0 item - ₹0.00

விசுவாச வாழ்க்கை (பாகம் 09) - விசுவாசத்தின் வியக்கத்தக்க வல்லமை

Sunday Tamil Service - 09 SEP 18

Transcript

"விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்"(எபிரெயர்11:3).

"விசுவாச வாழ்க்கை" என்கிற தொடர் போதனையை கொடுத்து வருகிறோம். எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் 3-ஆம் வசனம் மிகவும் முக்கியமான கருத்தை நமக்குச் சொல்லுகிறது. இந்த வசனத்தின் சரியான அர்த்தம் என்ன என்பதையும்,எந்த காரணத்தினால் இதுதான் சரியான அர்த்தம் என்பதையும், இன்றைக்கு அது நமக்கு எந்த விதத்தில் பிரயோஜனமாய் இருக்கிறது என்பதையும் உங்களுக்கு விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். இந்த வசனத்தை அநேகர் தவறாக புரிந்துவைத்திருக்கிறார்கள். தேவன் உலகத்தை தம்முடைய வார்த்தையினால் உண்டாக்கினார் என்பதை நாம் அறிந்துகொள்ளும்படியாக விசுவாசம் நமக்கு உதவுகிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். தேவன் உலகத்தை உண்டாக்கினபோது நாம்அதைப் பார்க்கவில்லை, நாம் அங்கு இல்லை, தேவன் எப்போதோ உண்டாக்கினார், ஆனாலும் நாம் விசுவாசிக்கிறோம். நாம் பார்க்காத ஒரு காரியத்தை நம்புவதற்கு விசுவாசம் உதவுகிறது. ஆகவே கர்த்தர் தம்முடைய வார்த்தையினால் உலகத்தைஉண்டாக்கினார் என்பதை இது நமக்கு அறிவிக்கிறது;அதை நாம் நம்புவதற்கு விசுவாசம் உதவுகிறது என்று அந்த விதத்தில் அவர்கள் சொல்லுகிறார்கள். இவர்கள் சொல்லுவதுதான் உண்மையாக இருக்குமென்றால், இதிலிருந்து பிரசங்கிப்பதற்கு ஒன்றுமே இல்லை. அநேக வேத விளக்கவுரைகள் இப்படித்தான் இதனுடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது. ஆனால் வேறு சில வேத விளக்கவுரைகள் வேறுவிதமாக அர்த்தம் சொல்லுகின்றன. இவர்கள், எது சந்தர்ப்ப சூழ்நிலையில், எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் என்று என்கிறார்கள். 3-ஆம் வசனம் 'விசுவாசத்தினாலே' என்று ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு அநேக வசனங்கள் 'விசுவாசத்தினாலே' என்று ஆரம்பிக்கிறது. இது ஒரு pattern.நாம் எழுதும்போது அதற்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் கொடுக்கலாம். 3-ஆம் வசனத்தில் இந்த pattern ஆரம்பிக்கிறது.'விசுவாசத்தினாலே' என்று 3-ஆம் வசனத்தில் இந்த pattern ஆரம்பித்து, மீதி எத்தனை வசனங்களில் 'விசுவாசத்தினாலே' என்று வருகிறது என்பதைப் பாருங்கள். இந்த pattern-இல் ஒரு காரியத்தைக் கவனியுங்கள். 'விசுவாசத்தினாலே' என்று ஒரு வசனம் ஆரம்பித்தது என்றால் அதற்குப் பிறகு அசாதாரணமான, அபூர்வமான, அபாரமான, அற்புதமான ஒரு காரியம் நடக்கிறது என்று அர்த்தம்.ஒட்டுமொத்தத்தில் விசுவாசத்தினாலே அற்புதமான காரியங்கள் நிறைவேறுகிறது. ஆகவே 3-ஆம் வசனத்தையும் அப்படித்தான் வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அது 'விசுவாசத்தினாலே' என்று ஆரம்பிக்கிறது, அதுவும் இதுதான் முதல் முறை அப்படி ஆரம்பிக்கிறது. இதை ஒரு பெரிய pattern போல விளக்கப்போகிறார்கள். ஆகவே முதல் வசனத்திலேயே அந்த pattern-ஐ set பண்ண வேண்டாமா? எனவே 3-ஆம் வசனம் முக்கியமாக அப்படி இருக்க வேண்டும். 'விசுவாசத்தினாலே' என்று ஆரம்பிக்கும் போதெல்லாம் அதற்குப் பிறகு வருகிற வார்த்தைகள் விசுவாசத்தினாலே ஏதோ ஒரு பெரிய காரியம் நடந்தது என்ற அர்த்தத்தில் தான் வருகிறது. 4-ஆம் வசனத்தைப் பாருங்கள்.

"விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்"(எபிரெயர்11:4).

இது என்ன அற்புதமான காரியம் என்று பாருங்கள்! ஆபேல் பலியைக் கொண்டுவருகிறான், தேவன் அவனுடைய பலியை அங்கீகரிக்கிறார்;அவனை நீதிமான் என்று அறிவிக்கிறார்; அவரே அவனைப் பற்றி சாட்சி கொடுக்கிறார்;அவன் மரித்தாலும் இன்னும் பேசுகிறான். அடுத்த வசனத்தைப் பாருங்கள்.

"விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்"(எபிரெயர்11:5).

இது என்ன அபூர்வமான ஒரு சம்பவம் என்று பாருங்கள்!இது 'விசுவாசத்தினாலே' என்று ஆரம்பிக்கிறது. ஏனோக்கு நம்மைப்போல ஒரு மனுஷன். தேவனோடுகூட சஞ்சரித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று காணாமற்போய்விட்டான். அதாவது, இந்த பூமியில் இருந்தவன் திடீரென்று தேவனோடுகூட போய்விட்டான். அவன் சாவை காணாமல் நேரடியாக போய்விட்டான். அவன் சாவை bypass பண்ணிவிட்டான். ஒருதரம் மரிப்பது என்பது எல்லாருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் இவனுக்கு சாவு இல்லை. விசுவாசத்தினாலே அபாரமான ஒரு காரியம் நடந்திருக்கிறது. 7-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்"(எபிரெயர்11:7).

நோவா ஒரு அபூர்வமான காரியத்தை விசுவாசிக்கிறான். அன்றைக்கு மழை, வெள்ளம், கப்பல் என்றால் என்னவென்றே எவருக்கும் தெரியாது.அப்படிப்பட்ட காலத்தில்கப்பலை எப்படி கட்டுவது என்று கர்த்தர் கற்றுக்கொடுக்கிறார். நோவா வருஷக்கணக்கில் அதை கட்டிக்கொண்டிருக்கிறான். "உனக்கு அறிவு இருக்கிறதா? எங்கேயாவது வெள்ளம் வந்திருக்கிறதா? எவனாவது முழுகியிருக்கிறானா? நாங்கள் அதைப் பார்த்ததே கிடையாதே!"என்று ஊரே அவனைப் பார்த்து சிரிக்கிறது. ஆனால் நோவா எவருடைய பேச்சையும் கேட்காமல் பேழையைக் கட்டுகிறான். கடைசியில் அவனும் அவனுடைய குடும்பத்தாரும் மட்டும் அழிவிலிருந்து தப்பினார்கள், மற்றவர்கள் எல்லாரும் அழிந்துபோனார்கள். இன்றைக்கு இருக்கும் மனுவர்க்கம் அவனிடத்திலிருந்து வந்த சந்ததி. அடுத்த வசனங்களைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்"(எபிரெயர்11:8, 9).

ஆபிரகாம் தன் தேசம், இனம், வீடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு தான் போகும் இடம் இன்னதென்று தெரியாமல் புறப்பட்டுப்போகிறான். அவனுடைய வாழ்க்கையே ஒரு சில காரியங்களை வெளிப்படுத்தினது. அவன் சீமானாய் இருந்தான் என்று வேதத்திலே வாசிக்கிறோம் (ஆதியாகமம் 13:2). அப்பேர்ப்பட்ட ஆபிரகாம் பரதேசியைப்போல குடியிருந்தான். அவனுடைய மனைவிக்கு அது எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். "இவ்வளவு பணம் வைத்திருக்கிறீரே, ஒரு அரண்மனையைக் கட்டக்கூடாதா?" என்று அவனுடைய மனைவி கேட்டிருக்கக்கூடும். ஆபிரகாம் அவர்களுக்கு பிரமாதமாக ஒரு கூடாரம் போட்டு, அவர்களை அங்கேயே குடிவைத்துவிட்டான். ஏனென்றால் அவன் அதன் மூலமாக வேறு ஒன்றைச் சொல்லுகிறான். தேவன் எனக்காக ஒரு வீட்டை ஏற்படுத்தியிருக்கிறார், நான் அங்கு போய்க்கொண்டிருக்கிறேன், அவர்மீது என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக வேண்டுமென்றே அப்படி வாழுகிறான். 11-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்"(எபிரெயர்11:11-14).

விசுவாசம் எப்போதுமே ஒருவனை ஆச்சரியமான காரியங்களைச் செய்ய வைக்கிறது. சாராளுக்கு வயதாகி விட்டது. அவளுக்கு பிள்ளை பெறுவதற்கு வாய்ப்பில்லை. அவளால் கர்ப்பந்தரிக்க முடியாது,புருஷனுக்கும் வயதாகி விட்டது. இரண்டு பேருக்கும் அவ்வளவு வயதாகிவிட்டது. ஆனால் விசுவாசத்தினாலே சாராள் கர்ப்பந்தரித்தாள். 12-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்"(எபிரெயர்11:12-14).

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு மேலும் சொல்லுவதை17-ஆம் வசனத்திலிருந்து கவனியுங்கள்.

"மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்"(எபிரெயர்11:17).

ஆபிரகாம் விசுவாசத்தினாலே அபாரமான ஒரு காரியத்தைச் செய்கிறான். தன்னுடைய ஒரேபேறான குமாரனுக்குத்தான் எல்லா சுதந்தரமும் போய் சேர வேண்டும். ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்ட அத்தனை வாக்குத்தத்தங்களும் ஈசாக்கில் தான் நிறைவேறப்போகிறது. ஈசாக்கு செத்தால் கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்ன எந்த வாக்குத்தத்தமும் நிறைவேறாது. இருந்தபோதும் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடுகிறான். அவன் ஏன் பலியிடுகிறான் என்பது அடுத்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

"ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்"(எபிரெயர்11:18, 19).

என் மகனைக் கொன்று பலியாக எரித்தாலும் தேவன் அவனை சாம்பலிலிருந்து திரும்ப எழுப்பித்தருவார் என்கிற விசுவாசம் ஆபிரகாமுக்கு இருந்தது. எந்த மனுஷனும் செய்யாத ஒரு காரியத்தை விசுவாசம் இவனை செய்ய வைக்கிறது. 20-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.


"விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்"(எபிரெயர்11:20).

யாக்கோபு, ஏசா இந்த இரண்டு பேரில் எவர் பெரியவர்களாய் இருப்பார்கள் என்பதை ஈசாக்கு விசுவாசத்தினால் சொல்லிவிடுகிறான். 21-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்"(எபிரெயர்11:21).

யாக்கோபு யோசேப்பினுடைய பிள்ளைகளை ஆசீர்வதித்து, அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லுகிறான். 22-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்"(எபிரெயர்11:22).

நீங்கள் இங்கிருந்து விடுதலையாகி, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும்போது என்னுடைய எலும்புகளை எடுத்துச்செல்ல மறந்துவிடாதீர்கள் என்று யோசேப்பு சொல்லுகிறான். 23-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள்"(எபிரெயர்11:23).

விசுவாசத்தினாலே ஒளித்து வைக்கப்பட்ட பிள்ளையாகிய மோசேபார்வோனையும், அவனுடைய சேனையையும் கடலில் தள்ளி, அவர்களை மூழ்கடிக்கிற ஒரு பெரிய வீரனாக வளர்ந்தான். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, கானான் தேசத்திற்கு கொண்டுபோகிற ஒரு தலைவனாக வந்தான். 24-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்"(எபிரெயர்11:24-26).

பார்வோனின் பேரன் என்று அழைக்கப்பட்ட மோசே அதை வேண்டாம் என்று வெறுக்கிறான். இவனுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? விசுவாசத்தினாலேதான். எனக்கு இது வேண்டாம், இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்ந்து துன்பத்தை அனுபவித்தாலும் பரவாயில்லை, கொஞ்ச நாட்கள் தான் துன்பம், ஆனால் காலகாலமாய் அது இன்பம். இதுவோ கொஞ்ச நாட்கள் தான் இன்பம், ஆனால் காலகாலமாய் துன்பம். இவை பாவ சந்தோஷங்கள் என்கிறான். 28-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்"(எபிரெயர்11:28).

தேவன் மோசேயிடம், ஒரு ஆட்டைக் கொன்று, அதின் இரத்தத்தை எடுத்து, அதை நிலைக்கால்களில் பூசு, சங்காரத்தூதன் உன்னைத் தொடமாட்டான் என்கிறார். அவனும் அப்படியே செய்கிறான். 27-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்"(எபிரெயர்11:27).

மோசே, ராஜா கட்டளையிடும்போது அதற்குப் பயப்படாமல் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு எகிப்தைவிட்டுப் போனான். ராஜாவிடம் இராணுவமும், ரதங்களும், குதிரைகளும் இருக்கிறது. ஆனால் இவனிடம் எதுவும் இல்லை. இவர்கள் ஆடு மேய்க்கிற இனத்தார். இவன் எந்த இராணுவமும் இல்லாமல் ஜனங்களை வெற்றிகரமாய் நடத்திக்கொண்டு போகிறான். பார்வோனின் சேனை முழுவதும் செங்கடலில் மூழ்கினது, இஸ்ரவேலர்களோ போய் சேர்ந்தார்கள். 29-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்தசமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக், கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள்"(எபிரெயர்11:29).

மோசே விசுவாசத்தினாலே ஒரு அடி எடுத்து வைக்கிறான், செங்கடலை இரண்டாக பிளக்கிறான். முப்பது லட்சம் ஜனங்களும் அவனைப் பின்பற்றி செல்கிறார்கள். அப்படியென்றால் அது அபார அற்புதம்! 30-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது"(எபிரெயர்11:30).

எரிகோ மதில்களில்ரதங்களுக்கு பந்தயம் (race) விடுகிற அளவிற்கு அதுஅவ்வளவு அகலமானது, அதின் உயரம் வானளாவியது.ஆனால் அந்த மதில்கள் விழுந்தது. எப்படி? ஜனங்கள் ஏழு நாள் சுற்றி வந்து, ஏழாம் நாள் ஆர்ப்பரித்தார்கள், மதில்கள் கீழே விழுந்துவிட்டது. விசுவாசத்தினுடைய அபார சக்தி மதில்களை விழச் செய்கிறது. 31-ஆம் வசனத்தைக் கவனியுங்கள்.

"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்"(எபிரெயர்11:31).

எரிகோ பட்டணத்தில் ராகாப் என்கிற வேசி இருந்தாள். அவள் வேவு பார்க்க வந்த இஸ்ரவேலரின் வேவுகாரரை காப்பாற்றினாள். இஸ்ரவேலர்கள் எரிகோ பட்டணத்தை கைப்பற்றும்போது அங்குள்ள எல்லாவற்றையும் அழித்துவிட வேண்டும் என்று தேவன் சொன்னார். அன்றைக்கு ராகாபும், அவளுடைய குடும்பத்தாரும் மட்டும் காப்பாற்றப்பட்டனர். பின்னர் இவள் இயேசுவினுடைய முன்னோர்களில் ஒருவரானாள். ஒரு வேசிக்கு எப்படிப்பட்ட உன்னதமான இடம் கிடைத்தது என்று பாருங்கள். விசுவாசத்தினாலே இது நடந்தது. 32 முதல் 35 வரை உள்ள வசங்களைப் பாருங்கள்.

"பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்"(எபிரெயர்11:32-35).

விசுவாசம் எத்தனை விதமான காரியங்களைச் செய்கிறது பாருங்கள்!

இந்த அர்த்தத்தில்தான் 3-ஆம் வசனத்தை வாசிக்க வேண்டும். 'விசுவாசத்தினாலே' என்று அது ஆரம்பிக்கிறது, அது ஒரு pattern.இந்த வசனம் மட்டும் அந்தpattern-க்கு வரவில்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இது மாறாத pattern.'விசுவாசத்தினாலே' என்று வந்தாலே ஏதோ பிரமாதமாக, ஆச்சரியப்படத்தக்க ஒரு காரியம் நடக்கிறது என்று அர்த்தம். ஆகவே 3-ஆம் வசனத்திலும் அப்படித்தான் இருக்க வேண்டும்.எபிரெயர்நிருபத்தின் ஆசிரியர் விசுவாசத்தினுடைய வியக்கத்தக்க வல்லமையை விவரிக்கப் பார்க்கிறார். 1-ஆம் வசனத்தில் விசுவாசம் என்றால் என்னவென்று விளக்கிவிட்டார். 3-ஆம் வசனத்தில் அதனுடைய அபார சக்தி எப்படிப்பட்டது என்று சொல்லிவிட்டு, அதற்கு உதாரணங்கள் தான் இதுவரை நாம் வாசித்த காரியங்கள். விசுவாசம் எவ்வளவு பயங்கரமான சக்தி என்பதைச் சொல்லுகிறார்.தேவன் தமக்குள் வைத்திருந்த விசுவாசம் என்கிற இந்த வியக்கத்தக்க அபார சக்தியை தம்முடைய வார்த்தையின் மூலமாக கட்டவிழ்க்கிறார். அவர், "வெளிச்சம் உண்டாகக்கடவது"என்கிறார்; 16 பில்லியன் மைல் அளவிற்கு அண்ட சரசரங்கள் உருவாயிற்று. 1 நொடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரம் மைல் தூரம் வெளிச்சம் பயணிக்கிறது. 24 மணி நேரத்திற்கு அதை கணக்கிட்டோம் என்றால் 16 பில்லியன் மைல் தூரம் அது பயணிக்கிறது. ஆகவேதான் இன்றைக்கு விண்வெளிக்குள்எத்தனையோ லட்சம் மைல் தூரம் சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் பார்க்காதது ஏராளமாய் இருக்கிறது. தேவன் இதையெல்லாம் எப்படி உண்டாக்கினார்? எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர்,விசுவாசத்தினுடைய வல்லமையை எண்ணிப்பாருங்கள்,இதனுடைய அபார சக்தியை கவனியுங்கள் என்று சொல்லி,"விசுவாசத்தினாலே உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது" என்று சொல்லுகிறார். உலகத்தையே விசுவாசம் தான் உண்டாக்கினது என்றால் அதன் வல்லமை எப்படிப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அநேகர் விசுவாசத்தினுடைய அபார சக்தியை நம்புவதில்லை; இந்த கோணத்தில் இதைப் பார்ப்பதில்லை. ஆனால் அதுதான் இங்கு point. விசுவாசத்தினாலே உலகங்கள் உண்டாக்கப்பட்டது. விசுவாசம் ஒரு அபார, வியக்கத்தக்க சக்தி. அது தேவனுடைய இருதயத்திலே நிறைந்திருக்கிற ஒரு சக்தி,அது தேவனுடைய வல்லமை. தேவன் தம்முடைய வாயின் வார்த்தையின் மூலமாக அந்த வல்லமையை கட்டவிழ்க்கிறார். அதனுடைய சக்தி எவ்வளவு பெரியது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆசிரியர் இதை ஏன் இங்கு சொல்லுகிறார்? இந்த ஜனங்களுக்கு இதினால் என்ன பிரயோஜனம்? இவர் ஒரு பிரசங்கியார். அவர் இதையெல்லாம் பிரசங்கம்பண்ணித்தான் இங்கு சொல்லுகிறார். இவர் விசுவாசத்தைப் பற்றி நிறைய கற்று வைத்திருக்கிறார், அதைத்தான் இங்கு போதிக்கிறார். வெறும் உலகம் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்கு விசுவாசம் உதவுகிறது என்றால் அதினால்நமக்கு எந்த பயனும் கிடையாது. விசுவாசம் வெறும் அதை அறிந்துகொள்ள உதவுவதில்லை. விசுவாசத்தினாலே ஒரு காரியம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால்,விசுவாசத்தினாலே உலகங்கள் உண்டாக்கப்பட்டது.இதைத்தான் அவர் சொல்ல வருகிறார். இதை அவர் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு ஏன் சொல்லுகிறார்? எபிரெயர் 1-ஆம் அதிகாரத்திலிருந்து பார்த்தோம் என்றால் யூதர்கள் இவர்களைப் பார்த்து,நம்முடைய மதம் இவ்வளவு பெரியது; மோசே நம்முடைய தலைவன், ஆபிரகாம் நம்முடைய தகப்பன்;நமக்கு எவ்வளவு பெரிய தேவாலயம் இருக்கிறது! ஆசாரியன் இருக்கிறான், அவனுடைய உடையைப் பாருங்கள்; பலிகளையும், பண்டிகைகளையும் பாருங்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு சிலுவையில் இரண்டு கள்வர்களுக்கு நடுவே அரை நிர்வாணமாய் தொங்கினவரைஆண்டவர் என்று சொல்லுகிறீர்களே என்று நிந்திக்கிறார்கள். ஆகவே ஆசிரியர் 1-ஆம் அதிகாரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு அதிகாரம் அதிகாரமாக என்ன சொல்லுகிறார் என்றால், நீங்கள் பழைய உடன்படிக்கையைக் குறித்து மேன்மையாகச் சொல்லி, புதிய உடன்படிக்கை ஒன்றுமே இல்லை என்று சொல்லுகிறீர்கள். ஆனால் புதிய உடன்படிக்கை சிலுவையிலே உண்டாக்கப்பட்டது. பழையதைக் காட்டிலும் புதியது மேன்மையானது. இதில் மேலான வாக்குத்தத்தங்கள் இருக்கிறது என்பதை 1-ஆம் அதிகாரத்திலிருந்து படிப்படியாக நிரூபித்துக்கொண்டே வந்து 11-ஆம் அதிகாரத்தில், தேவனுடைய இருதயத்தில் இருக்கிற விசுவாசம் என்கிற சக்திதான் இந்த உலகத்தையே உண்டாக்கினது என்கிறார். தேவன் மனுஷனை தம்முடைய சாயலாகவும், ரூபத்தின்படியேயும் உண்டாக்கினார். அவன் பாவத்தில் விழுந்து கெட்டுப்போய்விட்டான். தேவன் அவனை மீட்டு, இரட்சித்து, புதுச்சிருஷ்டியாய் மாற்றுகிறார். சிருஷ்டிப்பு கெட்டுப்போனவுடன் மறுபடியும் புதுசிருஷ்டிப்பை உண்டாக்குகிறார்.ஏன்? இந்த புதுசிருஷ்டிப்புக்கு அவர் விசுவாசம் என்னும் தம்முடைய வல்லமையை தர விரும்புகிறார். அந்த வல்லமையை வார்த்தையில் வைத்து, அதைநம்முடைய இருதயத்திற்குள் வைக்கிறார். நாம் அந்த சக்தியினால் நிரம்பி, வாயைத் திறந்து பேசும்போது நம்முடைய உலகத்தை அப்படி உண்டாக்குகிறோம், சூழ்நிலைகளை மாற்றுகிறோம் என்பதை சொல்லுவதற்குத்தான் இதைச் சொல்லுகிறார்.

எபிரெயர் நிருபத்தை எழுதினவர் பழைய ஏற்பாட்டு உதாரணங்களை எல்லாம் சொன்னாலும் இவர் புதிய ஏற்பாட்டு ஆசிரியர். இவர் பழைய ஏற்பாட்டு நபர்களை மட்டும் மனதில் வைத்து பேசவில்லை. அவர் பழைய ஏற்பாட்டு உதாரணங்களை ஏன் மேற்கோள் காட்டுகிறார் என்றால் பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய உடன்படிக்கைக்கு வந்தவர்களுக்குப் போதிக்கிறார். ஆகவே பழைய உடன்படிக்கையில் உள்ள உதாரணங்களைச் சொன்னால் நன்றாக விளங்கும் என்றுஅதை எடுக்கிறார். அதேவேளையில் இயேசுவினுடைய போதனைகளையும் மனதில் வைத்திருக்கிறார். இயேசு என்ன போதித்தார்? நீங்கள் google-க்குச் சென்று,"நான்கு சுவிசேஷங்களில் உள்ள விசுவாசம் என்கிற வார்த்தையை கண்டுபிடி" என்று தேடினீர்கள் என்றால், ஒரு நீண்ட வசனப் பட்டியலே வரும். அந்த வசனங்களை பார்த்தீர்கள் என்றால், இயேசு ஒவ்வொரு முறையும் விசுவாசத்தைப் பற்றி பேசும்போது விசுவாசம் எவ்வளவு பெரிய ஒரு சக்தி, அது என்னவிதமாக காரியங்களை மாற்றுகிறது என்பதைத்தான் சொல்லுகிறார். அதிலிருந்துஒரு சில உதாரணங்களைக் கொடுக்கிறேன். முதலாவதுமத்தேயு 6:30-ஆம் வசனம்.

"அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?".

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன என்பதைச் சொல்லுகிறேன். உங்களுக்கு விசுவாசம் இருந்தால், அது உங்களுடைய உலகப்பிரகாரமான தேவைகளை நிச்சயமாக, நன்றாக சந்திக்கும். இயேசு இப்படித்தான் போதிக்கிறார். அவருடைய போதனைகளைக் கேட்க கூட்டம் அலைமோதினது. ஏன்? என்னத்தைப் புசிப்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுத்துவோம் என்பதைக் குறித்து கவலைப்படாதிருங்கள்; கர்த்தர் நம்முடைய அன்றாட தேவைகளைச் சந்திக்கிறார்; அற்ப விசுவாசிகளே, விசுவாசம் வையுங்கள்;விசுவாசத்தினாலே உங்களுடைய அனைத்து தேவைகளும் சந்திக்கப்படும் என்று அவர் பிரசங்கிக்கிறார். அவர் doctrinal பகுதியையும் போதிக்கிறார், practical பகுதியையும் போதிக்கிறார். doctrinal பகுதி practical-க்கு அடிப்படையாக இருக்கிறது. ஆகவேதான் அவருடைய பிரசங்கத்தை ஜனங்கள் விரும்பிக் கேட்டார்கள். எனவேதான் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண், "உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவை" என்று சந்தோஷம் தாங்க முடியாமல் சத்தமிட்டாள். இயேசு பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார், அதைக் கேட்டு அவள் சத்தமிடுகிறாள். அவர் அப்படி என்ன பிரசங்கம்பண்ணினார்? அவருடைய வார்த்தைகளிலே அவ்வளவு பெரிய ஆறுதலும், சமாதானமும், நம்பிக்கையும் இருக்கிறது.

அடுத்தது மத்தேயு 8:10.

"இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 8:10).

ரோமப் போர்ச்சேவகன் ஒருவன் இயேசுவினிடத்தில் வந்து,என் வேலைக்காரன் படுத்த படுக்கையாய் திமிர்வாதக்காரனாய் இருக்கிறான், அவனை சுகமாக்கும் என்று கேட்கிறான். அதற்கு இயேசு, நான் வந்து சுகமாக்குகிறேன் என்கிறார். ஆனால் அவன், "ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்" என்கிறான். இயேசு ஒரு வார்த்தை சொன்னால் தூரத்திலிருக்கிற தன் வேலைக்காரன் சுகமாவான் என்று அவன் நம்புகிறான். யூதர்கள் கூட இப்படி நம்பினது கிடையாது. இவன் ஒரு புறஜாதியான்,ரோமப்போர்ச்சேவகன். இவனுக்கு ஆபிரகாம், மோசே ஆகியோரைப் பற்றி எதுவும் தெரியாது;இவனுக்கு பழைய உடன்படிக்கையைப் பற்றியும் தெரியாது. ஆனால் இயேசு பிசாசைப் பார்த்து,"போ" என்று சொன்னால் அது போகிறதைப் பார்த்திருக்கிறான். அவன், நான் ஒரு அதிகாரி, நான் ஒருவனை வா என்றால் அவன் வருகிறான். போ என்றால் அவன் போகிறான். எனக்கு இராணுவ அதிகாரம் இருக்கிறது. அதுபோல உமக்கு ஆவிக்குரிய அதிகாரம் இருக்கிறது. நீர் சொன்னால் அது அப்படியே ஆகும். ஆகவே நீர் இங்கே இருந்து ஒரு வார்த்தை சொல்லும், என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்கிறான். இயேசுவுக்கு இது ஆச்சரியமாகி விட்டது. இது ஏன் யூதர்களுக்கு புரியவில்லை. இதைப் போன்ற விசுவாசத்தை நான் பார்த்ததில்லை என்கிறார். எபிரெயர் 11:3-இல் சொல்லியிருப்பது அவனுக்கு புரிந்துவிட்டது. விசுவாசம் என்கிற சக்திதான் உலகத்தில் நாம் காண்கிற எல்லாவற்றையும் உண்டாக்கினது. தேவன் அந்த சக்தியை தம்முடைய வார்த்தையில் அனுப்புகிறார். அந்த வார்த்தை வந்தால் போதும் சுசும் வந்துவிடும் என்பதை அவன் நம்புகிறான். ஆக இது நமக்கு என்ன போதிக்கிறது? விசுவாசம் எவ்வளவு வல்லமை உள்ளது? இயேசு ஒரு வார்த்தை சொன்னார், உலகமே உண்டானது. சுகமாக்குவதற்கு ஒரு வார்த்தை போதும். தூரம் எவ்வளவாக இருந்தாலும்,அது இன்னொரு தேசத்தில்இருந்தாலும்பரவாயில்லை, சுகம் வந்து கிடைக்கும். ஒரு வார்த்தைக்கு அவ்வளவு பெரிய வல்லமை இருக்கிறது என்று வேதவசனம் சொல்லுகிறது.

இன்னொரு உதாரணம், இயேசுவும் சீஷர்களும் படகில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீஷர்கள், அமிழ்ந்துபோகிறோமே என்று பயப்பட்டுஇயேசுவிடம் முறையிடுகிறார்கள். அதற்கு இயேசு,"அற்ப விசுவாசிகளே, ஏன் பயப்படுகிறீர்கள்?" என்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம்? உங்களுக்கு விசுவாசம் இல்லையா, விசுவாசம் இருந்தால் பயம் வராதே என்கிறார். நம்முடைய வாழ்க்கையில் கடல் கொந்தளிப்பது போல சூழ்நிலைகள் எழும்பலாம், காற்ற அடிக்கலாம், புயல் வீசலாம், அலைகள் மோதலாம். ஆனால் விசுவாசம் இருந்தால் அதையெல்லாம் மேற்கொண்டு கரைக்குப் போய் சேரலாம் என்பதுதான் அதன் அர்த்தம். இயேசு, "அற்ப விசுவாசிகளே" என்கிறார். அப்படியென்றால் உன்னால் விசுவாசிக்க முடியவில்லையா, உனக்கு விசுவாசம் இல்லையா, நீ காற்றை அதட்டியிருக்க முடியாதா என்று கேட்கிறார். இன்னொரு இடத்தில் உன்னுடைய விசுவாசம் எங்கே என்று கேட்கிறார். அதாவது நீ இதைச் செய்திருக்கலாமே என்பதுதான் இதன் அர்த்தம்.

அடுத்தது மத்தேயு 9:22. பன்னிரெண்டு வருஷ பெரும்பாடுள்ள ஸ்திரீ ஒருவள் கூட்ட நெரிசலில் இயேசுவினுடைய வஸ்திரத்தைத் தொட்டு சுகமடைந்துவிட்டாள். இயேசு தம்முடைய சரீரத்திலிருந்து வல்லமை புறப்பட்டுப்போனதை உணர்ந்து, என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறார். அதற்கு சீஷர்கள், இவ்வளவு கூட்ட நெரிசலில் யார் தொட்டது என்று கேட்கிறீரே என்கிறார்கள். அதற்கு அவர், யாரோ என்னை விசுவாசத்தினால் தொட்டார்கள் என்கிறார்.

அடுத்தது மத்தேயு 14:31. பேதுருவும் சீஷர்களும் படகில் இருக்கிறார்கள். கடல் கொந்தளிக்கிறது, அவர்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று இயேசு கடலில் நடந்து வருகிறார். பேதுருவுக்கு அதைப் பார்த்து தைரியம் வந்து, நானும் அங்கு வரலாமா என்று அவரிடம் கேட்கிறான். அதற்கு இயேசு, வா என்று சொல்லிவிட்டார். அவனும் கடலில் இறங்கி நடக்கிறான். அவன் இயேசுவின் மீதிருந்து தன் கண்களை எடுத்து, கடலின் மீதும், காற்றின் மீதும் தன் கண்களை வைத்து தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான். இயேசு அவனுடைய கரத்தைப் பிடித்து தூக்கி, "அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்" என்கிறார். இந்த கதையின் அர்த்தம் என்ன? நீ எந்த காற்றையும், கடலையும், கொந்தளிப்பையும் கண்டு பயப்படுகிறாயோ அதன்மீது விசுவாசம் உன்னை நடக்கப்பண்ணும் என்பதுதான் அதன் அர்த்தம். விசுவாசம் என்பது ஒரு அபார சக்தி. ஒரு மனுஷனுடைய இருதயத்தில் விசுவாசம் இருக்குமானால் அவன் பயப்படுகிற காரியத்தை தன்னுடைய பாதங்களுக்கு கீழாக கொண்டுவருவான், அதை மிதிப்பான்.

அடுத்தது மத்தேயு 21:22. இயேசு, "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" என்றார்.விசுவாசம் இருந்தால் எல்லா ஜெபத்திற்கும் பதில் கிடைக்கும். விசுவாசம் இல்லையென்றால் எவ்வளவு ஜெபித்தாலும் ஒன்றும் கிடைக்காது. அநேகருக்கு ஜெபம் என்பது ஒரு மதச்சடங்காக இருக்கிறது. இயேசு மதத்தைப் போதிக்கவில்லை, அவர் விசுவாசத்தைப் போதிக்கிறார். நாம் விசுவாசத்தோடு ஜெபித்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று சொல்லுகிறார். ஆக, விசுவாசம் என்பது ஒரு அபார சக்தி. இன்னும் கேட்டால் இந்த உலகத்தில் நாம் காண்கிற அத்தனை சக்திகளைக் காட்டிலும் அது பெரிய சக்தி. இந்த உலகத்திலிருக்கிற இயற்கை பிரமாணங்கள், சக்திகள் எல்லாவற்றிற்கும் தாயாய் இருக்கிற விசுவாசம் என்கிற சக்தி குட்டி போட்ட சக்திதான் இவைகள் எல்லாம்.

இன்றைக்கு physics படித்து, நன்றாக ஆராய்ந்து, nuclear power-ஐ கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்றைக்கு உலகத்தில் மனிதர்கள் அறிந்த power-இல் பெரிய power அதுதான். ஆனால் அது குட்டிதான், அதற்கு தாய் விசுவாசம். அந்த குட்டியே (nuclear power)அவ்வளவு பெரிய power-ஆக, நம்மை நடுங்க வைக்கிற, உலகத்தில் இருக்கிற பல நாடுகளில் light-ஐ எரியச் செய்கிற ஒன்றாக இருக்கும் என்றால், இதற்கு எல்லாம் தாயாய் இருக்கிற விசுவாசம் எத்தனை பேருடைய வாழ்க்கையில் விளக்கேற்றும், அதை ஒளிமயமானதாக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். ஆக விசுவாசம் என்பது ஒரு அபார சக்தி.

லூக்கா 17:5,6 ஆகிய வசனங்களைக் கவனியுங்கள்.

"அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்"(லூக்கா17:5,6).

அப்போஸ்தலர்கள் கேட்கிற கேள்வியையும், இயேசு அதற்குச் சொன்ன பதிலையும் கவனியுங்கள். விசுவாசம் அதிகமாக வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். இயேசு விசுவாசத்தினுடைய அளவைச் சொல்ல விரும்புகிறார். இருப்பதிலேயே சிறிய விதையாக தேர்ந்தெடுத்து, "கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால்" என்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம்? உலகத்தில் power என்பது பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நாம் யோசிக்கிறோம். ஆமாம், இந்த உலகத்தில் அவ்வளவு இருந்தால்தான் ஏதாவது செய்ய முடிகிறது. ஆனால் விசுவாசம் என்கிற power எல்லாவற்றைக் காட்டிலும் மேலான power. அதிலிருந்து தான் இந்த உலகத்திலிருக்கிற எல்லா power-ம் உண்டானது. ஆகவே அதனுடைய level வேறு. அந்த power என்று வரும்போது கடுகு அளவு இருந்தால் போதும். நாம் என்ன ஆக வேண்டும் என்று குறிப்பாகச் சொல்லுகிறோமோ அதன்படியே ஆகும், உனக்கு அது கீழ்ப்படியும் என்று இயேசு சொல்லுகிறார். இதற்கு எவ்வளவு விசுவாசம் வேண்டும்? இதற்கு கடுகு அளவு விசுவாசம் இருந்தால் போதும். உன்னுடைய பிரச்சனை விசுவாசம் இல்லையே என்பது அல்ல, இருக்கிற கொஞ்ச விசுவாசத்தை எப்படி கட்டவிழ்ப்பது என்று உனக்குத் தெரியவில்லை. கடுகு அளவு விசுவாசம் பெரிய வேலையைச் செய்யும் என்கிறார். அதை எப்படி கட்டவிழ்ப்பது? சொல்லுவதுதான் கட்டவிழ்க்கிற விதம். நம் உள்ளத்திலிருக்கிற விசுவாசத்தை கட்டவிழ்ப்பது எப்படி? சொல்லுவதின் மூலமாகத்தான்.

தேவன் நம்மை புதுசிருஷ்டியாக்கி இருக்கிறார். புதுசிருஷ்டிப்பில் உள்ளான மனிதனுடைய capacity-ஆனது unlimited ஆகிவிட்டது. ஆகவேதான் நாம் உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட முடியும். இப்படி இருதய capacity-ஐ unlimited-ஆக ஆக்கினபடியால் தான் கிறிஸ்து விசுவாசத்தினாலே நமக்குள்ளே வாசம்பண்ண முடியும். இருதய capacity அதிகமானபடியால் தான் புத்திக்கெட்டாத அவருடைய அன்பின் அகலம், ஆழம், நீளம், உயரம் இவற்றை எல்லாம் அறிந்து உணர்ந்துகொள்ள முடியும். சிறிய இருதயத்திற்குள் எப்படி அவ்வளவு போக முடியும்? புதுசிருஷ்டிப்பினுடைய இருதயத்தின் capacity வேறு. தேவனுடைய விசாலமான, அகலமான இருதயத்தில் விசுவாசம் என்னும் வல்லமை ஏராளம், தாராளமாய் அடங்கியிருக்கிறது. அவர் அதிலிருந்து பேசுகிறார், அதிலிருந்துதான் உலகமே உண்டானது. இன்றைக்கு விசுவாசிகளும் அப்படிப்பட்ட விசுவாசத்தினாலே நிறைந்து பேசினால் எப்படிப்பட்ட உலகமும், எதிர்காலமும் உண்டாகும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

தேவன் வசனத்தில் விசுவாசத்தை வைத்துவிட்டார். அவர் தாம் சொல்லி உலகத்தை உண்டாக்கின வார்த்தைகளைவேதத்தில் வைத்து, இதை எடுத்து உன்னுடைய இருதயத்தில் வைத்தாய் என்றால் அந்த விசுவாசம் உன்னுடைய இருதயத்தில் வந்துவிடும்;பிறகு வாயால் அதைப் பேசு, அது அப்படியே வேலை செய்யும் என்கிறார். என்ன அற்புதமான காரியம் என்று பாருங்கள்! "விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்" என்று வேதம் சொல்லுவது ஒரு சத்தியம் அல்ல, அது ஒரு தீர்க்கதரிசனம். நாம் விசுவாசத்தால் பிழைக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். விசுவாசம் இருந்தால் பிரச்சனைகளை மேற்கொள்ளலாம், ஜெயிக்கலாம். கர்த்தர் நமக்கு புதுப்புது வழிகளைக் காட்டுவார்; புதுப்புது காரியங்களைச் செய்வார். ஆனால் நாம் நம்முடைய சுய புத்தியைச் சார்ந்து, அதை நம்பிக்கொண்டிருக்கிறோம். அதற்கு பதிலாக, வசனத்தை உள்ளத்தில் வைத்து, விசுவாசத்தை நிரப்புவோம், வாயில் அதை மட்டும் பேசுவோம், வெற்றி நம்மை பின்தொடர்ந்து வரும்.

Donation
eStore
Copyright © 2017 Victory Christian Foundation. All rights reserved.
Website & Social Media by Open Minds Agency