருக்கிறார் என்றால், நாம் இந்த உலகத்தில் இருக்கிறதினாலேயே கிறிஸ்துவைக் குறித்து ஒரு தாகம், ஒரே மெய்யான தேவனை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஒரு தாகம் நம்மோடு தொடர்பில் இருக்கிறவர்களுக்கு உண்டாகும். நாம் இருப்பதினாலேயே, "மெய்யான ஒரு தேவன் இருக்கிறார்" என்று ஜனங்கள் சொல்லுவார்கள். அவர்களுக்கு அது எப்படி தெரியும்? நம்மைப் பார்த்துதான். மெய்யான தேவனை நான் காண வேண்டும், நான் அவரை ருசிக்க வேண்டும் என்கிற தாகத்தை நாம் மற்றவர்களுக்குள்ளே உண்டுபண்ணுகிறோம். இப்படிப்பட்ட காரணங்களால் தான் "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

உப்பு shelf-இல் இருந்தால்,உணவு கெடாமல் காப்பது, ருசியை உண்டாக்குவது, தாகத்தைக் கொடுப்பது போன்ற இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் அது செய்யாது. அதை எடுத்து இறைச்சியின் மீது தடவினால் தான் அதுகெட்டுப்போகாமல் பாதுகாக்கும். அதை உணவில் சேர்த்தால் தான் ருசி உண்டாகும். அதை சாப்பிட்டால் தான் தாகம் உண்டாகும். அது shelf-இல் இருந்தால் ஒன்றும் உண்டாகாது. ஆகவே, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்று சொல்லும்போது இயேசு என்ன சொல்லுகிறார் என்றால், இது போன்று ஒரு தாக்கத்தை இந்த பூமியில் ஏற்படுத்தும்படியாகத்தான் உங்களை இந்த பூமியில் வைத்திருக்கிறேன் என்கிறார். அதாவது, முழுவதுமாக கெட்டுப்போகாதபடிக்கும், வாழ்க்கையே மிகவும் ருசியுள்ளதாய் இருக்கும்படிக்கும், ஜனங்கள் உங்களைப் பார்க்கும்போது ஆண்டவரை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தாகத்தைப் பெறும்படிக்கும் உங்களை இங்கு வைத்திருக்கிறேன். ஆகவே நீங்கள் உலகத்தோடு மிகவும் தொடர்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். உப்பை எடுத்து இறைச்சியில் தடவினால் தான் அது கெடாமல் காக்கிறதே ஒழிய, shelf-இல் உப்பு இருந்து, table-இல் இறைச்சி இருந்தது என்றால், அது சீக்கிரம் கெட்டுப்போய்விடும். உப்பை எடுத்து இறைச்சியின் மீது நன்றாக தேய்க்க வேண்டும். உப்பு இறைச்சியின் மீது அதிகமாக சேரும்போது அதனுடைய காக்கும் தன்மையை அது வெளிப்படுத்துகிறது. அதன் பிறகுஇறைச்சியை எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் அப்படியே இருக்கிறது. ஏனென்றால் உப்பு இறைச்சியோடு நன்றாக சேர்ந்திருக்கிறது. அது தனியாக இருந்ததென்றால் அந்த வேலையைச் செய்ய முடியாது. அதைக் கொண்டுவந்து இறைச்சியோடு சேர்க்க வேண்டும்.

ஆக "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்று சொல்லும்போது இயேசு என்ன சொல்லுகிறார் என்றால், நீ சந்நியாசி ஆகிவிடாதே என்கிறார். அதாவது, தாடியை வளர்த்துக்கொண்டு எங்கேயாவது அறையில் போய் உட்கார்ந்து, கதவை அடைத்துக்கொள்ளாதே, நான் ஜெபமும் தவமுமாய் இருக்கப்போகிறேன், நான் உலகத்தையே பார்க்கப்போவதில்லை, இந்த உலகமும் வேண்டாம், மண்ணும் வேண்டாம், பொன்னும் வேண்டாம், எதுவுமே வேண்டாம், அறையை பூட்டிக்கொண்டு நான் ஜெபத்தில் இருக்கப்போகிறேன், பரிசுத்தமாய் இருக்கப்போகிறேன், அயோக்கியர்களோடு நான் சேரக்கூடாது, கெட்டவர்களோடு நான் இருக்கக்கூடாது என்று சொல்லாதே என்று அர்த்தம். தேவன் நம்மை அப்படி இருக்கும்படி வைக்கவில்லை. அப்படியிருந்தால் "உங்களை பூமியில் சந்நியாசியாக வைத்திருக்கிறேன்" என்று அவர் சொல்லியிருப்பாரே! ஆனால் அப்படிச் சொல்லவில்லை. சிலர் அப்படி இருக்கலாம். ஆனால் நம் எல்லாரையும் அவர் அப்படி வைக்கவில்லை. அவர் நம்மை உப்பாக வைத்திருக்கிறார்.

சிலர், "கெட்டுப்போன, பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும், ஏமாற்று வேலையும் நிறைந்த உலகத்தில் போய்அயோக்கியர்களோடு சேர்ந்துவேலை செய்வதைக் காட்டிலும், வீட்டில் உட்கார்ந்து வேதத்தை வாசித்து, ஜெபம்பண்ணுவது நல்லதென்று நான் நினைக்கிறேன்"என்று சொல்லுகிறார்கள். இது தவறு. இவர்கள் கிறிஸ்தவன் என்றால் எப்படிப்பட்டவன் என்றே புரிந்துகொள்ளவில்லை. கர்த்தர், நான் உன்னை அதற்காகத்தான் இந்த உலகத்தில் வைத்திருக்கிறேன். எல்லாம் கெட்டுப்போகிறது, இன்னும் மீதி பேரை விட்டால் அவர்கள் இருக்கிறதையும் கெடுத்துவிடுவார்கள். ஆகவேதான் உன்னைக் கொண்டுபோய் அங்கு வைத்திருக்கிறேன். நீ உள்ளே புகுந்து வேலை செய் என்கிறார். எதன் உள்ளே புகுந்து வேலை செய்ய வேண்டும்? வியாபார தொழிலுக்குள்ளும், வேலை ஸ்தலத்திற்குள்ளும் நாம் புகுந்து வேலை செய்ய வேண்டும். அயோக்கியத்தனமும், திருட்டுத்தனமும், பொய்யும், பித்தலாட்டமும் பண்ணுகிற அதற்குள்ளே போய், நீ அதைச் செய்யாதே, ஆனால் அதன் உள்ளே நீ இரு, நீ அங்கு இருப்பதாலேயே அந்த வேலை சரியாக நடக்கும்,அதிகமாக கெட்டுப்போகாது. கெடாதபடிக்கு காப்பதற்காக உன்னை மனச்சாட்சி போன்று அங்கு வைத்திருக்கிறேன் என்று தேவன்சொல்லுகிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம்? எனக்கு வேலை வேண்டாம், ஜெபம் போதும் என்று சொல்லாதே, வேலைக்குப் போ என்று அர்த்தம். அநேகர், தாங்கள் ஏன் வேலைக்குச் செல்கிறோம் என்கிற நோக்கம் தெரியாமல் வேலைக்குச் செல்கிறார்கள். நாம் ஏன் வேலைக்குப் போகிறோம் என்றால், நாம் உப்பாக இருக்கிறோம், அதற்காக வேலைக்குப் போகிறோம். கர்த்தர் நம்மை இந்த உலகத்தில் உப்பாக வைத்திருக்கிறார், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்படியாக, எல்லாம் அழிந்துபோகாமல் காக்கும்படியாக வைத்திருக்கிறார். நாம் இந்த நோக்கத்திற்காகத்தான் வேலைக்குச் செல்கிறோம். நாம் வேலை செய்கிற இடத்தில் ஒரு influence-ஆக இருக்கும்படியாகத்தான் கர்த்தர் நம்மை அங்கே வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் விலகிப்போய்விடக்கூடாது. ஒருவர், "எனக்கு உலக வேலை பிடிக்கவில்லை, அதை விட்டுவிட்டு, ஊழிய வேலை செய்யலாம் என்றிருக்கிறேன்"என்றார். இப்படிப்பட்டவர்கள் ஊழிய வேலைக்கு வரவே கூடாது. உலகமே பிடிக்காதவர்களுக்கு ஊழியம் எப்படி பிடிக்கும்? ஆண்டவர் ஊழியத்திற்கு அனுப்பும்போது மிகவும் கெட்டுப்போயிருக்கிற இடத்திற்குத்தான் நம்மை அனுப்புவார். ஏனென்றால் அங்கு நீங்கள் தான் கெட்டுப்போயிருக்கிறதை சரிசெய்ய வேண்டும். சிலர், "நான் பரிசுத்தவான்களோடு மட்டும் தான் பழகுவேன் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ள வேண்டியதுதான், இவர்களால் ஊழியம் செய்ய முடியாது. சிலர் இந்த பூமியில் இருப்பதற்கே லாய்க்கு அற்றவர்கள். அவர்கள் பரலோகம் போய்விட வேண்டும். ஏனென்றால் அவர்கள் அவ்வளவு பெரிய மிதமிஞ்சிய பரிசுத்தவான்களாகி விட்டார்கள். இவர்களால் எவரோடும் சேர முடியாது."இவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாது, அவரோடு சாப்பிட முடியாது, இதைச் செய்ய முடியாது, அதைச் செய்ய முடியாது" என்று இவர்கள் சொல்லுவார்கள்.

சில கிறிஸ்தவர்கள் எவரோடும் சேரக்கூடாது என்கிற கொள்கை உடையவர்களாய் இருக்கிறார்கள். எவரோ அவர்களுக்கு அப்படி போதித்திருக்கிறார்கள். உப்பை இறைச்சியின் மீது தடவினால் தான் அது கெடாமல் பாதுகாக்கும். உப்பை உணவில் சேர்த்தால் தான் அது ருசியை உண்டாக்கும். உப்பை சாப்பிட்டால் தான் அது தாகத்தைக் கொடுக்கும். ஆக, இந்த உலகத்திலிருந்து நம்மை withdraw பண்ணிக்கொள்வது தீர்வு அல்ல. எனக்கு உலகம் வேண்டாம் என்று சொல்லுவது மிகப்பெரிய தவறு. நாம் involved-ஆக இருக்க வேண்டும். சிலர், நாம் involved-ஆக இருந்தால் நாம் அவர்களைப்போல் ஆகிவிடுவோம் என்று எண்ணுகிறார்கள். கிடையாது. நாம் அப்படி ஆக முடியாது. நாம் உள்ளும் புறம்பும் மாற்றப்பட்டிருக்கிறோம். இயேசு நம்முடைய ஆண்டவராக இருக்கிறார். அவர் நமக்குள் குடிகொண்டிருக்கிறார். நாம் ஒருபோதும் மற்றவரைப்போல மாறவேமுடியாது. சிலர், "கவனமாக இருங்கள், நீங்கள் அவர்களைப் போல மாறிவிடாதீர்கள்" என்கிறார்கள். நான் மாறமாட்டேன். நாம் இந்த உலகத்தில் தான் இருக்கிறோம்,அதனால் நாம் உலகத்தாரைப்போல ஆகிவிட்டோமா? கிடையாது. "இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்..." என்று வேதவசனம் சொல்லுகிறது. நாம் உலகத்தில் தான் வாழுகிறோம்.ஆனால் வேதம், இந்த உலகத்தாரைப்போல இருக்காதே என்கிறது. அப்படியென்றால் உலகத்திலேயே இருந்துகொண்டு உலகத்தாரைப்போல் இல்லாமல் இருக்க முடியுமா? முடியும். ஆகவேதான் வேதம் அப்படிச் சொல்லுகிறது. நீ உலகத்தில் இரு, ஆனால் நீ அவர்களைப்போல இருக்காதே, கிறிஸ்துவைப்போல இரு என்று தேவன் சொல்லுகிறார்.அவர் நம்மை காட்டிற்குள் போய் இருக்கச் சொல்லவில்லை. எவரும் இல்லாத இடத்தில் பரிசுத்தமாய் இருக்கச் சொல்லவில்லை. அவர் இந்த பூமியில் இருக்கச் சொல்லியிருக்கிறார். நாம் இந்த பூமிக்கு உப்பாய் இருக்கிறோம். நாம் வேலைக்குச் செல்ல வேண்டும், மற்றவர்களோடு பழக வேண்டும், பேச வேண்டும், அன்புகூர வேண்டும். அநேகர் மற்றவர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், எவரோடும் இவர்கள் சேரவில்லை, ஏனென்றால் இவர்கள் அவ்வளவு பெரிய பரிசுத்தவான்களாகி விட்டார்கள். இவர்கள் பூமிக்கு லாய்க்கு இல்லாதவர்கள். இவர்கள், நாங்கள் பரலோகத்திற்கு உப்பாயிருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் தேவன், "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்"என்கிறார்.

அவர் இதை ஏன் சொல்லுகிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஏன் இப்படி திடீரென்று "பூமிக்கு உப்பாயிருங்கள்"என்று ஆரம்பித்து விட்டார். ஏனென்றால் அதற்கு முந்தின மூன்று வசனங்களில், "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்..." (மத்தேயு 5:10-13) என்கிறார். ஏன் அவர் நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்கிறார்? இதை முந்தின வசனங்களோடு தொடர்புபடுத்திப் பாருங்கள். ஏன் அவர் இப்படிச் சொல்லுகிறார் என்றால், தேவனுடைய ராஜ்யத்தின் மக்கள், புதிய சுபாவத்தை உடையமக்கள், ஆவியில் எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம்பண்ணுகிறவர்கள், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் என்று இருந்தாலே அதனிமித்தமாகவே பூமியில் சில வேளைகளில் துன்பப்பட நேரிடும். நீதியின் நிமித்தம் துன்பப்படுவது என்பது உலகத்தில் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கக்கூடிய காரியம். அப்படி துன்பப்படுகிறவர்களுக்கு தைரியம் ஊட்டவும், உற்சாகப்படுத்தவும் தான்"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம்? உன்னை துன்பப்படுத்துகிறார்கள் என்று இந்த பூமியை விட்டுப் போய்விடாதே என்கிறார்.
சிலர் மற்றவர்கள் தங்களை துன்பப்படுத்துவதால், "ஆண்டவரே, என்னை எடுத்துக்கொள்ளும், நான் பரலோகம் வந்துவிடுகிறேன், இந்த உலகமே எனக்கு பிடிக்கவில்லை, இது மிகவும் பொல்லாத உலகம், நான் இங்கு இருக்கவே விரும்பவில்லை" என்கிறார்கள். ஆனால் ஆண்டவர், அங்குதான் உப்பு தேவைப்படுகிறது, அங்குதான் எல்லாம் கெட்டுப்போய் விடுகிறது, நீ அங்கேயே இரு என்கிறார். அதாவது,உன்னை துன்பப்படுத்துகிறார்களே என்று விலகிவிடாதே, தூரமாகப் போய்விடாதே, உன்னை துன்பப்படுத்தினால் பரவாயில்லை, எனக்காக நீ அங்கேயே இரு, நான் உன்னை பூமிக்கு உப்பாக வைத்திருக்கிறேன், இந்த உலகத்தில் உன்னால் பெரிய மாற்றம் ஏற்படும் என்கிறார். மத்தேயு 13:33-இல், "பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது;அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள்" என்று வேதம் சொல்லுகிறது. அவள் கொஞ்சம் புளித்த மாவை எடுத்து, அதை மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள். அப்படி வைத்தால் ஒரே இரவில் முழு மாவும் புளித்து விடுகிறது. கொஞ்சம் மாவு முழு மாவையும் புளிக்க வைத்து விடுகிறது. அதற்கு கொஞ்ச நேரம் தேவை, அவ்வளவுதான். அப்படி வைத்துவிட்டால் அது இரவு முழுவதும் சத்தம் போட்டுக்கொண்டிருக்காது, அது அமைதியாக இருக்கும். எந்த மாற்றமும் ஏற்படவில்லையே, புளித்த மாவை உள்ளே வைத்திருக்கிறோம், என்ன பிரயோஜனம் என்று சொல்லக்கூடாது. அடுத்த நாள் காலையில் பார்த்தால் எல்லா மாவும் புளித்திருக்கும். எந்த சத்தமும், ஆர்ப்பாட்டமும் இருக்காது. ஆனால் வேலை நடந்துகொண்டே இருக்கும். நம்முடைய வேலை அப்படிப்பட்டது. நாம் ஆர்ப்பாட்டம் பண்ணுகிற ஆட்கள் அல்ல. ஆர்ப்பாட்டம் பண்ணுவது நம்முடைய வேலை அல்ல. நாம் அமைதலாயிருந்து வேலையை நடத்துகிறவர்கள். உப்பு வேலை செய்வது போன்று வேலை செய்துகொண்டிருக்கிறோம். ஒழுங்காக வேலைக்குச் செல்கிறோம், நம்முடைய வேலையைச் செய்கிறோம், நாம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறோம். நாம் உப்பாயிருக்கிறோம், நம்முடைய வேலையைச் செய்கிறோம். இந்த நபரால் எந்த பாதிப்பும் ஏற்படுத்த முடியாது, இவர் வாயைத் திறப்பதே கிடையாது, இவர் அமைதியாக இருக்கிறார் என்று நம்மைக் குறித்து பிறர் சொல்லுவார்கள். ஆனால் நாம் அங்கு இருந்தாலே முழுக்க முழுக்க பாதிப்பு ஏற்பட்டுவிடும். எப்படி? அது உப்பு போன்று வேலை செய்கிறது. ஆகவேதான் இயேசு, துன்புறுத்துகிறார்களே என்று பயந்து, ஓடிப்போய் விடாதே,உன்னை உலகத்திலிருந்து ஒதுக்கிவிடாதே. அவர்கள் உன்னை துன்புறுத்தினாலும் நீ அங்கேயே இரு, நீ அங்குதான் தேவை. ஏனென்றால் பொல்லாத மனிதர்கள் மாறுவதற்காகவும், ஒரு தாக்கத்தை உண்டுபண்ணும்படியாகவும் தான்நான் உன்னை இங்கே வைத்திருக்கிறேன் என்கிறார். ஆக, புளித்தமாவைப் போல நாம் அமைதியாக வேலையை நடத்த வேண்டும்.

தேவனுடைய வசனம் வல்லமையுள்ளதாய் இருக்கிறது. எபிரெயர் 4:12-இல் இப்படியாக வாசிக்கிறோம்.

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" (எபிரெயர் 4:12).

தேவனுடைய வார்த்தையானது குத்துகிறதாயும், வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அதைப் பார்க்கும்போது அப்படி தெரிகிறதா? அது அமைதியாக இருக்கிறது. ஆனால் அதை தியானித்துப் பாருங்கள், போதனைகளை கவனித்துப்பாருங்கள், இதை மனதில் வைத்துப்பாருங்கள், இதை நம்பிப்பாருங்கள். இது உள்ளத்திலே பயங்கரமாக வேலையை நடப்பிக்கும். வசனம் ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயும் இருக்கிறது. அது ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாய் இருக்கிறது. பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் பிரசங்கிக்கிறார். பிரசங்கம் முடித்தவுடன் ஜனங்கள்,இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள் (அப்போஸ்தலர் 2:37). அவர்கள், நாங்கள் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டோம், இருதயத்தில் குத்தப்படுகிறோம், நாங்கள் பாவிகள், தேவனுக்கு முன்பாக பாவிகளாக நிற்கிறோம், எங்களுக்கு ஒரு மாற்றம் தேவை, நாங்கள் இப்படியே இருக்க முடியாது, நாங்கள் மாற வேண்டும், எங்களுடைய நிலையை மாற்றுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்போதுதான் பேதுரு, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" (அப்போஸ்தலர் 2:38) என்கிறார். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய உள்ளம் குத்தப்படுகிறது. தேவனுடைய வார்த்தை அப்பேர்ப்பட்ட வல்லமையுடையது. அதே வல்லமைதான் சுவிசேஷத்தில் இருக்கிறது. அந்த விதமான வல்லமை தான் விசுவாசியின் மூலமாக வேலை செய்கிறது. அது காக்கிறது, ருசியை உண்டாக்குகிறது. நம்முடைய பிரசன்னம், நாம் இருப்பதே வேலை ஸ்தலங்களில் பெரிய விளைவை (effect) உண்டாக்குகிறது என்று வேதம் சொல்லுகிறது. 2 கொரிந்தியர் 2:14-ஐ கவனியுங்கள்.

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (2 கொரிந்தியர்2:14).

"பவுல் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றதாக சொல்லுகிறாரே, பல இடங்களில் இவர் அடி வாங்கினாரே, இவரை சிறையில் போட்டார்களே" என்று நீங்கள் சொல்லலாம். அவரிடம், "நீங்கள் துன்பப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டால், "ஆமாம், துன்பப்பட்டிருக்கிறேன்" என்றும், "உங்களுக்கு கஷ்டம் கொடுத்தார்களா?" என்று கேட்டால், "ஆமாம், கஷ்டம் கொடுத்தார்கள். நீதியினிமித்தம் நான் துன்பப்பட்டிருக்கிறேன். ஆனாலும் நான் பண்ணின பிரசங்கம் வேலை செய்யவில்லை" என்று மட்டும் சொல்லாதீர்கள். அது எப்படி வேலை செய்கிறது என்பதைச் சொல்லும்போதுதான்,"அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற..." என்று சொல்லுகிறார். பவுல்,தேவன் யார் என்பதைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் தம்மை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைப் பற்றியும் நான் பிரசங்கம் பண்ணுகிறேன், தேவனை அறியாத மக்கள் அவரை அறிந்துகொள்கிறார்கள், அந்த அறிவின் வாசனை பரவுகிறது என்கிறார். இந்த அறையில் நல்ல நறுமணமுள்ள வாசனைத் திரவியத்தை அடித்தால், எந்த சத்தமும், ஆர்ப்பாட்டமும்இல்லாமல் கொஞ்ச நேரத்தில்அந்த வாசனை மெதுவாக எல்லா இடத்திற்கும் பரவ ஆரம்பித்துவிடும். கதவைத் திறந்து அறைக்குள்ளே வருபவர், "வாசனை நன்றாக இருக்கிறதே" என்று சொல்லுவார். அவர்களுக்கு அறைக்குள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால் ஏதோ ஒரு நல்ல வாசனை இருக்கிறது. பவுல், நான் தேவனைக் குறித்து பிரசங்கிக்கிற இந்த காரியங்களின் மூலம் பெரிய ஆர்ப்பாட்டமான மாற்றங்களை உடனடியாக பார்க்க முடியாவிட்டாலும், அது தேவனை அறிகிற அறிவின் வாசனையை ஏற்படுத்துகிறது. அந்த வாசனை எல்லா இடங்களிலும், எல்லாருக்கும் தெரிகிற அளவிற்குபரவும் என்கிறார். ஆகவேதான் இயேசு, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்கிறார்.

சிலர், "நான் ஒன்றும் இல்லை, நான் கால் தூசுக்குச் சமானம்" என்கிறார்கள். வேதத்தில் எங்கு இப்படிச் சொல்லியிருக்கிறது? அதாவது இவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் வேதத்தில் சொல்லுகிறபடி இருப்பதற்குத்தான் தயாராக இல்லை. இயேசு, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருங்கள்" என்கிறார். ஆனால் இவர்கள், "தூசியாக இருக்கிறோம்" என்கிறார்கள். அப்படியென்றால் உதறிப்போட்டு போக வேண்டியதுதான்.வேதம் நம்மை தூசியாக இருக்கும்படி சொல்லவில்லை, உப்பாக இருக்கச் சொல்லியிருக்கிறது. உப்பாக இருக்க வேண்டுமென்றால் நம்முடைய பிரசன்னம் இங்கு தேவை, நம்முடைய வேலை இங்கு தேவை. நாம் இங்கு இருக்கிறதும், மற்றவர்களோடு பழகுவதும், இந்த சமுதாயத்தில் வெற்றிகரமாக வாழ்வதும், திறமையோடு நம்முடைய வேலையைச் செய்வதும் மிகவும் அவசியம். இப்படி எல்லாமே அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் தேவன் நம்மை அவருடைய நோக்கத்தை நிறைவேற்றும்படியாக வைத்திருக்கிறார்.

வேலை என்கிற தொடர்போதனையிலே முதலில் நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொன்னேன். பாவமும், சாபமும் வருவதற்கு முன் ஏன் தேவன் மனுஷனுக்கு வேலையைக் கொடுத்தார்?வேலை செய்து சாப்பிட வேண்டும் என்று மனுஷனுக்கு அவசியம் கிடையாது. அவன் சாப்பிடுவதற்காக தேவன் அவனுக்கு வேலையைத் தரவில்லை. ஆனால் அவர் அவனுக்கு வேலையைக் கொடுத்தார். ஏதேன் தோட்டத்தில் அவனுக்குத் தேவையான எல்லாம் ஏராளம், தாராளமாக இருக்கிறது. அப்படியென்றால் அவர் ஏன் அவனுக்கு வேலையைக் கொடுத்தார்? அவன் ஏன் வேலை செய்ய வேண்டும்? அவன் வேலை செய்யாமலேயே சாப்பிடலாமே! தேவன் அவனுக்கு ஏன் வேலையைக் கொடுத்தார் என்றால், தம்முடைய மகிமையையும், மேன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே. எப்படி வெளிப்படுத்த வேண்டும்? மனுஷன் நிலத்தை உழுது, அதில் பண்படுத்தி, அங்கு விதைத்து, அவன் அவ்வளவு விதைக்கிறானோ அவ்வளவு அருமையான காரியங்களை அறுவடை செய்து, அந்த கனிகள் ருசியான கனிகளாக உண்டாகி, அதை அவன் எடுத்து சாப்பிடுவது எவ்வளவு பெரிய இன்பத்தையும், மன நிறைவையும், திருப்தியையும், சந்தோஷத்தையும்தரும் என்று எண்ணிப்பாருங்கள். தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை நம்முடைய வேலை காண்பிக்க வேண்டும். ஒருவன் ஒன்றை கண்டுபிடித்தான். விமானத்தை பறக்கப்பண்ணினான். எல்லாரும் அவனை பாராட்டுகிறார்கள். ஆனால் வேதவசனத்தில், எல்லாரும் பார்த்து உன்னைப் மகிமைப்படுத்தும்படியாக நீ ஒளிவிட்டு பிரகாசி என்று சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் பரலோகத்திலிருக்கிற பிதாவை மகிமைப்படுத்தும்படியாக நீ ஒளிவிட்டுப் பிரகாசி என்று சொல்லுகிறது. ஒருவன் பிரமாதமான ஒரு கண்டுபிடிப்பை உண்டாக்குகிறான், ஒரு நோய்க்கு மருந்தை உண்டாக்குகிறான், அதன் மூலமாக சாக வேண்டிய எத்தனையோ பேர் பிழைக்கிறார்கள் என்றால், அது அந்த மருத்துவருக்கு மகிமை கிடையாது. அந்த மருத்துவருக்கு ஒரு பேர் உண்டாகிறது, அதை தடுக்க முடியாது. ஆனால் அதற்கும் அப்பாற்பட்ட விதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகிறது. ஆக, அதைச் செய்கிற நபர் தேவனுடைய மனுஷனாயிருந்து தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.


ஆக, தேவன் நம்மை பூமிக்கு உப்பாக வைத்திருக்கிறார். நாம் உப்பாயிருக்க வேண்டுமென்றால், சாரமுள்ள உப்பாய் இருக்க வேண்டும். சிலர் பேருக்குத்தான் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சாரமில்லாத உப்பைப்போல் இருக்கிறார்கள். அந்த உப்பில் சாரம் இல்லை. அதை எவ்வளவு அள்ளி குழம்பில் போட்டாலும் அதில் உப்பு இருக்காது. அதைப் போட்டதினால் குழம்பே கெட்டுப்போகிறது, குப்பையைப் போட்டது போல ஆகிவிடுகிறது. அது உப்பாக இருந்தால் கொஞ்சம் போட்டாலே போதும், அது நல்ல ருசியை உண்டாக்கும். ஆக, சாரமுள்ள உப்பாக இருக்க வேண்டும். நாம் வாழ்க்கையிலே எப்படி உப்புள்ளவர்களாக இருப்பது? வேதம் அதைப் பற்றிச் சொல்லுகிறது. கொலோசெயர் 4:6-ஐ கவனியுங்கள்.

"அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக" (கொலோசெயர் 4:6).

நம்முடைய வார்த்தை உப்பால் சாரமேறினதாக இருக்க வேண்டும். அது எப்போது அப்படி இருக்கும்? அது கிருபை பொருந்தின வார்த்தையாக இருக்கும்போது அப்படி இருக்கும். இது எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள். வேதவசனம் எவ்வளவு பெரிய உண்மையைச் சொல்லுகிறது என்று பாருங்கள். ஒருவன் கிறிஸ்தவன் என்றால் அவனுடைய வாயிலிருந்து வருகிற வார்த்தை கிருபையை வெளிப்படுத்த வேண்டும். அது கிருபையும், இரக்கமும், பரிவும், மனதுருக்கமும், சுகமளிக்கக்கூடியதும், நம்பிக்கை கொடுக்கக்கூடியதுமான வார்த்தைகளாய் இருக்க வேண்டும். சிலருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் வெடிகுண்டைப்போல இருக்கும். அவர்களுடைய வார்த்தைகள் வெடிகுண்டை விட பயங்கரமாயிருக்கும். இவர்கள் குழந்தை இல்லாதவர்களின் வீட்டிற்குச் செல்வார்கள். அந்த வீட்டில் கணவனும், மனைவியும் தங்களுக்கு குழந்தை இல்லாததால் வருத்தத்தில் இருப்பார்கள். இவர்கள் அந்த வீட்டிற்குச் சென்று, "உனக்குத்தான் குழந்தையில்லையே, ஆகவே கவலையில்லையே" என்று சொல்லுவார்கள். அந்த கணவனுக்கும், மனைவிக்கும் இது எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இவர்களுடைய உள்ளத்தில் மாற்றம் இல்லை. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது. ஆகவேதான் இருதயம் மாறுவதும், அங்கு ஆண்டவர் ஆளுவதும், அது அன்பினால் நிறைவதும் மிகவும் முக்கியம். இருதயம் அன்பினால் நிறைந்திருக்கும்போது வாயில் வருகிற வார்த்தைகளை யோசித்துப் பேசுவோம்;ஒருவரை புண்படுத்தாதபடி பேசுவோம். நம்முடைய வார்த்தைகள் கிருபையுள்ள வார்த்தைகளாக இருக்கும். நாம் என்ன பேச வேண்டுமென்று தெரிந்து பேசுவோம். ஏனென்றால், இரக்கம், மனஉருக்கம், அன்பு இதெல்லாம் உள்ளத்தில் இருக்கும். அதன் விளைவாக பேசுவோம். இதைத்தான் வேதவசனம் 'உப்பு' என்று சொல்லுகிறது. நல்ல அழகான, நேர்த்தியான, அருமையான வார்த்தைகளைப் பேச வேண்டும். மற்றவர்கள் ஒருவேளை பிரச்சனையில் இருந்தால் கூட நாம் அங்கு சென்று பேசின வார்த்தைகளின் நிமித்தமாக அவர்களுக்கு சந்தோஷம் உண்டாக வேண்டும். "இவர் வந்தது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!இவர் வந்து பேசி, ஜெபித்துவிட்டுச் சென்றார், அந்த வார்த்தைகள் மிகவும் நன்றாயிருந்தது, அவை மனதிற்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது" என்று அவர்கள் சொல்லுவார்கள். நம்முடைய வார்த்தை உப்புள்ளதாய் இருக்க வேண்டும்.அது ருசியை உண்டாக்குகிறதாய் இருக்க வேண்டும். அது நல்ல காரியத்தை உண்டாக்குகிறதாய் இருக்க வேண்டும். மாற்கு 9:50-ஐ வாசிப்போம்.

"உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்" (மாற்கு9:50).

2 கொரிந்தியர் 2:14-இல் வார்த்தை கிருபை உள்ளதாய் இருந்ததென்றால் அது உப்பு போட்டு ருசியாக கொடுத்தது போன்றது என்று வாசிக்கிறோம். இங்கு ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாய் இருந்தால் அது உப்பு போட்ட வாழ்க்கை போன்றது என்று சொல்லுகிறது. சமாதானமே இல்லாமல், எப்போதும் சண்டைபோட்டுக் கொண்டிருந்தால் அது நரகமாகிவிடும். ஆனால் எல்லாரோடும் சமாதானமாய் இருக்கக்கூடிய வாழ்க்கை உப்பு போட்டது போன்றது. அப்படியென்றால் அது ருசியான, அருமையான வாழ்க்கை என்று அர்த்தம். ஆக, வேதம் இதை எப்படியெல்லாம் சொல்லுகிறது என்பதை கவனியுங்கள். நாம் இப்படி இருக்கும்போது அது வேலை ஸ்தலத்திலும், சமுதாயத்திலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது புளித்தமாவைப் போன்றது. நீங்கள் அங்கு பிரசங்கம் பண்ண வேண்டியதில்லை. நீங்கள் நீங்களாக இருங்கள். நீங்கள் உப்பாயிருக்கிறீர்கள். நல்ல வார்தைகளைப் பேசுங்கள், சமாதானமாயிருங்கள், நன்றாக நடந்துகொள்ளுங்கள், உங்கள் வேலையை திறமையோடும், உண்மையோடும், உத்தமத்தோடும் செய்யுங்கள். தேவன் உங்களை கண்காணிக்கிறார் (supervise) என்று எண்ணி செய்யுங்கள். இப்படிச் செய்தாலே அது உப்புள்ள வாழ்க்கையாக இருக்கும். அதனுடைய ருசியும், வாசனையும் எங்கும் பரவ ஆரம்பிக்கும். ஏனென்றால் உலகம் அதற்கு எதிராக இருக்கிறது. அது பொய்யும், புரட்டும், அறிவீனமும், கெட்டுப்போகிறதுமாய் இருக்கிறது. ஆனால் நாமோ அதன் மத்தியில் அருமையான ருசியும், வாசனையும் கொடுக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம். ஆகவேதான் உப்பை shelf-இல் வைத்திருந்து பிரயோஜனமில்லை. அதை எடுத்து தூவ வேண்டும்.
ஒரு கடாயில் சமைக்கும்போது எல்லா இடங்களிலும் படும்படிக்கு உப்பைத் தூவுவார்கள். ஆகவேதான் கர்த்தர் நம்மை எடுத்து உலகம் முழுவதும் தூவி வைத்திருக்கிறார். சிலர், கர்த்தர் என்னை கஷ்டமான இடத்திற்கு அனுப்பியிருக்கிறாரே என்கிறார்கள். அங்குதான் உப்பு தேவைப்படுகிறது, அதற்குத்தான் அவர் நம்மை அனுப்பியிருக்கிறார். தேவன் உங்களை புதுபுது இடங்களுக்கும், கஷ்டமான இடங்களுக்கும் அனுப்பும்போதும், புதிய சூழ்நிலைகளுக்குள் வைக்கும்போதும், புதிய பதவிகளைக் கொடுக்கும்போதும், புதிய ஸ்தானத்தில் வைக்கும்போதும், கடினமாய் அது தோன்றும்போதும் ஒரு காரியத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கு எல்லாம் கெட்டுப்போகிறது, ஆகவே உப்பு தேவை, நம்மூலமாக ஒரு பாதிப்பு உண்டாக வேண்டும்என்பதால்தான் கர்த்தர் நம்மை இங்கு கொண்டுவந்து வைத்திருக்கிறார் என்று எண்ணினால் எல்லாம் சரியாகிவிடும். ஆக கர்த்தர் உங்களோடு இருந்தால், நீங்கள் உப்பாயிருந்தால் பிரச்சனையே வராது.

அதைப்போலத்தான் "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" என்றும் சொல்லுகிறார். அதைச் சொல்லும்போது எப்படிச் சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள்.

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது" (மத்தேயு 5:14).

தேவன் உங்களை மலையின் மேல் இருக்கிற பட்டணம் போன்று ஒரு காட்சிப்பொருளாக வைக்கிறார். அதாவது, பல நேரங்களில் கர்த்தர் உங்களை மற்றவர்களுக்கு முன்பாக உயர்த்தி ஒரு நல்ல ஸ்தானத்திலே வைக்கிறார். நாம், கர்த்தர் என்னை உயர்த்திவிட்டார், என்னைபெரிய ஸ்தானத்திலே வைத்துவிட்டார் என்று நாம் எண்ணுகிறோம். கர்த்தருக்கு இதைவிட பெரிய நோக்கம் இருக்கிறது.வெறும் உங்களுக்கு ஒரு பெரிய கனத்தையும், மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அவர் உங்களை ஒரு காட்சிப்பொருளாக வைத்து, உங்கள் மூலமாக தம்முடைய மகிமையை இந்த உலகத்திற்கு காண்பிக்க விரும்புகிறார். ஆகவேதான் அவர் உங்களை உயர தூக்கி மேலே வைக்கிறார். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. கர்த்தர் உங்களை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார், நல்ல ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறார், நல்ல வேலையைக் கொடுத்திருக்கிறார் என்றால் எல்லாருடைய கண்களும் உங்கள் மேல் இருக்கிறது. அவர் வேண்டுமென்றே எல்லாரும் உங்களைப் பார்க்கும்படி அப்படி வைத்திருக்கிறார். அப்படியிருக்கிற ஆட்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எல்லாரும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் தேவனுடைய நாம மகிமைக்காக நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய வார்த்தைகளும், செயல்களும் இன்னும் தேவனுடைய நாமத்தை உயர்த்துகிறதாய் இருக்க வேண்டும். ஏனென்றால், தேவன் நம்மை மலையின்மேல் இருக்கிற பட்டணத்தைப்போல வைத்திருக்கிறார். இதற்காகத்தான் அவர் நமக்கு உயர்வையும், சமுதாயத்தில் செல்வாக்கையும் கொடுத்திருக்கிறார். நம்மை அதில் ஒரு பெரிய மனுஷனாக வைத்திருக்கிறார். ஏனென்றால், அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவர் நம்மைஅப்படி வைத்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அநேகருக்கு பதவியும், உயர்வும் வந்தவுடன் அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. அப்போது தேவன் எதற்காக நமக்கு இதைக் கொடுத்தார், நம்மை ஏன் இவ்வளவு உயர்த்தினார், ஏன் இவ்வளவு ஒரு நல்ல ஸ்தானத்தைக் கொடுத்தார் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். அவருடைய நாம மகிமைக்காக அவர் நமக்கு இதைக் கொடுத்திருக்கிறார். நம்முடைய சொல்லும், செயலும், நாம் வேலை செய்கிற விதமும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், நாம் விளக்கை (light) கம்பத்தின்மேல் வைத்திருப்பது போன்று கர்த்தர் நம்மை அப்படி setup பண்ணி வைக்கிறார்.எதற்காக? எல்லாரும் விளக்கைப் பார்க்கிறார்கள் என்பதால் அல்ல. விளக்கு எல்லாருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கிறது. எல்லாருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும்படியாக கர்த்தர் நம்மை வைத்திருக்கிறார். எப்படி வெளிச்சத்தைக் கொடுக்கிறோம்? நம்முடைய திறமைகள், தாலந்துகள், தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற கிருபைகள் இவை எல்லாவற்றையும் தேவனுடைய நாம மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அவர்நம்மை அங்கே வைத்திருக்கிறார். நாம் ஒளியை வீச வேண்டும்,வெளிச்சத்தைக் கொடுக்க வேண்டும். நம்முடைய நற்கிரியைகளினால் அதைச் செய்ய வேண்டும். சில வேளைகளில் நாம் தேவனைவிட பரிசுத்தராகி விடுகிறோம். சிலர் தேவன் தங்களுக்குஉயர்வான பதவியைத் தரும்போது, "எனக்கு வேண்டவே வேண்டாம், நான் கீழேயே இருந்துவிட்டுப்போய் விடுகிறேன்"என்று சொல்லுகிறார்கள். தேவன் இவர்களை மேலே தூக்கி வைக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவர் ஒரு நோக்கத்தோடு பண்ணுகிறார். இவர்கள், நான் பெருமைப்படுவதில்லை, நான் இதையெல்லாம் விரும்பவில்லை என்பதை காண்பிக்கப் பார்க்கிறார்கள். இது மாயையான தாழ்மை என்று வேதவசனத்தில் சொல்லியிருக்கிறது. தேவன் கொடுத்தார் என்றால் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவன் நம்மை உயர்ந்த இடத்தில் வைத்தால், அவருக்கு நன்றி சொல்லி,"ஆண்டவரே, எதற்காக எனக்கு இதைக் கொடுத்தீர், என்னை இதற்காக இங்கே வைத்திருக்கிறீர் என்பதை எனக்கு காண்பியும், உம்முடைய நாம மகிமைக்காக, உமக்கு பேரும், புகழும் உண்டாகும்படியாக, உம்முடைய நாமம் உயர்த்தப்படும்படியாக என்னை இங்கு வைத்திருக்கிறீர், அதை நிறைவேற்றும்படி எனக்கு உதவி செய்யும்"என்று அதற்காக அதைப் பயன்படுத்த வேண்டும், ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும். நாம் அப்படி பிரகாசிக்கும்போது என்ன நடக்கும் என்று வேதம் சொல்லுவதைக் கவனியுங்கள்.

"இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத்தேயு 5:16).

நாம் பிரகாசிக்கும்போது அநேகர் நம்மிடத்தில் வந்து, "நீங்கள் பிரமாதமானவர், உங்களைப்போன்று யாருமில்லை" என்று சொன்னவுடன் நாம் மார்தட்டிக்கொள்ளக்கூடாது. மற்றவர்கள் அப்படிச் சொல்லும்போது, மகிமையை நாம் எடுக்கக்கூடாது என்பது ஞாபகத்திற்கு வர வேண்டும். நாம் அவர்களிடம், நான் பெரியவன் என்பதால் அல்ல, கர்த்தர் பெரியவராயிருக்கிறார், நல்லவராயிருக்கிறார், ஆமாம், நான் நன்றாக செய்கிறேன், ஏனென்றால் கர்த்தர் எனக்கு அந்த கிருபையைக் கொடுத்திருக்கிறார், பிரயோஜனமான வாழ்க்கையை வாழ்வதற்கு அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார், அவருக்குத்தான் மகிமையைச் செலுத்த வேண்டும், எனக்கு அல்ல என்று சொல்ல வேண்டும்.இதையெல்லாம் பயன்படுத்த முடிகிறதே என்று நாம் சந்தோஷப்பட வேண்டும். ஆனால் மகிமையை கர்த்தருக்கு செலுத்த வேண்டும். இந்த வசனத்தில் உங்களை மகிமைப்படுத்துவார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கிறது.

Donation
eStore
Copyright © 2017 Victory Christian Foundation. All rights reserved.
Website & Social Media by Open Minds Agency