0 item - ₹0.00

Sunday Tamil Service - 14 MAY 17 - 100% Victory: God's will for you

Transcript

இன்றைக்கு "வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை" என்கிற தலைப்பிலே போதிக்க விரும்புகிறேன்.கிறிஸ்தவ வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கையாய் இருக்க வேண்டும்.தேவன் நமக்கு ஒரு வெற்றி வாழ்க்கையைத்தான் வைத்திருக்கிறார்.நாம் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்.இன்னும் கேட்டால்,நாம் ஜெயிக்க வேண்டும் என்று நாம் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாகஅவர் விரும்புகிறார்.ஒருவேளை இன்றைக்கு நம்முடைய சூழ்நிலை மிகவும் மோசமாக, நாம் தோல்வியடைவது போன்றிருக்கலாம்.ஆனால் நாம் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தம்.நாம் தோல்வியடைவது போன்றிருக்கலாம், ஆனால் நாம் ஜெயிக்கத்தான் போகிறோம்.ஏனென்றால் நாம் தேவனுடைய வார்த்தையை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.அது நம் மனதிற்குள் போகப் போகிறது.அதனால் பெரிய அறுவடை வரப்போகிறது.'ஜெயம்', 'வெற்றி'என்கிற இப்பேர்ப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும்போதே, போராட்டம் இருக்கிற இடத்தில்தான் ஜெயம் இருக்க முடியும் அல்லது தோல்வி இருக்க முடியும் என்கிற ஒரு காரியம் நமக்கு நன்கு விளங்கிவிட வேண்டும்.ஏதாவது ஒரு சவாலோ அல்லது எதிர்ப்போ இருக்க வேண்டும்.அதன் மத்தியில் வெற்றியடையலாம் அல்லது தோல்வியடையலாம்.எந்த சவாலும், எதிர்ப்பும், பிரச்சனையும், யுத்தமும்இல்லைஎன்றால் வெற்றிக்கு அர்த்தமே கிடையாது.இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது?கிறிஸ்தவ வாழ்க்கை பிரச்சனையே இல்லாத வாழ்க்கை அல்ல. அதில் பிரச்சனை இருக்கிறது.அந்த பிரச்சனையின் மத்தியில் தேவன், "நீ வெற்றி பெற வேண்டும்" என்கிறார்.கிறிஸ்தவ வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.நமக்கு யுத்தங்கள், எதிர்ப்புகள், சவால்கள், சத்துருக்கள், எதிரிகள் உண்டு.

'சத்துரு' என்கிற அந்த விதத்தில் யோசித்துப் பார்த்தோம் என்றால், நமக்குகுறைந்தபட்சம் மூன்று சத்துருக்கள் இருக்கிறார்கள். அவை:உலகம், மாம்சம், பிசாசு. உலகம் நம்மை எதிர்க்கிறது.நம்முடைய வழிகள், எண்ணங்கள், நாம் வாழ விரும்புகிற விதம் ஆகிய எல்லாவற்றையும் உலகம் எதிர்க்கிறது.நம்முடைய மாம்சம் நம்மை எதிர்க்கிறது.புதுசிருஷ்டியில் மாற்றப்படாத அந்த ஒரு அம்சம் நமக்கு இருக்கிறது.சிலவேளைகளில் பழைய காரியங்களை நாம் விரும்புகிறோம்.அதை 'மாம்சம்' என்று சொல்லுவார்கள்.சிலவேளைகளில் அது நாம் முன்னேறுவதற்கு ஒரு தடையாக இருக்க முயற்சிக்கிறது.அடுத்து பிசாசானவன்.அதன்பின் சிறு சிறு எதிரிகள் அநேகமாய் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்றாலே எதிரிகள், சத்துருக்கள், சவால்கள், பிரச்சனைகள், போராட்டங்கள், யுத்தங்கள் இவை எல்லாமே இருக்கிறது.இதன் மத்தியில் தேவன் நமக்கு வெற்றியைத் தருகிறேன் என்கிறார்.

சிலர்,"எனக்கு பிரச்சனையே இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று ஜெபியுங்கள்"என்கிறார்கள்.ஒருவர்ஒரு பிரசங்கியாரிடம் சென்று, "எனக்கு ஒரு பிரச்சனையிலிருந்து இன்னொரு பிரச்சனைக்குச் சென்று போதும் போதும் என்றாகி விட்டது.இதெல்லாம் ஒழிய வேண்டும் என்று ஜெபியுங்கள்.எனக்கு பிரச்சனைகளும், யுத்தங்களும் வேண்டாம்" என்றாராம்.அந்த பிரசங்கியார் அவர் தலையில் கை வைத்து, "ஆண்டவரே, தயவுசெய்து சீக்கிரமாய் இவரை பரலோகத்திற்கு கொண்டு செல்லும்" என்று ஜெபித்தாராம்.உடனே அவர், "என்ன போதகரே, இப்படி ஜெபிக்கிறீர்கள்" என்று கேட்டாராம்.அதற்கு பிரசங்கியார், "நீங்கள் அப்படித்தானே கேட்டீர்கள்" என்றாராம்.எந்தப் பிரச்சனையும், யுத்தமும், போராட்டமும் வேண்டாம்;நான் நிம்தியாக இருக்க விரும்புகிறேன் என்றால் பரலோகம் சென்று அங்குதான் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடியும். பூலோகத்தில் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளும், யுத்தங்களும், சவால்களும் இருக்கத்தான் செய்யும்.எல்லாருக்கும் பிரச்சனைகள் இருக்கிறது.கிறிஸ்தவனுக்கும் பிரச்சனைகள் இருக்கிறது.சிலவேளைகளில் மற்றவர்களுக்கு இல்லாத பிரச்சனைகளும் கிறிஸ்தவர்களுக்கு வரும்.ஏனென்றால் பிசாசானவன் அவிசுவாசியை எதிர்க்கிறதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக விசுவாசியைஎதிர்க்கிறான்.ஆகவே அப்படி பார்க்கப்போனால், நமக்கு ஒருவேளை அதிகமான பிரச்சனைகளும், சவால்களும் இருக்கலாம்.ஆனால் தேவன், "ஒவ்வொரு பிரச்சனையிலும், ஒவ்வொரு சவாலிலும் நான் உனக்கு வெற்றியைத் தர விரும்புகிறேன்" என்கிறார்.நாம் கிறிஸ்தவ வாழ்க்கையை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.இது என்னுடைய தத்துவமோ அல்லது சிலர் சொல்லுகிற தத்துவமோ அல்ல. கிறிஸ்தவ வாழ்க்கையில் பிரச்சனைகளும், போராட்டங்களும் இருக்கும்.நாம் அதன் மத்தியில் நின்று ஜெயிக்க வேண்டும்.அதற்கு தேவன் நமக்கு உதவி செய்வார் என்று வேதம் தெளிவாகப் போதிக்கிறது.இதை பலவிதங்களில் காண்பிக்கலாம்.

இன்றைக்கு யோசுவா புத்தகத்தின் மூலம் நான் இதை உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன்.யோசுவா புத்தகத்தில் நடக்கிற சம்பவங்களை கவனித்தோம் என்றால், அங்குகிறிஸ்தவ வாழ்க்கை என்றால் என்ன என்பதும்,அதன் மத்தியில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதும் தெளிவாகப் போதிக்கப்படுகிறது. அதை நீங்கள் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.ஏன் யோசுவாவின் புத்தகத்தை தெரிந்துகொள்கிறோம் என்றால், இதுஅந்த நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிறது.வேதாகமம் வெறும் சரித்திர புத்தகம் அல்ல. சிலர் பழைய ஏற்பாட்டை ஒரு சரித்திரம் போல வாசித்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்.அப்படி கிடையாது.உண்மைதான், இவையெல்லாம் உண்மையிலேயே இஸ்ரவேல் மக்களுக்கு நடந்தது.யோசுவா புத்தகத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கிற சம்பவங்கள் உண்மையிலே இஸ்ரவேல் மக்களுக்கு நடந்தது.அவர்கள் யுத்தங்களைசந்தித்தார்கள், வெற்றிபெற்றார்கள் என்பதெல்லாம் உண்மைதான்.ஆனால் வெறும் அவர்களுக்காக அது நடக்கவில்லை.அவர்களுக்கு நடந்ததை வைத்து தேவன் இன்றைக்கு நமக்கு ஒரு போதனையையே போதிக்கிறார், ஒரு பாடத்தையே கற்பிக்கிறார்.இதை நாம் அப்படி வாசித்து புரிந்துகொள்ள வேண்டும்.யோசுவாவினுடைய புத்தகத்தை கவனித்தோம் என்றால் ஒரு காரியம் நமக்கு நன்கு விளங்கும்.அது என்னவென்றால், யோசுவாவினுடைய தலைமையின் கீழ் இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையானதுஇயேசுவினுடைய தலைமையின் கீழ் சபை வாழுகிற வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறது.யோசுவாவின் புத்தகத்தையும், புதிய ஏற்பாட்டில் நம்முடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால் இரண்டுமே ஒன்றோடொன்று பொருந்தும்.உதாரணத்திற்கு இஸ்ரவேல் சபைக்கு பொருந்துகிறது.பழைய ஏற்பாட்டில் 'தேவஜனம்' என்றால் இஸ்ரவேல் மக்கள்.புதிய ஏற்பாட்டில் 'தேவஜனம்' என்றால் இயேசுவை ஆண்டவராக, இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிற மக்கள்.அதைத்தான் 'சபை' என்று சொல்லுகிறோம்.ஆக, பழைய ஏற்பாட்டில் நாம் இஸ்ரவேலைப் பற்றி வாசிக்கும்போது சபையைப் பற்றி அநேக காரியங்களை புரிந்துகொள்ளலாம்.சபை எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது, அது சரியாக இருக்க வேண்டிய விதத்தில் இருந்தால் எப்படி வாழலாம், அப்படி இல்லாமல் மாறிப்போய்விட்டால் எப்படி அதற்கேற்ற பலன்களை அனுபவிக்கலாம் என்று ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்.

அதைப்போலவே யோசுவாவைப் பார்த்தால் அவர் ஒரு நிழலாட்டமாக இருக்கிறார்.நம்முடைய நிழல் அப்படியே (exact-ஆக) நம்மைப்போல் இருக்கிறது என்று சொல்லமுடியாது.ஆனால் சிலவேளைகளில் நிழல் சரியாக விழும்.நாம் ஒரு விரலைக் காட்டினால் கூட அது நிழலில் விழும்.சிலவேளைகளில் நிழல் தோராயமாக விழும்.அதுபோலத்தான் தேவன் பழைய ஏற்பாட்டில் அநேகரை இயேசுவுக்கு நிழலாட்டமாக அனுப்புகிறார்.அவர்களைப் பார்த்தோம் என்றால் அவர்கள் ஓரளவிற்கு இயேசுவைப்போல இருக்கிறார்கள்.இதை இன்னொரு உதாரணத்தை வைத்து புரிந்துகொள்ளலாம்.original-க்கும் xerox copy-க்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஆம், இருக்கிறது.இந்தக் காலத்தில் நமக்கு colour xeroxவந்துவிட்டபடியால் வித்தியாசம் சற்று குறைந்துவிட்டது. ஆனால் colour xerox இல்லை, வெறும் black and white xerox-தான் இருக்கிறது என்று எண்ணிக்கொள்ளுங்கள். இப்போது original-க்கும் xerox copy-க்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஆம், இருக்கிறது.xerox copy ஓரளவிற்கு original போல இருக்கிறது, ஆனால் வித்தியாசமாகவும் இருக்கிறது. அதுபோலத்தான் தேவன் இயேசுவை அனுப்புவதற்கு முன் அதாவது, original-ஐ அனுப்புவதற்கு முன் நிறைய xerox copy-ஐ கொடுக்கிறார்.அவர்கள் யார் என்றால் மோசே, யோசுவா, தாவீது மற்றும் இன்னும் எத்தனையோ பேர் பழைய ஏற்பாட்டில் இருக்கிறார்கள்.தேவன் இயேசுவினுடைய pattern-இல் கொஞ்சம் கொஞ்சம் அனுப்புகிறார்.சிலxerox ஒழுங்காக வரும், சில xerox ஒழுங்காக வராது. அதுபோலத்தான் இவர்களும்.மோசேயினுடைய வாழ்க்கை ஒரு கொலையோடு தான் ஆரம்பிக்கிறது.அவர் அவசரத்தில் கொலைசெய்துவிட்டு ஓடிப்போகிறார்.நாற்பது வருஷம் வனாந்திரத்தில் இருந்துவிட்டு பிறகுதான்அவருடைய ஊழியம் ஆரம்பிக்கிறது.தாவீது இயேசுவினுடைய மிகவும் பிரமாதமான ஒரு நிழலாட்டமாக இருக்கிறார்.ஆனால் தாவீதிடம் கூட பல குறைகள் இருக்கிறது.அவர் கொலை செய்தார், விபச்சாரம் செய்தார்.இதையெல்லாம் பார்க்கும்போது அவர் இயேசுவோடு அதிகமாக பொருந்தவில்லை.ஆனால் யோசுவா இயேசுவிற்கு ரொம்பவே பொருந்துகிறார்.பழைய ஏற்பாட்டில் யோசுவாவைப்போல கிட்டத்தட்ட perfect character-ஐ கண்டுபிடிப்பது கடினம்.யோசுவாவைப் பற்றி நிறைய குறைகளை வேதத்தில் வாசிக்கமாட்டோம்.ஏதோ ஒரு சில இடங்களில் தான் கொஞ்சம் குறைகளைக் காணலாம்.யோசுவா இயேசுவிற்கு நிழலாட்டமாக இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், யோசுவாவுக்கும் இயேசுவுக்கும் ஒரே பெயர் இருக்கிறது."'யோசுவா', 'இயேசு' என்று வேறு வேறு பெயர்தானே இருக்கிறது" என்று நீங்கள் கேட்கலாம்.கிடையாது!தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தான் அவர்கள் பெயர்கள் வித்தியாசமாக இருக்கிறது.ஆனால் கிரேக்க, எபிரெய மொழிகளில் வித்தியாசமே இருக்காது.உதாரணத்திற்கு நான் யோசுவாவின் பெயரை கிரேக்க வேதாகமத்தில் யோசுவா 1-ஆம் அதிகாரத்திலிருந்து வாசித்தேன் என்றால் அங்கு'யேசூஸ்' என்று இருக்கும்.அதேவேளையில் இயேசுவின் பெயரை மத்தேயு 1-ஆம் அதிகாரத்திலிருந்து வாசித்தேன் என்றால் அங்கும் 'யேசூஸ்' என்று இருக்கும்.ஏனென்றால் யோசுவாவிற்கு எபிரெய மொழியில் 'யெகோஷுவா' என்றுதான் பெயர்.இயேசுவிற்கும் எபிரெய மொழியில் 'யெகோஷுவா'என்றுதான் பெயர்.அந்த 'யெகோஷுவா' என்ற பெயரைத்தான் இயேசுவின் காலத்திற்குள் சுருக்கி'யெஷுவா' என்று சொல்லிவிட்டார்கள்.ஆனால் உண்மையில் இரண்டு பேருக்கும் ஒரே பெயர்தான்.இதெல்லாம் நமக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.ஆனால் எபிரெய, கிரேக்க மக்களுக்குஎதுவும் சொல்லவே தேவையில்லை.இரண்டு பேருக்கும் ஒரே பெயர் என்றும், அதுமட்டுமல்லாமல் இருவரின் பெயருக்கும் ஒரே அர்த்தம் என்றும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அந்த பெயரின் அர்த்தம் என்ன?'யெகோஷுவா' என்ற பெயருக்கு அர்த்தம் என்னவென்றால், 'யேகோவா இரட்சிப்பார்', 'யேகோவாவே இரட்சிப்பு' என்பது.இயேசுவினுடைய பெயர் கூட இரட்சிப்போடு தான் சம்பந்தப்பட்டிருக்கிறது.தேவதூதன் யோசேப்பிடம், "... அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்"(மத்தேயு 1:21) என்கிறான்.இப்படி யோசுவாவிற்கும் இயேசுவுக்கும் பெயர் ஒரே மாதிரி இருக்கிறது; இருவரின் பெயரின் அர்த்தமும் ஒரே மாதிரி இருக்கிறது.

மேலும் அவர்கள் இருவருடைய பணியும்(role) ஒரே மாதிரி இருக்கிறது.அவர்கள் இருவரும் தலைவர்களாய் இருந்தார்கள்.யோசுவா இஸ்ரவேல் ஜனங்களைவழிநடத்தினார்.இயேசுவும் நம்முடைய இரட்சிப்பின் அதிபதியாய் இருக்கிறார்; நம்மை வழிநடத்துகிறார்.அதுமட்டுமல்லாமல், அவர்களுடைய பொறுப்பும் ஒரே மாதிரி இருக்கிறது.இஸ்ரவேல் மக்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் கொண்டுபோய், அவர்கள் அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும்.அந்த விதத்தில் அவர்களை வழிநடத்த வேண்டும் என்பதுதான் யோசுவாவிற்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு.அதுபோலத்தான் இயேசுவுக்கும்.அவர் வெறும் நம்முடைய இரட்சகர் மட்டும் அல்ல, அவர் நம்முடைய மேய்ப்பராகவும் இருக்கிறார்.இயேசு மோசே செய்வதையும் செய்கிறார்.மோசேயினுடைய பணியும் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.மோசே ஜனங்களை எகிப்திலிருந்து விடுவித்து வெளியே கொண்டுவருகிறார்.அந்த பணியும் இயேசுவுக்கு இருக்கிறது.நம்மை பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கிறார், நம்மை இரட்சிப்புக்குள் நடத்துகிறார்.அதெல்லாம் தான் அங்கு நிழலாட்டமாக இருக்கிறது.ஆனால் மோசேயினுடைய பணி முடிவடைந்துவிட்டது.அவன் வனாந்திரத்திலேயே மரித்துப்போய் விட்டான்.யோசுவாவினுடைய பணி ஜனங்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் கொண்டுசெல்வது.இயேசு நம்மை விடுவிக்கிறார், இரட்சிக்கிறார்.ஆனால் மோசேயைப் போல அப்படியே போய்விடவில்லை.அவர் யோசுவாவினுடைய பணியையும் எடுத்துக்கொள்கிறார்.யோசுவாவைப் போல நம்மை வழிநடத்தி, நம்முடைய வாக்குப்பண்ணப்பட்ட கானான் தேசத்திற்கு நம்மை கொண்டுபோய்,அங்கு இருக்கிற காரியங்களை சொந்தமாக்கிக்கொள்ள உதவி செய்கிறார். அவர் அந்த விதத்தில் வழிநடத்துகிறார்.ஆக, இஸ்ரவேல் சபைக்கு பொருந்துகிறது.யோசுவா இயேசுவுக்குப் பொருந்துகிறார்.அப்படியென்றால் வாக்குப்பண்ணப்பட்ட தேசம் எதோடு பொருந்துகிறது?

பொதுவாக ஜனங்கள், "அது பரலோகத்தோடு பொருந்துகிறது" என்று சொல்லுவார்கள்.'கானான் தேசம்' என்று சொன்னாலே'பரம கானான்' (பரலோகம்)என்றும்,'பாலும் தேனும் ஓடுகிற தேசம்' என்று சொன்னாலே அது 'பரலோகம்' என்றும் சொல்லுவார்கள்.அநேக பாடல்களும் அப்படி இருக்கிறது.ஜனங்களுடைய எண்ணமே அப்படிப் போய் விட்டது.யோர்தான் நதியைக் கடந்து,வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் போவதை செத்து, பரலோகம் போவதாக எடுத்துக்கொள்கிறார்கள்.இந்த நிழலாட்டம் (typology) சரியானதா?கானான் தேசம்என்பது பரலோகம் என்று சொல்லுவது சரியா?ஜனங்கள் அப்படிச் சொல்லுகிற காரியங்களெல்லாம் சரியாக பொருந்துகிறதா?நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அது பொருந்தாது.ஏனென்றால், இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடந்த பிறகு எல்லா வேலையும் முடிந்து விட்டது என்றில்லை.அவர்களுக்கு வேலையே அப்போதுதான் ஆரம்பித்தது.இதற்கு முன்புதான் வனாந்திரத்தில் எந்த வேலையும் இல்லாமல் வெறுமனே சுற்றி அலைந்தார்கள்.அங்குஅவர்களுக்குத் தேவைப்படுகிற நேரத்திலே சாப்பாடு, தண்ணீர் கிடைக்கிறது;அவர்களுக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் சந்திக்கப்படுகிறது.அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.ஆனால் என்றைக்கு அவர்கள் யோர்தான் நதியை கடந்துபோனார்களோ, அன்றைக்குத்தான் பெரிய வேலையே ஆரம்பித்தது.யுத்தத்திற்கு மேல் யுத்தம் வருகிறது.யோசுவா 3-ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியை கடந்துபோகிறார்கள்.6-ஆம் அதிகாரத்தில் எரிகோ பட்டணத்தை சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.7-ஆம் அதிகாரத்தில் ஆயி பட்டணத்தாரோடு யுத்தம் செய்து தோற்கிறார்கள்.8-ஆம் அதிகாரத்தில் திரும்ப அதே பட்டணத்தாரோடு யுத்தம் செய்து ஜெயிக்கிறார்கள்.10-ஆம் அதிகாரத்தில் ஐந்து ராஜாக்கள் யோசுவாவை எதிர்த்து வருகிறார்கள்.ஆக, இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்து,கானான் தேசத்திற்குள் நுழைந்த பிறகுதான் யுத்தமே ஆரம்பித்தது.பரலோகத்தில் யுத்தம் இருக்கிறதா?பரலோகத்தில் எதிரிகள் இருக்கிறார்களா?கிடையாது.ஆனால் ஜனங்கள்,'கானான் தேசம்' என்றால் 'பரலோகம்'என்று எடுத்துக்கொள்கிறார்கள்.இது பொருந்தவே இல்லை.கானான் தேசத்திற்குள் யுத்தம் இருக்கிறது, எதிரிகள் இருக்கிறார்கள்.அது யுத்தம் நிறைந்த தேசமாக இருக்கிறது.அடுத்தடுத்து யுத்தங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

யோசுவா 12-ஆம் அதிகாரத்தை வாசித்தோம் என்றால், யோசுவா எவ்வளவு யுத்தம் பண்ணினான் என்று சுருக்கமான சரித்திரம்(short history) போன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.அங்கு, அவன் தன் வாழ்நாளில் 31 ராஜாக்களுக்கு எதிராக போராடி ஜெயித்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.பரலோகத்தில் 31 எதிரிகள் இருக்கிறார்களா?கிடையாது.பரலோகத்தில் இளைப்பாறுதல் தான் உண்டு.அங்கு நமக்கு போராட்டம் இல்லை.அங்கு எந்தவிதமான சவாலோ, எதிர்ப்போ கிடையாது.அங்கு நாம் எதையும் சொந்தமாக்கிக்கொள்ள தேவை கிடையாது.ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்குள் போன பிறகுஒவ்வொரு அங்குல(inch) இடத்தையும் சண்டை போட்டுத்தான் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று (They had to fight for every inch of the land). கர்த்தர், "நான் தேசத்தை உனக்குக் கொடுத்துவிட்டேன்.நீ அங்கு சென்று எதிரிகளை வெளியேற்று.நான் உன்னோடு இருக்கிறேன்; உனக்கு உதவி செய்கிறேன்.நீ உன் விசுவாசத்தைப் பயன்படுத்தி, அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்" என்று சொல்லுகிறார்.கானான் தேசம் என்பது பரலோகம் அல்ல. அதுபோன்று அநேக பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம்.ஆனால் அது வேதத்தின்படியே சரியல்ல. பாடல்களை பாடிக்கொள்ளுங்கள், ஆனால் அது வேதத்தின்படி சரி என்று எண்ணிக்கொள்ளாதீர்கள்.ஏனென்றால் அது சரி என்று எண்ணினால், யோசுவா புத்தகத்தையே தவறாக புரிந்துகொள்வோம்.பிறகு அது நமக்கு கற்பிக்கிற பாடத்தை நாம் எடுத்துக்கொள்ளமாட்டோம்,அதிலிருந்து நாம் பயனடையமாட்டோம்.

அதை எப்படி சரியாகஎடுத்துக்கொள்வது?இஸ்ரவேல் ஜனங்கள் எப்படி கானான் தேசத்திற்குள் சென்றார்களோ, அதுபோல தேவன் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்காக வைத்திருக்கிற அந்த மேலான வாழ்க்கைக்குள் நாம் போகிறோம். அப்படித்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தார்கள், அதுபோலத்தான் நாமும் இரட்சிக்கப்பட்டோம்.தேவன் அவர்களை வனாந்திரத்திலே வழிநடத்தி, சில பாடங்களை கற்பிக்க விரும்புகிறார்.அவர்கள் சிவந்த சமுத்திரத்தை கடந்துவந்தவுடன் மூன்று நாட்களாக அவர்களுக்கு தண்ணீர் இல்லை.அவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்.அப்போது தேவன் கசப்பான தண்ணீரை மதுரமாக மாற்றிக் கொடுக்கிறார்.அவர்களுடைய அடிப்படையான தேவையை ஏராளம் தாராளமாய் சந்திக்கிறார்.அடுத்ததாக இஸ்ரவேல் ஜனங்கள் 'ஏலீம்' என்கிற இடத்திற்கு வருகிறார்கள்.அங்கு ஏராளமாய் தண்ணீர் இருக்கிறது.அடுத்து யாத்திராகமம் 16-ஆம் அதிகாரத்தில் அவர்களுக்கு சாப்பாடு இல்லை.தேவன் வானத்திலிருந்து மன்னாவைக் கொட்டுகிறார்.பிறகு இறைச்சியும் தருகிறார்.அடுத்த அதிகாரத்தில் ஜனங்களுக்கு ஆலோசனைதேவைப்படுகிறது.ஜனங்கள் மோசேயினிடத்தில் வருகிறார்கள்.மோசேயினால் எல்லாரையும் கையாள(handle பண்ண) முடியவில்லை.ஏனென்றால் இலட்சக்கணக்கான ஜனங்கள் இருக்கிறார்கள்.அப்போது தேவன் ஒரு யோசனையைக்(idea) கொடுக்கிறார்."எழுபது மூப்பர்களை நியமி, ஜனங்கள் அவர்களிடம் ஆலோசனைக்குச் செல்லட்டும்" என்கிறார்.'ஆலோசனை' என்கிற தேவையைக்கூட தேவன் சந்திக்கிறார்.அவர் நம்முடைய அடிப்படை தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை காண்பிக்கிறார்."நீ விசுவாசியாகி விட்டாயா?இனிமேல் உன் தேவைகளை நான் சந்திப்பேன்.அது அடிப்படை தேவையாக இருக்கட்டும், ஆலோசனை போன்ற தேவையாக இருக்கட்டும்.அதை நான் சந்திக்கிறேன்" என்கிறார்.அப்படியே வாசித்துக்கொண்டே சென்றால் யாத்திராகமம் 20-ஆம் அதிகாரத்தில் தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுக்கிறார்.நியாயப்பிரமாணம் என்றால் என்ன?அது தேவனுடைய ஞானம்.தேவன், உன்னுடைய வாழ்க்கையை வாழுவதற்கு என்னுடைய ஞானத்தைக் கொடுக்கிறேன்; நீ இதின்படி வாழ்ந்தால் வெற்றிகரமாக வாழ முடியும் என்கிறார்.
இதையெல்லாம் சொல்லித்தந்து விட்டு பிறகுதான் கானான் தேசத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகிறார். ஏனென்றால் கானான் தேசம் என்பது இவர்கள் கற்றுக்கொண்டதை வைத்து தேவன் அவர்களுக்காக வைத்திருக்கிற மேலான நோக்கங்களையும், மேலான திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஒரு படமாக இருக்கிறது. விசுவாசிகளாகிய நாம் நம்முடைய தேவையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது வாழ்க்கையே கிடையாது.தேவன் நமக்குச் சொல்ல விரும்புகிற முதல் காரியம் என்னவென்றால், நான் உன் தேவையை சந்திக்க விரும்புகிறேன் என்பதுதான்.அவர் நம்முடைய தேவையை அருமையாய், ஏராளம் தாராளமாய் சந்திப்பார்,ஆலோசனையும் தருவார்.ஆனால் அதோடு முடிவடைந்து விடவில்லை.தேவன்,"வாழ்க்கை என்றால் அதுமட்டும் கிடையாது.நீ இதையெல்லாம் கற்றுக்கொண்டாயா?இப்போது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.நான் உனக்காக பெரிய காரியங்களை வைத்திருக்கிறேன்.இந்த உலகத்தை பிசாசானவன் எடுத்துக்கொண்டான்.இப்போது அவன் கையிலிருந்து நீ திரும்ப எடுக்க வேண்டும்" என்று சொல்லி, அதற்காக நம்மை கானான் தேசத்திற்குள் கொண்டுசென்று, "அங்கு இருக்கிற எதிரிகளை விரட்டி விட்டு அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்" என்று சொல்லுகிறார். ஆக, அது எப்படி வருகிறது என்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.இதிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால், கானான் தேசம் என்பது பரலோகம் அல்ல. தேவன் நமக்காக வைத்திருக்கிற மேலான நோக்கம், திட்டம், மேலான வாழ்க்கை, அதில் இருக்கிற ஆசீர்வாதங்கள், அதில் இருக்கிற வெற்றிகள் இவற்றின் பெயர்தான் கானான் தேசம். இதைத்தான் பழைய ஏற்பாட்டில் 'கானான் தேசம்' என்று நாம் பார்க்கிறோம்.

அந்த தேசத்திற்குள் அநேக யுத்தங்கள் இருக்கின்றன.முன்னே இருந்ததைக் காட்டிலும் இப்போதுதான் அதிகமான யுத்தம் இருக்கிறது.யோர்தான் நதியைக் கடப்பதே பெரிய விஷயம்.அதன்பிறகு எரிகோ பட்டணம், அதன்பிறகு ஆயி பட்டணம், அதன்பிறகு ஐந்து ராஜாக்கள் யோசுவாவை எதிர்த்து வருகிறார்கள்.அதன்பிறகு 31 ராஜாக்கள் அவனுக்கு எதிராக போராடினார்கள்.அவன் தன் வாழ்நாள் முழுவதும் யுத்தம் செய்தான்.ஆனால் அங்கு ஒரு காரியம் விளங்குகிறது.அது என்னவென்றால், ஒவ்வொரு யுத்தத்திலும் தேவன் அவனுக்கு ஜெயத்தை தருகிறார்.ஒருவிதத்தில் பார்க்கப்போனால் அவனுக்கு ஓய்வு என்பதே அவ்வளவாக இல்லை.ஆங்காங்குஓய்வு வருகிறது, அதன்பிறகு யுத்தம் செய்கிறான்.ஆனால் ஒவ்வொரு யுத்தத்திலும் தேவன் அவனுக்கு ஜெயத்தை தருகிறார்.யோசுவா ஒரே ஒருமுறைதான் தோல்வியடைந்தான்.யோசுவா 7-ஆம் அதிகாரத்தில் ஆயி பட்டணத்தை எதிர்த்துப் போகும்போது அவன் தோற்கிறான்.ஆனால் அடுத்த அதிகாரத்தில் அதே பட்டணத்திற்கு இரண்டாவது முறை சென்று போராடி ஜெயித்துவிட்டான்.ஒவ்வொரு யுத்தத்தையும், சவாலையும் மேற்கொள்ளக்கூடிய கிருபையை தேவன் அவனுக்குத் தருகிறார்.100% வெற்றியைத் தருகிறார்.இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் யுத்தங்கள், சவால்கள், பிரச்சனைகள் இருக்கும்.ஆனால் அவை ஒவ்வொன்றிலும் நான் உனக்கு ஜெயத்தை தர விரும்புகிறேன் என்று தேவன் போதிக்கிறார்.ஒரு நாடகம்(drama)போல நமக்கு நடத்திக் காண்பிக்கிறார்.இன்றைக்கு நாம் யோசுவா புத்தகத்தை அப்படித்தான் வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டும்.அவை என்றைக்கோ, யாருக்கோ நடந்த சம்பவங்கள் கிடையாது.தேவன் அதன் மூலம் நமக்கு சில காரியங்களை போதிக்க விரும்புகிறார்.அது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் ஜெயம்தான் நம்முடையது என்பது.

இன்றைக்கு நாம்பல யுத்தங்களை சந்தித்துக் கொண்டிருக்கலாம்.தேவனுடைய நோக்கத்தையும், திட்டத்தையும் செய்யும்போது பல எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.நாம் யுத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறோம் அல்லது கூடிய சீக்கிரத்தில் யுத்தம் வரப்போகிறது.இந்த வாழ்க்கையில் யுத்தமே இல்லாத வாழ்க்கையை நாம் வாழ முடியாது.யுத்தமே இல்லையென்றால் நாம் பெரிதாக எதையும் செய்ய முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்.சிலர், "எனக்கும் என் குடும்பத்திற்கும் போதுமானது இருக்கிறது.நான் நன்றாக இருக்கிறேன், என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?" என்று சொல்லுகிறார்கள்.தேவன், "அங்கு எதிரி வைத்திருக்கிற இடத்தை நீ போய் எடுத்துக்கொள்" என்கிறார்.ஆகவே,"எனக்கு யுத்தமே இல்லை" என்று நீங்கள் சொல்லுவீர்களானால், உங்களை யுத்தத்திற்கு ஆயத்தப்படுத்துவதுதான் இந்தச் செய்தி."ஆண்டவரே, நான் என்ன யுத்தம் செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்.இந்த உலகத்தில் நான் எப்படி உம்முடைய ராஜ்யத்தைபரப்ப (spread) வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்" என்றுநாம் கேட்க வேண்டும்.

தேவன் முதலில் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்திலேயே வைத்து சுற்ற வைக்கிறார்.பிறகு தேசத்திற்குள் சென்று மற்ற இடங்களை எடுக்க வைக்கிறார்.அதாவது, மனிதன் பாவத்தில் விழுந்ததின் மூலமாய் எல்லாவற்றையும் பிசாசினிடத்தில் இழந்துவிட்டான்.இன்றைக்கு வர்த்தகமானது (business) உலகம் கையில் போய்விட்டது.பெரும்பான்மையாய் பார்த்தோம் என்றால், பிசாசானவன் தான் வர்த்தகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான்.மருத்துவத்துறையிலும் அப்படித்தான்.தேவன் நம்மிடம், "நீ அங்கெல்லாம் போய் சொந்தமாக்கிக்கொள்.நான் உன்னை வர்த்தகம் பண்ண அனுப்பப்போகிறேன்.நீ மருத்துவத்துறைக்குச் செல்ல வேண்டும்" என்கிறார்.தேவன் சிலரை சினிமா துறைக்குக்கூட அனுப்புவார்.அதை எடுத்து தேவனுக்கென்று பயன்படுத்தச் செய்வார்.கிறிஸ்தவ ஜனங்கள் இப்படி யோசிப்பதில்லை.இதுபோல ஒரு மேலான குறிக்கோள் இருந்தால்தான் நாம் போகும்போது அநேக எதிர்ப்பு இருக்கும்.அதற்குத்தான் யோசுவா புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார்.எதிர்ப்பு வரும்போது நீ எப்படி வெற்றி பெறுவாய் என்பதை நான் உனக்கு காண்பிக்கிறேன் என்கிறார்.உங்களுக்கு ஒரு மேலான குறிக்கோள் இருக்கிறதா?தேவ ராஜ்யத்தின் எல்லைகளை இந்த பூலோகத்தில் விரிவாக்க வேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா?அப்பேர்ப்பட்ட விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா?நீங்கள் எந்த துறையில் இருக்கிறீர்கள்?என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?அதிலே தேவனுடைய ராஜ்யம் இன்னும் அதிகமாய் வர வேண்டும் என்றும்,நீங்கள் அதை தேவன் பக்கம் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?அப்படி இல்லையென்றால், "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் எனக்கு வெளிப்படுத்தும்"என்று ஜெபிக்க வேண்டும்.அப்போது அவர் நமக்கு வெளிப்படுத்துவார்.அப்படி நாம் செல்வதுதான் கானான் தேசத்திற்குள் செல்வது போன்றது.அதுதான் அவர் நமக்காக வைத்திருக்கிற மேலான நோக்கத்தை நாடுவது போன்றது.அப்படிச் செல்லும்போது யுத்தங்களும், எதிர்ப்புகளும் அநேகம் இருக்கும்.ஆனால் தேவன், "நீ போ, நான் உன்னை அனுப்புகிறேன்.நான் உனக்கு ஜெயத்தை தருகிறேன்" என்கிறார்.

அவர் ஒவ்வொரு முறையும் நமக்குஜெயத்தை தருகிறார்.சற்று யோசித்துப்பாருங்கள்.இஸ்ரவேல் ஜனங்களுக்கு நடந்த இந்த காரியங்கள் எல்லாம் தற்செயலாக நடக்கவில்லை.தேவன் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறார்.நான் உனக்கு ஜெயத்தைத்தான் வைத்திருக்கிறேன் என்பதை காண்பிக்கிறார்."நீ யுத்தம் செய், நான் ஒவ்வொரு முறையும் உனக்கு ஜெயத்தை தருகிறேன்" என்கிறார்.ஆகவே 100% வெற்றி என்பதுதான் தேவனுடைய சித்தம்.இதைப் பற்றி நாம் சந்தேகப்படவே கூடாது.சிலர், "எல்லாரும் பாதிக்குப் பாதி வெற்றியிலும், தோல்வியிலும் தானே இருக்கிறார்கள்.ஆனால் நீங்கள், 100% வெற்றி என்று சொல்லுகிறீர்களே" என்றுநினைக்கலாம்.ஒருவேளை ஜனங்கள் 50% வெற்றி,50% தோல்வி அல்லது 80% வெற்றி, 20% தோல்விஎன்கிற நிலையில் இருக்கலாம். ஆனால் 100% வெற்றி என்பதுதான் தேவனுடைய சித்தம்."நாம் பூரணர்களாய் இல்லையே, நாம் எப்படி 100% வெற்றி பெறுவது?இது மிகவும் கடினமாயிற்றே, இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?"என்று நீங்கள் கேட்கலாம்.ஆனால் 100% வெற்றி பெறுவதுதான் தேவனுடைய சித்தம்.இது எப்படி இருக்கிறதென்றால், 100% யாராவது பாவம் செய்யாமல் வாழுகிறார்களா?கிடையாது, எல்லாருமே பாவம் செய்கிறார்கள்.ஆனால் அதை வைத்துக்கொண்டு, சிலவேளை நாம் பாவம் செய்வதுதான் தேவனுடைய சித்தம் என்று சொல்ல முடியுமா?அப்படிச் சொல்லவே முடியாது.தேவனுடைய சித்தம் என்று வரும்போது நாம் ஒருமுறை கூட, ஒரு ஆள் கூட பாவம் செய்யக்கூடாது என்றுதான் தேவன் விரும்புகிறார்.ஆனால் நிஜத்தில் எல்லாருமே பாவம் செய்கிறார்கள்.சில நேரங்களில் அதிகமாகவே பாவம் செய்கிறார்கள்.ஆனால் அது தேவனுடைய சித்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், தேவனுடைய சித்தத்தில் நமக்கு சந்தேகம் வரக்கூடாது.சிலவேளைகளில் வாழ்க்கையில் தோல்விகள் வரும்.அவை உங்களுக்கு வரத்தேவையில்லை.ஆனால் அவை வந்திருக்கலாம்.அதை வைத்துக்கொண்டு ஒருவேளை 100% வெற்றி தேவனுடைய சித்தமல்ல என்று நாம் தீர்மானித்துவிட முடியாது.ஏனென்றால் தேவனுடைய சித்தத்தை சந்தேகப்பட ஆரம்பித்து விட்டோம் என்றால் பிறகு அங்கு விசுவாசம் அடிபடும்.

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதில் தான் விசுவாசம் ஆரம்பமாகிறது(Faith begins where the will of God known). தேவனுடைய சித்தத்தைக் குறித்த நிச்சயத்தில் தான் விசுவாசம் நிற்கிறது (Faith stands where the will of God sure). அங்கு நாம் அலசடி பட்டால் விசுவாசம் போய்விடும்.தேவனுடைய சித்தத்தைப் பற்றிய சந்தேகங்கள் வரும்போது நாம் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.ஒருவேளை இந்த முறை நான் தோல்வியடைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று நம் மனதில் ஒரு எண்ணம் வரலாம்.பிசாசானவனோ அல்லது நம்முடைய உறவினரோ அல்லது நம்முடைய நண்பர்களோ அதைக் கொண்டுவரலாம்.நாம் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.அச்சமயத்தில் நாம் அதை பலமாக (strong) எதிர்த்து, "100% வெற்றி தான் தேவனுடைய சித்தம்.நான் இதிலேயே நிற்பேன், என்ன நடந்தாலும் நான் தேவனுடைய சித்தத்தை சந்தேகப்பட மாட்டேன்" என்று நாம் சொல்லும்போது நம்முடைய விசுவாசத்தில் உறுதியாக நிற்கிறோம். அப்படி நிற்கும்போது நாம் ஜெயிக்கிற சதவிகிதம் (percentage) அதிகமாக ஆரம்பித்துவிடும்.நாம் 100 முறை தோல்வியுற்றாலும் பரவாயில்லை.அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. ஆனால் 100% வெற்றிதான் தேவனுடைய சித்தம்என்பதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.உங்களுடைய வெற்றியின் சதவிகிதம் மாறிவிடும்.கூடிய சீக்கிரத்தில் 100% வெற்றியின் அருகே போய்க் கொண்டிருப்பீர்கள்.இதை எப்படி நான் சொல்லமுடியும் என்றால், இது சாத்தியம் என்பதை தேவன் யோசுவாவின் புத்தகத்தில் நடந்த சம்பவங்களின் மூலமாய் காண்பிக்கிறார்.நான் முன்பே சொன்னது போல யோசுவாவிற்கு ஒரே ஒருமுறைதான் தோல்வி உண்டானது.அவன் 31 ராஜாக்களோடு போரிட்டான் என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.அதில் ஒருமுறைதான் தோல்வி அடைந்தான்.அதில்கூட இரண்டாவது முறை சென்று வெற்றி அடைந்தான்.அவன் ஒருமுறை தோல்வி அடைந்ததைக்கூட தேவனுடைய சித்தம் என்று சொல்லவே முடியாது.அதாவது, அவன் தோல்வி அடைவது தேவனுடைய சித்தம் என்றும், தேவன் அவனுக்கு அந்த நேரத்தில் தோல்வியை வைத்திருந்தார் என்றும் சொல்லவே முடியாது.

அந்த தோல்வி யோசுவா 7-ஆம் அதிகாரத்தில் வருகிறது.அவன் ஆயி பட்டணத்தை எதிர்த்துப் போகிறான்.அதற்கு முன் 6-ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாய் முரட்டாட்டம் செய்தார்கள்.அவர்கள் எரிகோ பட்டணத்தை சொந்தமாக்கிக் கொள்ளும்போது 'இப்படிச் செய்யக்கூடாது' என்று குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை(instructions) தேவன் அவர்களுக்கு கொடுக்கிறார்.அவர்கள் அதையெல்லாம் கேட்டும் அவர்களில் ஒருவன் வேண்டுமென்றே தேவன் எதைச் செய்யக்கூடாது என்று சொன்னாரோ அதைச் செய்துவிட்டான்.அப்பேர்ப்பட்ட முரட்டாட்டமான ஒரு பாவத்தை செய்ததினால்தான் அவர்கள்தோல்வி அடைந்தார்கள்.அந்த தோல்விக்கும் தேவனுடைய சித்தத்திற்கும் சம்பந்தமே கிடையாது.தேவன் வெற்றியைத்தான் தர விரும்புகிறார்; வெற்றிக்கான வழியை சொல்லித்தருகிறார்.'எனக்குக் கீழ்ப்படி' என்கிறார்.ஆனால் அவன் கீழ்ப்படியாமல் முரட்டாட்டம் செய்து தோல்வியை அவனே எடுத்துக்கொள்கிறான்.ஆகவே அது தேவனுடைய சித்தமே கிடையாது.ஆனால் மற்ற எல்லா இடங்களிலும் ஒருமுறை கூட யோசுவா தோல்வி அடையவில்லை.அவன் ஒருமுறை வஞ்சிக்கப்படுகிறான்.9-ஆம் அதிகாரத்தில் அதைநாம் வாசிக்கிறோம்.எதிரி தேசத்தார் யோசுவாவை வஞ்சிக்கிறார்கள்.அதுகூட தேவனுடைய சித்தம் அல்ல. அங்கு என்ன நடக்கிறது என்று வாசித்துப் பாருங்கள்.யோசுவா தேவனுடைய ஆலோசனையை நாடாமல் சில காரியங்களை செய்துவிடுகிறான்.நான் முன்பு சொன்ன black &white xerox போன்று.அவன் இயேசுவைப் போல பூரணமான நபர் (perfect) அல்ல. அவனிடம் சில குறைகள் இருக்கிறது.அதை நீங்கள் 9-ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம்.அவன் சற்று அவசரப்பட்டு,தேவனுடைய ஆலோசனையை நாடாமல், சில காரியங்களைச் செய்ததினால் வஞ்சிக்கப்படுகிறான்.அதை தோல்வி என்று சொல்ல முடியாது, கொஞ்சம் ஏமாற்றப்படுகிறான்.அவன் ஒருமுறை தோல்வி அடைந்தான், ஒருமுறை ஏமாற்றப்பட்டான்.அவனுடைய தலைமையின் கீழ்கிட்டத்தட்ட 100% வெற்றி உண்டானது.நம்முடைய யோசுவா யார்?இயேசுதான் நம்முடைய யோசுவா.இயேசுவை காண்பிப்பதற்காகத்தான் அவன் (யோசுவா)பழைய ஏற்பாட்டில் இருக்கிறான்.அவனுடைய நோக்கமே அதுதான்.இங்கு தேவன் நமக்கு என்ன சொல்ல வருகிறார்? நான் யோசுவாவைக் கொண்டேஇஸ்ரவேலர்களுக்கு கிட்டத்தட்ட 100% வெற்றியைக் கொடுத்தேன் என்றால், உங்களை வழிநடத்துகிற இயேசுவைக் கொண்டுஎன்னால் உங்களுக்கு 100% வெற்றியைக் கொடுக்க முடியும். நீ என்னை நம்பு, என்னால் உன்னை வெற்றிகரமாக வாழ வைக்க முடியும்.இதுதான் என்னுடைய சித்தம் என்கிறார்.

யோசுவா புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு, அடுத்த புத்தகமான நியாயாதிபதிகள் புத்தகத்திற்குச் சென்றீர்கள் என்றால், அது மிகவும் வித்தியாசமான புத்தகம்.அங்கு 50% வெற்றியையும், 50% தோல்வியையும் பார்க்கலாம்.யோசுவா மரித்துப் போகிறான்.இஸ்ரவேல் மக்கள் தேவனை மறந்து, அவருக்கு விரோதமாக காரியங்களைச் செய்து, அந்நிய தேவர்களைப் பின்பற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.இப்படியெல்லாம் செய்ததினால் ஒருவிதத்தில் கிட்டத்தட்ட அவர்கள் முன்பு எகிப்தில் அடிமைகளாய் இருந்ததுபோன்றநிலைக்குப் போய்விட்டார்கள்.அதாவது, சாப்பாடு இல்லை, தண்ணீர் இல்லை, தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது.யோசுவா புத்தகத்தில் பாலும் தேனும் ஓடுகிறது.ஆனால் நியாயாதிபதிகள் புத்தகத்தில் அடிப்படை தேவைகள் கூட அவர்களுக்கு சந்திக்கப்படவில்லை.எந்த அளவிற்கு என்றால், அவர்களுடைய எதிரி ராஜா அவர்களை அடிமைகள் போல நடத்தி, அவர்கள் மீது வரி (tax) போட்டு ஒடுக்க ஆரம்பித்தான்.நியாயாதிபதிகள் புத்தகத்தில் இதை நாம் திரும்பத் திரும்ப பார்க்கலாம்.அவர்கள் பல வருஷங்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.பிறகு அவர்கள் தேவனை நோக்கி, "ஆண்டவரே, எங்களுக்கு உதவி செய்யும்"என்று கூப்பிடுகிறார்கள்.தேவன் ஒரு நியாயாதிபதியை (விடுவிக்கிற மனுஷனை) எழுப்புகிறார்.அதில் முதலாவது ஓத்னியேல் என்பவனை எழுப்புகிறார்.அவன் தேவ ஜனத்தை வெற்றிக்குள் நடத்துகிறான்.அவனுடைய தலைமைக்குக் கீழ் இஸ்ரவேல் மக்களுக்கு40 வருஷம் வெற்றியும் செழிப்பும் இருந்தது.அவன் மரித்த பிறகு திரும்பவும் பழைய கதை ஆரம்பிக்கிறது.அவர்கள் தேவனை மறந்துவிடுகிறார்கள்.அவருக்கு விரோதமாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.மற்ற தேவர்களுக்குப் பின்னால் போகிறார்கள்.இதனால் திரும்பவும் வாழ்க்கை தோல்வி அடைகிறது.அவர்கள் தோல்விக்குள்ளும், இல்லாமைக்குள்ளும் போய்விடுகிறார்கள்.18 வருஷம் இன்னொரு ராஜாவுக்கு கிட்டத்தட்ட அடிமைகள் போல வாழ்ந்தார்கள்.மறுபடியும் அவர்கள் தேவனை நோக்கி, "ஆண்டவரே, எங்களுக்கு உதவி செய்யும்" என்று கூப்பிடுகிறார்கள்.தேவன் அவர்களுக்கு இரங்கிஏகூத் என்பவனை எழுப்புகிறார்.அவன் மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு 80 வருஷம் நல்ல வெற்றியும் செழிப்பும் இருந்தது.அவன் மரித்த பிறகு திரும்பவும் அவர்கள் தேவனை மறந்து, அவருக்குக் கீழ்ப்படியாமல்,மற்ற தேவர்களை நாடி, முரட்டாட்டம் பண்ணுகிறார்கள்.20 வருஷம் இன்னொரு ராஜாவுக்குக் கீழே அடிமைகள் போல் வாழுகிறார்கள்.மறுபடியும் அவர்கள் தேவனை நோக்கி, "ஆண்டவரே, எங்களுக்கு உதவி செய்யும்" என்று கூப்பிடுகிறார்கள்.அப்போது தேவன் தெபொராளையும், பாராக்கையும் எழுப்புகிறார்.இவர்கள் மூலமாக 40 வருஷம் எல்லாம் நன்றாக நடக்கிறது.அவர்கள் மரித்த பிறகு திரும்பவும் பழைய கதையே நடக்கிறது.7 வருஷம் ஒன்றுமில்லாத ஒரு நிலையில் போகிறார்கள்.இதுபோல திரும்பத் திரும்ப ஒரு சுழற்சி (cycle) போல வெற்றி, தோல்வி என்று சுற்றிக்கொண்டே இருக்கிறது.யோசுவா, நியாயாதிபதிகள் இவர்களில் யார் தேவனுடைய சித்தம்?தேவனுடைய சித்தம் யார் என்பது மிகத் தெளிவாக இருக்கிறது.

தேவன், நாம் அவரை விட்டுத் தூரமாகப் போக வேண்டுமென்றோ, நாம் பாவம் செய்ய வேண்டுமென்றோ, முரட்டாட்டம் பண்ண வேண்டுமென்றோ விரும்பவில்லை.நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவரை நேசிக்க வேண்டும், அவரை பின்பற்ற வேண்டும், அவர் நமக்காக வைத்திருக்கிற காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய சித்தம். நாம் அப்படி வாழும்போது அவர் நமக்கு 100% வெற்றியை தருகிறார்.நீங்கள் தேவனுக்காக வாழ விரும்புகிறீர்களா?நாம் பாவம் செய்யவோ, முரட்டாட்டம் பண்ணவோ விரும்பவில்லை;தேவனுக்கு விரோதமாக போக விரும்பவில்லை.அவர் சொன்னதை எல்லாம் கைக்கொள்ளத்தான் விரும்புகிறோம்.அவருடைய பிரமாணங்களின்படிசெய்வதற்கு நமக்கு ஆசையாய் இருக்கிறது.அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் '100% வெற்றி'என்கிற வாழ்க்கையைத்தான் வைத்திருக்கிறார்.இதை சந்தேகப்படவே வேண்டாம்.இன்றைக்கு உங்கள் வெற்றியின் சதவிகிதத்தை (percentage) அதிகமாக்குங்கள்.ஒரு முடிவு எடுங்கள்.கூடிய சீக்கிரத்தில் உங்கள் வெற்றியின் சதவிகிதம் அதிகமாகும்.யோசுவா காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைப் போல நீங்கள் வாழ முடியும்.

சிலர், "என்னுடைய சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.ஆனால்நீங்கள்,"100% வெற்றி பெறலாம்" என்று சொல்லுகிறீர்கள்.இது பொதுத் தேர்வில் (Public Exam)100% மதிப்பெண் வாங்குவதை விட கடினமானது.இது வாழ்க்கை" என்று சொல்லுகிறார்கள்.ஆனால் யோசுவா புத்தகத்தில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது அந்தச் சூழ்நிலையும் மிகவும் கடினமான சூழ்நிலையாகத்தான் இருந்தது."இது நடக்க முடியாது" என்றுதான்எவருமே சொல்லுவார்களே ஒழிய, "இது நடக்கும்" என்று சொல்லுகிற அளவுக்கு சூழ்நிலை இல்லவே இல்லை.சற்று யோசித்துப்பாருங்கள்.இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவா 3-ஆம் அதிகாரத்தில் யோர்தான் நதியைக் கடக்கிறார்கள்.அதுதான் முதல் சம்பவம்.ஒரு நதியைஒரு பக்கத்திலிருந்துமறுபக்கத்திற்கு கடந்து செல்வது மிக எளிதான காரியமா?கிடையவே கிடையாது.அதுவும் இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.அதில் பெண்களும், சிறுபிள்ளைகளும் இருக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல், யோசுவா 3:15-இல், "யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம்"என்று வாசிக்கிறோம். தேவன் வேண்டுமென்றே அறுப்புக்காலத்தை தெரிந்தெடுத்து, "இப்போது நீ கடந்துபோ" என்கிறார்.அவர் வேறு காலத்தை (season) தெரிந்தெடுத்திருந்தாலாவது தண்ணீர் மட்டம் (level)கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் இப்போது தண்ணீர் கரையைத் தாண்டி வருகிறது.தண்ணீர் மட்டம் அதிகமாக இருக்கிறது.அந்த நேரத்தில் தேவன் அவர்களிடம்"கடந்துபோ" என்கிறார்.ஒருவேளை நீங்கள், நதியைக் கடந்துபோவது பெரிய காரியமா என்று நினைக்கலாம்.சற்று யோசித்துப்பாருங்கள்.அக்காலத்தில் படகு (boat) கிடையாது.இதை நினைப்பூட்ட வேண்டியதாயிருக்கிறது.இலட்சக்கணக்கான மக்கள் நதியைக் கடந்து போக வேண்டும்.கானான் தேசத்திற்குள் கால் எடுத்து வைக்க வேண்டுமென்றால் முதலில் இதைத் தாண்டி போக வேண்டும்.இதுவே ஒரு முடியாத சூழ்நிலையாக இருக்கிறது.ஆனால் தேவன் 'முடியும்' என்று சொல்லுகிறார்.

அடுத்த சம்பவம் எரிகோ பட்டணத்தை சொந்தமாக்கிக்கொள்ளுதல்.அங்கு தேவன், "பட்டணத்தின் அலங்கம் (கோட்டைச் சுவர்) இடிந்து விழும்" என்கிறார்.கோட்டைச்சுவர் இடிந்து விழும் என்று எவருமே நினைத்துப்பார்க்க முடியாது.அந்தச்சுவரின் உயரமும், அகலமும் எந்த அளவிற்கு பெரிதாக இருக்குமென்றால், அதின்மேல் இரதங்களை பந்தயம் (race) விடும் அளவிற்கு அவ்வளவு அகலமாக, உறுதியாக, பெரிதாக இருக்கும்.எவருமே கோட்டைச் சுவரை விழப்பண்ண முயற்சிசெய்யவேமாட்டார்கள்.எல்லாரும் வாசலைத்தான் (gate) தாக்குவார்கள்.வாசலை உடைத்து, உள்ளே சென்றுதான் பட்டணத்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்வார்களே ஒழிய, கோட்டைச் சுவரை விழப்பண்ண வேண்டும் என்று எவரும் முயற்சிக்கமாட்டார்கள்.ஆனால் தேவன்,"கோட்டைச் சுவர் இடிந்து விழும். 'விழவே முடியாது' என்று நீ நினைப்பது விழும்" என்கிறார்.இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒருவேளை நீங்கள், "என்னுடைய வாழ்க்கையிலும் சில காரியங்கள்கோட்டைச் சுவரைப் போன்றிருக்கிறது" என்று சொல்லலாம்.தேவன் உங்களைப் பார்த்து, "அந்த சுவர் விழும்" என்கிறார்.அந்த சுவர் வியாதியாகவோ, இல்லாமையாகவோ, கடனாகவோ, குடும்ப பிரச்சனையாகவோ இருக்கலாம்.ஆனால் அது விழும்."இது எப்படி விழும்?" என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் தேவன், "அது விழும்" என்கிறார்.இப்படி ஒன்றிரண்டு முறை நடந்தால் நாம் இதை விட்டு விடலாம்.யோர்தான் நதியும் இப்படித்தான், மிகவும் கஷ்டமான சூழ்நிலை அது.எரிகோ பட்டணமும் இப்படித்தான்.அடுத்தது ஆயி பட்டணம்.இஸ்ரவேல் மக்கள்,"அந்த பட்டணத்தை எளிதாக முறியடிக்கலாம்" என்று சொன்னார்கள்.இந்த ஒருமுறை தான் அவர்கள் 'எளிது' என்று சொன்னார்கள்.ஆனால் அவர்கள் தோற்றுவிட்டார்கள்.அடுத்த சம்பவம் ஐந்து ராஜாக்கள் ஒன்றாகக் கூடி யோசுவாவிற்கு எதிராக வருகிறார்கள்.அதுவும் கடினமான ஒன்று.கடினமான சம்பவங்களை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன்.அதாவது, யோர்தான் நதி, எரிகோ பட்டணம், ஆயி பட்டணம், ஐந்து ராஜாக்கள்.இந்த நான்கு சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் மிகவும் கடினமானவை.பொதுவாக நாம் எவரிடமாவது கேட்டால், "நிச்சயமாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு தோல்வி உண்டாகும்" என்றுதான் சொல்லுவார்கள்.ஆனால் தேவன், "நீ தைரியமாகஅவர்களை எதிர்த்துப் போ.நான் உனக்கு வெற்றியைத் தருகிறேன்" என்று சொல்லுகிறார்.நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அவர்களுக்கு சூழ்நிலை மிகவும் கடினமாகத்தான் இருந்தது.ஆகவே நாம் இன்றைக்கு நம்முடைய சூழ்நிலையைப் பார்த்து, "இது மிகவும் கடினமாக இருக்கிறது.எனவே 100% வெற்றி என்பது நமக்கு வேலை செய்யாது"என்று சொல்லுவது தவறு.தேவன் வேண்டுமென்றே அவர்களுக்கு கஷ்டமான சூழ்நிலையைக் கொடுத்து அதன் மத்தியில் போகச் சொல்லுகிறார்.ஏனென்றால், அவர் நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்க விரும்புகிறார்.உன்னுடைய கஷ்டமான சூழ்நிலையில்தான் வெற்றியை மிகவும் அதிகமாக தர விரும்புகிறேன்.எல்லாரும் 'முடியாது', 'வாய்ப்பே இல்லை' என்று சொல்லுவார்கள்.அங்குதான் உனக்கு வெற்றியை தர விரும்புகிறேன்.ஏனென்றால் அப்போதுதான் எனக்கு அதிக மகிமை உண்டாகும்.இது எப்படி நடந்தது என்று உலகம் உன்னை வியந்து பார்க்கும் என்கிறார்.இப்படி தேவன் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் நமக்கு வெற்றியைத் தர விரும்புகிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை கவனியுங்கள்.அது மிகவும் சுவாரஸ்யமானது.சூழ்நிலை மிகவும் கடினமானது.அவர்கள்வெற்றி பெறுவதற்கு அவர்களுடைய பங்கை சற்று யோசித்துப் பாருங்கள்.அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள்?அவர்கள் மிகவும் எளிதாக வெற்றி பெற்றார்கள்.யோர்தான் நதியைக் கடக்கும்போது தேவன் அவர்களுக்குக் கொடுத்த பங்கு என்ன?யோசுவா 3:13-ஐ கவனியுங்கள்.

"சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்" (யோசுவா3:13).

கர்த்தரின் பெட்டி எதைக் குறிக்கிறது?கர்த்தர் அவர்களோடு போகிறார் என்பதைக் குறிக்கிறது.கர்த்தர், "நீ அதை தூக்கிக்கொண்டு நட.நான் உன்னோடு வருகிறேன்" என்கிறார்.அது கர்த்தருடைய பிரசன்னத்திற்கு அடையாளமாய் இருக்கிறது.தேவன், "நீ நதியோடு போராடு, அங்கு முழங்காலிட்டு உபவாசமிருந்து ஏழுநாள் ஜெபம்பண்ணு"என்று சொல்லவில்லை."கர்த்தரின் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, நான் உன்னோடுகூட இருக்கிறேன் என்ற உணர்விலே போ, உன் உள்ளங்காலை யோர்தானின் தண்ணீரின் மேல் வை" என்கிறார்.ஒருவிதத்தில் பார்க்கப்போனால் அது மிகவும் எளிதானது தான்.அறுப்புக்காலத்தில் தண்ணீர் கரைபுரண்டு போம் என்பது மட்டும் கிடையாது.தண்ணீர் மேலிருந்து அதிக வேகமாக(force) வருகிறது.தேவன், "நீ உன் உள்ளங்காலை வை, நான்தண்ணீரை அப்படியே நிற்க வைத்து விடுகிறேன்" என்கிறார்.உள்ளங்காலை வைப்பது கஷ்டமா? தண்ணீரை நிற்க வைப்பது கஷ்டமா? தண்ணீரை நிற்க வைப்பதுதான் கஷ்டம். அதை தேவன் செய்யப்போகிறார். நமக்கு மிகவும் எளிதான பங்கைத் தருகிறார். நான் உன்னை உள்ளங்காலை வைக்கச் சொல்லுகிறேன், அதை உன்னால் செய்ய முடியுமா? நீ பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய், உன் உள்ளங்கால் அதில் படட்டும், அங்கு கஷ்டமான விஷயத்தை நான் செய்கிறேன் என்று சொல்லுகிறார்.

இது ஒருமுறை மட்டும் நடக்கவில்லை.எரிகோ பட்டணத்தை பிடிப்பதில் இஸ்ரவேல் ஜனங்களுடைய பங்கு என்ன?தேவன்,"ஆறு நாட்கள் தினமும்ஒருமுறை எதுவும் பேசாமல்வாயை மூடிக்கொண்டுபட்டணத்தைச்சுற்றி வா (walking)" என்கிறார்.இது மிகவும் கடினமானதா?கிடையாது.தேவன் அவர்களிடம், "நீ போய் சுவரைப் பிடித்து அசைக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கலாம்.ஆனால் அப்படிச் சொல்லவில்லை.மாறாக, அதைச் சுற்றி வரச் சொல்லுகிறார்.ஏழாவது நாள் ஏழு முறை சுற்றி வரவேண்டும்.அவ்வளவுதான் அவர்கள் பட்ட கஷ்டம்.ஏழு முறை சுற்றி வந்த பிறகு ஒருவன் எக்காளம் ஊதுவான்.அப்போதுநீ வாயைத் திறந்து ஆர்ப்பரி என்கிறார்.சுற்றி வருவதும், ஆர்ப்பரிப்பதும் தான் அவர்களுடைய வேலை.சுற்றி வருவதும் ஆர்ப்பரிப்பதும் கடினமா?கோட்டைச் சுவர் விழுவது கடினமா?கஷ்டமான பங்கை தேவன் எடுத்துக்கொள்கிறார்.எளிதான ஒரு காரியத்தை நமக்குத் தருகிறார்.ஏன் இதைச் சொல்லுகிறேன்?விசுவாச வாழ்க்கையில் நம்முடைய பங்கு என்ன?நாம் அறிக்கை செய்ய வேண்டும்.சிலவேளைகளில் அது மிகவும் கடினமானது என்று நாம் எண்ணுகிறோம்.ஆனால் அது மிகவும் எளிதான ஒரு பங்கு.தேவன், "இதை அறிக்கை செய், உன் கண்களுக்கு முன்பாக வை, இதை தியானி, இதுதான் உன்னுடைய பங்கு, இது மிகவும் எளிதான காரியம்.கஷ்டமான காரியத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்கிறார்.இது திரும்பத் திரும்ப நடக்கிறது.ஆகவேதான் இதைப் போதிக்கிறேன்.ஏதோ ஒருமுறை நடந்தது என்றால், இது தற்செயலாய் நடந்தது;இதை வைத்து நாம் பெரிதாக ஒன்றும் செய்துகொள்ளக்கூடாது என்று சொல்லலாம்.ஆனால் திரும்ப திரும்ப நடக்கிறது என்றால், ஏதோ ஒரு விஷயம் அங்கு இருக்கிறது.

அடுத்த சம்பவம் ஆயி பட்டணம்.இஸ்ரவேல் ஜனங்கள் இப்பட்டணத்தாரிடம் முதல் முறை தோற்றுவிட்டார்கள், இரண்டாவது முறை ஜெயித்தார்கள்.அவர்கள் எப்படி ஜெயித்தார்கள்என்பதையும், இதில் அவர்களுடைய பங்கு என்ன என்பதையும்கவனியுங்கள்.தேவன் யோசுவாவிடம், "நீங்கள் முதல் முறை தோற்றுவிட்டீர்கள்.ஆகவே அவன் (எதிரி) இப்போது அதிக நம்பிக்கையுடன் (over confident) இருப்பான்.எனவே நீ ஒரு கூட்டத்தை கூட்டிக்கொண்டு அவனை எதிர்த்து போ.அவன் உன்னைப் பார்த்து விட்டு மிகவும் வேகமாக வருவான்.நீ திரும்பி அப்படியே ஓடி வா.அவனிடமிருந்து பயந்து ஓடுவதைப்போலநடி.இருபத்தைந்தாயிரம் பேரை வைத்துக்கொண்டு இந்த நாடகத்தைப் போடு.அவன் அதைப் பார்த்து இன்னும் சந்தோஷமடைந்து, "சென்ற முறை நம்மோடு யுத்தம் பண்ணினார்கள்.ஆனால் இம்முறை பயந்து ஓடுகிறார்கள்" என்று சொல்லி, அவன் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, பட்டணத்தின் வாசலை திறந்து வைத்துவிட்டு, வெளியேஉன் பின்னே வந்துவிடுவான்.நீ அவர்களை அப்படியே கொண்டுபோய் விடு.இன்னொரு ஐந்தாயிரம் பேர் உள்ள கூட்டத்தை ஆயத்தமாய் அங்கு ஒரு இடத்தில் ஒளிய வைத்திரு.நீங்கள் ஓடி வந்த பிறகு அவர்கள் பட்டணத்திற்குள் ஓடி அதை எடுத்துக்கொள்ளட்டும்" என்கிறார்.இது அப்படியே நடக்கிறது.யோசுவாவும் அவனோடிருந்தவர்களும் போகிறார்கள்.இவர்களைப் பார்த்துஆயி பட்டணத்தின் ராஜாவும் அவனுடைய மனுஷரும் அதிக நம்பிக்கையுடன் வருகிறார்கள்.யோசுவாவும் அவனுடைய மனுஷர்களும் திரும்பி ஓட, அவர்கள் அதைப் பார்த்து, இவர்களை ஒரேடியாக அழித்துவிடலாம் என்று பட்டணத்திலிருந்த எல்லா மனுஷரும் அவர்களை பின்தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் போன பிறகு யோசுவா தான் ஒளித்து வைத்திருந்த ஐந்தாயிரம் பேருக்குசைகை (signal) காட்டுகிறான்.அவர்கள் பட்டணத்திற்குள் சென்று பட்டணத்தை எரிக்கிறார்கள்.எதிரி திரும்பிப் பார்க்கிறான், ஒரு பக்கம் பட்டணம் எரிகிறது, இன்னொரு பக்கம் இருபத்தைந்தாயிரம் பேர் திரும்பி வருகிறார்கள்.அந்த ஐயாயிரம் பேரும் இன்னொரு பக்கத்திலிருந்து வருகிறார்கள்.இரண்டு கூட்டத்தாரும் ஆயியின் மனுஷரை முறியடித்தார்கள்.தேவன் எளிதில் எப்படி வெற்றி பெறுவது என்பதை சொல்லித் தருகிறார்.

அடுத்ததாக, யோசுவா 10-ஆம் அதிகாரத்தில் ஐந்து ராஜாக்கள் யோசுவாவை எதிர்த்து வருகிறார்கள்.இது மிகவும் கடினமான காரியம்.ஏனென்றால் ஐந்து ராஜாக்களும் தங்கள் இராணுவத்தோடு வருகிறார்கள்.ஆனால் தேவன் இங்கு ஒரு வழியை வைத்திருக்கிறார்.தேவன்,"கஷ்டமான பங்கை நான் எடுத்துக்கொள்கிறேன், உன் பங்கு எளிதானது" என்கிறார்.அவர் யோசுவா 10:11-இல் என்ன செய்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

"அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல்கர்த்தர்வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்" (யோசுவா 10:11).


தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம், கவலைப்படாதே, ஐந்து ராஜாக்கள் ஒன்றாகக் கூடி உன்னை எதிர்த்து வருகிறார்கள்.நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார்.சற்று எண்ணிப் பாருங்கள்.வானத்திலிருந்து மழையைப்போல பெரிய கற்கள் விழுகிறது.இது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தினது என்றால், இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தை பயன்படுத்தினார்கள், பெரும்பாலும் அது show தான்.பெரும்பாலான வேலையை தேவன் வானத்திலிருந்து கல்மழையைக் கொட்டி செய்து முடித்துவிட்டார்.பட்டயத்தை எடுத்துக்கொள், நீ அப்படி இப்படிச் செய், நான் பெரும்பாலான வேலையை செய்து விடுகிறேன் என்கிறார்.அதாவது, நான் உனக்கு சிறிய பங்கைக் கொடுக்கிறேன், உன் பங்கு மிகவும் எளிது, அதை நீ சரியாகச் செய், நான் பெரிய பங்கை எடுத்துக்கொள்கிறேன் என்கிறார்.இதற்கு அடுத்து வேறு ஒரு விவரிக்கிற ஒரு சம்பவம் இல்லை.இருந்திருந்தால் அவையும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.இதன்பின் யோசுவா 12-ஆம் அதிகாரத்தில்யோசுவா 31 ராஜாக்களை போராடி ஜெயித்தான் என்று வேதம் பொதுவாகச் சொல்லிவிடுகிறது.

அதாவது, தேவன் தாம் சொல்லுகிற கதைகளை எல்லாம் எப்படிச் சொல்லுகிறார் என்றால், மிகவும் கஷ்டமான சூழ்நிலை, ஆனால் வெற்றி பெறுவது மிகவும் எளிது, உங்களுடைய பங்கு மிகவும் எளிது என்று சொல்லுகிறார்.உங்களுடைய சூழ்நிலைகளைப் பார்த்து, "இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாயிற்றே!" என்று நீங்கள் நினைக்கலாம்.அது தவறு.அப்படியே அதற்கு எதிர்மாறாக நடக்கிறது.நாம் யோசிக்கிறதும் தேவன் யோசிக்கிறதும் பொருந்துவதே கிடையாது.இஸ்ரவேலர் எது எளிது என்று சொன்னார்களோ, அங்குதான் தோல்வியடைந்தார்கள்.ஆயி பட்டணத்தை எளிதாக பிடிக்கலாம் என்று சொல்லி தோற்றுவிட்டார்கள்.மற்ற சம்பவங்களில் எல்லாரும்"வாய்ப்பே இல்லை" என்று சொல்லியிருப்பார்கள்.ஆனால் அதில்எளிதாக ஜெயித்துவிட்டார்கள்.இதுதான் தேவனுடைய வழி.உங்களுடைய சூழ்நிலைகளைப் பார்த்து, இது கடினம், நான் கடனில் மூழ்கிவிட்டேன் என்று நீங்கள்எண்ணிக்கொண்டிருக்கலாம்.ஆனால் தேவன்உங்களை அதிலிருந்து மிக எளிதாக வெளியே கொண்டுவந்துவிடுவார்.உங்களுக்கு ஒரு லேசான பங்கைக் கொடுத்து, அவரால் உங்களை வெளியே கொண்டுவர முடியும்.குடும்ப பிரச்சனை முற்றிப்போய் விட்டது, இதிலிருந்து எப்படி வெளியே வருவது?என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் மிகவும் எளிதாக நீங்கள் வெளியே வருவீர்கள்.அது மிக எளிதாக நடக்கும் என்று நம்புங்கள், அதுபோலவே நடக்கும்.

இதில் ஒரே ஒரு விஷயம் தான் கடினம்.அது என்னவென்றால், இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இவ்வளவுஎளிதாக ஜெயிக்க முடியும் என்று நம்புவது.கஷ்டம் இல்லை என்று அல்ல, கஷ்டம் இருக்கிறது.அதுதான் விசுவாசம்.யாராவது நம்ப முடியும் என்றால், நீங்களும் நம்ப முடியும் (If anybody can believe you can believe). நீங்கள் விசுவாச மக்கள், விசுவாசத்தில் வாழுகிற மக்கள்,விசுவாசத்தைப் பற்றி போதிக்கப்பட்ட மக்கள்,தினந்தோறும் விசுவாசத்தை பயிற்சி செய்கிற மக்கள்.உங்களால் விசுவாசிக்க முடியும்.என்னவென்று விசுவாசிக்க வேண்டும்? நான் மிகவும் எளிதாக வெற்றி பெறப்போகிறேன்; இந்தப் பிரச்சனையிலிருந்து நான் மிகவும் எளிதாக வெளியே வரப்போகிறேன்;இந்த சுவர் மிக எளிதாக விழப்போகிறது என்று விசுவாசிக்க வேண்டும். சிலர், "வெற்றிக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லையே!நானும் தான் விசுவாசிக்கிறேன்; நானும் தான் அறிக்கை செய்கிறேன், ஆனால் ஒன்றுகூட மாறுவது போல் தெரியவில்லை.சில நேரங்களில் இன்னும் மோசமாகிக் கொண்டுதான் போகிறது" என்று யோசிக்கலாம்.ஆனால் இஸ்ரவேல் ஜனங்களின் சூழ்நிலையும் இப்படித்தான் இருந்தது.சற்று கற்பனை செய்து பாருங்கள்.தேவன் ஆசாரியனிடம், "நீ கர்த்தருடைய பெட்டியைத் தூக்கிக்கொண்டு யோர்தான் நதியின்கரைக்குப் போ, உன்னுடைய உள்ளங்கால் யோர்தானின் தண்ணீரிலே படட்டும்" என்று சொல்லுகிறார். தமிழ் வேதாகமத்தில்"உள்ளங்கால் யோர்தானின் தண்ணீரிலே படட்டும்" என்று சொல்லப்பட்டுள்ளது.ஆங்கில வேதாகமத்தில், "Let it rest on the water" என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, உள்ளங்காலை தண்ணீரின் மேல் தொட்டுவிட்டு எடுத்துவிட முடியாது.அது விசுவாசம் அல்ல. உள்ளங்கால் தண்ணீரின் மேல் போய்பட்டு அப்படியே இருக்கட்டும், தங்கட்டும் (rest) என்கிறார்."தண்ணீர் நம்மை அடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது?" என்று அவர்கள்யோசித்திருக்கலாம்.இதை சற்று கற்பனை செய்துபாருங்கள்.ஆசாரியர்கள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள்.நதிக்கு அருகில் போக போக, அவன், ஒருவேளை ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று நினைத்திருப்பான்.ஆனால் எந்த மாற்றமும் நடக்கவில்லை."ஆண்டவரே, அருகில் வந்தாயிற்றே! எதுவுமே நடக்கவில்லையே!தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறதே!"என்று சொல்லியிருப்பான்.அவனுடைய உள்ளங்கால் தண்ணீரின்மேல் பட்டு தங்குகிற வரைக்கும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.உள்ளங்கால் தண்ணீரின் மேல் பட்டு தங்கினவுடன் எந்த மாற்றமும் இல்லாத நிலையிலிருந்து முற்றிலுமாய் மாறிவிட்டது.அதாவது, No sign of victory to total victory in one step of faith.என்ன சொல்ல வருகிறேன் என்றால், நீங்கள் விசுவாசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா?அதில் தொடர்ந்து வாழுங்கள்.தொடர்ந்துபடி எடுத்துக்கொண்டே வாருங்கள்.ஒருவேளை உங்களுடைய அடுத்த படி உங்களுக்கு வெற்றியைக் கொண்டுவரலாம்.ஒருவேளைஅடுத்த வாரம் நீங்கள் வாயைத் திறந்து அறிக்கை செய்யும்போது வெற்றி உங்களுடையது ஆகலாம்.அடுத்த முறை நீங்கள் விசுவாசத்தில் செயல்படும்போது வெற்றி உங்களுடையதாய் இருக்கலாம்.ஒருவேளை அடுத்த படியில் வெற்றி வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்.அதற்கு அடுத்த படியிலோ, பத்து படிக்குப் பிறகோ வெற்றி உண்டாகலாம்.ஒருவேளை நாளைக்கு வரலாம், அடுத்த வாரம் வரலாம், அடுத்த மாதம் வரலாம்.வெற்றி எப்போது வரும் என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக வரும்.

அப்படித்தான் தேவன் இஸ்ரவேலரிடம் எரிகோ பட்டணத்தை ஏழு நாட்கள் சுற்றி வரச் சொல்லுகிறார்.ஒருவேளை அவர்கள் மூன்றாவது நாளில்,"ஆண்டவரே, நாங்கள் சுற்றி வருகிறோம். ஒரு மாற்றமும் ஏற்படவில்லையே!இன்னும் கேட்டால் எதிரிகள் சுவற்றின் மேலிருந்து கொண்டு எங்களை கேலிதான் செய்கிறார்கள்."நீங்கள் எங்கு நடந்துபோகிறீர்கள்?என்ன செய்கிறீர்கள்?எப்படி யுத்தம் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?வாசலை உடைக்க வேண்டும் என்று தெரியாதா?உங்களுக்கு idea வேண்டுமா?வாருங்கள்,நாங்கள் உங்களுக்கு சொல்லித்தருகிறோம்.நாங்கள் பேசினால் அதற்கு நீங்கள்பேச்சும் கொடுப்பதில்லை, ஏன் இப்படி செய்துகொண்டிருக்கிறீர்கள்?"என்று கேலி செய்கிறார்களே" என்று சொல்லியிருப்பார்கள்.எதிரிகளிடமிருந்து அதிகமாக பேச்சு வந்திருக்கும்.இஸ்ரவேலர்கள் இப்படி ஆறு நாட்கள் நடக்கிறார்கள், எந்த மாற்றமும் ஏற்படவில்லை."ஆண்டவரே, சுவரே விழும் என்று சொல்லுகிறீர், முதலில் ஒரு கல்லையாவது விழச் செய்யும்.ஒரு கல் விழுந்து அதை நாங்கள் பார்க்க வேண்டுமே!"என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.அவர்கள் அப்படி யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை.ஒருவேளை அவர்கள் அப்படி யோசித்திருக்கலாம், அதனால் தான் தேவன் வாயை மூடிக்கொள்ளச் சொன்னார் என்று நினைக்கிறேன்.யோசிக்கிறதை பேசிவிடாதே என்பதால் வாயை மூடிக்கொள்ளச் சொன்னார்.அதனால் அவர்கள் அப்படி யோசித்தார்களா?இல்லையா?என்று சரியாகச் சொல்ல முடியவில்லை.ஆனால் அவர்கள் கீழ்ப்படிந்தார்கள்.அவர்களுக்கு சந்தேகங்கள் இருந்திருக்கலாம்.மற்றவர்கள் இவர்களை கேலி கூட செய்தார்கள்."ஆண்டவரே, எதிரிகளின் பேச்சை தாங்க முடியவில்லை, ஐந்து நாட்கள் நடந்துவிட்டோம், ஆறாவது நாள் நடக்கப்போவதில்லை" என்று இவர்கள் சொல்லியிருந்திருக்கலாம்.ஆனால் இவர்கள் தொடர்ந்து விசுவாசத்திலேயே செயல்பட்டார்கள்.இன்றைக்கு உங்களை சிலர் கேலி செய்யலாம்."வெறுமனே அறிக்கை அறிக்கை என்று எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறாய். 'எல்லாம் என்னுடையது' என்று சொல்லுகிறாய், ஆனால் பாக்கெட்டில்ஒன்றுமே இல்லை.'சுகம் என்னுடையது' என்று சொல்லுகிறாய், ஆனால் வியாதி இன்னும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது" என்றுஅவர்கள் நம்மை பரியாசம் பண்ணலாம்.ஆனால் நாம் தொடர்ந்து விசுவாசத்திலே செயல்பட வேண்டும்.ஒரு கல் கூட விழவில்லை என்பதால் சோர்வடைய வேண்டாம்.இஸ்ரவேலர்ஏழாம் நாளில் ஆறு முறை சுற்றி வந்துவிட்டார்கள், இன்னும்ஒரு கல் கூட விழவில்லை.தேவன் ஒவ்வொரு கல்லாகவிழும்படி கூடச் செய்திருக்கலாம்.ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.இதில் என்னவிஷயம் என்றால், இந்த சம்பவங்களில் ஒரு சம்பவத்தில் கூட அவர் அப்படி பண்ணவில்லை.ஏழாவது நாள் ஆறுமுறை சுற்றிவந்துவிட்டார்கள்,ஏழாம் முறை சுற்றி வருகிறார்கள், அப்போதுகூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை.அதன் பிறகு ஆசாரியர் எக்காளம் ஊதுகிறார்கள்,இப்போது அவர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும்.ஆர்ப்பரிப்பதற்கு முன்பு கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை.இது எப்படி நடக்கிறது என்று பாருங்கள்.இஸ்ரவேலர் ஆர்ப்பரித்தார்களா?ஆம், அவர்கள் விசுவாசத்தோடு ஆர்ப்பரித்தார்கள்.அந்த நேரத்தில் கூட இஸ்ரவேல் மக்களுக்குள் எப்படியோ ஒரு பெரிய விசுவாசம் இருக்கிறது.அது எப்படி என்று தெரியவில்லை.ஏனென்றால் இதற்கு முந்தின சந்ததி முற்றிலும் வேறுமாதிரி இருந்தது.ஆனால்இந்த சந்ததி விசுவாச சந்ததியாய் இருக்கிறது.யோசுவா 6:20-ஐ கவனியுங்கள்.

"எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது..." (யோசுவா 6:20).

"எக்காளம் ஊதுகையில் ஆர்ப்பரிக்க வேண்டும்" என்று தேவன் சொன்னார்.அப்போதுகூட அவர்கள் எப்படியோஆர்ப்பரிக்காமல் இருந்திருக்கலாம்.இது நடக்குமா?என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.அல்லது அவர்கள் கொஞ்சம் லேசாக ஆர்ப்பரித்து இருந்திருக்கலாம்.ஆனால் அவர்கள் மகா ஆரவாரத்தோடு ஆர்ப்பரித்தார்கள்.அவர்கள் விசுவாசத்திலே செயல்படுகிறார்கள்.என்ன நடக்கிறது?தமிழ் வேதாகமத்தில், "அலங்கம் இடிந்து விழுந்தது" என்று வாசிக்கிறோம்.ஆனால் ஆங்கில வேதாகமத்தில், "The wall fell down flat" என்று வாசிக்கிறோம்.அதாவது அலங்கம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.சற்று யோசித்துப்பாருங்கள்.அவர்கள் ஆர்ப்பரிப்பதற்கு முந்தின நொடியில் சுவரிலிருந்துஒரு கல் கூட விழாமல் பலமாக இருந்தது.ஆனால் அவர்கள் ஆர்ப்பரித்த அடுத்த நொடியில் சுவர் தரைமட்டமானது.நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், உங்களுடைய சூழ்நிலை எந்த மாற்றமும் இல்லாமல் முற்றிலுமாய் மாற முடியும்.ஒரு விசுவாச ஆர்ப்பரிப்பு, ஒரு விசுவாச படி, ஒரு விசுவாச அறிக்கை, ஒரு விசுவாச செயல் உங்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும்.உங்களுடைய அடுத்த விசுவாச படி உங்களுக்கு வெற்றியைக் கொண்டுவரலாம்.சோர்வடைய வேண்டாம்.

தேவன் இப்படித்தான் வெற்றியைத் தர விரும்புகிறார்.நம் ஒவ்வொருவருக்கும்அவர் வெற்றியைத் தர விரும்புகிறார்.ஒவ்வொரு முறையும் வெற்றியைத் தர விரும்புகிறார்.அதுமட்டுமல்லால், அதை மிக எளிதாக தர விரும்புகிறார்.ஏன்?அவருக்கு அதிகபட்ச (maximum) மகிமை உண்டாகும்படியாக. இதில் நமக்கு எந்த மகிமையும் வராத விதத்தில் நம்மை வழிநடத்த விரும்புகிறார்.உங்களுக்கு மகிமை வேண்டுமென்றால் அது கிடைக்காது.ஆசீர்வாதம் வேண்டுமா, வெற்றி வேண்டுமா, அது நிறையவே கிடைக்கும்.ஏனென்றால் அதன் நிமித்தம் அவருக்கு அதிக மகிமை உண்டாகும்.இப்படி நாம் வாழ்ந்தால் உலகமே நம்மைப் பார்த்து வியக்கும்.நாம்ஒன்றுமே சொல்ல தேவையில்லை."இவ்வளவு கஷ்டமான விஷயத்தை எப்படி நீங்கள் இவ்வளவு எளிதாக சாதித்து விட்டீர்கள்?"என்று அவர்கள் கேட்பார்கள்.தேவன் நமக்கு வெற்றியைத் தருகிறார்.சோர்வடைய வேண்டாம், தொடர்ந்து விசுவாசியுங்கள், தொடர்ந்து அறிக்கை செய்யுங்கள், தொடர்ந்து விசுவாசத்திலே செயல்படுங்கள், தொடர்ந்து உற்சாகமாய் இருங்கள், தொடர்ந்து தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள், தியானியுங்கள், ஜெபியுங்கள். "ஒரு மாற்றமும் ஏற்படவில்லையே, ஒரு முன்னேற்றமும் வரவில்லையே"என்று அதைப் பார்த்து சோர்வடைய வேண்டாம்.ஒரே விநாடியில் எல்லாமே மாற முடியும்.நம்முடைய தேவன் அருமையானவர், அற்புதமானவர்.யோசுவா நம்மை வழிநடத்தவில்லை, இயேசு நம்மை வழிநடத்துகிறார்.அவரால் நம்மை 100% வெற்றிக்குள்ளாக நடத்த முடியும்.

Donation
eStore
Copyright © 2017 Victory Christian Foundation. All rights reserved.
Website & Social Media by Open Minds Agency