0 item - ₹0.00

விசுவாச வாழ்க்கை (பாகம் 49) - மோசேயின் விசுவாசம்: இரட்சிப்பு!

Sunday Tamil Service - 04 AUG 19

Transcript

மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்(எபிரெயர் 11:24-27).

எபிரெயர் நிருபம் 11-ஆம் அதிகாரத்திலிருந்து விசுவாச வாழ்க்கையைக் குறித்து நாம் போதித்து வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது விசுவாசத்தைக் குறித்த அற்புதமான வேதப்பகுதி. இதிலே மோசேயைக் குறித்து அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் ஆபிரகாமைக் குறித்துச் சொல்லும்போது அவனுடைய விசுவாசத்தை நான்கு கட்டங்களாக பிரித்துப் போதித்திருக்கிறார். இப்போது மோசேயைக் குறித்து இன்னும் அதிகமான தகவலைக் கொடுக்கிறார். ஒன்று, அவன் பிறந்தவுடன் காக்கப்பட்டதே விசுவாசத்தினால் தான். அவனை அழகுள்ள பிள்ளை என்று கண்டு அவனுடைய பெற்றோர் அவனை ஒளித்து வைத்தார்கள். இந்த பிள்ளை மீது ஏதோ நோக்கம் இருக்கிறது என்று அவர்கள் கண்டார்கள். அழகு என்றால் வெறும் முக அழகு அல்ல. தேவன் ஏதோ ஒரு நோக்கத்திற்காக பிறக்கச் செய்திருக்கிறார் என்கிற ஒரு அறிவு, வெளிப்பாடு, அதைக் குறித்த விசுவாசம் அவர்களுக்குள் இருந்ததினால் ஒளித்து வைத்தார்கள். விசுவாசம் பெற்றோருக்குள் இருந்தது, அதன் மூலமாகத்தான் இவனுக்குள்ளும் அது வர ஆரம்பித்தது.

இரண்டாவது, அவன் பெரியவனானபோது சில தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமாய் இருந்தது. அவன் தன் தாயினால் நன்றாக போதிக்கப்பட்டிருக்கிறான். இப்போது இவன் வளர்ந்துவிட்டான். இவனே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அவன் தீர்மானங்களை எடுக்கிறான். பார்வோனின் குமாரத்தியினுடைய மகள் என்று என்னப்படுவதை அவன் வெறுக்கிறான். நான் பார்வோனின் குமாரத்தியின் மகன் அல்ல, ஆபிரகாமின் சந்ததியைச் சேர்ந்தவன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான்.

மூன்றாவது, வேறு பிரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை. அவனுடைய உலகத்திலே அவன் அரண்மனையிலே வாழுகிறான். எல்லா அதிகாரமும் ஐசுவரியமும் பாவ சந்தோஷங்களும் அனுபவிக்கிற இடம் அது. ஆனால் எதுவுமே அவனை கவர்ந்திழுக்க முடியவில்லை. அவன் அதன் மத்தியில் வாழ்ந்தாலும், அதையெல்லாம் எத்தனையோ வருஷங்கள் அனுபவித்திருந்தாலும் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு அது தடையாய் இருக்கிறது என்று அறிந்துகொண்டவுடன் அதையெல்லாம் வெறுத்து ஒதுக்கிவிட்டு, கர்த்தருடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொள்கிறான். இது ஆச்சரியமான ஒரு காரியம். அவன் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கிறான், சிந்திப்பதில் வித்தியாசமானவனாக இருக்கிறான். பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று என்னப்படுவதை எவராவது விட்டுக் கொடுப்பார்களா? எவராவது பாவ சந்தோஷங்களை வெறுப்பார்களா? நாம் பாவ சந்தோஷத்திற்கு உள்ளே ஈர்க்கப்படுகிறோம். நாம் பிறக்கும்போதே உள்ளத்திலே பாவிகளாய் இருக்கிறோம். பாவம் என்கிற சுபாவம் நம் முற்பிதாவாகிய ஆதாமிடத்திலிருந்து நமக்கு வந்துவிட்டது. பாவம் செய்வதற்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை, அது தானாக வரும். அதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு மனுஷன் பாவ சந்தோஷத்தை விட்டுக் கொடுப்பானா? எல்லாரும் பாவ சந்தோஷத்தை நாடுகிறார்கள், தேடுகிறார்கள். பாவ உள்ளம் அதை நாடுகிறது. ஆனால் இவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டு விட்டது. இவன் வேறு பிரிக்கப்பட்டவனாய் இருக்கிறான். வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை என்றால் உடையையோ, முடி வெட்டுவதையோ மாற்றுவது அல்ல. அது எண்ணங்களிலே மாறுவது. எண்ணங்களின் மூலமாக வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. பவுல் சொன்னது போல முன்பு எதையெல்லாம் மேன்மையாக எண்ணினானோ அதையெல்லாம் இன்றைக்கு குப்பையாக எண்ணுகிறான். கிறிஸ்துவை அறிகிற அறிவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதெல்லாம் குப்பை என்கிறான். முன்பு அவன் கிறிஸ்துவை வெறுத்தான். கிறிஸ்துவை வணங்குகிறவர்கள், ஆராதிக்கிறவர்கள் என்று இப்படிப்பட்ட சபைகள் எல்லாம் அழிந்து ஒழிய வேண்டும் என்று இதே வேலையாக துன்புறுத்துகிறவனாக இருந்தான். கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் சிலுவையையும் வெறுத்தான், நிந்தித்தான். சிலுவை மரணம் என்பது கேவலமான மரணம். அதில் மரித்த ஒருவரை நீங்கள் வணங்குகிறீர்கள், கிறிஸ்தவம் என்று புதிதாக ஒன்று உருவாயிருக்கிறது. நான் இதை அழிக்காமல் விடமாட்டேன் என்று ஊரெல்லாம் சுற்றித் திரிந்தான். ஆனால் நான் கிறிஸ்துவையும் அவருடைய சிலுவையையுமே அன்றி வேறு ஒன்றையும் குறித்தும் நான் மேன்மைப்பாராட்டுவதில்லை என்று அவன் தலைகீழாக மாறிவிட்டான். இது வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை.

நான்காவதாக, இரட்சிப்பு. 28-ஆம் வசனத்தை மட்டும் தான் இன்றைக்கு பார்க்கப்போகிறோம். ஒரு மனுஷனுக்கு இரட்சிப்பு எப்படி உண்டாகிறது என்பதை எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் மோசேயை வைத்து சித்தரிக்கிறார். ஏன் அவ்வளவு முக்கியமாக மோசேயை எடுத்து அவருடைய வாழ்க்கையிலே நடந்த காரியங்களை வைத்து இரட்சிப்பை சித்தரிக்கிறார்? ஏனென்றால் மோசே என்றால் எபிரெய மக்கள் நம்புவார்கள். இவர்கள் முன்பு யூத மார்க்கத்தில் இருந்தவர்கள், இப்போது இயேசுவின் பேரில் நம்பிக்கை வைத்து கிறிஸ்தவர்களாகி விட்டார்கள். எபிரெய மார்க்கத்தைச் சேர்ந்த இவர்களுடைய நண்பர்கள் இவர்களை நிந்திக்கிறார்கள். இவ்வளவு பெரிய ஆலயம், ஆசாரியர்கள், பலிகள், முறைமைகள், பண்டிகைகள், பத்து கற்பனைகள், ஆபிரகாம் நம் முற்பிதா, மோசே என்கிற பெரிய தீர்க்கதரிசி என்று இவ்வளவு பெரிய பாரம்பரியத்தை விட்டு விட்டு சிலுவையில் இரண்டு கள்வர்கள் மத்தியில் ஒரு மனுஷன் மரித்தான், அந்த மனுஷனைப் பின்பற்றி, அவரை ஆண்டவர் இரட்சகர் என்று நம்பி, அவர் பின்னால் போகிறீர்களே, உங்களுக்கு அசிங்கமாக இல்லையா, வெட்கக்கேடாக இல்லையா என்று சொல்லி அவர்களை நிந்திக்கிறார்கள். யூதமார்க்கத்திற்கு திரும்பி வந்துவிடுங்கள் என்கிறார்கள். சிலர் இதை விட்டுப்போய் விடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிற ஒரு நிலமை உண்டாயிருக்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால் எபிரெயர் நிருபம் 10-ஆம் அதிகாரத்தின் கடைசி இரண்டு வசனங்களில், “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” என்று சொல்லி பிறகுதான் எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் விசுவாசத்தைப் பற்றி போதிக்க ஆரம்பிக்கிறார். நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அதற்கே திரும்ப போய்விடாதீர்கள், விசுவாசித்து முன்னே செல்லுங்கள் என்கிறார். அதற்காகத்தான் அவர் 11-ஆம் அதிகாரத்தை எழுதுகிறார்.

ஆக யூத மார்க்கத்தில் இருக்கிறவர்களுக்கு மோசே மிகவும் பெரியவர். அவர் ஏன் பெரியவர் என்றால் அவர் தான் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவர். அவர்தான் மலையில் பல நாட்கள் தங்கியிருந்து, தேவனை தரிசித்து, தேவன் தம் கைகளால் கற்பலகைகளில் பத்து கற்பனைகளை எழுதிக்கொடுத்ததை எடுத்துக்கொண்டு வந்தவர். அப்போது அவருடைய முகத்தைக்கூட ஜனங்களால் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. அவர் மலையிலேயே சாப்பிடாமல் பல நாட்கள் இருந்துவிட்டு வருகிறார். தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தால் சாப்பிட வேண்டியதில்லை. ஏனென்றால் மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். மோசே தேவனுடைய சமுகத்திலிருந்து வருகிறார், அவருடைய முகம் ஜொலிக்கிறது. அந்த மகிமையைக் கண்டு அதற்கு முன்பாக ஜனங்களால் நிற்க முடியவில்லை. அவர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் பயப்படுகிறார்கள். ஆக யூதர்களுக்கு மோசேயைப் பற்றி எவ்வளவு உயர்ந்த எண்ணம் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அவர்கள் மோசேயை அவ்வளவு பெரிதாக மதிக்கிறார்கள். யூதர்களுக்கு தேவனுக்கு அடுத்தபடியாக மோசே தான். அதுமட்டுமல்லாமல், யூதர்களுக்கு நியாயப்பிரமாணம் என்பது மிக முக்கியமானது. பத்து கற்பனையைக் கொண்டுவந்து கொடுத்தவர் மோசே தான். அது அவர் மூலமாகத்தான் வந்தது. இதுவும் அவரை பெரிய ஆளாக ஆக்கிவிடுகிறது. யூத மார்க்கத்தில் அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய பொக்கிஷமே பத்து கற்பனைகள் தான். அதை வைத்துதான் அவர்களுடைய மதமே build up ஆகிறது. அதைப் பற்றி அவர்களுக்கு இரண்டு தவறான அபிப்பிராயங்கள் இருந்தது. ஒன்று, பத்து கற்பனை அவர்களுக்கு கொடுக்கப்பட்டதே அவர்களை விசேஷமானவர்களாக ஆக்கிவிட்டது என்று அவர்கள் எண்ணினார்கள். சுற்றியுள்ள எந்த ஜனங்களுக்காவது தேவன் பத்து கற்பனையை கொடுத்தாரா? எவரிடமாவது இப்படி கையால் எழுதி கற்பலகைகளில் கொடுத்தாரா? இதுவே தேவன் எங்களை நேசிக்கிறார், நாங்கள் தான் தேவனுடைய மக்கள், உலகத்தில் மீதமிருக்கிற மக்கள் நரகத்தில் எரிகிறதற்கான விறகுக்கட்டை, நாங்கள் தான் பரலோகம் போவோம், நாங்கள் தான் தேவனுடைய பிள்ளைகள், நாங்கள் தான் இரட்சிப்புக்கு சொந்தமானவர்கள், வேறு எவருக்கும் இரட்சிப்பு இல்லை, அதனால் கர்த்தர் வேறு எவரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. இவர்களுக்கு தம்மை வெளிப்படுத்தி, இவர்கள் மூலமாக மற்ற ஜாதி ஜனங்களுக்கு தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் கர்த்தருடைய சித்தம். இவர்களை எழும்பி பிரகாசிக்கவும், மற்ற ஜனங்களுக்கு முன்பாக சாட்சியாக இருக்கவும் சொல்லுகிறார். ஒரு மாதிரியைப்போல இவர்களை எடுத்து பயன்படுத்தி மற்றவர்களை கவர்ந்திழுப்பதற்கு அவர் திட்டமிட்டு வேலை செய்கிறார். ஆனால் இவர்கள் தவறாக நினைத்துவிட்டார்கள்.

அவர்கள் செய்த இரண்டாவது தவறு என்னவென்றால், பத்து கற்பனையின் நோக்கத்தை அவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள். கர்த்தர் அதைக் கொடுக்கும்போது, “நீங்கள் இதைச் செய்தால் பிழைப்பீர்கள்” என்று சொல்லித்தான் கொடுக்கிறார். செய்தால் பிழைப்பீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறாரே, அப்படியென்றால் இதை செய்ய முடியும் போல, ஆகவே நாம் செய்தே பிழைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானம்பண்ணிவிட்டார்கள். ஆனால் தேவன், இதைச் செய்தால் பிழைப்பீர்கள் என்று வேறு அர்த்தத்தில் சொன்னார். இதை உன்னால் செய்ய முடியாது, உனக்குள் பாவம் இருக்கிறபடியால் பத்து கற்பனையை செய்யவே முடியாது. முடியாது என்பதை நிரூபிப்பதற்காகத்தான் பத்து கற்பனையைக் கொடுக்கிறேன். நீ இதைச் செய்துவிட்டால் நித்தியஜீவனை அடைந்துவிடலாம் என்கிறார். சிலருக்கு வயதாகி விட்டதால் அவர்களை கைத்தாங்கலாக கூட்டிச் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அதை விரும்புவதில்லை. அவர்கள் கையைப் பிடித்து நடந்தால், “கையை விடு, நானே நடக்கிறேன்” என்று சொல்லுவார்கள். என்னால் முடியாதா, நான் என்ன கிழவனாக ஆகிவிட்டேனா என்று அவர்களுக்கு ஒரு எண்ணம். உங்களால் முடியாது என்று சொன்னால் அவர்களுக்கு அது பிடிக்காது. அவர்கள் தடுமாறி கீழே விழுந்தால் தான் அவர்களுக்கு புத்தி வருகிறது. ஏனென்றால் முடியாது என்று சொல்லும்போது அதை நம்பாதவர்களை என்ன செய்வது? விழுந்த பிறகுதான் நம்மால் முடியவில்லை என்று அவர்களுக்கு புத்தி வருகிறது. அதுபோல மனுஷனிடம் உன்னால் முடியாது என்று சொன்னால் அவன் ஒத்துக்கொள்ளமாட்டான். தேவன் பத்து கற்பனையை கொடுத்து உங்களால் இதைச் செய்ய முடியாது என்று சொல்லியிருந்தால் மனுஷன், “நீர் இருநூறு கற்பனைகளை கொடுப்பீர் என்று எண்ணினேன், வெறும் பத்து கற்பனை தானே, இதைச் செய்து முடித்து விடுகிறேன்” என்று சொல்லியிருப்பான். ஆகவேதான் தேவன் அப்படிச் சொல்லவில்லை. இதைச் செய்தால் பிழைப்பீர்கள், இதைச் செய்தால் நித்தியஜீவனை அடைந்துவிடலாம் என்று இதை ஒரு சவாலாக அவர்களுக்கு கொடுக்கிறார். ஆனால் ஒரு மனுஷனாலும் இதைச் செய்ய முடியாது. எனவேதான் ஐசுவரியவானாகிய வாலிபன் இயேசுவிடம் வந்து, “நான் நித்தியஜீவனைப் பெறுவது எப்படி?” என்று கேட்டபோது இயேசு அவனைப் பார்த்து, “பத்து கற்பனைகளின்படி செய்” என்கிறார். அவன், “இதை என் சிறுவயது முதல் செய்து வருகிறேன்” என்கிறான். இதுதான் அவர்களுடைய தவறான புரிந்துகொள்ளுதல். பத்து கற்பனை என்ன பெரிய விஷயம், இதையெல்லாம் எங்கள் சிறுவயது முதல் செய்து வருகிறோம். எங்களுக்கு தெரியாததா? நாங்கள் எவ்வளவு பெரிய யோக்கியர்கள் தெரியுமா? என்றுதான் பவுல் கூட எண்ணினார். நான் ஒரு எபிரெயன், பென்யமீன் கோத்திரத்தான், பரிசேயரிலும் பரிசேயன், அப்பழுக்கற்ற யூதன், என்னிடம் ஒரு தவறு கூட கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னார். அவர் இரட்சிக்கப்படுவதற்கு முன் தன்னைப் பற்றி அப்படித்தான் எண்ணினார். ஆனால் ரோமர் 7-ஆம் அதிகாரத்தில் அவர் கதறுகிறார். நியாயப்பிரமாணம் தான் எனக்குள் பாவம் இருக்கிறது என்பதை காண்பித்தது என்கிறார். கர்த்தர் அதற்குத்தான் அதைக் கொடுத்தார். மனுஷனுக்குள் பாவம் இருக்கிறது, பாவம் இருப்பதால் ஒரு மனுஷனும் அதைச் செய்ய முடியாது என்பதை காண்பிப்பதற்காகத்தான் தேவன் பத்து கற்பனையைக் கொடுத்தார்.

இன்றைக்கும் அநேக கிறிஸ்தவர்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் பத்து கற்பனையை ஏதோ தங்களை நீதிமான்களாக ஆக்குவதற்கு கொடுத்ததாக எண்ணுகிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் நிருபத்தில், ஒரு மனுஷனும் நியாயப்பிரமாணத்தினால் நீதிமானாக்கப்பட முடியாது என்று தெளிவாகப் போதிக்கிறார். ஆக மனுஷனால் இது முடியாது என்பதை நிரூபிப்பதற்காகத்தான் தேவன் அதைக் கொடுத்தார். அது முதல் நோக்கம். அதை நிரூபித்தவுடன் மனுஷனுக்கு ஒரு பிரச்சனையாகி விடுகிறது. இயேசு ஐசுவரியவானிடம் பத்து கற்பனையின்படி செய் என்கிறார். அவன், “நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன்” என்கிறான். அதற்கு இயேசு, “உன்னிடத்தில் ஒரு குறைவுண்டு” என்கிறார். அவன், “என்னிடத்தில் என்ன குறை இருக்கிறது, எனக்குள் எந்த குறையும் இல்லையே!” என்று எண்ணுகிறான். உனக்கு இப்படிச் சொன்னால் விளங்காது, நீ அதை ஒத்துக்கொள்ளமாட்டாய், அதனால் உனக்கு நிரூபித்து காண்பிக்கிறேன் என்று இயேசு அவனிடம், “உனக்குள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு வந்து என்னைப் பின்பற்று” என்றார். அவன் வருத்தத்தோடே போய்விட்டான், ஏனென்றால் அவனுக்கு மிகுந்த ஆஸ்திகள் இருந்தது. பாவத்தைக் குறித்த இச்சை அவனை ஆட்கொண்டிருக்கிறது, பொருளாசை அவனை ஆட்கொண்டிருக்கிறது. அவன் தன்னுடைய பணத்தையும் ஆஸ்தியையும் தான் பெரிதாக எண்ணுகிறான். அவன் அதை விட்டுப் பிரியமாட்டான். மோசே அதை உதறி தள்ளிவிட்டு வந்தான். ஆனால் இவனோ, எனக்கு கர்த்தர் வேண்டாம், இதுதான் வேண்டும் என்று போய்விட்டான். இயேசு அவனுக்குள் இருக்கிற பாவ இச்சையை நிரூபித்துவிட்டார். பத்து கற்பனையை தேவன் அப்படித்தான் வடிவமைத்திருக்கிறார். அதை வடிவமைத்த விதத்தைப் பார்த்தால் பத்தில் முதல் ஒன்பது கற்பனைகள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைக் குறித்தது. மனுஷனை விரக்தியின் எல்லைக்குள் தள்ளுவது போன்று அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பத்தாவது கற்பனை நாம் செய்தோமா, இல்லையா என்பதைப் பற்றியதல்ல. நமக்குள்ளே என்ன இருக்கிறது, நாம் அதை நினைத்தோமோ என்பது. இதில் எல்லாரும் தோல்வியடைந்து விடுகிறார்கள். இதில் நான் தேர்ச்சி பெற்று விடுவேன் என்று சொல்லுபவர்கள் பொய்யர்கள். தேவன் இதை அப்படி வடிவமைத்திருக்கிறார். ஒன்பதில் வெற்றி பெற்றாலும் பத்தாவதில் நிச்சயமாக தோற்று விடுவார்கள் என்று தேவன் அப்படி ஆக்கிவிட்டார். தோல்வி அடையச் செய்வதற்காகவே பத்தாவது கற்பனையை வடிவமைத்திருக்கிறார். நியாயப்பிரமாணத்தை திரும்ப திரும்ப செய்து பார்த்து, செய்தால் பிழைக்க முடியவில்லை. கடைசியில் விரக்தியின் விளிம்புக்கு வந்து ஒரு மனுஷனை கதற வைக்கிறார். “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும், என்னை இரட்சியும், என் மேல் இரக்கமாயிரும், என்னை மன்னியும், எனக்குள் பாவம் குடிகொண்டிருக்கிறது, அதனால் தான் என்னால் நியாயப்பிரமாணத்தை செய்ய முடியவில்லை. என்னை விட்டு பாவத்தை அகற்றும், பாவத்தின் பிடியிலிருந்து என்னை விடுதலையாக்கும், எனக்கு ஒரு இரட்சகர் இருக்கமாட்டாரா” என்று கதற வைக்கிறார். பிறகுதான் மனம் இரட்சகரை பாராட்ட முடிகிறது. இயேசுவை காட்சியில் கொண்டு வருவதற்கு முன் நியாயப்பிரமாணத்தைக் கொடுக்கிறார். இரட்சகரை ஏற்றுக்கொள்ளுவதற்கு எல்லாருடைய மனதையும் ஆயத்தம்பண்ணுவதற்காக நியாயப்பிரமாணம் வந்தது. நீ பாவி, உனக்கு ஒரு இரட்சகர் தேவை என்கிற உணர்வை உண்டாக்கி, இதோ இரட்சகர் என்று காண்பிப்பதற்காகத்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. ஆனால் யூதர்கள் பெரிய தவறை செய்துவிட்டார்கள். ஒருவனை நீதிமானாக்கும்படியாக நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இதைச் செய்தே ஒருவன் நீதிமானாகி விடலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இது பெரிய தவறு.

எபிரெய நிருபத்தின் ஆசிரியர் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு இதை எழுதுகிறார். இவர்களும் அந்த தவறான பாதையில் சென்று கொண்டிருந்து இப்போது இயேசுவின் பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் யூத மார்க்கத்தில் இருக்கிறவர்கள் இயேசுவை நிந்திக்கிறார்கள். இவர் சிலுவையில் இரண்டு கள்வர்களுக்கு நடுவே தொங்கினார், தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை, இவரை நீங்கள் ஆண்டவர் என்று சொல்லுகிறீர்களே என்று அவரை நிந்திக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சிலுவையில் என்ன நடந்தது என்பதும், இவர் யார் என்பதும் விளங்கவில்லை. அவர்களுக்கு குறிப்பாக மோசேயைப் பற்றி சொல்லுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், நீங்கள் மோசேயை ஏன் பெரிய ஆளாக நினைக்கிறீர்கள் என்றால், ஏனென்றால் அவர் உங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவர். அவர் அதை கற்பலகைகளில் எழுதி கையால் வாங்கிக்கொண்டு வந்தார். தேவனுடைய பிரசன்னத்திலேயே இருந்துவிட்டு வந்தார். அவருடைய முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை, அவ்வளவு ஒளி பிரகாசமாய் இருந்தது. அதினால் தான் அவரை பெரிய ஆளாக நினைக்கிறீர்கள். எங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொண்டுவந்து கொடுத்தார் என்று சொல்லுகிறீர்கள். ஏதோ நியாயப்பிரமாணம் தான் கர்த்தருக்கு முன்பாக உங்களை நீதிமானாக ஆக்குகிறது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு தெரியுமா, மோசே நியாயப்பிரமாணத்தினால் நீதிமானாக்கப்படவில்லை. தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவினுடைய இரத்தம் சிந்தப்பட்டு, அந்த இரத்தம் தெளிக்கப்பட்டதினால் அவர் நீதிமானாக்கப்பட்டவர் என்பதை உங்களுக்கு காண்பிக்கிறேன். அப்போதாவது நீங்கள் நம்புவீர்களா? மோசே நியாயப்பிரமாணத்தினால் நீதிமானாக்கப்படவில்லை என்றால் நீங்கள் எப்படி நீதிமானாக்கப்படப் போகிறீர்கள்? உங்களை திட்டுகிறவர்கள் எப்படி நீதிமான்களாகப் போகிறார்கள்? மோசேயின் வழியைப் பின்பற்றுங்கள், அவர் எப்படி நீதிமானானார் என்பதைப் பாருங்கள். அவர் பஸ்காவை அனுசரித்தார், இரத்தம் பூசுதலாகிய அந்த நியமத்தை ஆசரித்தார், அதன் மூலமாகத்தான் இரட்சிப்பு உண்டானது. இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டது, அந்த சிந்தப்பட்ட இரத்தத்தை நாம் எப்படி விசுவாசிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய கதை பழைய ஏற்பாட்டிலேயே வருகிறது. ஆக மோசே அப்படித்தான் இரட்சிக்கப்பட்டார். இவர்கள் இயேசுவை விளங்கிக்கொள்ளாமல் அவரை நிந்திக்கிறார்கள், நீங்கள் இவர்களுடைய பேச்சை நம்பாதீர்கள், இவர்கள் இயேசுவை விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு மோசேய#2991;ைக் காட்டிலும் பெரியவர். “என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை கர்த்தர் அனுப்புவார், அவருக்குச் செவிகொடுங்கள்” என்று மோசே சொல்லியிருக்கிறார். அந்த தீர்க்கதரிசி வந்துவிட்டார், ஆனால் இவர்கள் அவரை நிந்திக்கிறார்கள். இவரைத்தான் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் எதிர்பார்த்தார்கள். பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லா பலிகளும் முறைமைகளும், எல்லா பண்டிகைகளும் இவரைத்தான் முன்னறிவித்தன. இப்படி முன்னறிவிக்கப்பட்ட கிறிஸ்து இப்போது வந்திருக்கிறார் என்று எபிரெய நிருப ஆசிரியர் சொல்லுகிறார். அவர் எவ்வளவு powerful argument-ஐ கொண்டுவருகிறார் என்று பாருங்கள். ஆகவேதான் பின்னணி மிகவும் முக்கியம். இயேசுவை விட மோசே பெரியவர் என்று யூதர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் மோசே இயேசுவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் இயேசுவைத்தான் விசுவாசித்தான். அவன் பஸ்காவை அனுசரித்தபோது இயேசு சிலுவையில் அறையப்படுவதைக் கண்டான். நீங்கள் மோசேயை பெரிதாக எண்ணி இயேசுவை விட்டு விடுகிறீர்கள். இயேசுவை அறிவிப்பதற்காகத்தான் மோசே பிரசங்கித்தான். அவன் இயேசுவைத்தான் அறிவித்தான் என்கிற powerful argument-ஐ கொண்டுவருகிறார். அதற்குத்தான் மோசேயை எடுத்து இத்தனை வசனங்களில் காண்பிக்கிறார். ஆகவேதான் பின்னணி மிகவும் முக்கியம்.

யூதர்கள், மோசே தான் பெரியவர். நம்முடைய மார்க்கத்தை விட்டு கிறிஸ்தவத்திற்கு சென்றுவிட்டீர்களே என்கிறார்கள். இது தவறு. அதை விட்டுவிட்டு இதற்கு வந்ததுதான் சரியானது. இன்னும் கேட்டால் அவர்களும் இதற்கு வர வேண்டும். ஏனென்றால் இயேசு தான் பதிலாய் இருக்கிறார். இவரிடம் செல்லுங்கள் என்றுதான் மோசே வழிகாட்டினார். நியாயப்பிரமாணத்தின் ஒரு நோக்கம் என்னவென்றால், மனுஷனுக்குள் பாவம் இருக்கிறது, அவன் பாவி என்பதை நிரூபிக்கிறது. இரண்டாவது நோக்கம், கிறிஸ்துவண்டை அவனைக் கொண்டுபோவது. ஆக மோசேயை சரியாக பின்பற்றி வந்தாலே கிறிஸ்துவிடம் வந்து விடுவீர்கள். மோசேயைத்தான் நீங்கள் பெரிதாக எண்ணுகிறீர்கள், அவர் உங்களை இயேசுவண்டை கொண்டுவந்து விட வேண்டுமே என்கிறார். 28-ஆம் வசனம் மிகவும் powerful-ஆன வசனம். அதனுடைய argument என்னவென்றால், மோசே இயேசுவை விசுவாசித்து தான் இரட்சிப்பைப் பெற்றார் என்பதுதான்.

இதைப் பார்க்கும்போது நாம் பல காரியங்களை விளங்கிக்கொள்ளலாம். ஒன்று, சிலர் கிருபை என்பது புதிய ஏற்பாட்டு idea, இரட்சிப்பதற்கு கர்த்தர் பழைய ஏற்பாட்டில் வேறு வழிகளை வைத்திருந்தார் என்று எண்ணுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு. வேதம் அப்படி போதிக்கவில்லை. ஆதாம் பாவம் செய்தது முதல் தேவனண்டையில் வந்து தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இரட்சிப்பைப் பெற்ற எவராக இருந்தாலும் அவர்கள் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டுதான் இரட்சிக்கப்பட்டார்கள். எனவேதான் எபேசியர் 2:8-இல் இப்படி வாசிக்கிறோம்:

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல(எபேசியர் 2:8, 9).

இரட்சிப்பு கிரியைகளினால் அல்ல, கிருபையினால் உண்டானது. ஆனால் சிலர், அது புதிய ஏற்பாட்டில் தான், பழைய ஏற்பாட்டில் எங்கே கிருபை இருந்தது? பழைய ஏற்பாட்டில் கிருபை கிடையாதே என்று சொல்லுகிறார்கள். ஆனால் நன்றாக கவனித்துப் பாருங்கள். ஆதாம் பாவம் செய்தான், அடுத்தது அவனுடைய பிள்ளை ஆபேல் பலியை எடுத்துக்கொண்டு வருகிறான். ஆபேலினுடைய பலி ஏற்றுக்கொள்ளப்படுகிறது, காயீனுடைய பலியை கர்த்தர் நிராகரிக்கிறார். ஏனென்றால் இவனுடைய பலி ஒரு ஆட்டுக்குட்டி. இரத்தஞ்சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு கிடையாது என்று இவனுக்கு தெரிகிறது. ஆகவே ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து பலியிடுகிறான், இரத்தத்தை சிந்துகிறான். நான் பாவி, பாவத்தின் சம்பளம் மரணம், என்னுடைய பாவத்திற்கு பதிலாக இந்த ஆட்டுக்குட்டி மரிக்கிறது. எனக்காக நீர் இரட்சிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர், எனக்கு பதிலாக ஒருவர் மரிக்க வேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். அவர் இன்னும் வரவில்லை, ஆனால் நான் அதை விசுவாசிக்கிறேன். எனக்காக ஒருவர் இரத்தஞ்சிந்துவார் என்று விசுவாசிக்கிறேன். பாவத்தின் சம்பளம் மரணம் என்று விசுவாசிக்கிறேன். இரத்தஞ்சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பதை விசுவாசிக்கிறேன் என்பதை அவன் காண்பிக்கிறான். கர்த்தர் அவனை ஏற்றுக்கொள்கிறார், அவனுடைய பலியை அங்கீகரிக்கிறார். அவன் எப்படி கர்த்தரிடம் வந்தான்? தன்னுடைய யோக்கியதையின் அடிப்படையில் அவன் வரவில்லை. கர்த்தருடைய கிருபையின் அடிப்படையில் அவன் வந்தான். இன்னும் கேட்டால், அவனுக்கு நியாயப்பிரமாணம் மட்டும் கொடுக்கப்படவில்லை, பலிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் வாசித்துப் பாருங்கள். நியாயப்பிரமாணம் மனுஷனை நீ பாவி என்று நிரூபிக்கிறது. மனுஷன் விரக்தியின் விளிம்புக்கே போய்விடுகிறான். அப்படியே விட்டால் அவன் தொலைந்துவிடுவான். ஆகவே தேவன், சரி, நீ நியாயப்பிரமாணத்தினால் நீதிமானாக்கப்பட முடியாது, இந்த பலியை எடுத்துக்கொண்டு வா, நீ அதின் இரத்தத்தைக் கொண்டுபோய் கிருபாசனத்தின் மேல் தெளிக்கும்போது, இயேசுவின் இரத்தம் ஒருநாள் எனக்காக சிந்தப்படும். அதன் மூலமாகத்தான் இரட்சிப்பு உண்டாகிறது, அதை நான் விசுவாசிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லுகிறாய் என்று அப்படித்தான் எல்லாரும் இரட்சிக்கப்பட்டார்கள். பழைய ஏற்பாட்டிலேயே கிருபை வந்துவிட்டது. நோவாவைக் குறித்து ஆதியாகமம் 6:8-இல், “நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” என்று வாசிக்கிறோம். ரோமர் 4-இல் பவுல் ஆபிரகாமைக் குறித்துச் சொல்லும்போது, “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று வாசிக்கிறோம். அவன் கிரியைகளினால் நீதிமானானானா? கிடையாது. கிருபையினால் தான் நீதிமானானான். கிருபையினால் உண்டான எல்லாவற்றையும் விசுவாசத்தினால் தான் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே ஆபிரகாம் விசுவாசத்தைக் கொண்டு கர்த்தர் கொடுத்த கிருபையின் இரட்சிப்பை எடுத்துக்கொண்டான். அதுமட்டுமல்ல, மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை சிந்தி, அதை நிலைக்கால்களில் பூசி, அதின் மாம்சத்தை தின்று, அன்றைக்கு இராத்திரி எகிப்தை விட்டு வெளியேறி, பாவம் பிசாசு என்பவைகளின் பிடியிலிருந்து விடுதலையானார்கள். இதெல்லாம் பெரிய பாடம். ஆக கிருபை என்பது புதிய ஏற்பாட்டு idea, பழைய ஏற்பாட்டில் கிருபை கிடையாது என்று சொல்லுவது தவறு. பழைய ஏற்பாடு முழுவதும் கிருபை என்று தான் வருகிறது. கர்த்தர் நமக்காக உலகத்தோற்றத்திற்கு முன்பாக ஒரு ஆட்டுக்குட்டியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அந்த ஆட்டுக்குட்டியின் மூலமாகத்தான் நமக்கு இரட்சிப்பு உண்டாகிறது என்பது பழைய ஏற்பாடு முழுவதும் போதிக்கப்படுகிறது. வேதத்தில் வேறு எங்கும் கிரியைகளினால் தான் இரட்சிப்பு என்று போதிக்கப்படவில்லை. நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கூட கிரியைகளினால் இரட்சிக்கப்பட முடியும் என்று போதிக்கப்படவில்லை. ஆக கிரியைகளின் மூலமாக இரட்சிக்கப்பட முடியாது என்பதுதான் போதனை.

அதுமட்டுமல்லாமல் நாம் இன்னொரு காரியத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 28-ஆம் வசனத்தை தனியாக பார்க்கக்கூடாது. ஆகவேதான் 23-லிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். ஏனென்றால் அது total package. இரட்சிப்பு என்பது திடீரென்று நடக்கிற ஒன்று. நான் போனேன், கோவிலில் பெயரைக் கொடுத்தேன், என்னை தண்ணீரில் முக்கினார்கள், எழுந்தேன், கோவிலில் சேர்ந்துவிட்டேன், என்னுடைய பெயரை மாற்றினார்கள், அந்த புதிய பெயரோடு கிறிஸ்தவனாக மாறிவிட்டேன் என்று சிலர் அப்படி நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. இரட்சிப்பு எப்படி நடக்கிறது? தேவன் அதை மோசேயின் வாழ்க்கை மூலம் சித்தரித்து காண்பிக்கிறார். அவனுடைய பெற்றோர் தேவனுடைய வார்த்தையை அவனுக்குப் போதிக்கிறார்கள். அது அவனுடைய உள்ளத்தைப் பாதிக்கிறது. அவன் பெரியவனானபோது பார்வோனின் குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுக்கிறான். பாவ சந்தோஷங்களை வெறுத்து உதறி தள்ளுகிறான். எகிப்தின் பொக்கிஷங்களை வெறுக்கிறான். அவன் பெரியவனானவுடன் தரமான சில தீர்மானங்களை எடுக்கிறான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட போதனையின் மூலமாக சில காரியங்களை அவன் விசுவாசிக்க ஆரம்பிக்கிறான். அவனுடைய உள்ளத்தில் பெரிய மாறுதல் உண்டாகிறது. உலகம் வேறு மாதிரி எண்ணுகிறது. பார்வோனின் குமாரத்தியின் மகன் என்பதையும், எகிப்தின் பொக்கிஷத்தையும், பாவ சந்தோஷத்தையும் எவரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இவன் வேண்டாம் என்று சொல்லுகிறான். ஏனென்றால் இவனுடைய உள்ளம் பாவ சந்தோஷத்திலிருந்து தேவனுக்கு நேராக திரும்பிவிட்டது. பார்வோனின் குமாரத்தியின் மகன் என்று எகிப்து கொடுக்கக்கூடிய மேன்மையான ஸ்தானம் ஆபிரகாமின் பிள்ளை என்பதற்கு திரும்பி விட்டது. எகிப்தின் பொக்கிஷங்கள் பெரியது என்பதை விட்டு தேவனுடைய ஜனங்களோடு துன்பத்தை அனுபவிப்பதே மேல் என்கிற அப்படிப்பட்ட ஒரு எண்ணம் உண்டாகி விட்டது. மனதிலே ஒரு திரும்புதல் உண்டாகி விட்டது, அதைத்தான் மனந்திரும்புதல் என்று சொல்லுகிறோம். இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவருக்குள்ளும் மனதிலே ஒரு திருப்பம் உண்டாகிறது. தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு தடையாய் இருக்கிற எல்லாவற்றையும் வெறுத்து, ஒதுக்கி தேவனுக்கென்று தன்னை அர்ப்பணிக்கிற புத்தி மோசேக்கு வருகிறது. அதுதான் மனந்திரும்புதல். அது எல்லா மனுஷருக்குள்ளும் உண்டாக வேண்டும். ஆக முதலாவது மனந்திரும்புதல் நடக்கிறது, அதன்பிறகு தான் விசுவாசிப்பது.

விசுவாசம் என்பது அபாரமான ஒரு காரியம், அது ஒரு ஆவிக்குரிய சக்தி. அது மனுஷனுக்குள் வந்து பிரவேசிக்கிறது. “மோசே பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்” என்று எபிரெயர் 11:28-இல் வாசிக்கிறோம். அப்படி ஆசரிப்பது என்பது லேசான ஒரு காரியமல்ல. சிலர், இது ஆபிரகாம் மோரியா மலைக்குப் போனதைப் போல அல்ல. அவன் தன் மகனையே பலியிடப்போனான். அது இதை விட பெரிய காரியம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் பஸ்காவை அனுசரிப்பது எளிதான காரியம் அல்ல. அன்றைக்கு என்ன நடந்தது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை மேலோட்டமாக பார்க்கும்போது ஆபிரகாம் தன் மகனை மோரியா மலைக்கு பலியிட போனதைக் காட்டிலும் இது சுலபமாக தெரியலாம். ஆனால் ஆழமாக பார்த்தீர்கள் என்றால் அது சுலபமான செயல் அல்ல. இதுவும் அதைப்போல மனுஷனுடைய மூளைக்கும் அறிவுக்கும் சவாலாய் நிற்கக்கூடிய ஒரு காரியம். அதையெல்லாம் தாண்டிப் போய் தான் ஒரு மனுஷன் பஸ்காவை ஆசரிக்கிறான். பஸ்கா அனுசரிப்பு நடந்த அன்று இராத்திரி என்ன நடந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்பது வாதைகள் வந்து முடிந்துவிட்டது. ஒன்பதும் முறையும் ஒன்றும் நடக்கவில்லை. பார்வோன் அவ்வளவு கடின உள்ளம் உள்ளவன். வாதை வரும்போது ஜனங்களை விட்டு விடுகிறேன் என்று பார்வோன் சொல்லுகிறான். ஆனால் வாதை சரியானவுடன் திரும்பவும் பழைய புத்தி வந்துவிடுகிறது. ஒன்பதாம் முறை அவன் மோசேயிடம், “இனி நீ என் முன்னே வந்துவிடாதே, உன்னை கொன்றுவிடுவேன்” என்கிறான். அதற்கு மோசே, “நான் வரமாட்டேன், ஆனால் உன்னுடைய அதிகாரிகள் எனக்கு முன்பாக வந்து கையை தூக்கி கும்பிட்டு, “தயவுசெய்து நீயும், உன் ஜனங்களும் தேசத்தை விட்டுப் போங்கள்” என்று சொல்ல வேண்டிய நாட்கள் வரும். அன்றைக்குத்தான் நான் இந்த தேசத்தைவிட்டுப் போவேன். நான் உன் முகத்தில் முழிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லுகிறான். அப்படிச் சொல்லும்போது ஒரு மாபெரும் அடுத்த வாதையை அவன் அறிவிக்கிறான். அவன் அதை அறிவிக்கும்போது ஜனங்களுக்கு எப்படியிருந்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள். ஜனங்கள் அவனிடம் பல கேள்விகளைக் கேட்டிருப்பார்கள். “இது உனக்கு தேவையா, ஒன்பது வாதைகளை பண்ணினாய், நதியை இரத்தமாக மாற்றினாய், ஊரையே பேன்களால் நிரப்பினாய், தவளைகளால் நிரப்பினாய், காரிருளினால் நிரப்பினாய். இப்படியெல்லாம் செய்தும் பார்வோன் அசையவில்லை. ஒன்பது முறை முயற்சித்து ஒன்றும் நடக்கவில்லை. பத்தாவது முறையில் நடக்கப்போகிறது என்று உனக்கு யார் சொன்னார்கள், அது நடக்கப்போகிறது என்று உனக்கு நன்றாக தெரியுமா? என்று கேட்டிருப்பார்கள்.

சிலர், “தேவன் ஏன் முதல் வாதையிலேயே விடுவிக்கவில்லை?” என்று கேட்கிறார்கள். கர்த்தர் வேண்டுமென்றே பார்வோனுடைய இருதயத்தை கடினப்படுத்துகிறார். அவர் எதற்கு அவனுடைய இருதயத்தை கடினப்படுத்துகிறார்? ஒன்பது முறையும் முயற்சித்தும் அவன் விடுதலைபண்ணவில்லை என்று வரும்போதுதான் அவன் எவ்வளவு கொடூரன், அவனுடைய பிடியிலிருந்து எவரும் விடுபட முடியாது என்கிற முடிவுக்கு இஸ்ரவேலர் வர வேண்டும். பின் பத்தாவது முறை கர்த்தர் grand-ஆக விடுவித்து அனுப்புவார். அவர் தம்மை மகிமைப்படுத்த விரும்புகிறார். தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார். தாம் யார், தம்மால் என்ன முடியும் என்பதை காண்பிக்க விரும்புகிறார். ஆகவேதான்#3021; முந்தைய ஒன்பது முறையில் விடுதலை பண்ணவில்லை. அவர் வேண்டுமென்றே இருதயத்தை கடினப்படுத்திக் கொண்டு வருகிறார். இஸ்ரவேலர்கள் முதல் வாதையிலேயே விடுதலையாகி இருந்தால் நதி இரத்தமாக ஆனது, உடனே பார்வோன் போய் விடுங்கள் என்று சொல்லிவிட்டான் என்று அவர்கள் அதை சாதாரணமாக சொல்லியிருப்பார்கள். ஒன்பது முறை பாடுபட்டவர்களுக்குத்தான் இவன் விடமாட்டான் போலிருக்கிறது, இவனிடமிருந்து விடுதலையாக்க தேவனாலேயே முடியவில்லை போலிருக்கிறது என்று யோசிக்கக்கூடிய நிலைமைக்கு வேண்டுமென்றே கொண்டுவருகிறார். ஜனங்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்ப்பதில்லை. தேவன் பெரிய ஞானி, வல்லவர். பார்வோனை கடின உள்ளம் உள்ளவனாக்கி, அவனை பெரிதாக காண்பிப்பது போல காண்பித்து, அவனிடம் சாப்பிட்டு, படித்து வளர்ந்தவனை வைத்து அவனை ஒட்டுமொத்தமாய் கடலில் கொண்டுபோய் மூழ்கடிக்கிறார். அதனால் கர்த்தர் எதுவும் செய்யவில்லை என்று எண்ணாதீர்கள். அவர் பெரிய திட்டத்தோடு வேலை செய்கிறார். அவர் நம்மைக் காட்டிலும் பெரிய ஞானி, அவர் பெரியவர், வல்லவர் என்பதை மறந்துபோகக்கூடாது. கர்த்தரை லேசாக எடை போட்டு விட வேண்டாம். ஜனங்கள் தாங்கள் ஞானிகள் என்று எண்ணிக்கொண்டு தங்களை முட்டாள்களாகி விடுகிறார்கள்.

விசுவாசம் என்பது அபாரமான ஒரு காரியம். அது எப்படி வருகிறது? ஒரு மனுஷன் கர்த்தரை அனுபவிக்கிறான், கர்த்தருடைய வார்த்தைகளை பார்க்கிறான், அது நிறைவேறுவதைப் பார்க்கிறான். மறுபடியும் மறுபடியும் அதை அனுபவிக்கிறான். கர்த்தருடைய வார்த்தை ஒன்று கூட கீழே விழுவதில்லை என்பதைப் பார்க்கிறான். அவனுக்கு கர்த்தர் மீது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை வந்துவிடுகிறது. அவர் நல்லவர், வல்லவர், அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை, அவர் என்னை கைவிட்டு விடமாட்டார் என்பதை உறுதியாக நம்புகிறான். கர்த்தரை தியானித்து, அவருடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதைப் பார்த்து, அதையெல்லாம் அனுபவித்து, அவரை ருசிபார்த்து அவனுடைய உள்ளம் விசுவாசத்தால் நிரம்பி விடுகிறது. ஆழமான, உறுதியான நம்பிக்கை அவனுக்கு உண்டாகி விடுகிறது. கர்த்தர் சொன்னார் என்றால் அதைச் செய்வார். விசுவாசம் என்பது அப்பேர்ப்பட்ட ஒரு சக்தி. அது ஒரு மனுஷனுக்குள் நுழைந்துவிட்டால் அது அவனை வேறு ஒரு நிலைக்கு கொண்டுவருகிறது. அசாத்தியமான காரியங்களை நிறைவேற்றக்கூடியவனாய் மாற்றுகிறது. கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதை அவன் விசுவாசிக்கிறான். தன்னுடைய எல்லைகள் எல்லாவற்றையும் கடந்து, தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெரிய காரியங்களை சாதிக்க ஆரம்பிக்கிறான். இதையெல்லாம் நீங்களும் அனுபவிக்க வேண்டும். கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை தியானித்துப் பாருங்கள். சில நாட்கள் பொறுத்து அதை நீங்கள் தியானித்தீர்கள் என்றால் தேவன் எனக்கு ஏன் இப்படிச் செய்தார் என்று ஒருநாளும் கேட்கமாட்டீர்கள். ஏனென்றால் கர்த்தர் பெரியவர், அவருடைய ஆலோசனைகள் மகத்துவமானவைகள் என்று உங்களுக்கு தெரியும். அநேக விசுவாசிகள், “எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்?” என்று கேட்கிறார்கள். அவர்கள் இன்னும் கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை தியானிக்கவில்லை. ஆனால் அவர்கள் அதைச் செய்தால் கர்த்தர் ஒருநாளும் தீமையை செய்யமாட்டார், அவர் நன்மையை மாத்திரம் செய்வார் என்கிற உறுதியான நம்பிக்கை உள்ளத்திலே வந்துவிடும். அதுவரைக்கும் விடக்கூடாது, அதுதான் விசுவாசம். இப்படிப்பட்ட காரியங்களால் உள்ளத்தை நிரப்ப வேண்டும்; உள்ளம் அதினால் நிரம்பியிருக்க வேண்டும்; அசைக்கப்படாதவர்களாய் இருக்க வேண்டும்; கர்த்தர் மீது நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

அநேகர் மோசேயிடம் வந்து, “ஒன்பது முறை நடக்கவில்லை, உன்னால் எங்களுக்கு மிகப்பெரிய தொல்லை, ஒவ்வொரு முறையும் பார்வோன் எங்களுடைய வேலையை அதிகமாக்குகிறான், எங்களை இன்னும் வாரினால் அடிக்கிறான், துன்புறுத்துகிறான், எங்களுக்கு இன்னும் பயமாக இருக்கிறது. இது போதாது என்று நீ இன்னொரு முறையும் முயற்சிக்கப் போகிறாயா? வெறும் இரத்தத்தை சிந்தி, நிலைக்கால்களில் இதைப் பூசிவிட்டால் இதெல்லாம் நடந்துவிடுமா? நாம் இந்த தேசத்தை விட்டுப் போய் விடுவோமா? இது நடந்து விடுமா?” என்று கேட்டிருப்பார்கள். ஆனால் மோசே கர்த்தர் சொல்லுவதை உறுதியாக விசுவாசிக்கிறான். அவனுக்குள் உறுதியான விசுவாசம் வந்துவிட்டது. கர்த்தர் நல்லவர், வல்லவர், பெரியவர், உண்மையுள்ளவர், உத்தமமுள்ளவர் என்பதை தியானிக்கும்போது உள்ளம் கர்த்தருக்குள் உறுதியாகும். கர்த்தர் சொன்ன வார்த்தைகள் ஒன்றும் தவறாது, அவர் எனக்கு அதை அப்படியே செய்வார் என்கிற நம்பிக்கை வரும். அது வரவில்லை என்றால் நாமும் மற்ற ஜனங்களைப்போல, எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று தெரியவில்லை, கர்த்தர் என்னை இப்படி பண்ணிவிட்டார் என்கிற பேச்செல்லாம் வரும். ஆனால் மோசேக்கு அந்த பேச்சு வரவில்லை. இந்த முறை நடக்கும் என்று அவன் விசுவாசிக்கிறான். அவன் ஜனங்களிடம் தயாராகும்படிச் சொல்லுகிறான்.

பஸ்கா அனுசரிப்பு என்பது கிறிஸ்துவையும், அவர் கல்வாரி சிலுவையில் செய்த காரியங்களையும் பிரதிபலிக்கிறது. கிறிஸ்துவைப் பற்றி பழைய ஏற்பாட்டிலேயே அருமையாக போதிக்கப்படுகிறது. கிறிஸ்தவப் போதனையிலே அதற்கு “types” (நிழலாட்டங்கள்) என்று பெயர். பழைய ஏற்பாடு கிறிஸ்துவைக் குறித்து பல விதங்களிலே போதிக்கிறது. அதில் ஒரு விதம் பஸ்கா. யாத்திராகமம் 12:3-ஐ பாருங்கள்.

நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள். 

இயேசு தெருவில் கடந்துபோவதை யோவான் ஸ்நானகன் பார்க்கிறான். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்கிறான். யாத்திராகமத்தில் பஸ்கா ஆட்டுக்குட்டி என்று வருகிறது. ஆனால் அந்த பஸ்கா ஆட்டுக்குட்டி வேறு அல்ல, இவர் தான். “கிறிஸ்து நம்முடைய பஸ்கா” என்று அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 7:7-இல் சொல்லுகிறார். இப்படி பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவையே பிரதிபலிக்கிறது. ஆக மோசே யார் பேரில் விசுவாசித்தான்? மோரியா மலை அனுபவத்தைப்போல இவனுக்கு ஒரு அனுபவம் உண்டாகிறது. ஆபிரகாம் இயேசுவின் நாளைக் கண்டு களிகூர்ந்தான் என்று இருப்பது போல மோசேயும் கல்வாரி சிலுவையைக் கண்டு அதை விசுவாசித்தான். அவன் ஆட்டுக்குட்டியை பார்த்துவிட்டான். பஸ்கா அன்றைக்கு கொல்லப்பட்ட அந்த ஆட்டுக்குட்டி, அது உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. இரண்டாவது, அந்த ஆட்டுக்குட்டி மந்தையிலிருந்து எடுக்கப்பட வேண்டும். வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் மத்தியிலிருந்து எடுக்கப்பட வேண்டும். இது எதைக் குறிக்கிறது? பாவத்தைச் சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டி என்கிற இந்த நபர் மனுவர்க்கத்தில் ஒருவராக இருக்க வேண்டும். ஆகவேதான் எபிரெயர் 2:14-17 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறபடி, நாம் மாம்சமும் இரத்தமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், நம்மை விடுவிப்பதற்காக மரணத்தை ருசிபார்க்கும்படியாக அவரும் மாம்சமும் இரத்தமும் உள்ளவரானார். அவர் நம்மில் ஒருவராகி விட்டார். அவர் ஆட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட ஆட்டைப் போன்றவர். மூன்றாவது யாத்திராகமம் 12:6-இல் சொல்லியிருக்கிறது: இந்த ஆட்டை மந்தையிலிருந்து எடுத்து சில நாட்கள் தனியாக வைத்திருந்து அதைக் கொல்ல வேண்டும். இயேசு மனிதர்கள் மத்தியிலிருந்து எடுக்கப்பட்டவராய் இருந்தாலும் பாவத்திற்கு விலகினவர், பரிசுத்தர், மாசற்றவர், குற்றமற்றவர் என்று வேதவசனம் அவரைக் குறித்துச் சொல்லுகிறது. அவர் பாவத்திற்கு விலகினவர் என்று எபிரெயர் 7:26 அவரைப் பற்றிச் சொல்லுகிறது. நான்காவது, இந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாய் இருக்க வேண்டுமென்று யாத்திராகமம் 12:5-இல் வாசிக்கிறோம். பழுதற்ற, மாசற்ற ஆட்டுக்குட்டி என்று 1 பேதுரு 1:19-இல் பேதுரு இயேசுவை வர்ணிக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த ஆடு அடிக்கப்பட வேண்டும் என்று யாத்திராகமம் 12:6 சொல்லுகிறது. “சாயங்காலத்தில் அதை அடித்து” என்று வேதம் சொல்லுகிறது. ஏன் அது அடிக்கப்பட வேண்டும்? அந்த ஆடு அடிக்கப்படுவதில் தான் நமக்கு ஜீவன் உண்டாகிறது. அது ஜீவனைக் கொடுப்பதில் நமக்கு ஜீவன் உண்டாகிறது. ஆகவேதான் வெளிப்படுத்தல் 13:6-இல், “அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே அடிக்கப்பட்ட தேவஆட்டுக்குட்டி” என்று சொல்லுகிறது. பஸ்கா ஆட்டுக்குட்டியை அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டி என்றே வேதம் வர்ணிக்கிறது. அதுமட்டுமல்ல, இது ஒரு பலி. யாத்திராகமம் 12:27-இல் பஸ்கா பலி என்று சொல்லப்பட்டிருக்கிறது. “கிறிஸ்து நம்முடைய பஸ்கா” என்று 1 கொரிந்தியர் 5:7 சொல்லுகிறது. கிறிஸ்து நம்முடைய பஸ்கா பலியாக இருக்கிறார். ஏழாவதாக, அந்த ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு புசிக்க வேண்டும் என்று யாத்திராகமம் 12:8,9 வசனங்கள் சொல்லுகிறது. தண்ணீரில் வேக வைத்து புசிக்கக்கூடாது என்று அடுத்த வசனம் சொல்லுகிறது. ஏன் அதை நெருப்பினால் சுட வேண்டும்? இயேசு சிலுவையில் தொங்கும்போது அவர் மீது தேவ கோபாக்கினையாகிய அக்கினி விழுந்தது. நெருப்பிலே சுடப்பட்ட ஆட்டுக்குட்டியைப்போல அவர் தேவகோபாக்கினை என்கிற அக்கினியை அனுபவித்தார். நம்முடைய தண்டனையை அவர் தம்மீது ஏற்றுக்கொண்டார். இதையெல்லாம் வேதவசனம் அப்படியே சொல்லுகிறது. அதுமட்டுமல்ல, அந்த ஆட்டின் ஒரு எலும்பைக்கூட முறிக்கக்கூடாது என்று யாத்திராகமம் 12:46 சொல்லுகிறது. இயேசு சிலுவையில் தொங்கினபோது அந்த இரண்டு கள்வர்களின் எலும்புகளை முறித்தார்கள். இயேசுவின் கால்களையும் முறிக்கலாம் என்று பார்க்கிறார்கள், ஆனால் அவர் ஏற்கனவே மரித்துவிட்டார். ஆகவே அவருடைய எலும்பை முறிக்கவில்லை. அவருடைய எலும்பு முறிக்கப்படவில்லை என்பதை வேதம் குறிப்பிடுகிறது. ஏனென்றால் அதை ஒரு தீர்க்கதரிசனமாக எண்ணி குறிப்பிடுகிறது. இது பழைய ஏற்பாட்டில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வேதவசனம் அங்கீகரிக்கிறது. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதைக் குறிப்பிடுகிறார்கள்.

கடைசியாக அங்கு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சம் எல்லாவற்றையும் புசிக்க வேண்டும் என்று 9-ஆம் வசனம் சொல்லுகிறது. இயேசு ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தார். அடுத்த நாள் இலவசமாக சாப்பாடு கிடைக்கும் என்று ஜனங்கள் வருகிறார்கள். அதற்கு இயேசு, “நான் வானத்திலிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பம். என்னை விசுவாசியுங்கள். இந்த ஜீவ அப்பம் உங்களுக்கு பரம திருப்தியை உண்டாக்கும். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. என் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணாதவனுக்கு நித்தியஜீவன் இல்லை. அப்படி புசித்து அதை பானம்பண்ணுகிறவனை நான் கடைசி நாளில் எழுப்புவேன்” என்கிறார். இதைக் கேட்டு ஜனங்கள் upset ஆகிவிட்டார்கள். இவர் நரபலியை சாப்பிடுவதை போதிக்கிறாரா, மனுஷனை சாப்பிடுகிற மார்க்கத்தை இவர் போதிக்கிறாரா என்று ஜனங்கள் போய்விட்டார்கள். இயேசு சீஷர்களைப் பார்த்து, “நீங்களும் போகிறீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு பேதுரு, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று சொல்லுகிறான். மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைக் குடித்து என்று இயேசு சொல்லும்போது தன்னுடைய மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைக் குடிப்பதைப் பற்றி சொல்லுகிறாரா? கிடையாது. அதை நன்றாக வாசித்துப் பாருங்கள். என்னை முழுமையாக விசுவாசியுங்கள், நான் கல்வாரி சிலுவையில் அடிக்கப்படப் போகிறேன், நொறுக்கப்படப் போகிறேன், என்னுடைய சரீரம் நொறுக்கப்படுகிறது, அந்த தழும்புகள் உங்களை குணமாக்குகிற தழும்புகள். என்னுடைய இரத்தம் சிந்தப்படப்போகிறது. அந்த இரத்தம் உங்களை பாவங்களற கழுவும். என்னுடைய மாம்சமும், என்னுடைய இரத்தமும் உங்களுக்காக செய்கிற காரியங்களை முழுமையாக விசுவாசித்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். அதைச் சொல்லுவதற்காகத்தான் மாம்சத்தைப் புசியுங்கள், இரத்தத்தைப் பானம்பண்ணுங்கள். அதன் மூலமாக உங்களுக்கு உண்டாகிற நன்மைகளை முழுமையாய் விசுவாசியுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொண்டால் நித்தியஜீவன் உண்டு என்கிறார்.

இதில் முக்கியமாக ஒன்றிரண்டு காரியங்களை கவனிக்க வேண்டும். அன்றைக்கு எகிப்திலே எல்லாருடைய வீட்டிலும் மரணம் ஏற்பட்டது. பார்வோனின் வீடு முதல் பரம ஏழை எல்லா எகிப்தியரின் வீட்டிலும் தலைச்சன் பிள்ளை மரணம் ஏற்பட்டது. இன்றைக்கு ஜனங்களுக்கு அதைக் கேட்டவுடன் முகம் மாறுகிறது. கர்த்தர் இப்படியெல்லாம் செய்கிறாரா? எல்லா தலைச்சன்பிள்ளைகளையும் கொன்றாரோ? என்று கேட்கிறார்கள். பார்வோன் இஸ்ரவேல் மக்களுக்கு பிறந்த ஆண்டு குழந்தைகளை கொல்லும்படி உத்தரவு கொடுத்தானே, அது நியாயமா? கர்த்தர் கணக்கு வைத்திருக்கிறார், சரியாக நியாயம் செய்கிறார். அவனுக்கு பதில் கொடுக்கிறார். கர்த்தர் ஏன் முதலில் பதில் கொடுக்கவில்லை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் கர்த்தரிடமிருந்து பதில் வரும்போது பயங்கரமாக வரும். கர்த்தர் பதில் கொடுக்கிறார். இஸ்ரவேலின் மூத்த குமாரனை நீ கொன்றுபோட்டாய், இப்போது உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் மரணம் இருக்கும் என்று அப்படி நடக்கிறது. இன்றைக்கும் எகிப்திலே பார்வோன்களைக் குறித்த record வைத்திருக்கிறார்கள். எந்த பார்வோன் ஆண்டார், அதற்குப் பிறகு எந்த பார்வோன் ஆண்டார் என்று வரிசையாக பெயரோடு record இருக்கிறது. அதிலே எகிப்தின் இந்த பார்வோனுடைய பிள்ளை ஆட்சிக்கு வரவில்லை என்கிறார்கள். ஏனென்றால் அந்த சம்பவத்தின் போது அவன் மரித்திருப்பான் என்று சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் படிக்கிற காலத்தில் அப்படி போதித்தார்கள். அந்த பார்வோனுடைய பிள்ளை ஆட்சிக்கு வரவில்லை, வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்ததாக சொல்லுகிறார்கள். ஆக எவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது என்று பாருங்கள். எகிப்தியரின் எல்லா வீடுகளிலும் மரணம் நடந்திருக்கிறது.

அதைச் சொல்லும்போது சிலர், “எகிப்தியரின் வீட்டில் மரணம் நடந்தது, இஸ்ரவேலரின் வீட்டில் மரணம் நடக்கவில்லை” என்று சொல்லுகிறார்கள். கிடையாது, இஸ்ரவேலரின் வீட்டிலும் மரணம் நடந்தது. அதில் இரண்டிற்கும் வித்தியாசம் என்னவென்றால், அங்கு அவர்கள் செத்தார்கள். இங்கு இவர்களுக்காக ஒரு ஆட்டுக்குட்டி செத்தது. இன்றைக்கு உலகத்தில் இருக்கிறவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? சிலர், உலகத்தார் பாவிகள், நாம் நல்லவர்கள். அதனால் கர்த்தர் நம்மை இரட்சித்துவிட்டார் என்று எண்ணுகிறார்கள். கிடையாது. உலகத்தாருக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நமக்காக, நமக்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டி செத்தது. தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். அதையெல்லாம் நாம் விசுவாசித்து இந்த பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். அவ்வளவுதானே ஒழிய, அவர்கள் அயோக்கியர்கள், நாம் யோக்கியர்கள் என்று அல்ல. அவர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், நமக்கு ஒரு ஆட்டுக்குட்டி இருக்கிறது. அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது; கர்த்தருடைய கிருபை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் வித்தியாசம். அன்றைக்கு யாராவது சற்று திமிராக, “இது என்ன இரத்தத்தை எடுத்து அங்கு பூசு, அதைப் புசி, வீட்டிற்குள் உட்காரு, சங்காரத்தூதன் கடந்துபோகும்போது வெளியே இருக்கக்கூடாது என்று சொல்லுகிறாரே, நான் ஆபிரகாமின் பிள்ளை, எனக்கு இல்லாத ஆசீர்வாதமா, நான் வெளியே தான் இருப்பேன்” என்று  சொல்லி அவன் வெளியே போயிருந்தால் செத்துப்போயிருப்பான். நீங்கள் ஆபிரகாமின் பிள்ளை என்பதினால் இரட்சிப்பு அல்ல. ஆபிரகாமின் பிள்ளையாக இல்லாதவர்கள் கூட இரட்சிப்பின் மூலமாக ஆபிரகாமின் ஆசீர்வாதத்திற்குச் சொந்தமாகிறார்கள். அதுதான் இரட்சிப்பு. இன்னும் சிலர், நான் எவ்வளவு நல்லவன் என்று கர்த்தருக்கு தெரியும். எதிர் வீட்டுக்காரன், பக்கத்து வீட்டுக்காரன் இவர்கள் எல்லாம் அயோக்கியர்கள். நான் எவ்வளவு நல்லவன் என்று ஆண்டவருக்கு தெரியாதா, ஆண்டவர் என்னைக் கொன்றுவிடுவாரா, அதில் நியாயமே இல்லை என்று வெளியே போயிருந்தால் நிச்சயமாக அவன் செத்திருப்பான். உள்ளே தான் இருக்க வேண்டும். உங்களுடைய கிரியையினால் இரட்சிப்பு அல்ல. உங்களுடைய யோக்கியதையினால் இரட்சிப்பு அல்ல. நீங்கள் நல்லவரோ, கெட்டவரோ யாராக இருந்தாலும் இரத்தத்திற்குள் சென்று பாதுகாப்பைப் பெறுங்கள். அந்த இரத்தத்தின் அடையாளத்திற்குப் பின்பாக இருங்கள். இரட்சிப்பு அதின் மூலமாக மட்டும்தானே ஒழிய, வேறு நம்முடைய யோக்கியதையினால் அல்ல. இன்னும் சிலர், நான் ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் உபவாசம் இருந்தேன், எத்தனை முழு இரவு ஜெபங்களில் கலந்துகொண்டேன், எத்தனை முறை ஜெபிக்கிறேன் என்று கர்த்தருக்கு தெரியாதா? அவர் என்னைக் கொல்லமாட்டார் என்கிறார்கள். அப்படிச் சொல்லுகிறவர்கள் வெளியே சென்று பாருங்கள், கர்த்தர் கொல்லுவார். வெளியே போகாதே, அந்த இரத்தத்தை மட்டும் அடையாளமாக பூசிக்கொண்டு உள்ளே போய் உட்காரு என்கிறார். ஏனென்றால் அங்குதான் பாதுகாப்பு இருக்கிறது. இது எதைக் காண்பிக்கிறது? இயேசுவின் இரத்தம் மட்டுமே இரட்சிக்கிறது. நான் ஆபிரகாமின் பிள்ளை என்பதால் எனக்கு இரட்சிப்பு அல்ல. நான் நற்கிரியைகளை செய்வதாலோ, யோக்கியன் என்பதாலோ எனக்கு இரட்சிப்பு அல்ல. என்னுடைய ஜெபத்தினாலோ, உபவாசத்தினாலோ எனக்கு இரட்சிப்பு அல்ல. ஒரே ஒரு காரணத்தினால் தான் எனக்கு இரட்சிப்பு உண்டாகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் எனக்காக சிந்தப்பட்டிருக்கிறது. அதன் மூலமாகத்தான் இரட்சிப்பு என்பதை காண்பிப்பதற்காகத்தான் அது கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரத்தம் சிந்தப்பட்டால் போதாது, இரத்தம் நிலைக்கால்களின் சட்டத்தில் தெளிக்கப்பட வேண்டும். இது எதைக் காண்பிக்கிறது? சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக என்னுடைய பாவத்திற்கு நிவாரணம் உண்டாயிருக்கிறது என்பதை நான் விசுவாசிக்கிறேனா, நான் அதை எடுத்துக்கொண்டேனா, அதை சொந்தமாக்குகிறேனா? இன்றைக்கு புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் இதை எப்படி எடுத்துக்கொள்வது? வெளிப்படுத்தின விசேஷம் 12:11-ஐ பாருங்கள். இந்த இரத்தத்தை எப்படி நம்முடைய பாதுகாப்பிற்காக, அதன் மூலமாக பலனைப் பெறும்படியாக தெளித்துக்கொள்வது? அன்றைக்கு இஸ்ரவேலர்கள் இரத்தத்தை தெளித்து அதன் பின்னால் போய் உட்கார்ந்தார்கள். பாதுகாப்பு தான் அவர்களுக்கு உண்டான பலன். இன்றைக்கு அதன் மூலமாக அநேக பலன்கள் இருக்கிறது. அந்த பலனை எப்படி பெறுவது?

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்(வெளிப்படுத்தல் 12:11).

இங்கு மூன்று காரியங்கள் சொல்லியிருக்கிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தம், வசனம், சாட்சி. இதை வைத்து நாம் எப்படி பிரச்சனைகளை மேற்கொள்வது, பிசாசை ஜெயிப்பது? இந்த மூன்று காரியங்களை வைத்துதான் ஜெயிக்க வைக்க வேண்டும். இயேசுவின் இரத்தம் எனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதைக் குறித்து வசனம் என்னவெல்லாம் சொல்லுகிறதோ அதை எடுத்து அறிக்கையிட வேண்டும். அப்படிச் செய்யும்போது அதன் பலன் நமக்கு உண்டாகிறது. இயேசுவின் இரத்தம் எனக்காக சிந்தப்பட்டிருக்கிறது, அதன் மூலமாக என்னுடைய பாவங்களுக்கு நிவாரணம் உண்டாகிறது, அவருடைய சரீரம் எனக்காக அடிக்கப்பட்டது என்பதை நான் முழுமையாக விசுவாசிக்கிறேன், அதை நான் அறிக்கை செய்கிறேன் என்று அறிக்கை செய்யுங்கள். சிலர், “எனக்கு பயமாக இருக்கிறது, எனக்கு தூக்கம் வரவில்லை” என்று சொல்லுகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்களுக்காக சிந்தப்பட்டிருக்கிறது. அவருடைய சரீரம் நமக்காக நொறுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலமாக நமக்கு பாதுகாப்பு உண்டாயிருக்கிறது. நாம் இரத்தக்கோட்டைக்குள்ளே இருக்கிறோம். எந்த தீங்கும் நம்மை அணுகாது. பயத்தின் மத்தியில் நாம் ஏன் அதை சொல்லக்கூடாது? விசுவாசம் உள்ளே இருந்தால் நாம் அதைச் சொல்லுவோம். இயேசுவின் இரத்தம் இன்றைக்கும் வல்லமையை இழக்கவில்லை. இன்றைக்கும் அது நமக்கு ஜெயத்தைக் கொண்டுவரும். ஒட்டுமொத்தத்தில் எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் என்ன சொல்லுகிறார் என்றால், மோசே முழுக்க முழுக்க இயேசுவைப் பற்றித்தான் சொன்னார்; நீங்கள் மோசேயைப் பிடித்துக்கொண்டு, இயேசுவை விட்டு விட்டீர்கள் என்கிறார். இவர் அன்றைக்கு இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு, யூத மார்க்கத்தில் இருக்கிறவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். மோசே எந்த இயேசுவை சொன்னாரோ அந்த இயேசுவை அவர்கள் விட்டு விட்டார்கள். நீங்கள் இயேசுவுக்குள் வந்துவிட்டீர்கள், சந்தோஷப்படுங்கள், முன்னேறிச் செல்லுங்கள் என்கிறார். நான் சொல்லுகிறேன், நீங்களும் முன்னேறிச் செல்லுங்கள்.  

Donation
eStore
Copyright © 2017 Victory Christian Foundation. All rights reserved.
Website & Social Media by Open Minds Agency