0 item - ₹0.00

விசுவாச வாழ்க்கை (பாகம் 10) - நீங்களும் விசுவாசத்தை பெறமுடியும்

Sunday Tamil Service - 16 SEP 18

Transcript

"விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்" (எபிரெயர் 11:3).

விசுவாச வாழ்க்கையைக்குறித்துஎபிரெயர் 11-ஆம் அதிகாரத்தின் அடிப்படையிலே போதிக்க ஆரம்பித்து பல வாரங்களாக போதித்துக் கொண்டிருக்கிறோம்.1-ஆம் வசனத்தில் "விசுவாசமானது"என்று ஆரம்பித்து, விசுவாசம் என்றால் என்ன என்கிற ஒரு definition-ஐ அங்கு வாசிக்கிறோம்.அது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது.2-ஆம் வசனத்தில், "அதினால் முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்" என்று வாசிக்கிறோம்.எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் இந்த நிருபத்தை எபிரெய மார்க்கத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாறினவர்களுக்கு எழுதுகிறார்.அவர்களுடைய முன்னோர்கள் தான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே போன்றவர்கள்.அவர்கள் எப்படி சிறந்து விளங்கினார்கள், பெரிய காரியங்களைச் செய்தார்கள் என்று அதைச் சொல்லுகிறார்.அவர்கள் விசுவாசத்தின் மூலமாக நற்சாட்சி பெற்றார்கள் என்று சொல்லிவிட்டு, 3-ஆம் வசனத்தில் இப்படிச் சொல்லுகிறார்.இது fully loaded வசனம். அதாவது, இதில் அநேக காரியங்கள் அடங்கியிருக்கிறது என்று அர்த்தம்.விசுவாசத்தைக் குறித்து பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் சொல்லப்பட்டிருக்கிற காரியங்கள் எல்லாவற்றையும் வைத்து அதன் அடிப்படையில் இந்த ஒரு வசனத்தைச் சொல்லுகிறார். ஆகவே இதை நாம் சரியாக புரிந்துகொள்வதற்கு இதை வாசித்துவிட்டு அதற்குள் போக வேண்டியதாய் இருக்கிறது.ஏனென்றால் இதில் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.

கடந்த வாரத்தில் இந்த வசனத்தைப் பார்த்தோம்.இதில் ஒரு காரியத்தை முக்கியமாக சொன்னேன்.அதிலிருந்து ஆரம்பித்து அடுத்த காரியத்திற்குச் செல்ல விரும்புகிறேன்.கடந்த வாரம் விசுவாசத்தின் வியக்கத்தக்க வல்லமையைக் குறித்துப் பார்த்தோம்.இந்த வசனத்தின் அர்த்தத்தை இரண்டு விதமாக வியாக்கியானம் பண்ணலாம்.ஒன்று, விசுவாசத்தினாலே உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது என்று அறிந்திருக்கிறோம் என்பது.நடுவில் வருகிற காரியங்கள் எல்லாம் விளக்கங்கள்தான்.விசுவாசத்தினாலே உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது என்று அறிந்திருக்கிறோம் என்பதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்றால்உலகங்கள் எப்படி உண்டாக்கப்பட்டது என்பது நமக்கு தெரியாது;உலகத்தை உண்டாக்கினபோது நாம் அங்கு இருந்து பார்க்கவில்லை; விசுவாசம்தான் உலகம் தேவனுடைய வார்த்தையால் உண்டாக்கப்பட்ட உலகம் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. ஆக விசுவாசம் என்பது வெறும் உலகம் எப்படி உண்டாக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது என்கிற விதத்தில் சிலர் வியாக்கியானம்பண்ணுகிறார்கள்.ஆனால் வேறு சிலர் அந்த வியாக்கியானம் ஏற்றது அல்ல என்கிறார்கள்.இந்த வசனம் "விசுவாசத்தினாலே" என்று ஆரம்பிக்கிறது.இதற்குப் பிறகு பல வசனங்கள் "விசுவாசத்தினாலே" என்று ஆரம்பித்து வருகிறது."விசுவாசத்தினாலே ஆபேல்", "விசுவாசத்தினாலே ஏனோக்கு", "விசுவாசத்தினாலே ஆபிரகாம்", "விசுவாசத்தினாலே சாராள்", "விசுவாசத்தினாலே ஈசாக்கு", "விசுவாசத்தினாலே யாக்கோபு", "விசுவாசத்தினாலே யோசேப்பு", "விசுவாசத்தினாலே மோசே"என்று பல வசனங்கள் "விசுவாசத்தினாலே" என்று ஆரம்பிக்கிறது. "விசுவாசத்தினாலே"என்று ஆரம்பிக்கும்போதெல்லாம் அதற்குப் பின்னாலேயே பெரிய சாதனை நடக்கிறது. இந்த 3-ஆம் வசனம் தான் முதலாவதாக "விசுவாசத்தினாலே" என்று ஆரம்பிக்கிறது.அப்படியென்றால் அந்த வசனத்தையும் அப்படித்தானே வியாக்கியானம்பண்ண வேண்டும்.'விசுவாசத்தினாலே'என்று வருவதினாலே அதற்குப்பிறகு ஒரு மகத்தான காரியம் நடைபெற்றதாக நமக்குச் சொல்லப்பட வேண்டும்.அப்படி வியாக்கியானம்பண்ணவில்லை என்றால் அந்த வசனத்தை சரியாக வியாக்கியானம்பண்ணவில்லை என்று அர்த்தம்.ஏனென்றால் 'விசுவாசத்தினாலே'என்று வரும்போதெல்லாம் ஏதோ மகத்தான பெரிய காரியம் நடைபெறுகிறது.ஆகவேவிசுவாசத்தினாலே உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம் என்றால் அது ஒரு மகத்தான பெரிய காரியம் அல்ல. ஆனால் உலகமே விசுவாசத்தின் product தான். இன்றைக்கு நாம் காண்கிற உலகம் விசுவாசம் உண்டாக்கின உலகம் என்று நாம் சொல்லும்போது ஒரு பெரிய காரியத்தைச் சொல்லுகிறோம்.விசுவாசம் என்பது எப்பேர்ப்பட்ட சக்தி என்பதையும், அதனுடைய மேன்மை என்ன என்பதையும் நாம் விளக்க ஆரம்பக்கிறோம்.இது மகத்தான statement."விசுவாசத்தினாலே உலகங்கள் தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டது"என்றால் விசுவாசம் தான் உலகத்தை உண்டாக்கினது.நாம் காண்கிற உலகம் விசுவாசத்தினால் உண்டான ஒரு உலகம்.அந்த விதத்தில்தான் இதை நான் புரிந்துகொள்கிறேன்.இதுதான் சரியான வழி என்று அநேகர் சொல்லுகிறார்கள்.


விசுவாசத்தினாலே உலகங்கள் உண்டானது என்று வேதம் சொல்லுகிறது.அது ஏன் இதை நமக்குச் சொல்லுகிறது?அதை நமக்குச் சொல்லுவதினால் என்ன பிரயோஜனம்?அது நமக்கு தகவலாக சொல்லப்படுகிறதா?கிடையாது.வேதம் இதை ஏன் சொல்லுகிறது என்றால், அது நமக்கு விசுவாசத்தைப் போதிக்கிறது.இந்த விசுவாசத்தை வைத்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே ஆகிய இவர்கள் எல்லாரும் எவ்வாறு மகத்தான காரியங்களைச் செய்தார்கள் என்பதை நமக்குச் சொல்லுகிறது.எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், சவால்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறஎபிரெய மார்க்கத்திலிருந்து கிறிஸ்தவர்களாய் மாறின கிறிஸ்தவர்களுக்குப் போதிக்கிறார்.விசுவாசத்தினால்தான் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்;விசுவாசம் என்கிற உலகத்தை உண்டாக்கின சக்தி அவர்களுக்குள் இருந்து அவர்களை மகத்தானவர்களாக உருவாக்கினது, பிரச்சனைகளை மேற்கொள்ளச் செய்தது, பெரிய காரியங்களை அவர்களுக்குள் நடப்பித்தது;நீங்கள் இதைப் புரிந்துகொண்டீர்கள் என்றால் விசுவாசம் என்றால் என்னவென்று புரிந்துகொள்வீர்கள். அந்த சக்தியைத்தான் கர்த்தர் உங்களுக்கும் தருகிறார், உங்களுக்குள்ளேயும் அது இருக்க முடியும் என்கிறார்.அதற்குத்தான் இந்த வசனம் சொல்லப்பட்டிருக்கிறது.விசுவாசம் உலகத்தையே உண்டாக்கினது, அப்படியென்றால் உங்களுக்கு எதிர்காலத்தை உண்டாக்காதா?ஒரு நல்ல வாழ்க்கையை உண்டாக்கித் தராதா? உங்களுடைய தோல்வியை ஜெயமாகவும், வியாதியை சுகமாகவும், தரித்திரத்தை ஐசுவரியமாகவும், விரக்தியை சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும், வெறுமையை நிறைவாகவும், ஒழுங்கின்மையை நேர்த்தியாகவும், இருளை ஒளியாகவும் மாற்றித் தராதா? அது உலகத்தை உண்டாக்கின வார்த்தை ஆயிற்றே! உலகத்தை உண்டாக்கின விசுவாசம் ஆயிற்றே!உலகமே விசுவாசத்தினால் தான் உண்டானது.அப்படியென்றால் இந்த விசுவாசம் உங்களுக்குள் இருந்தால் அது என்ன நடப்பிக்கும் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.அப்படி வியாக்கியானம்பண்ணினால் தான் இந்த வசனம் சரியான விதத்திலே வியாக்கியானம்பண்ணப்பட்டதாய் இருக்கும்.ஏனென்றால் 'விசுவாசத்தினாலே'என்று வந்தது என்றால் அதற்குப் பிறகு பெரிய சாதனை ஒன்று வர வேண்டும்.இப்படித்தான் அதைச் சொல்ல வேண்டும்.இதைத்தான் கடந்த வாரம் உங்களுக்கு காண்பித்தேன்.

இதிலே ஒரு காரியத்தைப் பார்த்தோம்.உலகத்தையே உண்டாக்கின சக்தி விசுவாசம் என்றால், அது எப்படிப்பட்ட சக்தி என்பதை நாம் கவனிக்க வேண்டும்.பூமியில் இருக்கிற சக்திகளிலே பெரிய சக்தி எது?அணுசக்தி (nuclear power).அது நல்ல சக்தி.தேவன் அதை இந்த பூமியிலே நல்ல காரியங்களுக்காக வைத்திருக்கிறார்.நமக்கு electricity போன்ற நல்ல காரியங்களை அது கொடுக்கிறது.இன்றைக்கு எத்தனையோ நாடுகளில் குறைவு இல்லாமல் மின்சாரம்கிடைக்கிறது.ஏனென்றால் இந்த அணுசக்தியின் மூலமாக அங்கங்கு ஆலைகளை வைத்து வேண்டியதற்கும் அதிகமாக மின்சாரம் கிடைக்கிறது.அந்த நாடுகளில் இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும்.ஏனென்றால் அங்கு மின்சாரத்திற்கு பஞ்சமே கிடையாது.அதைப் பார்க்கும்போது மின்சக்தியை இப்படி பயன்படுத்துகிறார்களே என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.ஆக தேவன் அணு சக்தியை நாம் நன்றாக இருப்பதற்காகத்தான் தந்திருக்கிறார்.இந்த உலகத்தில் இருக்கிற சக்திகளில் அதுதான் பெரிய சக்தி.ஆனால் ஆவிக்குரிய சக்தி உலகத்திலிருக்கிற சக்தியைக் காட்டிலும் பெரிய சக்தி என்பதை உங்களுக்கு காண்பித்தேன்.ஏனென்றால் ஆவிக்குரிய உலகத்திலிருந்துதான் இயற்கை உலகம் உண்டானது.ஆவிக்குரிய உலகத்திலிருந்து இயற்கை உலகம் உண்டானது என்றால், ஆவிக்குரிய உலகம் இயற்கை உலகத்தைக் காட்டிலும் பெரிய சக்தி.இந்த உலகத்திருக்கிற அணு சக்தியே பெரிதான விதத்தில் உருவெடுக்க முடியும் என்றால் ஆவிக்குரிய சக்தி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்! ஆகவேதான் இயேசு, "உங்களுக்குகடுகு விதை அளவு விசுவாசம் இருந்தால் இந்த காட்டத்தி மரத்தைப் பார்த்து, நீ பிடுங்குண்டு, சமுத்திரத்திலே நடப்படுவாயாக என்று சொல்ல அது உங்களுக்கு கீழ்ப்படியும்" என்கிறார். இன்னொரு இடத்தில், "மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல், விசுவாசித்தால் அவன் சொன்னபடியே ஆகும்"என்கிறார். உலகத்தில் பெரிதாய் இருக்கிற சக்தியை ஆவிக்குரிய சக்தியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.அணு சக்தி பெரிய வல்லமை வாய்ந்ததுதான்.ஆனால் ஆவிக்குரிய சக்தி அதைக் காட்டிலும் மிகவும் வல்லமை வாய்ந்தது.வாயைத் திறந்து சொன்னால் போதும், அந்த சக்தி மலையையே பெயர்க்கக்கூடிய சக்தி, மரத்தையே பிடுங்கி வேறொரு இடத்தில் நடக்கூடிய சக்தி.இதையெல்லாம் பார்த்தோம்.இன்றைக்கு அடுத்த படிக்குச் செல்வோம்.

விசுவாசம் என்கிற ஆவி உலகத்தின் சக்தி, மாபெரும் சக்தி, வியக்கத்தக்க சக்தியானது நமக்கு உண்டாயிருக்க முடியும்.அதுதான் இங்கு point.அவர்களுக்கு உண்டாயிருந்தது, அவர்கள் நற்சாட்சி பெற்றார்கள், இது உனக்கும் உண்டாயிருக்க முடியும் என்கிற விதத்தில் தான் ஆசிரியர் இங்கு போதிக்கிறார்.இந்த சக்தி கர்த்தருடைய வார்த்தையின் மூலமாக நமக்கு வந்து கிடைக்கிறது.ஆகவேதான் அவர், "விசுவாசத்தினாலே உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது" என்று சொல்லுகிறார்.தேவன் உலகத்தை விசுவாசத்தினால் உண்டாக்கினார்.விசுவாசத்தினால் எப்படி உண்டாக்கினார்?வார்த்தையினால் உண்டாக்கினார்.ஆக விசுவாசம் தேவனுடைய வார்த்தைக்குள்ளே இருக்கிறது.இன்றைக்கு இதை நாம் கவனிப்போம்.வார்த்தைக்குள்ளே இருக்கிற விசுவாசத்தை இருதயத்திற்குள் எப்படி நாம் பெறுவது என்பதையும், இதன் மூலமாக வாழ்க்கையிலே எப்படி வெற்றியைப் பெறுவது என்பதையெல்லாம் பார்க்கப்போகிறோம். ரோமர் 10-ஆம் அதிகாரத்திற்குச் செல்வோம்.

"ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17).

இன்றைக்கு இந்த வசனத்தைத்தான் விளக்கப்போகிறேன்.இந்த வசனம் 'ஆதலால்' என்று ஆரம்பிப்பதால்நாம் சற்று பின்னே சென்று வாசிக்க வேண்டும்.'ஆதலால்' என்று சொல்லியிருப்பதால் அங்கு ஏதோ காரண காரியங்கள் இருக்கிறதுஎன்று அர்த்தம்.6-ஆம் வசனத்திலிருந்து வாசிக்கிறேன், கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்?என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி" (ரோமர் 10:6, 7).

இங்கு பாவி எப்படி நீதிமானாகிறான் என்பதைப் பற்றி பவுல் சொல்லுகிறார்.இரட்சிப்பு என்கிற விஷயத்தில் விசுவாசம் எப்படி வேலை செய்கிறது என்பதைச் சொல்லுகிறார்.இது மிகவும் முக்கியம்.இரட்சிப்பை லேசாக எண்ணிவிடக்கூடாது.இரட்சிப்புதான் இருக்கிற அற்புதத்திலேயே பெரிய அற்புதம்.பிசாசின் பிள்ளை எப்படி தேவனுடைய பிள்ளையாக மாற முடியும்?நரகத்திற்குப் போய் கொண்டிருக்கிற ஒரு பாவி எப்படி பரலோகத்திற்கு போகிற தேவனுடைய பிள்ளையாக மாற முடியும்?பாவத்தினால் கட்டுண்ட பிசாசின் அடிமையாய் இருக்கிற ஒரு மனுஷன் எப்படி தேவனுடைய பிள்ளையாக, புது சிருஷ்டியாக, தேவனுக்கு ஏற்றவனாக மாற முடியும்?இதுதான் அற்புதங்களில் எல்லாம் மிகப்பெரிய அற்புதம்.இது விசுவாசத்தினால் உண்டாகும் நீதி.உலகமே விசுவாசத்தினால் உண்டானது போல,நீதியும் விசுவாசத்தினால் தான் உண்டாகிறது என்பதைக் காண்பிக்கிறார்.இங்கு பவுல், உபாகமம் புத்தகத்தில் மோசே போதித்த ஒரு காரியத்தை அப்படியே மேற்கோள் காட்டுகிறார்.அதைப் பார்ப்போம். உபாகமம் 30:11-ஆம் வசனத்திலிருந்து கவனிப்போம்.

உபாகமம் புத்தகம் முழுவதும் போதனைகளால் அடங்கியிருக்கிறது.இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, கானான் தேசத்திற்குள் போய் நுழைவதற்கு முன் மோசே போதனையைக் கொடுக்கிறார்.உபாகமம் மிகவும் விசேஷமான புத்தகம்.மோசேயினுடைய மூன்று நீண்ட பிரசங்கங்கள் இங்கு அடங்கியிருக்கிறது.இது பிரசங்கங்கள் நிறைந்த புத்தகம்.மோசே பத்து கற்பனைகளுக்கு அர்த்தம் சொல்லி பிரசங்கிக்கிறார்.பத்து கற்பனைகளை நம்முடைய வாழ்க்கையில் ஆவி, ஆத்துமா, சரீரம், குடும்பம், பொருளாதாரம் என்று எல்லாவிதத்திலும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பிரசங்கிக்கிறார்.அவர் பிரசங்கம்பண்ணிவிட்டு கடைசியாக 30-ஆம் அதிகாரத்திற்கு வரும்போது, ஆசீர்வாதமும் சாபமும் உனக்கு முன்பாக இருக்கிறது.நீ தான் உனக்கு எது வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.மனுஷன் என்றைக்கு பாவம் செய்தானோ அன்றைக்கு சாபம் வந்துவிட்டது.ஆனால் தேவன் ஆசீர்வாதத்தையும் முன்பாக வைக்கிறார்.மனுஷன் தான் அதற்கு பொறுப்பு என்கிறார்.என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சொல்லாதே, நீ தெரிந்துகொள்ளாமல் விட்டதால் தான் அப்படி ஆகிறது என்கிறார்.நான் உனக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும், ஜீவனையும் மரணத்தையும், நன்மையையும் தீமையையும் வைத்திருக்கிறேன்.நீ ஜீவனைத் தெரிந்துகொள் என்கிறார்.28-ஆம் அதிகாரத்தில் ஆசீர்வாதம், சாபம் என்று பெரிய contrast-ஐ அங்கு சொல்லுகிறார்.இந்த வார்த்தைகளைக் கேட்டு இதன்படி நடந்தால் இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும் என்று முதல் 14 வசனங்களில் ஆசீர்வாதத்தைக் கூறுகிறார்.அதன் பிறகு தம்முடைய வார்த்தையின்படி செய்யவில்லை என்றால் என்னென்ன சாபங்கள் வரும் என்று 15-ஆம் வசனத்திலிருந்து கூறுகிறார்.இந்த வசனங்கள் ஆசீர்வாதத்திற்கு அப்படியே எதிராக இருக்கும்.இதையெல்லாம் சொல்லி முடித்துவிட்டுத்தான் 30-ஆம் அதிகாரத்திற்கு வருகிறார்.நன்றாக இருப்பது எப்படி என்று அவர் சொல்லுகிறார்.ஜீவனைத் தெரிந்துகொள்,தெரிந்துகொள்கிற வேலை உன்னிடம் தான் இருக்கிறது என்கிறார்.அநேகர், என்ன இப்படி ஆகிவிட்டதே என்கிறார்கள்.அது அப்படி ஆகவில்லை, நாம் தான் அதை தெரிந்துகொள்கிறோம்,நாம் தெரிந்துகொண்டதால் தான் அப்படி ஆகிறது.நாம் நல்ல காரியங்களை தெரிந்துகொண்டால் நல்ல காரியங்கள் உண்டாகும்.கர்த்தர் அப்படித்தான் வைத்துவிட்டார்.நான் சொல்லுகிற வார்த்தையின்படி கேட்டு நடந்தால் உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும், அதுதான் அடிப்படை என்கிறார்.இதைச் சொல்லிவிட்டு 11-ஆம் வசனத்தில், நான் உனக்கு விதிக்கிற கட்டளை மறைபொருள் அல்ல, அது உனக்கு தெரியாத ஒரு காரியம் அல்ல, அது தூரமானதும் அல்ல என்கிறார்.அப்படியென்றால் அது என்னவென்று அவர் சொல்லுவதைக் கவனியுங்கள்.

"நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல" (உபாகமம்30:12).

பவுல் ரோமர் 10-ஆம் அதிகாரத்தில் இதைத்தான் மேற்கோள் காட்டுகிறார்.அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்.

"நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல" (உபாகமம்30:13).

பவுல் இதை சற்று மாற்றி,கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார் என்று சொல்லுகிறார்.ஆனால் கருத்து ஒன்றுதான்.இதனுடைய அர்த்தம் என்ன?ஏன் கர்த்தர் இப்படிச் சொல்லுகிறார்?அநேகர், ஆண்டவரே, உம்முடைய காயப்பட்ட கரத்தை என் தலைமீது வைத்தருளும் என்று இப்படி சரீரப்பிரகாரமான அனுபவம் ஏதாவது தனக்கு நடக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பார்த்தால் தான் நம்புவார்கள்.ஆகவே பவுல், நீ இரட்சிக்கப்பட வேண்டுமா, கிறிஸ்து இறங்கி வரப்போவதோ, ஏறிவரப்போவதோ கிடையாது.வெறும் இரட்சிப்பு மட்டுமல்ல, உனக்கு என்ன உண்டாக வேண்டுமென்றாலும் அதற்கு அவர் இறங்கிவரப்போவதோ, ஏறிவரப்போவதோ கிடையாது.ஆகவே கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்?என்று கேட்காதே,விசுவாசம் அப்படி பேசாது என்கிறார்.விசுவாசம் எப்படி பேசும் என்பதை ரோமர் 10:8-இல் சொல்லுகிறார்.

"நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே" (ரோமர்10:8).

இன்றைக்கு கர்த்தர் ஜனங்களை எப்படி இரட்சிக்கிறார்?பரலோகத்திலிருந்து வந்து காட்சி அளித்து, ஜனங்கள் மேல் கைகளை வைத்து, ஏதோ செய்து, தரிசனம் கொடுத்து அப்படி இரட்சிப்பதில்லை.ஜனங்கள்பிரசங்கத்தைக் கேட்கிறார்கள்.அதில் தேவனுடைய கிருபையைப் பற்றியும், கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றியும், தங்களுடைய பாவத்தை அவர் அங்கு சுமந்து மரித்ததைப் பற்றியும், உயிரோடெழுந்ததைப் பற்றியும், அவருடைய நாமத்திலே பாவமன்னிப்பு உண்டு என்பதையும் கேட்கிறார்கள், கேட்டதை விசுவாசித்து, அறிக்கை செய்து இரட்சிக்கப்படுகிறார்கள். இதற்காக கிறிஸ்து இறங்கிவரவும் மாட்டார், ஏறிவரவும் மாட்டார்.இது இப்படித்தான் நடக்கிறது.இன்றைக்கு நாம் எதைப் பெற வேண்டுமென்றாலும் வார்த்தையின் மூலம் உண்டாகிற விசுவாசத்தின் மூலமாகத்தான் பெற முடியும்.உபாகமம் 30:14-ஐ கவனியுங்கள்.

"நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது" (உபாகமம்30:14).

நீ நன்றாக இருக்க வேண்டுமென்றால் உன்னுடைய வெற்றி, எதிர்காலம், சந்தோஷம், சமாதானம், நிம்மதி, சுகம் இதையெல்லாம் உன்னுடைய வாயிலும் இருதயத்திலும் வைத்துவிட்டேன்.விசுவாச வார்த்தையை பிரசங்கிப்பதின் மூலமாக இது வாய்க்கும் இருதயத்திற்கும் போய் சேர்ந்துவிட்டது என்கிறார்.9-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர்10:9).

இரட்சிப்பு எப்படி உண்டாகப்போகிறது? இரட்சிப்பு உண்டாககிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வரப்போவதில்லை, பாதாளத்திலிருந்து ஏறிவரப்போவதில்லை, இப்படியெல்லாம் கேட்டு செய்துகொண்டிருக்காதீர்கள் என்கிறார் பவுல். இன்றைக்கு நான் உங்களிடம், நீங்கள் வீட்டிற்குப் போங்கள், இரவு கர்த்தர் உங்களுக்கு காட்சி அளிப்பார் என்று சொன்னேன் என்றால்,கர்த்தர் வருவார் என்று நீங்கள் கதவைத் திறந்து வைத்து காத்துக்கொண்டிருப்பீர்கள். பிறகு அதைக் காட்டிலும் குழப்பம் எதுவும் கிடையாது.நான் என்ன சொல்லுகிறேன் என்றால், இயேசுவின் மூலமாகத்தான் பாவமன்னிப்பும் இரட்சிப்பும் உண்டு என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது என்று சொல்லுகிறேன்.நீங்கள் அதை விசுவாசியுங்கள்.அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்.

"நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்" (ரோமர்10:10).

இப்படித்தான் இரட்சிப்பு உண்டாகிறது என்கிறார்.

"அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது" (ரோமர்10:11).

விசுவாசம் வெட்கப்படுத்தாது,அது ஏமாற்றாது, அது தோல்வியில் போய் முடியாது.கர்த்தர், நீ எந்த ஊர், நீ எந்த ஜாதி, நீ ஏழையா, பணக்காரனா, உயரமானவனா, குள்ளமானவனாஎன்று கேட்பதில்லை.அவருக்கு அதெல்லாம் முக்கியம் கிடையாது."உனக்கு விசுவாசம் இருக்கிறதா?" என்று அவர் கேட்கிறார்.ஆகவேதான் இங்கு "விசுவாசிக்கிறவன் எவனோ" என்று சொல்லப்பட்டுள்ளது.ஒருவன் யாராக இருந்தாலும் அவன் விசுவாசிக்கிறவன் என்றால் வெட்கப்பட்டுப்போவதில்லை.ஆகவேதான் கிறிஸ்தவ பிரசங்கம் எனக்கு மிகவும் பிடிக்கிறது.இது எல்லாருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய ஒன்று.அவர்கள் யாராக இருந்தாலும், எந்த இனம், ஜாதி, ஊர், நிறத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் அவர்கள் விசுவாசிக்கிறவர்கள் என்றால் வெட்கப்படுவதில்லை.இயேசு இந்த பூமியில் இருந்தபோது ஒரு கானானிய ஸ்திரீ தன்னுடைய பிள்ளைக்கு சுகம் கேட்டு அவரிடம் வருகிறாள்.அப்போது சீஷர்கள், "இவளை அனுப்பிவிடும்" என்கிறார்கள்.ஆனால் இயேசுவோ, "ஸ்திரீயே உன்னுடைய விசுவாசம் பெரியது" என்று சொல்லி அவளுடைய வீட்டிலிருக்கிற பிள்ளையைஇங்கிருந்து ஒரு வார்த்தையைச் சொல்லியே சுகமாக்குகிறார். சீஷர்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.கானானியர்கள் மிகவும் மோசமானவர்கள்.பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் அவர்களை அழிக்கும்படி சொன்னார்.ஏனென்றால் அவ்வளவு அக்கிரமமான வாழ்க்கை வாழ்ந்த, கேவலமான இனத்தார் அவர்கள்.அவர்கள் தேவனுக்கு விரோதமாய் வாழ்ந்தவர்கள்.ஆனால் இந்த பெண்ணுக்கு விசுவாசம் இருக்கிறது.ஆகவே அவள் வெட்கப்படுவதில்லை.விசுவாசத்தோடு வந்தவள் வெறும் கையோடு போவது கிடையாது.அவள் ஏமாற்றமடைந்து போவது கிடையாது.சீஷர்கள், சுகம் பிள்ளைகளுடைய அப்பம்,இது யூதர்களுக்கு சொந்தம்.இரட்சிப்பு, சுகம், உடன்படிக்கை இதெல்லாம் எங்களுடையதுஎன்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் இயேசுவோ, நான் அவளுக்கு அதைத் தருகிறேன்; விசுவாசம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு அதைத் தருகிறேன் என்கிறார்.

ராகாப் என்கிற ஸ்திரீ எரிகோ பட்டணத்தின் சுவர் மீது குடியிருந்தாள்.அவள் ஒரு வேசி.அவள்எரிகோவை வேவு பார்க்கச் சென்ற இரண்டு வேவுகாரர்களை தன் வீட்டில் ஒளித்து வைத்து, பத்திரமாய்பாதுகாத்து திரும்ப அனுப்பினாள்.அவள் அவர்களிடம், உங்களுடைய தேவன் தான் மெய்யான தேவன்.அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆகவே நிச்சயமாக நீங்கள் எங்கள் தேசத்தை கைப்பற்றி விடுவீர்கள்.நீங்கள் கைப்பற்றும்போது எல்லாரையும் அழிப்பீர்கள்.எனவே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என்று கேட்கிறாள்.ஒரு வேசியினுடைய இருதயத்தில் விசுவாசம் உண்டாகிறது.இஸ்ரவேலர் எரிகோ பட்டணத்தைப் பிடித்து அதை சுட்டெரிக்கிறார்கள்.அதின் மதில் சுவர் இடிந்து விழுகிறது.அதன் ஒரு பகுதி மட்டும் இடிந்து விழாமல் நின்றது, அங்குதான் அவள் குடியிருந்தாள் என்று சரித்திரப்பூர்வமாக சொல்லுகிறார்கள்.அன்றைக்கு அவளும், அவளுடைய குடும்பமும் காப்பாற்றப்பட்டது.புதிய ஏற்பாட்டில் அவள் இயேசுவினுடைய முன்னோர்களில் ஒருவராய் சொல்லப்படுகிறாள்.அவள் அந்நிய ஸ்திரீ, அதுவும் வேசியாய் இருந்தவள்.அவளுக்கு எவ்வளவு பெரிய மேன்மை உண்டாயிருக்கிறது என்று பாருங்கள்!நீங்கள் யாராக இருந்தாலும், உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் விசுவாசம் உங்களை வெட்கப்படுத்தாது.விசுவாசத்தைக் காட்டிலும் கர்த்தரை பிரியப்படுத்துகிற காரியம் ஒன்றுமே கிடையாது.விசுவாசம் அப்பேர்ப்பட்ட ஒரு காரியம்.அதைப் பற்றித்தான் இங்கு இப்படிச் சொல்லியிருக்கிறது:

"யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்" (ரோமர்10:12, 13).

அதாவது, கர்த்தருடையநாமத்தை வாயினால் அறிக்கை செய்து, அவரை ஆண்டவர் என்று அறிக்கை செய்கிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

"அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்?அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர்10:14-17).

'ஆதலால்'என்று 17-ஆம் வசனத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கான காரணத்தைச் சொல்லுவதற்குத்தான் இவ்வளவு வசனங்களைப் பார்த்தோம்.சாதாரண மக்களாய் இருக்கிற நமக்குவிசுவாசம் என்கிற ஆவிக்குரிய மகத்தான சக்தி எப்படி வந்து கிடைக்கிறது என்பதையும்,நாம் அதைக்கொண்டு எப்படி வெற்றிகரமாய் வாழுவது என்பதையும் பற்றி பவுல் பேசுகிறார். அதைப் பற்றிச் சொல்லும்போதுதான் யூதனென்றும், கிரேக்கனென்றும் வித்தியாசமில்லை.கர்த்தர் எல்லாருக்கும் ஐசுவரிய சம்பன்னராய் இருக்கிறார்.விசுவாசம் ஒருபோதும் வெட்கப்படுத்தாது.நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாச வார்த்தையிலே விசுவாசம் இருக்கிறது என்கிறார்.பவுல் தன்னுடைய பிரசங்கத்தை 'விசுவாச வார்த்தை' என்கிறார். பழைய ஏற்பாட்டில் மோசே பிரசங்கித்து முடிக்கும்போது, இது மிகவும் தூரத்தில் அல்ல, இது மர்மமானதும் கிடையாது, நான் இப்போது அதைத்தானே பிரசங்கித்தேன், அதன்படி செய் என்கிறார். இங்கும் பிரசங்கத்தை வலியுறுத்துகிறார்கள்.விசுவாசம் கேள்வியினால் வரும் என்பதின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.ஏதோ இரண்டு வசனங்களை எடுத்து தினமும் சொல்லுவதினால் விசுவாசம் வந்துவிடும் என்று நான் சொல்லவில்லை.அப்படி வசனங்களை தினமும் சொல்லுவது நல்லது.ஏனென்றால் அப்படிச் சொல்லும்போது அந்த வசனங்களை இன்னும் கவனிப்பதற்கும், அதைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது."விசுவாசம் கேள்வியினால் வரும்" என்றால் அதின் அர்த்தம் என்ன?தேவனுடைய வார்த்தையின் உத்தமத்தைக் குறித்து கேள்விப்பட்டு, அதன் பேரில் ஆழமான நம்பிக்கை உண்டாவதுதான் விசுவாசம்.விசுவாசம் என்பது அப்படிப்பட்ட ஒரு காரியமாய் இருக்கிறது.இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். விசுவாசம் கேள்வியினால் வரும் என்பதால்சபைக்கு சென்று வந்ததாலோ, வேதத்தில் இரண்டு அதிகாரங்களை தினமும் வாசித்ததாலோ,ஏதோ ஒரு பிரசங்கத்தை கேட்டதினாலோ வருவது அல்ல. வேதம் அப்படிச் சொல்லவில்லை.

இன்றைக்கு அநேகர், அவர்கள் கிறிஸ்தவர்களாய் இருக்கிறார்கள், சபைக்குச் செல்கிறார்கள், ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் விசுவாசம் மட்டும் வருவதில்லை.வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.வெற்றி பெற வைக்கக்கூடிய ஆவிக்குரிய சக்தி என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள்.அப்படியென்றால் விசுவாசம் எதன் மூலம் வருகிறது?கர்த்தர் நல்லவர், அவர் பொய்யுரையாதவர், அவர் சொன்னால் அப்படியே நடக்கும், அவர் சொன்ன வார்த்தையில் ஒன்றுகூட நிறைவேறாமல் போனதே கிடையாது.அவருடைய வாயிலிருந்து வந்தது என்றால் அது நிச்சயமாய் நிறைவேறும் என்கிற நம்பிக்கை பிரசங்கத்தைக் கேட்க கேட்க அதிகமாக உண்டாகிறது.விசுவாசம் உண்டாகவில்லை என்றால் வெறுமனே பிரசங்கத்தைக் கேட்டு பிரயோஜனமில்லை.அநேகருக்கு விசுவாசம் உண்டாவதில்லை. ஏனென்றால்அவர்கள் கேட்பது விசுவாச வார்த்தை அல்ல. நீ கஷ்டப்படுவதற்குத்தான் கர்த்தர் உன்னை பிறக்க வைத்திருக்கிறார், நீ கஷ்டப்படுவதும், ஒன்றுமில்லாமல் இருப்பதும் தான்கர்த்தருடைய திட்டம் என்று இப்படிப்பட்ட பிரசங்கத்தை30 வருடங்கள் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு இரண்டிற்கு மேல் சட்டை இருப்பது கஷ்டம். அண்ட ஒரு குடிசையும், அரை வயிற்றுக் கஞ்சியும் தான் நமக்கு வாழ்க்கை, கர்த்தர் நமக்காக இதைத்தான் வைத்திருக்கிறார், நமக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று பிரசங்கிப்பதை 30 வருடங்கள் கேட்டோம் என்றால் நிச்சயமாக அரை வயிற்றுக் கஞ்சியும், அண்ட ஒரு குடிசையும் கிடைப்பது கூட கடினம், பிறகு platform-க்குத்தான் வர வேண்டும். ஏனென்றால் கேட்கிற பிரசங்கம் அப்படி இருக்கிறது.நாம் எதைக் கேட்கிறோம்?விசுவாச வார்த்தை என்றால் என்ன?அதைத்தான் இங்கு பவுல் சொல்லுகிறார்."சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்" என்று கூறுகிறார்.சுவிசேஷ பிரசங்கம் மிகவும் அருமையான காரியம்.சுவிசேஷம், நல்ல காரியங்களை அறிவிக்கிற ஒரு பிரசங்கமாய் இருக்கிறது. கர்த்தர் நம்மை நேசிக்கிறார், பாவத்திலிருந்தும் பிசாசின் பிடியிலிருந்தும் விடுதலையாக்குகிறார், இந்த சங்கிலிகளை நம்முடைய வாழ்க்கையிலிருந்து அகற்றிப்போடுகிறார், எல்லாவற்றையும் ஆண்டுகொள்ளும்படியாய் நம்மை உண்டாக்கியிருக்கிறார், நாம் அப்படிப்பட்டவர்களாக இருக்கும்படியாய் அவர் விரும்புகிறார், நாம் கீழே கிடக்கும்படியாக அல்ல, மேலே இருக்கும்படியாய்அவர் விரும்புகிறார். ஆகவேதான் வேதம்,"நீ கீழாயிராமல் மேலாய் இருப்பாய்" என்றும், "வாலாயிராமல் தலையாய் இருப்பாய்" என்றும் சொல்லுகிறது.இதுதான் விசுவாசத்தை உண்டாக்கும்.இதற்கு பெயர்தான் விசுவாச வார்த்தை.ஆக இப்படிப்பட்ட பிரசங்கம் தான் ஒரு மனுஷனுக்குள் விசுவாசத்தைக் கொண்டுவருகிறது.பவுல் இதை எவ்வளவு அற்புதமான விதத்தில் விளக்குகிறார் என்பதை கவனிக்க வேண்டும்.இரட்சிப்பு உண்டாக வேண்டுமென்றால் ஒருவர் போய் பிரசங்கிக்க வேண்டும், ஜனங்கள் அதை கேள்விப்பட வேண்டும், கேள்விப்பட்டதை விசுவாசிக்க வேண்டும், பிறகு ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே, நீர் தான் இரட்சகர் என்று சொல்லி கூப்பிட வேண்டும், அவரை அறிக்கை செய்ய வேண்டும். அப்போதுதான் இரட்சிப்பு உண்டாகும்.சுகம், விடுதலை, வெற்றி, வாழ்வு, எதிர்காலம் ஆகிய எல்லாமே அப்படித்தான் உண்டாகிறது. உலகத்தை விசுவாசத்தினால் உண்டாக்கின தேவன் இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், ஆசீர்வாதங்களையும் நமக்கு இந்த உலகத்திலே உண்டாக்கித் தருகிறார் என்று வேதவசனம் சொல்லுகிறது.

விசுவாசம் எவருக்கும் வேலை செய்யும்.'எவனும்' என்கிற வார்த்தை திரும்ப திரும்ப வருகிறது.11,13 ஆகிய வசனங்களில் இந்த வார்த்தை வருகிறது. ஆக எவர் வேண்டுமென்றாலும் இரட்சிக்கப்படலாம்.அதற்கு limitation கிடையாது.ஆக பிரசங்கத்திற்கு எவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்! எது உங்களுக்கு உண்டாக வேண்டுமோ அதைக் குறித்த காரியங்களை நீங்கள் கேட்க வேண்டும்.விசுவாசம் எப்படி உண்டாகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை காண்பிக்கிறேன்.

"தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசுஎன்று பேரிடுவாயாக.அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்" (லூக்கா1:30-38).

37-ஆம் வசனம், "தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை" என்று சொல்லுகிறது.ஆனால் கிரேக்க மொழியிலே இதை வாசித்துப் பார்த்தோம் என்றால் இதனுடைய அர்த்தம் வேறு விதமாக வருகிறது.அப்படி வேறு விதமாக வருவதால் இந்த வசனத்தைகிட்டத்தட்ட 10 வித்தியாசமான ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்து வாசித்து காண்பிக்கிறேன்.

New Living Translation என்கிறமொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது:

"For the word of God will never fail"

தேவனுடைய வார்த்தை ஒன்றுகூட நிறைவேறாமல் போகாது என்று மொழிபெயர்க்கிறது.

New International Version என்கிற மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது:

"For no word from God will ever fail"

தேவனிடத்திலிருந்து வந்த ஒரு வார்த்தையும் நிறைவேறாமல் போகாது என்று மொழிபெயர்க்கிறது.

American Standard Version என்கிற மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது:

"For no word from God shall be void of power"

தேவனுடைய எந்த வார்த்தையும் வல்லமையற்றதாய் வெறுமையாய் இருக்கவே இருக்காது என்று மொழிபெயர்க்கிறது.

Weymouth New Testament என்கிற மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது:

"For no promise from God will be impossible of fulfilment"

நிறைவேற முடியாது என்கிற ஒரு வாக்குத்தத்தம் கூட தேவனிடத்திலிருந்து வரவே முடியாது என்று மொழிபெயர்க்கிறது.

Wycliffe Bible என்கிற மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது:

"for every word shall not be impossible with God"

தேவனிடத்திலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேற முடியாதுஎன்று இருக்கவே முடியாதுஎன்று மொழிபெயர்க்கிறது.

Douay-rheims என்கிற மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது:

"Because no word shall be impossible with God"

தேவனிடத்திலிருந்து வருகிற ஒரு வார்த்தையும் நிறைவேற முடியாமல் வருகிற வார்த்தையாய் இருக்கவே முடியாது என்று மொழிபெயர்க்கிறது.

Hebrew Names Version என்கிற மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது:

"For no word from God will be void of power"

தேவனிடத்திலிருந்து வருகிற ஒரு வார்த்தை கூட வல்லமையில்லாமல் வெறுமையாய் இருக்காது என்று மொழிபெயர்க்கிறது.

மரியாள் கேட்ட வார்த்தை இதுதான்."தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை" என்று தேவதூதன் சொன்னான் என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.ஆனால் மரியாள் original-ஆக கேட்டபோது தேவனிடத்திலிருந்து வந்த ஒரு வார்த்தை கூட நிறைவேறாமல் போனதில்லை, அது நிறைவேறாமல் போக வாய்ப்பில்லை, தேவனுடைய வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும் வல்லமையினால் நிறைந்திருக்கிறது என்று இப்படித்தான் கேட்டாள். ஆகவேதான் அவள் மறுஉத்தரவு கொடுக்கும்போது, "உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது" என்று சொல்லுகிறாள்.37-ஆம் வசனத்தின் அர்த்தத்தை இப்படி புரிந்துகொள்ளவில்லை என்றால் 38-ஆம் வசனத்தின் அர்த்தமே நமக்கு விளங்காது.ஆகவே வசனத்தைக் கேட்கும்போது அந்த விதமான நிச்சயம் உள்ளத்தில் உண்டாக வேண்டும்.எனவேதான் கன்னிப்பெண்ணாய் இருக்கிற, புருஷனாய் அறியாமல் இருக்கிற அவள் கர்ப்பந்தரித்தாள்.பிறகு சாராளைப் பற்றி பார்க்கும்போது வயதான அவள் எப்படி கர்ப்பந்தரித்தாள் என்பதை காண்பிக்கிறேன்.எப்படி?விசுவாசத்தினால்.விசுவாசம் எப்படி வந்தது?கேள்வியினால் வந்தது.அவளுக்கு பல சந்தேகங்கள் இருக்கிறது, அவள் நகைத்தாள், ஒரு காலக்கட்டத்தில் தேவன் சொன்னதை பரியாசம்கூட பண்ணினாள்.ஆனால் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அவளுக்கு விளங்கிவிட்டது.தேவன் சொன்னால் அப்படியே நடக்கிறது, அவர் சொன்னால் ஒரு வார்த்தை கூட வீண் போவதில்லை.அவர் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுகிற உத்தமர்,அவருடைய வாயிலிருந்து வந்துவிட்டால் நிச்சயமாக அது ஆகும் என்கிற நம்பிக்கை அவளுக்குள் வந்துவிட்டது.அந்த நம்பிக்கை உங்களுக்குள் வந்துவிட்டால் நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்களோ அது உங்களுக்கு ஆகும்.ஆக கேட்பதை அப்படி கேட்க வேண்டும்.விசுவாசம் கேள்வியினால் வருகிறது என்றால் இப்படி கேட்பதுதான் முக்கியம்.ஆகவேதான் இயேசு, நீங்கள் கேட்கிறதைக் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள் என்று சொன்னார்.விதைக்கிறவன் விதையை விதைக்கப்புறப்பட்டான் என்று சொல்லி வசனத்தை இருதயத்தில் விதைப்பதைப் பற்றி பேசுகிறார்.அப்போது கேட்கிறதைக் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள் என்கிறார்.ஏனென்றால் சில காரியங்களைக் கேட்டால் இருக்கிற விசுவாசமும் போய்விடும்.

விசுவாசம் இல்லாதவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கவில்லை என்று வேதம் சொல்லுகிறது.1 கொரிந்தியர் 10:5-ஆம் வசனத்தில் இஸ்ரவேல் மக்களைப் பற்றிச் சொல்லும்போது அப்படிச் சொல்லுகிறது. அவர்கள் சிவந்த சமுத்திரத்தை கடந்து வந்தார்கள், மன்னாவை சாப்பிட்டார்கள், கற்பாறையிலிருந்து தண்ணீரைக் குடித்தார்கள்.இப்படி அற்புதமான அனுபவங்களைப் பெற்றார்கள்.ஆனால் கர்த்தர் அவர்கள் மேல் பிரியமாய் இருக்கவில்லை.ஏன்?

"இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்.எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்" (1 கொரிந்தியர்10:1-5).

தேவன் இஸ்ரவேல் ஜனங்களை நேசித்தார், அவர்களை அன்புகூர்ந்தார், இவ்வளவு நடத்தியிருக்கிறார்,விடுவித்திருக்கிறார், எல்லாம் செய்திருக்கிறார்.ஆனால் அவர்கள்மேல் பிரியமாய் இருந்ததில்லை.ஆகவே அவர்கள் வனாந்திரத்திலே அழிக்கப்பட்டார்கள்.அவர்கள் கானான் தேசத்தைப் பார்க்கவில்லை, பாலையும் தேனையும் ருசிபார்க்கவில்லை.தேவன் அவர்களுக்காக ஏற்படுத்தின எந்த ஆசீர்வாதத்தையும் அனுபவிக்காமலேயே அவர்களுடைய வாழ்க்கை முடிந்துபோய் விட்டது.இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் அப்படி இருக்கிறார்கள்.ஏனென்றால் அவர்கள் விசுவாசிப்பதில்லை.தேவன் ஏன் இஸ்ரவேல் ஜனங்கள் மீது பிரியமாய் இருக்கவில்லை?அவர்களுக்கு விசுவாசம் இல்லை.விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாத காரியம் என்று வேதம் சொல்லுகிறது (எபிரெயர் 11:6).அவர்கள் விசுவாசிக்காததினால் தான் தேவன் அவர்கள் மீது பிரியமாய் இருக்கவில்லை.விசுவாசம் இல்லாததினால் ஏன் தேவனுக்கு இவர்கள் மீது அவ்வளவு வெறுப்பு உண்டானது?விசுவாசம் என்பதில் அப்படி என்ன இருக்கிறது?விசுவாசம் இல்லையென்றால் அதன் அர்த்தம் என்ன?தேவன் உத்தமர், நல்லவர், உண்மையுள்ளவர், சொன்னதைச் செய்வார் என்பதை அவர்கள் நம்பவில்லை, அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள்.தேவன் அவர்களுக்கு அவ்வளவு செய்தார்.ஆனால் அவர்களோ, தேவன் எங்களை எதற்காக கொண்டுவந்தார் என்று தெரியவில்லை,எகிப்திலே கல்லறை இல்லை என்று வனாந்திரத்திலே எங்களை சாகடிக்க கொண்டுவந்தாரோஎன்றார்கள்.தேவனும் இவர்களுக்கு அப்படியே செய்துவிடலாம் என்று சொல்லிவிட்டார்.அவர் அவர்களுக்கு அவ்வளவு நன்மை செய்திருக்கிறார்.ஆனால் அவர்கள் 'கர்த்தர் நல்லவர்' என்று ஒருநாளும் வாயைத் திறந்து சொல்லவில்லை.கர்த்தர் உத்தமர், அவர் சொல்லுவதை நான் நம்புகிறேன், அவர் சொன்னதை அப்படியே செய்வார், அவர் பெரியவர், அவர் போதுமானவர் என்று அவர்கள் வாயிலிருந்து வரவில்லை.அவர்கள் அவிசுவாசம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.ஆகவேதான் தேவன் அவர்கள் மேல் பிரியமாய் இருக்கவில்லை.

"தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்" (2 நாளாகமம்16:9).

ஒரு தீர்க்கதரிசி யூதாவின் ராஜாவிடம் இதைச் சொல்லுகிறான்.ராஜா தவறு செய்துவிட்டான்.அவன் கர்த்தரை நம்பாமல், தன்னுடைய பாதுகாப்புக்காக சீரியா ராஜாவோடு ஒப்பந்தம்பண்ணிவிட்டான்.இவர்கள் தேவனுடைய பிள்ளைகள், தேவன் பேரில் நம்பிக்கை வேண்டும்.தேவன் இவர்களை பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறார், யுத்தங்களில் வெற்றியைக் கொடுத்திருக்கிறார்.அதற்கு முந்தைய வசனத்தில் எத்தியோப்பியா போன்ற மகா சேனைகள் மத்தியில் கூட வெற்றியைக் கொடுத்தார் என்று வாசிக்கிறோம். அப்படிச் செய்த தேவன் இப்போது உன்னை காப்பாற்றியிருக்க மாட்டாரா, நீ ஏன் சீரியா ராஜாவோடு ஒப்பந்தம்பண்ணினாய் என்று சொல்லிவிட்டு பிறகுதான் தீர்க்கதரிசி, "தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி..." என்று சொல்லுகிறான்.இந்த ராஜாவினுடைய பிரச்சனை என்ன?இவனுக்கு உத்தம இருதயம் இல்லை.கர்த்தர் உத்தமர், நல்லவர் என்பதை இவன் நம்பவில்லை.தேவன் இவனுக்கு அவ்வளவு செய்திருந்தும் இவன் தேவபக்தியற்ற ஒரு ராஜாவோடு ஒப்பந்தம் பண்ணுகிறான்.அப்போது தீர்க்கதரிசி ராஜாவிடம், உத்தம இருதயத்தோடு இருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறான். கர்த்தர் பூமியெங்கும் உலாவி பார்த்துக்கொண்டிருக்கிறார்.யாராவது என்னை நம்பி இருக்கிறானா?என்னுடைய வார்த்தையை நம்பி இருக்கிறானா?நான் சொன்னதைச் செய்வேன் என்று என்னை பற்றிக்கொண்டிருக்கிறானா?அப்படிப்பட்ட உத்தம இருதயம் யாரிடமாவது இருக்கிறதா?மனுஷனை நம்பாமல், என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவன் இருக்கிறானா?கண்களை என் பேரில் வைத்தவன் இருக்கிறானா?என்று அவருடைய கண்கள் பூமி எங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது.ஆங்கில மொழிபெயர்ப்பில், "For the eyes of the Lord run to and fro throughout the whole earth, to show Himself strong..." என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.show Himself strongஎன்றால், தாம் எவ்வளவு பலவான் என்பதை எவர் மூலமாவது இந்த பூமியில் மற்றவர்களுக்கு காண்பிப்பதற்கு ஒரு நபரை தேடிக் கொண்டிருக்கிறார்.ஆகவே நாம், கர்த்தாவே என்னுடைய எளிய வாழ்க்கையை எடுத்து நீர் எவ்வளவு பெரியவர் என்பதை காண்பியும்.உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும். விசுவாசத்தின் வல்லமை வெளிப்படட்டும், கடுகு அளவு விசுவாசம் இருந்தால் மரத்தைப் பார்த்து கடலின் நடுவில் நடப்படுவாயாக என்று சொன்னீரே, அப்படிப்பட்ட மகத்தான, அதிசயிக்கத்தக்க வல்லமையை என் மூலமாக வெளிப்படுத்தும் என்று ஜெபிக்க வேண்டும். நாம் இருதயத்தை திறந்து கொடுக்க வேண்டும்.கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.ஆகவே மற்ற காரியங்கள் மீது நம்பிக்கையை வைப்பதை விட்டுவிட்டு கர்த்தர் மீதும், அவருடைய வார்த்தையின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.கர்த்தர் யாரைப் பயன்படுத்தலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

முன்பு நான் ஆண்டவர் அமெரிக்கர்களைத்தான் பயன்படுத்துவார், நாம் ஏழைகள் என்று எண்ணினேன்.அமெரிக்காவில் மிகப்பெரிய பிரசங்கியார்கள் தொலைக்காட்சிகளில் பிரசங்கிப்பார்கள்.நான் அதைப் பார்த்து, இவர்கள் தொலைக்காட்சிகளில் அருமையாக பிரசங்கிக்கிறார்களே, நம்மால் முடியாது என்று எண்ணினேன்.ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு மாதிரி மாறிவிட்டேன்.நாமும் அப்படிச் செய்ய முடியும்.ஏனென்றால் நாம் ஏதோ பெரியவர்கள் என்பதினால் அல்ல, நம்மைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலன் உண்டு.அன்றைக்கு எங்களுக்கு போதித்தவர்கள், ஆண்டவர் சிலரை கனமுள்ள பாத்திரமாக வைத்துவிட்டார்.ஒரு மகா பெரிய வீட்டிலே பலவிதமான பாத்திரங்கள் இருக்கிறது.சில பாத்திரங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் உண்டானவை.சில பாத்திரங்கள் மரம், மண் இவற்றால் உண்டானவை.கர்த்தர் உன்னை மரம், மண் இவற்றால் உண்டான பாத்திரங்களாக வைத்திருக்கிறார் என்று போதித்தார்கள்.2 தீமோத்தேயு 2:20-ஐ கவனியுங்கள்.

"ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்" (2 தீமோத்தேயு2:20, 21).

"இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால்" என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.'இவைகளை விட்டு' என்பதுபாவ சந்தோஷங்களையும், தவறான காரியங்களையும், இழிவான வாழ்க்கையையும் விட்டு விடுவதைக் குறிக்கிறது.விசுவாசம் என்பது சுத்த இருதயத்திலிருந்து கிரியை செய்கிற ஒரு காரியம்.இருதயத்தை அசுத்தமாக வைத்துக்கொண்டு, பாவத்திலே வாழ்ந்துகொண்டு விசுவாசம் வேலை செய்யாது.விசுவாசம் என்பது மாபெரும் சக்தி.விசுவாசம் அன்பினால் மட்டும் தான் வேலை செய்யும்.நீங்கள் மற்றவர்களை அழிப்பதற்கு விசுவாசத்தைப் பயன்படுத்த எண்ணினால் உங்களுக்கு விசுவாசம் வராது.இருதயத்தில் விரோதத்தையும், பகையையும் வைத்துக்கொண்டு காழ்ப்புணர்ச்சியோடும், தீமை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடும் வாழ்ந்தால் விசுவாசம் வேலை செய்யாது. அது அன்பினால் நிறைந்த உள்ளத்திலிருந்து வேலை செய்கிறது.அது சுத்தமான இருதயத்திலிருந்து வேலை செய்கிறது.அசுத்தமான, பாவம் நிறைந்த, பொல்லாத காரியங்களால் நிறைந்த இருதயத்திலிருந்து விசுவாசம் என்கிற தெய்வீகமான, பரிசுத்தமான சக்தி வேலை செய்யாது.அது பெட்ரோலில் மண்ணைப் போட்டது போல போன்றிருக்கும்.அது அடைத்துக்கொள்ளும், ஓடாது.அது எதற்கும் பயன்படாது.அப்படிப்பட்டவனிடம் மலையைப் பெயர்க்கிற விசுவாசத்தைக் கொடுத்தால், மலையே என்னை சூழ்ந்துகொள், நான் பாவம் செய்ய வேண்டும், அதை எவரும் பார்க்காதபடிக்கு சூழ்ந்துகொள் என்று அதை அப்படி பயன்படுத்துவான். மலையைப் பெயர்க்கக்கூடிய விசுவாசம் அவனுக்கு பாவத்திற்கு பயன்படுத்தக்கூடிய காரியமாக மாறிவிடும்.பவுல் இந்த வசனத்தில், நான் வெறும் மண் பாண்டம், கனவீனமான பாத்திரம் என்று நீ உன்னைப் பற்றி எண்ணினாய் என்றால் அதை சரி செய்து விடலாம் என்கிறார்.ஆகவே நாம்,ஆண்டவரே நான் கனத்திற்குரிய பாத்திரமாய் இருப்பேன்.உமக்காக வாழுவேன்.என்னுடைய இருதயத்தை அதற்கென்றே சுத்தம்பண்ணுவேன்.உம்முடைய விசுவாசம் மலையைப் பெயர்க்கக்கூடியது.இந்த அபார, அதிசயிக்கத்தக்க சக்தி எனக்குள்ளிருந்து பெரிய காரியங்களை நடப்பிக்க வேண்டும்.உம்முடைய வல்லமை அதின் மூலமாக வெளிப்பட வேண்டும்.அப்பேர்ப்பட்ட இருதயத்தை எனக்குத் தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.அப்போதுமண் பாத்திரம் போன்று இருக்கிற நம் வாழ்க்கை வெள்ளியினாலும் பொன்னினாலும் ஆன கனத்திற்குரிய பாத்திரமாக மாறும்.நாம் தேவனுக்கு பிரயோஜனமுள்ளவர்களாய் இருப்போம்.அதற்கு விசுவாசம் தேவை.நாம் சரியாக கேட்பது முக்கியம்.கேட்பதகென்றே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதைக் கேட்க வேண்டும்.அப்போதுதான் விசுவாசம் வரும்.விசுவாசம் வந்துவிட்டால் எல்லாம் வரும், வேறொரு உலகமே உண்டாகி விடும்.

Donation
eStore
Copyright © 2017 Victory Christian Foundation. All rights reserved.
Website & Social Media by Open Minds Agency